அகிலாவின் படைப்புலகம் கருத்தரங்க உரைகள்

அகிலாவின் படைப்புலகம் (சென்னை) நிகழ்வு

குறித்த காணொளிகள்


அகிலாவின் படைப்புலகம் நிகழ்வு எனக்கு முழுமையான மனநிறைவு தந்த நிகழ்வு. என் நெடுநாளைய நிறைவு அதுவென்பேன். அதற்கு டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன், லாந்தர் ஆர்ட் எண்டர்டெயின்மெண்ட் பாலைவன லாந்தர், உரை நிகழ்த்திய சவிதா(சிறுகதைகள்), அபுல் கலாம் ஆசாத் (மொழிபெயர்ப்பு), ஜா ராஜகோபாலன் (நாவல்கள்), பரிசல் கிருஷ்ணா (கட்டுரைகள்) ஆகியோருக்கு என் மனம் நிறைந்த நன்றி. வந்திருந்த அனைத்து நட்புகளுக்கும் என் பேரன்பு..

லாந்தர் ஆர்ட் எண்டர்டெயின்மெண்ட் பாலைவன லாந்தர்



லாந்தர் ஆர்ட் எண்டர்டெயின்மெண்ட் வழங்கிய 'அகிலாவின் படைப்புலகம்'

கருத்தரங்க காணொளிகள்...

மொழிபெயர்ப்பு குறித்து அபுல் கலாம் ஆசாத் உரை

சிறுகதைகள் குறித்து சவிதா உரை

கட்டுரைகள் குறித்து பரிசல் கிருஷ்ணா உரை

நாவல்கள் குறித்து ஜா.ராஜகோபாலன் உரை

அகிலா ஏற்புரை


சிரித்த முகத்துடன் மொழிபெயர்ப்பை நேசிப்பவராக ஆசாத் அவர்கள் உரையாற்றியது எனக்குப் பிடித்திருந்தது.
எழுத்தாளர் அபுல் கலாம் ஆசாத் அவர்களின் உரையின் காணொளியையும், என் ஏற்புரை காணொளியையும் உங்களின் பார்வைக்குத் தனியாக கீழே பகிர்கிறேன்.
36 சொற்கள் கொண்ட மிக நீளமான முதல் வாக்கியத்தை மொழிபெயர்த்து 26 சொற்களில் தமிழ் மொழிபெயர்ப்பில் சரியானதொரு பொருளுடன் கொண்டு வந்த மொழியாக்க திறமை குறித்து தொடங்கினார். ஜிம் கார்பெட்டின் பல வாக்கியங்கள் இந்திய ஆங்கிலத்தில் இல்லை, பொது பிரித்தானிய ஆங்கிலத்தில் இருந்தது. நீண்ட வாக்கியங்கள், கடினமான எழுத்துமுறைமை அமைந்த நூல் அது. ஆனால் பிரித்தானியர்களுக்கான இருபதாம் நூற்றாண்டின் தனிப்பட்ட புழங்கு சொற்கள் அதிகமில்லை கார்பெட்டின் ஆங்கிலத்தில். அது ஒருவகையில் என்னை ஆசுவாசப்படுத்தியது எனலாம். அவர் இந்தியாவில், நைனிதாலிலே பிறந்து வளர்ந்ததால் இருக்கலாம்.
ஆங்கில சொற்களின் (தாவரங்கள், விலங்குகள், பறவைகள், துப்பாக்கியின் பாகங்கள் குறித்த) தமிழ் மொழியாக்கத்தை நூலின் பின்பகுதியில் கலைச்சொற்கள் (Glossary) என்ற தலைப்பில் நான் எழுதியிருந்தமைக்கும் பாராட்டினார். Glossary முதலில் கொண்டு வரும்முன் பல மொழிபெயர்ப்பாளர்களுடன் பேசியிருந்தேன். மொழியாக்கம் செய்யுமிடத்திலேயே பிராக்கெட்டுக்குள் எழுதிவிடலாம் அல்லது Foot note போட்டு எழுதிடலாம் என்று கருத்துத் தெரிவித்தார்கள். அது வாசிப்பனுபவத்தை (readability) குறைத்துவிடும் என்ற எண்ணம் எனக்கிருந்தது. அதனால் கலைச்சொற்கள் அகராதியைப் புத்தகத்தின் பின்பகுதியில் சேர்த்தேன். யாருக்காவது பறவைகளின் பெயரோ விலங்குகளின் பெயரோ தமிழில் வேண்டுமானால் பார்த்துக் கொள்ளலாம்.
திருநங்கை அக்கை குறித்தும், திருநர்களின் பாலின விருப்பங்களை சட்டமாக்க அக்கை மேற்கொண்ட போராட்டங்களையும் அருமையாக எடுத்துரைத்தார் அபுல் கலாம் ஆசாத் அவர்கள். உரையின் இறுதியில் திருநங்கை அக்கையின் வாழ்க்கை நலமுடன் இருக்கவேண்டும் என்று அவர் உருக்கமாக சொன்னது என்னையும் ஆட்கொண்டது.
இரண்டு நூல்கள் குறித்து சிறப்பாக உரை நிகழ்த்திய ஆசாத் அவர்களுக்கு மிக்க நன்றியுடன் என் அன்பைப் பகிர்கிறேன்🙏



