Tuesday, 11 October 2016

சர்வதேச பெண் குழந்தைகள் தினம்..
பெண் குழந்தைகளின் தினம் இன்று.


கள்ளிப்பால் கொடுத்த காலம் கொஞ்சம் கடந்து, குழந்தை திருமணங்களை எதிர்க்கும் தருணம் இது. வளரும் நாடுகளில் மூன்றில் ஒரு பெண் குழந்தைக்கு பதினெட்டு வயதுக்குமுன் திருமணம் நடப்பதாக ஐக்கிய சபையின் அறிக்கை கூறுகிறது.

மத்தியதர குடும்பங்களில் இளவயது திருமணங்கள் குறைவு. பெற்றோர் பெண் பிள்ளைகளைப் படிக்கவைக்க போராடுகிறார்கள். அதனால் அங்கெல்லாம் வாழ்த்துகள் போதும்.

ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் பல குடும்பங்களில் பதினைந்து பதினாறு வயதில் பெண் பிள்ளைகளை மணமுடித்து கொடுக்கும் பழக்கம் இருக்கிறது.

உடலளவிலும் மனதளவிலும் வளர்ச்சியடையாத பருவம் அது. அந்த வயது திருமணம் என்பது எத்தனை பாதிப்புக்களை அந்த பெண்ணுக்கும் அவளின் பிள்ளைகளுக்கும் அவளைச் சார்ந்தோருக்கும் உண்டு பண்ணும் என்பது நாம் அறிந்ததே.


இவர்கள் நம்மைச் சுற்றியே இருக்கிறார்கள். நம் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி, அருகில் பெட்டிக்கடை நடத்துபவர், நம் தெருமுனையில் சிறுகடை வைத்திருக்கும் டெய்லர் இப்படி.

இம்மாதிரி குடும்பங்களில்தான் நம்மை போன்றோரின் உதவி தேவைப்படுகிறது. பெண்பிள்ளைகளை பெற்றவர்களிடம் பெண்ணை படிக்க வைக்க பேசுவோம். அதுவும், குறிப்பாய் அப்பிள்ளைகளின் தாய்மார்களிடம். அவர்களை சற்று ஊக்கப்படுத்தினாலே கடினப்பட்டு உழைத்து தன பெண்ணைப் படிக்கவைக்க முனைவார்கள். இது என் அனுபவம்.


முடிந்தவரை இளவயது திருமணங்களைத் தடுத்து, படிப்பை ஊக்கப்படுத்துவோம். நம்மைச் சுற்றி இருப்பவர்களிடம் பெண் குழந்தைகளின் கல்வி குறித்து அதிகமாய் பேசுவோம். பேச பேசவே, சமூகம் நமக்கு காது கொடுக்கும்.

சர்வதேச பெண் குழந்தைகள் தின வாழ்த்துகள்..


Tuesday, 20 September 2016

அகிலாவின் 'மழையிடம் மௌனங்கள் இல்லை' - தமிழ் மணவாளன் மதிப்புரை

மழையிடம் மௌனங்கள் இல்லை
முனைவர் தமிழ் மணவாளன்

(கவிஞர் அகிலா எழுதிய, ‘மழையிடம் மௌனங்கள் இல்லை’, 
கவிதை நூலினை முன்வைத்து)


கவிஞர் அகிலாவின், “மழையிடம் மௌனங்கள் இல்லை” , என்னும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டு உரையாற்றுகிற வாய்ப்பினை வழங்கியதற்காக முதலில் என் அன்பும் நன்றியும். 

நவீன தமிழ்க்கவிதைச் சூழலில் கவிதைகளுக்கான பாடுபொருள்கள் மிகுந்த பெரும் பரப்பைக் கொண்டிருக்கின்றனவெனலாம். சமகாலத்தின் வாழ்வியல் சூழல் கொடுக்கிற பல்வேறு பிரத்யேகமான அனுபவங்கள் பயன்பாட்டுப் பொருள்கள் என இதுகாறும் தமிழ்க்கவிதை எதிர் கொள்ளாத பல விஷயங்களைப் பேசுபவையாக இருக்கின்றன. இப்படியான, சமகாலத்தின் புறச்சூழலும் சம்பவங்களும் அனுபவங்களும் தரும் உந்துதல் ஒரு புறம் இருப்பினும் அவற்றை எழுதுகிற கவிமனம் நம்மின் மனத்துக்கு நெருக்கமாய், எந்நாளும் இருக்கிற இயற்கை, பறவைகள், மிருகங்கள் கவிதைகளின் முக்கியமான பொருண்மைகளாக அடையாளம் கொள்கின்றன.

பெரும்பாலும் சமகாலத்தின் கூறுகளைப் பேசும் போது இவையெல்லாம் தொன்மக்கூறுகளாகவும் உருவகங்களாகவும் படிமங்களாகவும் அமைகின்றன. ஏனெனில் அவை ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் கருத்தியல் சார்ந்தோ அல்லது அதற்கு நேரெதிரானதாகவோ கவிதைகளில் இடம் பெறுவதைப்பார்க்க முடியும்.
தேவதேவனின் பறவைகள் காய்த்த மரம் என்றொரு கவிதை.

இன்னொரு காலத்தில் கனிகள் செறிந்திருந்த மரம்
அன்று பறவைகளால் காய்த்து
இருட்டில் செய்வதறியாது கத்திக் கொண்டிருந்தது
ஒரு நண்பனைப் போல
சூரியன் என்னை தொட்டு எழுப்பிய காலை
வானமெங்கும் பறவைகள் ஆனந்தமாய் பரவ
மெய் சிலிர்த்து நின்றது அந்த மரம்.

