Skip to main content

Posts

Showing posts from February 15, 2015

எத்தனை முறை பயணிப்பது..

தண்டவாளங்களின் மேல் ஓடும் சூரியனை பார்த்தபடி,  இது கடைசி பயணமில்லையென்று தப்பில் தோய்த்த சித்திரங்களாய், தனிமை   பேசிக் கொண்டேயிருக்கிறது மௌனமாய்.. விசுக்கென்று உயரும் சேவலின் முகமாய், வீசும் காற்றை நாசிக்குள் இழுக்கிறது மனது கடந்துக் கொண்டிருக்கின்றன கோபுரங்கள்  வைக்கோல் படப்பை மூடிய பிறிகளின் இழைகள்   காற்றைவிட்டு பிரிந்து முகத்தில் அறைகின்றன   உறையாத நீரின் மீது வாத்துக்கள் கால் பாவுகின்றன  வானம் மையிட்டு சூரியனை உண்ணத் தொடங்குகிறது  களைப்பில் உதிர்ந்து விழுகின்றன  பயண பைகள்  இது கடைசி பயணமில்லையென்று  மூடிய கண்களுக்குள், தனிமை  பேசிக் கொண்டேயிருக்கிறது  மௌனமாய்..

கிணற்று நீரை..

முழித்திருந்த புற்களை எல்லாம் எண்ணிவிட்டு  விடியலின் எழிலை இல்லாதொழித்த கரும்புகை வண்டியொன்றை கண்டு இருந்த இடம் பெயர்ந்து கொன்றைமரக் குச்சியொன்றில் குத்திட்டு, கூக்குரலிட்டு சுண்டக்காய்ச்சிய குழம்பில் குழைத்த பிழிந்தெடுத்த சோற்றுப் பருக்கைகளுக்காய் என்னை அழைக்கும், பொருள் பொதிந்த உன் தேடல்கள் அன்னியமாய்படுகிறது எனக்கு. எங்கேனும் வானம் பிரிந்த சூரியன் உண்டா, சொல்.. மாசி பிறந்தும் விலகாத, வாடை காற்றை விலக்கி பின்கட்டு திறந்து, உனக்கான பிடி உருண்டையை, பழுப்பு இலைகளால் ஆரவாரப்படும் கிணற்றின் பக்கமாய் வைக்காமலா வருவேன்.. எச்சமிடாமல் சாப்பிட்டு போ.. கிணற்று நீரை தவளை குடித்துக் கொண்டிருக்கிறது..