விதைத்துவிட்டு திரும்புவதற்குள் பசியென அவற்றை புசித்திருக்கும் இந்த அதிகாலை குருவிகளிடம் என்ன பேச? வேகமாய் சென்ற மேகம் கீழே விழுந்து உடைந்ததையா? தாள் பூக்களின் மீதமர்ந்த சிட்டுகள் தேன் குடிப்பதாய் பாவனை செய்வதையா? ஊரும் சர்ப்பத்தை விடுத்து கருடன் ஓடும் கன்றின் வால் பிடித்திழுப்பதையா? எதை பேச முடியும் அவற்றிடம்? பெயரிடப்படாத கண்ணீரின் சுவையை, அர்த்தமற்ற ஆகம கூச்சலாய் போன என் வார்த்தைகளின் மீது பூசிக் கொள்வதை தவிர..