இந்தக்கவிதை மரத்துக்கும் பறவைகளுக்குமான உறவை, இருப்பைப் பேசுவதாக அமைந்து, இரவில் பறவைகளால் காய்த்திருந்த மரம் சூரியனின் வருகையினால் பறவைகள் வானமெங்கும் ஆனந்தமாய்ப் பரவ மரம் சிலிர்த்து நிற்கிறது. அது தான் உறவின் உன்னதம்.

துணி துவைத்துக்கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக்கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்

என்னும், தேவதச்சனின் கவிதை குருவிகளின் சப்தத்தை, நிசப்தத்திற்கும் சப்தத்திற்குமான உறவு, இடைவெளி கவனத்தினூடாக நிகழும் மாயம் என விரியும். இவ்விதமாய் நவீன கவிதைகள் பறவைகளை அசாத்தியமானப் படிமங்களாக,குறியீடுகளாக மாற்றியிருப்பதைக் காண முடியும்.
  
இவற்றை ஏன் இங்கே குறிப்பாக நினைவு கூர்கிறேனெனில், அகிலாவின், ‘மழையிடம் மௌனங்கள் இல்லை,’ தொகுப்பில் கணிசமாக பறவைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால், இவரின் பறவைகள் குறியீடுகளாகவோ படிமங்களாகவோவன்றி, கவிமனத்தின் உடன் இருக்கின்றன. கண்ணெதிரே அமர்ந்திருக்கின்றன. இரையெடுக்கின்றன. பறந்து போகின்றன.மீண்டும் வந்து அமர்கின்றன.

நாரை,புலுனி,செம்போத்து,காகம்,குருவி,கிளி, அக்கா குருவியென.

விதைத்துவிட்டு திரும்புவதற்குள்
பசியென அவற்றைப் புசித்திருக்கும்
இந்த அதிகாலை குருவிகளிடம்
என்ன பேச?

வரிகளைக் கவனியுங்கள்.விதைத்த விதைகளைத் தின்ற பறவைகள் மீது கோபம் தானே வரும். அகிலாவின் கவி மனத்திற்கு வராது.

காக்கைக் குருவி எங்கள் சாதி
என்னும் கவிமனம் அது. அதனாலே தான் இந்த அதிகாலை குருவிகளிடம் என்ன பேச, என்று சமாதானமாகிறார்.காரணம் என்ன தெரியுமா? பசியென அவற்றைப் புசித்திருக்கும் அவைகளிடம் என்ன பேச முடியும். தன் பிள்ளை ஏதேனும் தவறிழைத்தால்,
என்ன கேட்கச் சொல்றிங்க , செஞ்சுட்டான்/ள்’, என்னும் தாயின் குரலாய் உணர முடியும்.

பறவைகள் தவிர்த்து மழை குறித்த கவிதைகள் மற்றும் சமூகம் சார் கவிதைகள் எனவும்.

மச்சுவீட்டில் அமர்ந்த மதப்பில்
மதிலின் மேல் கொட்டாங்குச்சி
மழை நீரை அதிகமாய்க் குடித்து
எட்டிப்பார்த்த நிலவைப் பிடித்து
சட்டென உள்ளே அடைத்தது
கெஞ்சிய நிலவை
போதையில் கொஞ்சியது
போராட்டமும் தள்ளாட்டமும்
மதிலின் விளிம்பில்
சற்றுபிடி தளர்ந்த பொழுது நீர் மண்ணுக்கும்
நிலவு விண்ணுக்குமாய்
\மதிலின் மேல் தனித்து
மீண்டும் மழைக்காய் கொட்டாங்குச்சி

நூலின் முதல் கவிதையிது.
ஒரு காட்சிச் சித்திரம். முற்றிலும் புனைவுக்காட்சியே. எதனை முன்வைத்து எழுதினார் என வாசக மனத்தினூடாக சிறு திறப்பைக் கண்டடைகிறேன். அது, ‘போதையில்என்னும் சொல்லே. இப்போது புனைவைப் பொருத்துவது இலகுவாக மட்டுமல்ல சுகமாகவும் இருக்கிறது. கவிமனம் இதற்கான புனைவாக எண்ணி எழுத முனைந்ததாவெனத் தெரியவில்லை.

மச்சுவீட்டில்’, வசதியான சூழலில் மதிலென்னும் விளிம்பில் அதிகம் குடித்த கொட்டாங்குச்சி ஒரு கணத்தில் நிலவையே தன்னுள் அடைக்கும் சாத்தியம் பெற்றது.

போதையில் கொட்டாங்குச்சி கொஞ்ச,அடைபட்ட நிலவு கெஞ்சுகிறது, தப்பித்தலை முன்வைத்து.நிலவின் போராட்டமும் தள்ளாட்டமும் மதிலின் மேல் நடக்கிறது.ஒரு கட்டத்தில் பிடி தளர நிலவு தப்பித்து விண்ணுக்கு செல்கிறது.
கொட்டாங்குச்சி மீண்டும் மதிலின் மேல்.

நவீன கவிதையின் சிறப்பும் இதுதான் சிக்கலும் இதுதான்.ஒற்றைப் புனைவு வாசகனிடம் சற்றும் எதிர் பாராத இடங்களுக்கு இட்டுச் சென்றுவிடும் சாத்தியம் கொண்டது.