என் சிறுகதைகள் குறித்து சவிதா நிதானமாக, ஆத்மார்த்தமாக உணர்ந்து பேசியது நன்றாக இருந்தது. அவர் எடுத்துக்கொண்டு உரையாற்றிய கதைகளான #கவலை_என்பது_யாதெனில் #சாம்பல்_வரிகள் கதைகளில் வரும் அமான்ஷயத்தை அவர் விவரித்த விதமே எனக்குப் புரிந்தது அவருக்கு மீமாயக் கதைகளின் மீது ஒரு பிரமிப்பு உண்டு என்பது🙂

மனித மனங்களின் பிறழ்வுகள், உறவுகளில் நேரும் நெருக்கடிகள், #முணுமுணுப்புகள் கதையில் வரும் பாசத்தின் இடைவெளிகள் போன்ற என் எழுத்துமுறையை சரியாக நாடி பிடித்து கண்டுபிடித்திருந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. என்னையே சரியாக புரிந்து கொண்டது போல் இருந்தது. நான் மென்மையானவள் தான் என்ற நினைப்பே மகிழ்ச்சியைக் கொடுத்தது.. தேங்க்ஸ் சவிதா..❤



என் கட்டுரை நூல்கள் (#சமகால_இலக்கியம் மூன்று தொகுதிகள், #இங்கிலாந்தின்_நதிக்கரையில்) திறனாய்வு, பயண இலக்கியம் என்று உரை இருந்தது.
திறனாய்வு கட்டுரையெல்லாம் வாசிப்பாரா இல்லையா என்ற சந்தேகம் எனக்கிருந்தது. அதிகமாகவே வாசித்திருந்தார் என்பது எனக்கு சர்ப்பரைஸ் தான். பெண்கள் எங்கிருந்து எங்கு நகர்ந்திருக்கிறோம் என்பதை தஞ்சை பிரகாஷ் நூல் திறனாய்வு செய்யப்பட்ட கூட்டத்தில் தொடங்கி, இங்கிலாந்தின் naughty நாய் குறித்து வரை பேசியது, ஒரு கணம் சபையை இலகுவாக்கியது எனலாம்.

அவர் ஒரு ஊடகவியலாளர் என்பதைப் பார்த்து எனக்குள் கொஞ்சமா பதட்டம் இருந்தது. மேடையில் என் அருகில் வேறு அமர்ந்திருந்தார்😀 ஆனால் அவர் கட்டுரைகளை எளிமைபடுத்திய விதம், என் பரந்துபட்ட வாசிப்பை கட்டுரைகளின் வழி கவனித்துச் சொன்ன விதம் அழகாக இருந்தது. இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங்காக திறனாய்வு குறைகளைச் சொல்லலாம் என்ற நம்பிக்கையைக் கொடுத்தார். பேரன்பு கிருஷ்ணா🙏


