படைப்பின் பிரம்மம் பெண் ~ அகிலா (2021, மார்ச் மாத பெண்கள் தின சிறப்பிதழாய் வெளிவந்த ஏவ் மரியா இணைய இதழில் வெளிவந்தது) படைப்பின் துவக்கப்புள்ளி பெண். அவள்தான் உலக சந்ததியின் ஆதிப்புள்ளியை இடுகிறாள். புள்ளிகள் வளைவுகளாகவும் கோடுகளாகவும் விளைந்து விரிகிறது. உலகில் உருவான உயிரின் முதல் வித்து பெண்ணிலிருந்தே புறப்பட்டது. உலகின் படைப்பு பிரம்மமாய், சிறு வழிபாட்டு தெய்வங்களாய் ஊரெங்கும் நிற்கிறாள் அவள். பிரம்மத்தின் பெருவுருவாய் சக்தியை நோக்குகிறோம். அவளன்றி இயக்கங்கள் தோன்றாது இவ்வுலகில். சாந்தம், தெய்வீகம், தாய்மை, கோபம், உக்கிரம் என பெண்ணின் படிமங்களுக்கு அவளே உருக்கொடுத்து எழுகிறாள். நதியின் பிறப்பாய் பிரவாகம் எடுக்கிறாள். இயக்கம் அனைத்திலும் படைப்பவள் அவளாகிறாள். மொழி, பெண்ணின் மாபெரும் சக்தி. மொழிவன்மையை, ஆதிக்க சுருதியில் எவ்வமயமும் வைத்துக்கொள்கிறது பெண்ணின் மூளை. நித்தம் அதன்மேல் சொற்களாய் புனைந்து புத்துயிர் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. அதை எழுத்து மொழியாய், பேச்சு மொழியாய் வழக்காட வைக்கிறது அவள் நாவில். பெண்ணானவள் மொழிவன்மையால், சமூக கட்டமைப்பை மாற்றும் வல்லமை கொண்டவள