கிளிக்கூட்டமொன்று
நீல வானை
பச்சையாக்கிச் செல்கிறது

என்னும் போது வான் பரப்பெங்கும் கிளிக்கூட்டமென்னும் காட்சி விரிகிறது.பறவைகள் பறவைகளாகவே உடனிருப்பதும் மனம் நிறைப்பதுமாய் காணமுடிகிறது.

வானம் தொட்ட சிவந்த அரளிப்பூக்கள்
நிலவை இழுத்துவரும் பொழுதுகளிலெல்லாம்,

மல்லிகையின் மீது,
முதல் மழை

என அழகியல் பேசும் மழையும்.

மழையிடமிருந்து மறைக்கப் பிரயத்தனப் பட்டு,
முடியாமல், முழுதாய் நனைந்திருந்தது
அந்தவீடு
விடாத மழையும்
இருளுக்கு கண் கொடுத்து
இடுக்குகள் வழி உள்ளிறங்கியது

என இயலாமை உணர்த்தும் மழையும்,

வானவில்லை வாசலில்
விட்டுச் செல்லும் மழையிடம்
என்றுமே மௌனங்கள் இல்லை
என குணாம்சம் கொண்ட மழையும்,

பெருமழையாய் இருப்பின்
வீதி தொடும்முன், காற்றின் புகை கரைத்து
கசாயம் செய்கின்றன
வீதி தொட்டபின்,
கழிவுகளின் வாசம் சுமந்து
மணம் மாறுகின்றன
என நகரத்தை நரகமாய் மாற்றும் மழையும்.

மழை பற்றியும் பறவைகள் குறித்தும் எழுதப்பட்டிருக்கும் கவிதைகளுக்கப்பால் சமூகம், பெண்மனம் , தொன்மம் அல்லது பழங்காலச் சடங்கு முறையென பலதரப்பட்ட பாடு பொருள்களைக் கொண்ட கவிதைகள் தொகுப்பில் கவனம் கொள்ளத்தக்கவையாய் உள்ளன.

அப்பா குறித்த கவிதை ஒன்று. மகள்களைப் பெற்ற அப்பாக்கள் கொடுத்து வைத்தவர்கள்..ஏனெனில்,

அவரைப் புரிந்து கொள்ள
பெண்மகவுக்கு
அவகாசம் வேண்டாம்
ஆண்பிள்ளைக்கோ
ஆண்டுகள் வேண்டும்

என்று அகிலாவின் வரிகள் சொல்வதால் மட்டுமல்ல: அது தவிர்த்து வாழ்வின் உதாரணங்கள் பலவும் காணக்கிடைக்கின்றன. அதைவிட, அகிலா போன்று கவித்துவ மனமும் மொழியும் கொண்ட மகள் அரிதான கொடுப்பினையென்றே சொல்வேன்.

இளம்பிறை ஒரு கவிதையில் தந்தைக்கும் மகளுக்குமான உரையாடலைப் பதிவு செய்திருப்பார்.வயல் வெளியில் நடந்து வரும் போது அப்பா வரப்பில் வழுக்கி விழ, மகள் கவலையுறுவாள். உடன் தந்தை தன் கையில் ஏற்பட்ட காயத்தை மறைத்துக் கொண்டு, ‘ஒண்ணுமில்ல தாயீ, நீ கவலைப்படாதே,” என மகளுக்கு ஆறுதல் சொல்வார்.அடிபட்டவர் அப்பா. ஆறுதல் மகளுக்கு.

லீனா மணிமேகலை, தன் முதல் தொகுப்பான, ‘ஒற்றையிலையென’, நூலில் உள்ள தந்தை குறித்த கவிதையில், மரணமுற்றுக் கிடத்தப்பட்டிருக்கும் தந்தை குறித்து, ‘அவரைப் பிணம் என்று சொல்லாதீர்கள். அவர் மீது தீ மூட்டாதீர்கள். வெந்நீரின் அதிக சூடு கூடத் தாங்க மாட்டார் ‘, என்னும் பொருள் பட எழுதியிருப்பார்.

அகிலா, தன் கவிதையில் தந்தை குறித்து எழுதுகையில்,
பார்வைகளை
மொழிகளாக்குபவர்கள்
மௌனங்களை
வார்த்தைகளாக்குபவர்கள்
புன்னகையை
சிரிப்பாக்க யோசிப்பவர்கள்
பெற்ற மகவை
பொறுப்பின் கனமாய் உணர்பவர்கள்
என்கிறார்.

இது தந்தை பற்றிய பாச மொழியன்று. பேசத்தெரியாதவர்கள்; அன்பை பார்வைகளோடு புதைத்து விடுபவர்கள்;புன்னகையை சிரிப்பாகக் கூட மாற்றாமல் மாற்றத் தெரியாமல் இருப்பவர்கள் ; பொறுப்பின் கனம் சுமப்பவர்கள்; தந்தை பற்றிய முதிர்ந்த பார்வை.

