Skip to main content

Posts

Showing posts from May 11, 2014

சாளரக்கவி..

சிறு விளக்குகளுடன் வெள்ளையில் சதுரமிட்ட மருத்துவமனையின் மோட்டுவளையை பார்த்து வந்த பின்னால், என்னைப் போலவே என் வானமும் நகராத மேகங்களுடன் அசைவற்றுக் கிடக்கிறது சாளரத்தின் கண்ணாடி சட்டங்களின் வழியே என் சின்ன சிறகுகளின் விசாரிப்புக்களும்,   நான் இல்லாத சமையலறையில் அங்குமிங்குமாக ஓடும்   அணிலின் சந்தோஷமும், வாசலில் அசையும் சீனத்து பெங் சூயியின் சில்லிட்ட அழைப்புகளும், என்னை நனைக்க முடியாத ஆதங்கத்தில் விழும் மழையின் கண்ணீர் கோடுகளும் இன்று என்னை உண்மையிலேயே   சாளரக்கவியாக்கிவிட்டன..

புரியாமலே..

நாளொன்றுக்குமாய் புரிதலின் விதிமுறைகள் மாறுகின்றன பரிமாற்றங்களில் புளித்த பொய்கள் கலக்கப்படுகின்றன பார்வைகளில் பொதிந்த மொழிகள் பேச்சற்று நிற்கின்றன      வாய்மொழிகளில் செதுக்கிய அனுபவங்கள் முருங்கையில் வேதாளமாய் காய்த்து தொங்குகின்றன மௌனத்தின் வடிகால்களில் கண்ணீரின் சிவப்பு வண்ணமிடப்பட்டு கண்காட்சியாகிறது எங்கோ ஓர் ஆந்தையின் அலறல்   வாழ்வின் நிலையாமையை இருட்டில் போட்டு உடைக்கிறது சிலந்தியொன்று வலை பின்னத் தொடங்குகிறது   அடுத்த வேளையின் பசிக்காக கிளிக்கூட்டமொன்று நீல வானை பச்சையாக்கிச் செல்கிறது புரியாமலே பார்த்துக் கொண்டிருக்கிறேன் எந்த கிளியிடம் என் உயிர்  ஒளிந்திருக்கிறதென்று..