நாவல்கள் (#தவ்வை #அறவி) குறித்த ஜா ராஜகோபாலனின் பார்வை நேர்மையாக இருந்தது. சிவசங்கரி, அனுராதா ரமணனின் வரிசையின் இடையில் என்னை நிறுத்தினார். பெண்ணின் வலிகளை, பெண்களின் மீது சுமத்தப்படும் மனரீதியிலான அழுத்தங்களை, பெண்ணின் பார்வையில் வந்திருப்பது சிறப்பு என்றார். வட்டார வழக்குமொழியும் பொது சமூகத்து மொழியும் நாவலில் கலந்திருப்பது குறித்து கவனப்படுத்தினார். நல்ல வாசிப்பனுபவத்தைத் தரும் வகையிலான இலக்கியத்தை நோக்கி ஒரு புதினம் முன்னேற கதை கருவில் வரும் ரகசிய முடிச்சுகளை ஒரு எழுத்தாளன் எவ்வாறு வெளிபடுத்தாமல் வாசகனிடம் பேசாமல் கதையை நகர்த்த வேண்டும் என்பதையும் சொன்னார். புதினத்து குறைகளை எடுத்துரைப்பதை எழுத்தாளன் கவனப்படுத்திக் கொள்வதில் இரண்டு விதமான சிக்கல்கள் உண்டு.
ஒன்று, என் எழுத்தை இவ்வாறு அணுகுவது சரியல்ல, அதை வேறு மாதிரி அணுகவேண்டும் என்ற வாதத்தை அந்த படைப்பாளி முன்வைக்கலாம். எல்லா படைப்பாளிகளுக்குள்ளும் ஒரு கர்வம் உட்கார்ந்திருக்கும். அது இப்படியாகதான் சிந்திக்கும். எனக்குள் உங்களுக்குள் எல்லோருக்குள்ளும் அது உண்டு. ஒரு படைப்புக்கு வெவ்வேறு விதமான வாசகப் பார்வைகளும் பரப்பும் உண்டு என்பதால் இக்கருத்து பரவலாக எடுபடவும் செய்யும்.
இரண்டாவது, யாராவது ஒருவராவது கவனப்படுத்துகிறார்களே என்று ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு. முதலாவதில் எனக்கு கொஞ்சமாக உடன்பாடிருந்தாலும், முழுவதுமாக நான் உடன்படுவது இல்லை. புதினம் எழுதப்படும் போது அதன் படைப்பாளி அதனுள் தான் முழுமையாக இருப்பான். சில நேரங்களில் அவனறியாமல் அவனும் பேசவும் செய்யலாம். படைப்பாளி தவிர்த்த ஒருவர் வாசிக்கும்போது, அதுவும் அவரும் ஒரு புதினங்கள் குறித்த புரிதல் மிக்கவராக, விமர்சன போக்கில் நோக்குபவராக இருந்தால், நிச்சயமாக அந்த படைப்பாளிக்கு அதிர்ஷ்டம்தான். ஒரு நூல் விமர்சனப்படுத்த படும்போதுதான் கவனம் பெறும் என்பதை விட, அடுத்த புதினத்தை நோக்கிய சரியான நகர்தலையும் அப்படைப்பாளிக்குக் கொடுக்கும் என்பதே யதார்த்தம்.
என் ஏற்புரையில் படைப்புகளை எடிட் / செம்மைப்படுத்த வேண்டிய நிலை இருப்பதைக் குறித்துப் பேசியிருக்கிறேன். செம்மைப்படுத்தப்பட்ட புதினங்கள் உலக இலக்கிய அரங்கை நிறைப்பதையும் நாம் கண்டு வருகிறோம். நிகழ்வு முடிந்து ஜா ராவிடம் பேசும்போது, எழுதி முடிக்கும் தருவாயில் இருக்கும் எனது அடுத்த நாவலை உங்களின் பார்வைக்கு தான் வைக்கப் போகிறேன் என்றேன். அவரும் அதற்கு, கொஞ்சம் கரடுமுரடாக இருக்கும் பரவாயில்லையா என்றார். சிரித்துக்கொண்டு தலையாட்டியிருக்கிறேன்😀

நானும் பதிப்பகங்களுக்கு மொழியாக்க புதினங்களைத் தொடர்ந்து எடிட் செய்து கொடுத்து வருகிறேன் என்பதால் அந்த வேலையின் முழுமை எனக்கும் புரியும். கவனப்படுத்தலுக்கு நன்றியும் பேரன்பும் ஜா ரா 🙏














Comments