பிணம் தழுவுதல்என்பது பண்டைய கால நம்பூதிரி இனத்தவர்களிடையே இருந்துள்ள சடங்கு என்று கூறப்படுகிறது. திருமணம் முடியாத கன்னிப் பெண் இறந்துவிட்டால் அந்தப் பிணத்தின் மீது சந்தனம் பூசி ஓர் இருட்டறையில் கிடத்தி, அந்த ஊரில் உள்ள ஏழை இளைஞன் ஒருவனை அழைத்து, அந்த இருட்டறைக்கு அனுப்புவார்களாம். அவன் உள்ளே சென்று கன்னிப் பெண்ணின் சடலத்தைத் தழுவி வர (உடலுறவு கொள்ள) வேண்டும். இளைஞனின் உடலில் ஒட்டியிருக்கும் சந்தனத்தை வைத்து அவன் பிணம் தழுவியதை உறுதி செய்வார்களாம். காதல் ஏக்கத்தோடு கன்னிப்பெண் இறந்தால் அவள் ஆத்மா சாந்தியடையாமல் ஆவியாக அலையும் என்பது அவர்களின் நம்பிக்கை. மலைநாட்டில் இவ்வழக்கம் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்படியான ஓர் தொன்ம வழக்கம் குறித்த பதிவாக மட்டுமல்லாது மீள் பார்வைக்கும் அகிலா உட்படுத்துவது சிறப்பு.அநேகமாக பிணம் தழுவுதல்குறித்த நான் படித்தகவிதை இதுதான்.

கல்லறை உடைத்து, வெளியிழுத்து போடப்பட்டது
உயிரற்ற முகம் வெளுத்த அந்த உடல்
ஒடிந்துவிடும் தேகம் கொண்ட அவனை
அங்கேயே விட்டு நகர்கிறது மனித வாசம்

மரித்த பெண்ணை உறவுகொள்ளச் சொல்லும் மனிதர்கள் விலகிப்போவதை, நகர்கிறது மனித வாசம். மனித வாசம் கூட இல்லாது அற்றுப் போவது எத்தனை கொடுமை.    எல்லாம் முடிந்தபின் கவிதை இப்படி முடிகிறது.

இசைப்பதை மறந்த பறவையொன்று
சடசடவென சிறகடித்துப் பறக்கிறது
பீத்தோவானின் கல்லறையை நோக்கி

பல் கவிதைகளில் பறவைகளோடு வாழ்பவர், நெஞ்சம் நெகிழும் நிகழ்வின் பின் பறவையைப் படிமமாக்குகிறார்.

பெரிதாய் என்ன பேசிவிடப் போகிறாய்
சாப்பிட்டாயா தூங்கினாயா என்பதான
அனர்த்தமான சொற்களைத் தவிர

என்னும் போது அர்த்தமான உரையாடலாக கவிதையின் முற்பகுதியில் குறிப்பிடும் உரையாடலுக்குத் தகுதியான பொருள்களாய்ச் சொல்பனவற்றைப் பார்க்கும் போது சமூகத்தின் மேலுள்ள அக்கறை வெளிப்படும்.

சில இடங்களில் எளிய அதேசமயம் குறிப்பிடத்தக்க உவமைகளைக்காண முடிகிறது.

கூடலின் பொழுதொன்றில்
கழற்றப்பட்டு கிடந்தன
ஆடைகளாய் அவை
***** ***** *****
இரவலுக்கு குரலை வாங்கிக் கொண்டு
மேடை கட்டி ஆடுகிற
பெண்ணைப்போல
***** ***** ****
உறைந்து போன பெண் இதயம்
சம்பாஷனையற்ற திண்ணையாய் வறண்டிருக்கிறது

போன்ற சிலவற்றைக் குறிப்பிடலாம்.

அகிலாவின் கவிதைகள் தமக்கென மெல்லிய நடையொழுங்கையும் அரிதான விஷயங்களையும் அதிர்ந்து பேசாமல் அதே சமயம் அழுத்தம் குறையாத தன்மையையும் கொண்டிருக்கின்றன. பெண்ணியம் குறித்தான இன்றைய படைப்புகளின் ஒப்பீட்டளவில் சொல் முறையில் தீவிரம் மட்டுப்பட்டதாகத் தோன்றலாம். அது தோற்றம் தான். சரியானவற்றைப் பேசுகிறார் என்பது தான் கவனம் கொள்ளத்தக்க ஒன்றாம். தொனி, மொழி, முறைமையெல்லாம் படைப்பாளியின் பிரத்யேக உரிமை.


எனக்கு இணக்கமான பல கவிதைகளைப் படிக்கிற வாய்ப்பை இத்தொகுப்பு வழங்கியது என்பதைப் பதிவு செய்வதென் கடமை. வடிவம் சார்ந்தும் சற்று இறுக்கம் கூடியும் எதிர் நாளில் தேவையின் பாற்பட்டு, செய்வது அவருக்குச் சிரமம் இருக்காது. தொடர்ந்து இலக்கியத்தில் இயங்கும் போதான படிநிலைகள் யாவர்க்குமானது. உயரம் எட்ட என் வாழ்த்துகள்.

Saturday, 17 September 2016

பெரியாரும் பெண் முன்னேற்றமும்..

பெரியாரும் பெண் முன்னேற்றமும்
"ஆண்கள் பெண்களை படிக்க வைக்க வேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும், ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்கவேண்டும்."

பெரியார் அவர்கள் சொன்னபடி, படிப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

"பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்துவிட்டால், அவர்களுக்கு இருக்கும் எல்லாவகையான அடிமைத்தனங்களும் ஒழிந்துபோகும்."

அதுவும் சட்டமாகியிருக்கிறது.

"கணவனை இழந்தோர் மறுமணம் செய்துகொள்வதில் தீங்கில்லை."

அதையும் செய்துவருகிறோம்.


தந்தை பெரியார் சொன்ன, செயலாக்கிய, செயலாக்கம் பெற போராடிய, பெண் உரிமையை, விடுதலையை, கிட்டதட்ட நெருங்கிய பின்பும் சமூகத்தில் ஏன் இத்தனை பெண் சார்ந்த வன்முறைகள்?


