இங்கிலாந்து - ரபி அரண்மனை (Rabi Castle, Durham County, England) வரலாறு என்னை எப்போதும் ஈர்க்கும் ஒன்றாகவே இருந்திருக்கிறது. அரண்மனைகள், கோட்டைகள், போர்கள் போன்றவை வியக்க வைத்திருக்கின்றன. அதன் பெருமைகள், சோகங்கள் என்னை ஆக்கிரமித்திருக்கின்றன. நானும் அந்த விழுமியங்களின் எச்சம்தான் என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. நாகரிகங்களின் வரலாற்றின் வாசகனாக எனக்குள் ஒரு விழைவு எப்போதும் எரிந்து கொண்டேயிருக்கிறது. இந்த முறை லண்டன் புத்தகத் திருவிழாவின் சந்திப்பில் புலம் பெயர்ந்த எழுத்துகள் குறித்து பேசிய எழுத்தாளர் சாம்ராஜ் அவர்களிடம் நான் வைத்த கேள்வி இதுதான்: ஏன் இங்கிலாந்திற்கு புலம் பெயர்ந்து வந்தவர்கள் இங்கிருக்கும் வாழ்வுமுறை உணர்த்தும் படைப்புகளைத் தருவதில்லை? என்பதுதான். அங்கு வந்திருந்த எழுதும் விருப்பமுள்ள இளம் தலைமுறையினர் இருவர் எழுத முற்படுவதாகத் தெரிவித்தனர். வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. படைப்புகளின் மூலம் ஒரு நாட்டின் நுணுக்கமான விவரங்களை அறியும் வாய்ப்பு வாசிப்பாளர்களுக்குக் கிட்டும்...