அகிலா

அகிலா 

சொந்த ஊர் திருநெல்வேலி. முப்பது வருடங்களுக்கு மேலாக கோயம்புத்தூர் வசிப்பிடம்.

அப்பா துரைராஜ் காவல்துறை அதிகாரி. அம்மா சுந்தரி. 

பெண்ணின் விருப்பத்திற்குரிய தலைவன் அவளின் தகப்பன்தான். ஆனால் அவளின் உந்துசக்தி, உத்வேகம் எல்லாவற்றிற்கும் பிறப்பிடம் அவளின் தாய்தான். சுயசிந்தனையை ஊக்குவிப்பவள் தாயே. என் தாயும் அவ்வாறே. யாரையும் நேருக்கு நேராக கண் பார்த்து பேசக் கற்றுக்கொடுத்தவள் அவளே. பெண்கள் குறித்தான என்னுடைய சிந்தனையின் பின்புலம் அவளே. வாழிய!!

கடந்த பதினைந்து வருட காலமாக தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துத்துறைகளில் இயங்கிவருகிறேன். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, திறனாய்வு என்று சுழல்கிறேன். தன்முனைப்பு பேச்சாளராகவும் பெண்ணிய சிந்தனைகளை விதைக்கும் பெண்ணியவாதியாகவும் கதைசொல்லியாகவும் கல்லூரிகளில், பொதுமேடைகளில், ஊடகங்களில், இணையத்தில் செயல்பட்டுவருகிறேன். 

பெண் என்னும் பார்வையில் வாழ்க்கை அனுபவங்களை கட்டுரைகளாக்கி இருக்கிறேன். எனது இருதய அறுவை சிகிச்சை அனுபவங்களை 'நின்று துடித்த இதயம்' என்னும் புத்தகமாய் கொண்டுவந்தேன். அதற்கு நெருஞ்சி படைப்பாளுமை விருது கிடைக்கப்பெற்றேன். 

இங்கிலாந்து சென்றுவந்த பயண அனுபவங்களை அந்நாட்டின் சமூகம், அரசியல், மக்களின் வாழ்வுமுறை போன்றவற்றை எழுத்தாக்கி, 'இங்கிலாந்தில் 100 நாட்கள்' என்னும் பயண இலக்கிய நூல் படைத்துள்ளேன்.

ஆங்கிலத்தில் 'I Named The Village' என்னும் கவிதை தொகுப்பு வெளிவந்துள்ளது. 'தவ்வை' என்னும் முதிய பெண்ணின் கதையை சொல்லும் நாவல் படைத்துள்ளேன். 

பெண்ணைப் புரிந்துக்கொள்ள ஏதுவாக பெண் குறித்த சுவாரசிய கட்டுரைகள் கொண்ட 'நாங்கதாங்க பெண்கள்' என்னும் நூல் வெளிவந்துள்ளது. இந்த கட்டுரைகள் 'புதிய தரிசனம்' இதழில் வெளிவந்தவை. 

மின்னூலாக 'காட்டிடைவெளி' என்னும் நூல், 'மனதின் ஓசை' என்னும் பகுப்புக்குள் வெளிவந்துள்ளது. அடுத்ததாய், 'மழையில் நனையும் புலுனிக்குஞ்சுகள்' வெளிவருகிறது. இதுவரை பதிமூன்று நூல்கள் வெளிவந்துள்ளன. 

இலக்கியக்கூட்டங்களில், கருத்தரங்கங்களில் திறனாய்வு செய்த, பதிப்பிக்கப்பட்ட கட்டுரைகள் கொண்ட தொகுப்பு நூல்களாக 'அகிலாவின் பார்வையில்..' என்ற தொகுப்பு நூல்கள் பதிப்பில் உள்ளன. அதில் கி ரா, நாஞ்சில் நாடன், தஞ்சை பிரகாஷ், சுந்தர ராமசாமி போன்றோர் குறித்த கட்டுரைகளும் படைப்பிலக்கியத்தில் எடுத்தியம்பும் பெண் சமூகம் குறித்த கட்டுரைகளும் அடங்கும். 

என்னுடைய கவிதைகளை ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றிருப்பதும் சிறப்பு.  

சிறுகதை தளத்தில் வெகு காலமாக இயங்கிவருகிறேன். கல்கி, கணையாழி போன்ற பத்திரிக்கைகளில் எழுதிவருகிறேன். என்னுடைய யானைகளின் பாதைகள் குறித்த 'வலசை' சிறுகதை அமரர் கல்கி நினைவு சிறுகதை போட்டியில் (2017) இரண்டாம் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. 'மிளகாய் மெட்டி' என்னும் சிறப்பு கவனம் பெற்ற என் சிறுகதை தொகுப்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தில் படைப்பாளுமை விருதைப் பெற்றுத்தந்தது. 'மண்சட்டி' சிறுகதை தொகுப்புக்கு தேனி தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் 'அசோகமித்திரன் நினைவு இலக்கிய விருது' (2019) கொடுக்கப்பட்டது.  

பெண் குறித்த ஆளுமை செயல்பாட்டிற்காக, தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் நலச்சங்கம் ‘பெண்ணியச் சிந்தனைச் சிகரம் விருது' (2020) கொடுத்து கௌரவித்தது. மற்றும் திருப்பூர் அரிமா சங்கத்தின் ‘அரிமா சக்தி விருது’ (2014), ஜெயவர்மம் அறக்கட்டளை, ஜெசீஸ், சிவோகா அறக்கட்டளை போன்றவற்றிலும் விருதுகள் பெற்றுள்ளேன்.  

  
     
கல்வியும் பணியும் : 

இளங்கலையில் பொறியியல் பட்டம், முதுகலையில் கணினி பயன்பாட்டியல் மற்றும் மனநல ஆலோசனை பெற்றிருக்கிறேன். கோயம்புத்தூரில் Insight Counselling என்னும் மனநல அமைப்பின் நிறுவனராக, மனநல ஆலோசகர் பணியில் உள்ளேன். கணவன்- மனைவி, குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், குழந்தைகள் போன்றோருக்குள் உண்டாகும் குடும்ப உறவு சிக்கல்கள், பெண்களின் உளச்சிக்கல்கள், வேலை மற்றும் குடும்பம் சமநிலை செய்வதில் எழும் பதற்றம் மற்றும் மனச்சோர்வு சார்ந்த சிக்கல்கள், குழந்தைகளின் கற்றல் சார்ந்த குறைபாடுகள், பதற்றம், பயம் சார்ந்த பிரச்சனைகள் போன்றவற்றில் மனநலம் பேணிவருகிறேன்.  

கணவர் புகழேந்தி மேனாள் காவல்துறை அதிகாரி, மகனார் ஒருவர்.  தொடர்புக்கு : 

D. Ahila, 
Counselling Psychologist,
Ahil Insight Counselling,
Kovaipudur, Coimbatore - 641042
 
Email : artahila@gmail.com 

1 comment:

  1. வாழ்த்துக்கள் மேடம்.. உங்கள் எழுத்துலக பயணம் சிறக்கட்டும்.

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....