தனக்கு எதிராய் பெண்ணை ஏற்றுக் கொள்ளமுடியாத ஆண்வர்க்கத்தின் நிலைபாடும் இதற்கு ஒரு காரணம்.

  1. இன்றைய ஆண் குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்கள், அவர்களுடன் பழகும் பெண்பிள்ளைகளை, தோழிகளை, அவர்களுடன் பயிலும் சக மாணவிகளை, தன்னைவிட வயதில் மூத்த பெண்களை எவ்வாறு சகஜமாக ஏற்றுக்கொள்ள வேண்டும், எவ்வாறு அணுகவேண்டும் போன்றவற்றை கற்பிக்க வேண்டும். விட்டுக்கொடுத்தலையும், புரிவதற்கான வழிமுறைகளையும், பழகும் முறைகளையும் சொல்லிக்கொடுத்து வளர்க்கவேண்டும்.
  2. பெரியாரிஸம் பேசும் பகுத்தறிவாளிகளும் அரைத்த மாவையே அரைப்பதை விடுத்து, சற்று அவரின் சிந்தனைகளை காலத்திற்கு ஏற்றார்போல், அடுத்த கட்டத்திற்கு கொண்டு போகவேண்டும்.
  3. பெண்மக்களின் முன்னேற்றம் மட்டுமல்லாமல், பாதுகாப்பு குறித்த விஷயங்களையும் சமூக அமைப்புகள், அரசியல்கட்சிகள் கணக்கில் கொள்ளவேண்டும்.

பெரியாரின் சிலைக்கு மாலையிடுவதோடு நிறுத்திவிடாமல், பெண் பாதுகாப்பில் அனைவரும் அக்கறை எடுத்தால், நாளைய சமூகத்திலாவது சுவாதிகள் இல்லாதிருப்பார்கள்..


Tuesday, 13 September 2016

பெண்களுக்கு..

விரல்கள் பத்திரம்..
உறவில் ஒரு பெண்மணியை தற்செயலாக நேற்று சந்தித்தேன்.

அவரின் இரண்டு கைகளின் உள்பக்கத்தில் மணிக்கட்டு முதல் வளையல்கள் நிற்கும் இடம் வரை வெளுத்துப் போயிருந்தது. அரிப்பும் ஏற்பட்டு, அவ்வப்போது சிவந்துவிடுவதாகவும், தானே சரியாவதாகவும் கூறினார்.

காரணம் கேட்டால், 'சமைக்கிறேன், பாத்திரம் கழுவுகிறேன் இத்தனை வருஷமாக, அதுதான்' என்று அதற்கு தெளிவாக ஒரு பதிலும் சொன்னார்.


வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஒரு குணம் இருக்கிறது. மாங்கு மாங்கென்று நேர்ந்துவிட்ட மாதிரி சமையல்கட்டில் வேலை பார்ப்பார்கள். அந்த நேரத்தில், தன் கைகள், விரல்கள், முகம், கழுத்து எல்லாம் சேதமாவதைப் பற்றி யோசிக்கவே மாட்டார்கள். புத்திசாலித்தனமாக பொறுமையாக அந்த வேலையை செய்யும் தன்மை கிடையாது என்பது வருத்தமான விஷயம்.


சில விஷயங்களை சமையல் செய்யும்போது கவனித்து செய்தாலே போதும்:

1. காய் நறுக்கும்போது, அருவாமனையை தள்ளி வைங்க. கட்டர் பயன்படுத்துங்க. அப்படியே அருவாமனையைப் பயன்படுத்தினாலும், காய்கறிகளுடன் சேர்த்து அழுத்தம் கொடுக்கும் பெருவிரலில் சிறுசிறு கீறல்கள் விழாமல் நறுக்குங்க. நம்ம விரல் அழகை நாமதான் பார்த்துக்கோணும்.

2. தாளிக்கும்போது, சமையல் எண்ணெய் முகத்தில், கழுத்தில், கையின் உள்பாகங்களில் தெறிக்காமல் தள்ளி நின்று வேலை செய்யுங்க. பொட்டு பொட்டாக சுட்டுக்கொண்டு நிற்பதற்கு, இது ஒன்றும் வீரத்தழும்பு இல்லை.

3. பாத்திரம் கழுவும்போதும், அதன் பின்னும் கையில் பாத்திரம் கழுவுவதற்கான சோப்/பவுடர்/திரவம் சுத்தமாய் இல்லாதவாறு கைகளை நன்றாக கழுவுங்க. அப்போதுதான், நான் சொன்ன அந்த பெண்மணியின் கைகளில், இத்தனை வருட அனுபவத்தில், அந்த கெமிக்கல் அரித்திருந்தது போல வராமல் இருக்கும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் என்றால், கைகளையும் கால்களையும் நன்றாக வைத்துக் கொள்ளக்கூடாது என்று எங்கும் சட்டம் இல்லை.

நீட்டாக பட்டுபுடவை கட்டி, நகை போட்டு அலங்காரம் பண்ணிக்கிட்டு, இன்னாரின் மனைவி நான், அவர் என்னை இவ்வளவு செல்வசெழிப்பில் வைத்திருக்கிறார் என்று கல்யாணவீடுகளில் காட்டிக்கொள்வதைவிட, நம் உடலை எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதையும் கவனிக்க பெண்கள் கற்றுக்கொள்ளவேண்டும்.

