பெண்ணுக்கான வெளி எது?
All We Imagine As Light | திரை பார்வை
சில தினங்களுக்கு முன்பு, எல்லோரும் நன்றாக இருப்பதாகச் சொன்ன திரைப்படமான All We Imagine As Light திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. உடனே அது குறித்து எழுதாமல் சிறிது ஆறப்போட்டே எழுதுகிறேன்.
முப்பதுகளில் இருக்கும் நர்ஸ்க்கு கல்யாணம் ஆயிடுச்சு. கணவர் ஜெர்மனியில் வேலை பார்க்கிறான். ஆனால் தொடர்பு எதுவும் இல்லை. இந்த நர்ஸை ஒரு டாக்டர் லவ்/உறவுக்கு அழைத்தல் - ஏதோ ஒன்று - மறைமுகமாக வெளிபடுத்துகிறார். அதை தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சொல்லி நிராகரிக்கிறாள். கணவரின் பெயர் எழுதாமல் ஜெர்மனியிலிருந்து வரும் ரைஸ் குக்கரின் மீது சாய்ந்து, அதை தன்னோடு இருத்தி, சுய இன்பமும் அடைகிறாள்.
இன்னொரு நர்ஸ் காதல் செய்கிறாள், ஓர் இஸ்லாமியரை. சின்னஞ்சிறு வீட்டுக்குள்/ஃப்ளாட்டுக்குள் நர்ஸுகள் இருவரும் இருப்பது, சின்ன நர்ஸ் உடை மாற்றுவது... இப்படி பெண்களுக்கு உள்ளே இருக்கிற ஆசைகள் என்று இயக்குனர் நினைக்கும், அல்லது திரைப்படம் பார்க்கும் ஆண்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்று எண்ணுகிற சில காட்சிகளை இயக்குனர் பாயல் கபாடியா காட்டிக்கொண்டே போகிறார். இதெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது.
கேண்டினில் வேலை செய்யும் வயதான பெண்மணிக்கு அவள் வசித்த வீட்டில் தொடர்ந்து வாசிக்க முடியாமல் பில்டர் பிரச்சனையால் வெளியேற வேண்டிய நிர்பந்தம். அதனால் அவங்க ஊருக்கு மும்பைக்கு பக்கத்திலிருக்கும் சொந்த ஊருக்கு வீடு மாறுகிறார். அதுவொரு கடற்கரையோர கிராமம். இந்த பெண்களும் அவங்களோடு போகிறார்கள். அதுல லவ் பண்ற பொண்ணோட லவ்வரும் போகிறான்.
இவங்க போன கிராமத்துல கடற்கரையில் ஒதுங்கிற ஒரு மனுஷன் தான் இந்த பெரிய நர்ஸின் கணவன் என்று 'தெரிய வருது'. இப்படி ஏன் சொல்கிறேன் என்றால், அவனை முதலில் காட்டும்போது, அந்த நர்சம்மா முகத்தில் ஒரு எக்ஸ்பிரஷனும் இல்ல. தன்னோட கணவன் என்றால் 'அச்சோ' என்ற பதட்டம் இல்லை; அட்லீஸ்ட் கண்ணில் சிறியதாய் ஒரு அதிர்ச்சி? ஒண்ணுமேயில்லை; படம் முழுக்க கனி குஸ்ரூதி (அதான் அந்த நடிகை பெயர்) நடிக்கவேயில்லை; சிலை மாதிரி ஒரே எக்ஸ்பிரேஷன் கொடுத்துக்கிட்டு நிக்கறாங்க (இப்படிதான் Girls Will Be Girls web series லையும் expressionless ஆக வந்தாங்க). கடல் அடிச்சுக்கிட்டு வந்த அந்த மனுஷன் என்ன சொல்கிறார் என்றால், 'எனக்கு ஜெர்மனியில் ஒரு பேக்டரில வேலை. ராத்திரி பகல் தெரியல; ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்' அப்படி என்று சொல்றார். ஆனா எப்படி ஜெர்மனியில் இருந்து தப்பிச்சு மும்பை அருகிலுள்ள ஒரு பீச்சுக்கு வந்தாரு ஏன் அங்க மயங்கி கிடந்தாரு அப்படின்கிற கதை எல்லாம் டைரக்டருக்கும் தேவையில்லை; நமக்கும் தேவையில்லை.
