'பெ ண் குயின்' பெண்கள் சம்பந்தப்பட்ட திரைக்கதைகளைத் தொடர்ந்து திரையில் பார்த்து வருகிறோம். பெண்கல்வி, பெண் குழந்தைகள், பாலியல் வன்முறை, பெண் முன்னேற்றம் என்று எத்தனையோ பார்த்துவிட்டோம். அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் பெண் சார்ந்த நிலைபாடுகள் திரைக்கதைகளிலும் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. தன்னை பாலியல் வன்முறை செய்த ஆணையே தேடிப்பிடித்து திருமணம் செய்வதாக, அதுவே, பெண்ணுக்கான நியதி, அவளின் கற்பின் உண்மை என்றெல்லாம் திரைக்கதைகள், உண்மைவிளம்பிகளாக தங்களை பாவித்துக்கொண்டு படங்கள் வெளியிட்டன. அடுத்தடுத்த காலங்களில் தன்னைக் கெடுத்தவனை பெண் பழிவாங்குவதாக கதைகள் வெளிவந்தன. இவை சமூகத்தில் வாழும் பெண்களைப் பிரதிபலித்ததாகச் சொல்லப்பட்டது. இருக்கலாம். அல்லது திரைக்கதைகள் பெண் சமூகத்தைக் கட்டமைக்க முயற்சித்திருக்கலாம். பெண் குழந்தைகள் கடத்தல், பாலியல் வன்முறை, தகப்பனாகப்பட்டவன் கடத்தப்பட்ட பெண் குழந்தைகளைத் தேடிச்சென்று கண்டுபிடித்தல் என்று ஏகப்பட்ட கதைகள் வெளிவந்தன கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளில். அதே வரிசையில் வந்த கதைதான் இதுவும் என்று கடந்துப் போய்விட முடியவில்லை.