அப்புறம் நம்ம வீட்டு ஆண்கள், அடுத்த பெண்களைப் பார்த்து ஆசைப்படுவதை நிப்பாட்டிட்டு, நம்ம விரல்களையும் பார்த்து, வெண்டைகாய் மாதிரி (அட..அப்போவும் சமையல் பொருள்தான் ஞாபகத்துக்கு வருது.) இருக்குன்னு கொஞ்ச மாட்டாங்களா என்ன..

அவங்களை விடுங்க, நம்ம பிள்ளைங்க நாம நல்லாயில்லைன்னா, ஸ்கூலுக்கு வராதேம்மா, அப்பாவே வரட்டும்னு சொலவதையும் கேட்கிறோம்.

யோசிங்க.. வீட்டில் இருந்தாலும் அழகாய் ஆரோக்கியமாய் இருக்க முயற்சிப்போம். இதை படிக்கும் ஆண்கள் உங்க வீட்டு பெண்களிடம் சொல்லுங்க. 
Tuesday, 30 August 2016

21ஆம் நூற்றாண்டு நவீனக்கவிதைகளில் புதியப் போக்குகள் - நூல் மதிப்புரை

21ஆம் நூற்றாண்டு நவீனக்கவிதைகளில் புதியப் போக்குகள்

(ஆய்வு கட்டுரை நூல்)

முனைவர் பூ மு அன்பு சிவா
கோவை புத்தகத் திருவிழாவில் நடந்த 
இலக்கிய சந்திப்பில் வெளியிடப்பட்டது. 

அன்று நான் செய்த மதிப்புரை

  
21 ஆம் நூற்றாண்டு நவீனக் கவிதைகளில் புதியப் போக்குகள் என்னும் தலைப்பில் ஆய்வுக்காக எடுத்த கட்டுரைகளை நல்லதோர்  நூலாக்கி இருப்பதற்கு முனைவர் பூ மு அன்புசிவா அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

2001 – 2005 வரை உள்ள காலகட்டத்தில் உள்ள புதுக்கவிதைகளை, அவற்றிலுள்ள நவீனத்துவப் போக்குகளை இதில் ஆய்வுக்காக எடுத்து தொகுத்துள்ளார். அதில் ஆதவன் தீட்சண்யா, அழகுநிலா, இரத்தின புகழேந்தி, தேவதேவன், மாலதி மைத்ரி, குட்டி ரேவதி, சல்மா, சுகிர்தராணி, கனிமொழி, குகை மா புகழேந்தி, மகுடேஸ்வரன், பிரான்சிஸ் கிருபா, தமிழரசி, இளம்பிறை இவர்களின்  கவிதைகளை எடுத்திருக்கிறார்.

புதுக்கவிதை என்பது மரபு கவிதையின் செவ்வியல் முறையை உடைத்து உருவானதுதான் என்பது  நம் எலோருக்கும் தெரியும். புதுக்கவிதையை மேற்கத்திய பாணியில் கு பா ராஜகோபாலன், பிச்சமூர்த்தி, சி சு செல்லப்பா, க நா சு போன்ற நம் கவிஞர்கள் எழுதத் தொடங்கிய காலத்தில், மரபு உடைத்து சிறு சிறு சொற்களைச் சுமந்து சின்ன அடிகளாய் படித்தவுடன் புரிந்துக் கொள்ளக்கூடியதாய் மட்டுமல்லாமல் அதில் சிறிதாய் சமூக சிந்தனையையும் புகுத்தி எழுதிக் கொண்டிருந்தனர்.

சமூகம் சார்ந்த கவிதைகள் அதன் ஆரம்ப காலத்தை அதிகமாய் ஆக்கிரமித்திருந்தன எனலாம். நித்திலன், அக்னிபுத்திரன், ஞானி, மேத்தா, அறிவன், போன்ற எத்தனையோ கவிஞர்களைக் கொண்ட வானம்பாடி இயக்கம் எல்லாம் புதுக்கவிதை மரபில், சமூக சிந்தனையை தூண்டிய வகையில் வந்ததுதான்.

தொழிலாளர்களின் வாழ்வியலையும் மனதில் நிறுத்தி இந்த வானம்பாடி கவிஞர்களால் வடிக்கப்பட்ட இந்த கவிதைகள் புதுக்கவிதைகளாய் மட்டும் பரிணமிக்காமல் சமூக கவிதைகளாகவும் எழுச்சிப் பெற்றிருந்திருக்கின்றன ஒரு காலத்தில்.

மேத்தாவின் ‘சமாதானம்’ என்னும் கவிதை,

வியட்நாம் அலைவரிசையில்
நீங்கள் கேட்டுவந்த
வேதனைப் பாடல்களின்
ஒலிபரப்பு
இத்துடன் முடிவடைகிறது
மீண்டும்
வேறு அலைவரிசையில்
இதே பாடல்கள்
தொடரும்வரை
நேயர்களுக்கு
வணக்கம் கூறி
விடைபெறுவது.... 

தலைப்புக்கு ஏற்றவாறே எழுத்துக்களும் அதன் வாசிப்பும் சமாதானமாகவே செல்கிறது. ஆனால் கவிதையின் ஆழம் எங்கே என்று பார்த்தால், அவர் கொடுத்திருக்கும் குறியீடுகளில் தான் இருக்கிறது. வியட்நாம் என்பதும் வேதனை பாடல்கள் என்பதும் தான் அவை. எக்காலக்கட்டத்துக்கும் பொருந்தும் எழுத்துக்கள் இவையெல்லாம்.