அடுத்ததாக, அவன் அவளின் உடலை நோக்கி முன்னேறுகிறான்; அவள் கையை தொட்டு தடவுகிறான். இந்த இடத்துல இயக்குனருக்கு சட்டென ஒரு ஞானோதயம் வருது. 'ஐயோ நாம எடுக்கிற படம், feminism/female liberalization/பெண்ணியம்/ வெங்காயம் பேசுற படமாச்சே.. எப்படி இப்படி கணவன் மனைவியைத் தொடுவதை அலோவ் பண்ணலாம்'ன்னு டவுட் வருது. அதாவது நாங்கள் லவ் பண்ணும்போது, பாலியல் மீறல்கள், உடலில் துணியில்லாமல் காட்டுவோம்; படுத்து எந்திப்போம், தனியா இருக்கிற ஒருத்திய நெருங்கிற டாக்டரை, நான் கல்யாணம் ஆனவள்னு சொல்லி தன்னைத்தானே குற்றவுணர்வுக்குள்ளேயும் வச்சுக்குவோம், ரைஸ் குக்கரை கட்டிக்குவோம்... எல்லாம் செய்வோம், ஆனால் உடலளவுள ஏங்கிக்கிட்டு இருக்கிறத அடக்கிக்கிட்டு பெண்ணியம் பொங்க 'நிறுத்து... எனக்கு உன்னை இனிமேல் பார்க்க விருப்பமில்ல'ன்னு புருஷங்காரன் கையை காரணமேயில்லாம தட்டிவிடவும் செய்வோம்... வாவ்! இது பெண்ணியம்! பெண்ணியம் குறித்த இத்தனை ஆழமான புரிதலுக்காக இயக்குனருக்கு என்ன சொல்வது என்றே தெரியல எனக்கு!
இதையெல்லாம் விட, கடைசியில ஒரு காட்சி வருது... அதுல அந்த பெரிய நர்சம்மாவிற்கு என்ன ரியாக்ஷன் கொடுக்கன்னு கூட தெரியல. அந்த மூன்று பெண்கள், சின்ன வயது நர்ஸுடைய லவ்வர் எல்லோருமாக கடற்கரை டீக்கடையின் சேர்களில் உட்கார்ந்து கொண்டு - அதுவும் முதலில் அந்த லவ்வர் பையன் வந்து உட்காரும்போது, வட்டமாக அமையும்படி சைடாக ஒரு சேரில் அமர்கிறான். பிறகு இயக்குனர் சேரை நேரா போட்டு உக்காருப்பா என்று சொல்லியிருப்பார் போல, சேரை நகர்த்தி நால்வரும் ஒரே லைனில் இருக்குமாறு உக்காந்து சும்மா சிரிக்கிறார்கள். இயல்பாக இல்ல; மெனக்கிட்டு புன்னகையை வரவழைத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள்.. உண்மையிலேயே ஃபோட்டோ போஸ் தான்... அந்த சீன் நல்லதொரு இறுதி காட்சி அல்ல. இயல்பு தன்மையற்ற நடிப்பு அப்பட்டமாக தெரிகிறது.
இந்த படத்தில், கேமரா மட்டும் கொஞ்சம் பரவாயில்லை ரகம். மும்பை என்றாலே ஜன நெருக்கடி; இட நெருக்கடி.. ரயில்வே ஸ்டேஷன் ஜனங்கள் - அதை கேமரா அப்படியே கொண்டு வந்திருக்கிறது. அதுக்காக பாலு மகேந்திரா ஆகிவிடமுடியாது. அந்த மருத்துவமனை வாசலிலிருந்து உள்நோக்கிக் காட்டப்படுகிறது; அவர்கள் இருக்கும் ஃபிளாட் அல்லது வீடா - காட்டப்படவே இல்லை; எதுவென்றே தெரியவில்லை; பிட் பிட்டாக - Handycam பயன்படுத்தி இருப்பார்கள் போல. எல்லாம் குளோசப் ஷாட்ஸ். Space சின்னது என்று காட்டுவதற்காக வலுக்கட்டாயமாக எடுக்கப்பட்டவைப் போல உள்ளது. நமக்கே மூச்சு முட்டுது (அதுதான் கேமராவின் வெற்றின்னு தூக்கிட்டு வராதீங்க). அப்புறம் அந்த கடற்கரை காட்சிகள் ஓகே. இதைவிட அழகாக எடுப்பவர்கள் திரைப்படத்துறையில் உள்ளார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்.
