Skip to main content

Posts

Showing posts from February 10, 2013

அரசனாய்...

ஓய்வென்று மரத்தடியில் அமர்ந்தபோது இதை பார்த்து கொள்ளென்று ஆந்தை தன் குஞ்சொன்றை கொடுத்து சென்றது... பத்திரப்படுத்திக் கொள்ளென பழங்களை போட்டுச் சென்றது கிளியொன்று... உன்னால் காப்பாற்ற முடியும் என முத்துமாலை ஒன்றை அணிவித்து சென்றது காகமொன்று... இதையும் பெற்றுக் கொள்ளென்று வழிப்போக்கன் ஒருவன் பிச்சையிட்டுச் சென்றான்... வழியறியா வனாந்தரத்தில் சூனியம் நோக்கையில் பொக்கிஷமாய் பாரங்களை கொள்ளமுடியாமல் மடி உதறி எழுந்து நடையின் கனம் உணர்ந்து நாட்டரசனாய் மேனி மீது தழுவியதெல்லாம் நழுவவிட்டு லேகுவாகி பின் உச்சியின் வரம்பு தழுவினேன்.... 

திறவுகோல்...

காயப்படுத்திய உன்னின் வார்த்தை அம்புகள் ஒதுங்கின பெண்ணின் இதயக் கூட்டுக்குள்   திறந்துவிடும் சாவியை தொலைத்து வழிநெடுக தேடுகிறாய்...     கையில் கிட்டிய கொட்டைகளை அடிமரத்தின் பொந்தொன்றில் ஒளித்து வைத்து பின் அடிமரம் தேடும் அணிலை போல... மனதில் உறுத்தியதை வருட   மௌனத்தையே காற்றாக்கி விலகலின் வஸ்திரம் கொண்டு திறக்காதிருக்கிறேன் இன்னும் திறவுகோலை தேடி யெ டுத்து வருவாயென்று ...

அடுக்கு மாடி குடியிருப்பில்....

எதிர் கதவின் பின் புன்னகையை செலவு செய்ய காசு கேட்கும் மனிதர்கள்தான்... பக்கமாய் பார்த்தால் பாந்தமாய் பேசுவதாக பாவனைகள் செய்வார்கள்... நம் அகம் புகுந்து அழகாய் நோட்டமிடும் ஆந்தை கண்கள்...   அமர்த்தலாய் வந்தமர்ந்து காபியை நிராகரித்து டீ கேட்கும் அமர்க்களம்... அக்கம்பக்கம் பற்றி புறம் சொல்லி தினத்தந்தியை தலைகீழாய் ஒப்பிக்கும் திறமை... தன் வீட்டில் வைக்காத சாம்பாரை மேல் வீட்டில் இருந்து வாங்கி தன் கணவனுக்கே பரிமாறுகிற சாதுர்யம்... நடிப்பாய் இருக்கும் நட்பு பூக்கள்தான் – ஆயினும்    என் உதட்டோர சிரிப்புக்கு சொந்தக்காரர்கள்... இவர்கள்தான் அடுக்கடுக்காய் தெரியும் ஜன்னல் வழி உலகங்கள்...

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. சென்னையிலிருந்து 79 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சுமார் ஒன்றரை மணிநேரத்தில் அங்கு சென்றடையலாம். இந்த சரணாலயம் 30 ஹெக்டேர் பரப்பளவில் வனத்துறையின் பாதுகாப்பின் கீழ் உள்ளது. பலவிதமான பறவைகள் வெவ்வேறு தேசங்களில் இருந்து இங்கு குளிர் காலங்களை கழிக்கவும் இனப்பெருக்கதிற்காகவும் வருகின்றன. இங்கு சின்ன சின்னதாய் ஏரிகள் உள்ளன. அவற்றில் மரங்களும் பெரிய புதர்களும் இந்த பறவைகளுக்கு அடைக்கலம் கொடுக்கின்றன. இவற்றின் எச்சங்கள் இந்த ஏரி நீருக்குள்ளே விழுந்து சுற்றிலும் இருக்கும் விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்கும் பயன்படுத்தப்படுகிறது. இங்கு காலையில் அதுவும் சூரிய உதயத்திற்கு முன் அல்லது மாலையில் சூரியன் அஸ்தமிப்பதற்கு முன் செல்வதே வசதி. அந்த நேரத்தில் தான் பறவைகள் பறப்பதையும் அவற்றின் சத்தங்களையும் ரசிக்கமுடியும். பாம்புதாரா, ஹெரான், சாம்பல் நிற பெலிக்கன் (கூழைக்கடா), கொக்கு வகைகள், மண்வெட்டி வாயன், ஸ்டார்க், வாத்து, நீர் காகம், எக்ரெட