Skip to main content

Posts

Showing posts from November 30, 2014

ஐந்து ரூபாய் நோட்டை..

முழுங்க துடிக்கும் மாமிச கூட்டத்தின் நடுவே, செதிலிழந்து சதையிழந்து முள்ளாய் சமைந்து நின்றது அந்த பைத்தியம்.... வானம் மையிட்டுக் கொண்ட தருணத்தில் அதை ஒளியூட்டிப் பார்த்தது இந்த சமூகம்.. பகலின் கிரகணங்கள் முழுமையும் அதை புத்தியற்று காட்ட, இரவு மட்டும் வெளிச்சமிட்டு காட்டியது அதை.. வழிப்போக்கர்கள் அதை பெண்ணென்று வியக்காமலே வலி கொடுத்துச் சென்றார்கள்.. புலர்ந்த பொழுதின் போது, சதை கிழிந்த கோரங்களை   நசிந்த ஆடை கொண்டு திரையிட்டுக் கொண்டது. பசியைப் போக்க, இன்னும் குப்பைகளின் நடுவில் தேடிக் கொண்டிருக்கிறது நேற்றிரவு குதறிய மிருகம், வீசிச் சென்ற ஐந்து ரூபாய் நோட்டை..

காலமறியாமல்..

உதயமின்றி வானம் வெளுத்திருக்க புதர்களில் சிறகுகளின் ஆலோபனைகளுடன் தலையில் உறையிட்டுக் கொண்டு உலா போகும் மனிதர்கள்.. குல்மோஹரின் மஞ்சள் பூக்களெல்லாம் உதிர்ந்த நிலையில், மொட்டவிழ்ந்த கொய்யா மலரொன்று பனி கொண்டு முகம்துடைத்து சிரித்தது காலமறியாமல்..