தமிழன்பன் அவர்களின்,

மாங்கல்ய மகிமையை
மனைவி அரிவாள்
மணாளன் அறிவான்
இவர்கள் இருவரைவ்ட
மார்வாடி அதிகமாய் அறிவான்

நகைச்சுவை உணர்வுடன் அதுக்குள்ளே எவ்வளவு பொருளாதார நெருக்கடி இருக்கிறது என்றும் சொல்லி செல்கிறது. இவ்வாறு சிறிதாய் இருந்தாலும் சட்டென்று ஒன்றை ஆணியடித்தாற் போல் சொல்ல முடியுமென்றால் அது புது கவிதையால் முடியும். 


ஆசிரியர் முனைவர் அன்புசிவாவின் ஏற்புரை இந்த ஆய்வை பொறுத்தவரை ஐந்தாக பிரித்திருக்கிறார். சமுதாயம், பெண்ணியம், காதல் மற்றும் நவீனக் கவிதைகளின் உத்திகள் எல்லாமே அதற்குள் அடங்குகின்றன.

சமூதாயம் என்னும் இயலில், சமூகத்தின் கூட்டுவாழ்வு முறை குறித்தும், பிளேட்டோ, வால்ட்டர், கார்ல்மார்க்ஸ், சம்னர் போன்றவர்களின் கருத்துகள் குறித்தும் விவரித்துள்ளார்.

நமது தமிழின் தொன்மையில் முதுகண்ணன் சோழன் நலங்கிள்ளியிடம் கூறியது, திருவள்ளுவரின் அன்பும் அறனும் முதல், இப்போதைய  காலகட்டத்தில் அறிஞர்கள் சொன்னவை வரையிலான கருத்துகள் இதில்  பகுத்தாயப்பட்டிருக்கின்றன.

பெண்ணியம் குறித்த விஷயங்களை ஆழ்ந்து அறிந்திருக்கிறார். திருமணம், வரதட்சனை, கற்பு, பாலியல் கொடுமைகள்,  கணவன் மனைவி உறவு, சகிப்புத்தன்மை என்பது போன்ற தலைப்புகளில் எழுதியிருக்கிறார். அதில் கவிஞர்களின் கவிதைகளைக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

அழகுநிலா அவர்களின்,

55 வயதில்
அகால மரணமடைந்த தாத்தா
12 வருடங்களாகியும் கூட
பாட்டி இட்டு வருகிற்றால் குங்குமம்
தாத்தாவின் நெற்றிக்கு 

இக்கவிதையில், சட்டென்று சாட்டையடியாய் கடைசி வரி. ஏதோ செய்கிறது மனதை. இன்னும் வயதானவர்கள், நம் பாட்டிகள் இப்படியேதான் இருக்கிறார்கள். கிராமங்களில் ஊர்ப்புறங்களில் இருக்கும் பாட்டிகள் வெள்ளை சேலையைக் கூட மாற்றுவதில்லை. இதுதான் நிஜம்ன்னு அவங்க ஒரு முகத்திரையே போட்டிருக்காங்க.  

இப்போது பெண்கள் இந்த அளவுக்கு இல்லை. நிறைய வாழ்க்கை விஸ்தரிப்புகள் இருக்கின்றன. தன்னுடைய தன் பிள்ளைகளுடைய கனவுகளை நோக்கி பயணப்பட நிறைய சுதந்திரங்கள் அவர்களுக்கு இருக்கின்றன.

சமூகத்தில் சுதந்திரம் இருக்கிறது. யாரால், எந்த பெண்ணால் அதை எடுக்கமுடிகிறதென்று பார்க்கவேண்டும். பேச்சுக்களை புறம் தள்ளும் பெண்களால் மட்டுமே தன் வாழ்க்கையையும் நிலைநிறுத்தி, தன் குழந்தைகளையும்  சுமந்துக்கொண்டு பயணிக்க முடிகிறது.

அவன் போனபிறகு அவ சரியில்லம்மா என்ற சொற்களை பெண்களே சொல்ல கேட்கிறேன். பெண்ணைக் குறித்த நோக்கு பெண்களிடமும் சற்று மாறவேண்டும் என்பதே நிதர்சனம்.  

பிரபல பெண் பாடலாசிரியர் ஒருவரின் வழக்கு சம்பந்தமாக நிறைய விஷயங்களை பிளாஷ் படுத்தும் செய்திகளைக் குறித்து அந்த துறையில் இருக்கும் ஒரு தோழமையிடம் கேட்டபோது, அவரின் பதில் மிக நுணுக்கமானது.

பெண் என்பவள் ஆணின் மூளையில் அப்பட்டமாய் இருக்கும் ஒரு போதை பொருள். அவள் குறித்த எதையும், அது அவளின் வெளி தோற்றமாகட்டும், அவளின் சந்தோஷமாகட்டும், அவளின் பிரச்சனையாகட்டும், கண்ணீராகட்டும் அவளின் குடும்பமாகட்டும் எதுவாகினும், அந்த இடத்தில் அவள் மட்டுமே பிரதானமாய் தெரிகிறாள். இந்த சமூகத்தில் பெண் குறித்த இச்சை எந்த இடத்திலும்  தொடங்குகிறது ஒரு ஆணுக்கு. அதைதான் செய்திகளும் பிரதானப்படுத்துகின்றன. அதுதான் பெண் குறித்த விஷயங்கள் prominancy க்கு வரக்காரணம் என்றார்.  இன்னும் சமூகம் முழுதாய் மாறவில்லை என்பதே இதிலிருந்து பெறப்படும் கருத்து.