பெண் என்றால் வெறும் உடலா?
உடலைப் பிரதானமாக காட்டும், சமூக கட்டுக்கு மீறிய உறவுகளைப் பிராதனப்படுத்தும் கதைகளை எடுப்பதை இன்றைய சமூக நிலைபாடாக திரைப்படங்கள், வெப் சீரீஸ்கள் வைத்துக் கொண்டிருப்பதை நாம் தொடர்ந்து கவனித்து வருகிறோம். நேற்று Rana Naidu web series முதல் எபிசோட் பார்த்தேன்... உறவு கொள்ளும் காட்சிகள் மூன்று
அதுவும் Oral, Blow job என்றெல்லாம்... வெப் சீரீஸ் எல்லாவற்றுக்கும் சென்சார் இல்லையென்பதும் அதுவே இம்மாதிரியான படங்களுக்கும் பொருந்துகிறது என்பதும் தெரிகிறது.

கேரளாவில் ஆறு வருட காலமாக ஒரு சிறு பெண், பதிமூன்று வயது முதல் பதினெட்டு வயது வரையில், கிட்டத்தட்ட 60 ஆண்களால் (44 பேரை கைது செய்திருக்கிறார்கள் இதுவரையில்) பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறாள் என்ற செய்தியைக் கேள்விப்படுகிறோம். இதை வெளியில் சொல்லமுடியாத அளவுக்கு அந்த பெண்ணுக்கு வர்க்க ரீதியான தடைகள், சாதீய ரீதியான தடைகள் எல்லாமே இருந்திருக்கிறது.
யாரிடம் வேண்டுமானாலும் உறவு வைத்துக்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை உடலினால் பெண் விடுதலையாகிறாள் என்பதை பெண்ணின் சுதந்திரம் என்று பொதுப்படையாக இன்றைய சமூகம் தீர்மானிக்கிறது. அதையே ஆணும் தனக்குச் சாதகமாக எடுத்துக்கொள்கிறானோ என்ற பயமும் உண்டாகிறது. இன்னும், கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், சிந்தனையால் விடுதலை போன்றவை பெண்ணுக்கு அமையவில்லை என்பதை இச்சமூகம் எப்போது புரிந்துகொள்ளும் என்று தெரியவில்லை.
பெண்ணியம் என்பதில் பெண்ணுக்கான வெளி எங்கே இருக்கிறது என்பது கூட தெரியாமல் எடுக்கும் உடல் சார்ந்த இம்மாதிரியான திரைப்படங்களைப் புறக்கணித்தல் வேண்டும். இயக்குனரின் புரிதல் இதில் முக்கியமில்லை; அவருக்குப் பெண் சார்ந்த உடல் இயக்கங்களை, உடலால் அவள் வேண்டும் சுதந்திரத்தை காட்டி எடுக்கவேண்டும் என்ற குறிக்கோள் இருந்திருக்கலாம். ஆனால் அது முழுமையாக வெளிபட்டதா என்று அவர் திரைப்படத்தை எடுத்து முடிந்ததும் ஒருமுறை முழுமையாக பார்த்து சிந்தித்திருக்க வேண்டும். அல்லது திரையில் எடுக்கப்பட்ட அக்கதை சரியான முறையில் நாம் நினைத்ததை பிரதிபலிக்கிறதா என்று யோசித்திருக்க வேண்டும். ஏதும் செய்யாமல் படத்தை வெளியிட்டு அதையொரு பெண்ணியப்படமென்று பிரகடனப்படுத்துவது நியாயமில்லை என்று நினைக்கிறேன்.
Comments
Post a Comment
உங்க கருத்தை சொல்லலாம்.....