வெறும் ஜடப்பொருளாக, நுகர் பொருளாக கருதி பெண்ணை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தும் சமூகப்போக்கை கண்டித்திருக்கிறார் தோழர். அதில்  குகை மா புகழேந்தியின் கவிதையைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.

கடைசி ஏவாள்
பிறப்புறுப்பில்லாமல்
பிறந்தாள்
அப்போதும்
உலகம் தடவிப்பார்த்தது

என்கிறது புகழேந்தியின் கவிதை. வேதனைகளை பெண்ணின் வலியை இதைவிட நேர்த்தியாய் முகத்தில் அறையும் வண்ணம் சொல்லிவிடமுடியாது.

பெண்களை பெண்களின் வலியை எழுதாத பெண் கவிகள் இல்லை. மாலதி மைத்ரி, சுகிர்த ராணி, சல்மா, தமிழச்சி, திலகபாமா  இப்படி சொல்லிகிட்டே போகலாம்.  தோழர் சிவா அவர்கள் இதையெல்லாம் ஆய்வுக்குள் தொகுத்திருக்கிறார்.

உடல் அரசியலை அழகாய் எடுத்துரைக்கும் சுகிர்தராணியின் கவிதைகள் எப்போதுமே பெண் சமூகத்துக்கு உரியவை.

துள்ளும் வலியும்
மின்னலென வெட்டும்
வேதனையும்
உச்சமாய் எகிற
உயிரை அசைத்து
இரத்தச் சகதியில்
மீண்டழுத குழந்தையின்
துணி விலக்கி
பெண்ணென முகம் சுழிப்பவனே
அன்று
என் மீது பரவியபோது
மனம் களித்தவன் நீதானே?

 அசத்தலாக ஒரு கேள்வியை வைக்கிறார் கவிதையில்.

இம்மாதிரியான பெண் கவிஞர்களின் எழுத்துகள் சில நிஜங்களை உலகுக்கு கொண்டு வந்திருக்கின்றன. சற்று மாற்றங்களையும் உண்டு செய்திருக்கின்றன எனலாம். 

மாலதி மைத்ரியின் முதிர்கன்னிகள் குறித்த கவிதையொன்று.

ஊரின் அனைத்து வீடுகளும்
நடப்பட்ட பெண்களென நிற்கின்றன
சாளரங்கள் கண்களாகவும் வாசல் யோனியாகவும்
யாரோ ஒரு ஆணிற்காக
ஆயுள் முழுவதும் காத்துக்கிடக்கின்றன
வயதுக்கேற்றபடித் தம் உறவுகளுக்காக

இதற்கான காரணங்கள் ஆயிரம் சொல்லலாம். ஒரு பெண்ணின் பிறப்பு வளர்ப்பு திருமணம் குழந்தைகள் எல்லாமே பெரும்பாலும் அப்பா, சித்தப்பா, பெரியப்பா, மாமா, அண்ணன் என்று உறவாய் சுற்றியிருக்கும் ஆணினத்தாலேயே அவர்கள் புகுத்தும் சாதி இனம் சார்ந்த கட்டுபாடுகளாலே    frame செய்யப்பட்டிருக்கின்றன .

இன்னும். கிராமங்களில், ஊர்ப்புறங்களில் திருமண விஷயத்தில் அவர்களுக்கு இருக்கும் ஒரே சுதந்திரம் ஓடிப்போகுதல் மட்டுமே. அந்த தவறையே மீண்டுமாய் செய்யும் நிலை பெண்களுக்கு என்பதை வருத்தத்துடன் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.


என் மதிப்புரை இன்றும் திருமணத்திற்கு முன்னான தன் தவறுகளை மறைக்க, பெண்ணை குற்றவாளியாக்கிப் பார்க்கும் ஆணின்  பார்வைகள் அதிகம் எனலாம். இதை குறிக்கும் என் கவிதை ஓன்று,

முடிந்த முதலிரவுக்குப்பின்
புள்ளி போட்ட படுக்கை விரிப்பில்
தேடிக்கொண்டிருக்கிறான்
இரத்தத்தின் சுவடுகளை,
புதிது புதிதாய்
நிறமற்ற விந்தினை
உருவாக்குபவன்..

இலக்கியமும் சமூகத்துக்கு தன்னால் இயன்றதை நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் என்னும் படிமங்களின் மூலமாய் கொண்டு வந்திருக்கின்றன. வந்துக் கொண்டும் இருக்கின்றன. அதில் இம்மாதிரி ஆய்வுகள் மிக முக்கியத்துவம் பெறுகின்றன.

தேடிப்பிடித்து சிலபல கவிதைகளை, அது அழகியலை, மொழியியலை, சமூக சிந்தனைகளை பெண்ணியத்தை எதை பேசினாலும் சரி, தொகுக்கும் போது, அந்த கவிதையின் சாராம்சம், எழுதிய கவிஞரின் உணர்வுகள், அதன் அழுத்தம் எல்லாமே ஆய்வின் வழி வெளிப்படுகிறது எனலாம்.  அதை சார்ந்த ஆய்வுகளாலும் கட்டுரைகளாலும் நம் சமூகத்துக்குத்தான் பலன் கிடைக்கிறது.

என்றுமே எழுத்தும் பேச்சுமே சமூகத்தின் அடக்குமுறைகளை பழைய கட்டமைப்புக்களை உடைத்திருக்கின்றன. தொடரட்டும் இம்மாதிரியான ஆய்வுகள்.

வாழ்த்துகள் முனைவர் அன்புசிவா அவர்களுக்கு..