Saturday, 2 November 2019

கனவுகளும் வயதும்..

மனமும்..
நெடுந்தூக்கத்தில் வரும் கனவுகள் குறித்து எனக்கு நிறைய ஐயங்கள் உண்டு. எங்கோ ஓடிக்கொண்டிருப்போம், யாரோ துரத்துவார்கள், அவர்களின் முகங்கள் தெரியும், இவனா என்று வினா வரும். ஒரு வீட்டுக்குள் ஓடுவோம், அது மிகவும் தெரிந்த மாதிரியான அறைகளைக் கொண்டிருக்கும். அதன் ஒரிடத்தில் அம்ர்ந்து ஒளிந்துக்கொள்வோம். அருகே ஒரு பாம்பு தலை நீட்டி படம் எடுக்கும். பயந்துப் போய் மறுபடியும் ஓடுவோம். கனவு தீர்ந்து நிஜம் உதற வைக்கும். 

அதில் வருவது நாம் என்பது, நாம் எதிரிகளை எதிர்க்கொள்வதில் இருந்து புரியமுடியும். ஆனால் அந்த 'நாம்' என்பதற்கு முகம் இருக்காது. வயது இருக்காது, காட்சிக்குத் தேவையில்லையெனில் உடைகளும் புலப்படாது. அப்போது அந்த முகத்தை ஏன் நாம் நமது முகமாக கொள்கிறோம்? முகமே தெரியாத போது, கனவில் நடப்பதை நமக்கானதாய் எதற்கு எடுத்துக் கொள்கிறோம்? 

ஜேன் மில்லர் சொன்னது போல, 'I wonder how many of us are old in our dreams'.. வயதும் முகமும் அற்ற கனவுகளை எண்ணி எண்ணி துயருருவதை என்னவென்பது..

என்றாவது ஒரு நாள் கனவில் வந்த இடத்தைக் கண்ணில் கண்டு தொலைப்போம். இதை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே என்று குடைவோம் மூளையை. சரிவர பிடிபடாது. இப்படி கனவு நிகழ்ந்த இடமும் வயதும் முகமும் கலைந்து போகும் பட்சத்தில் எதற்காக கனவுகளைத் தூக்கிச் சுமக்கிறோம்?

ஒன்றிலிருந்து மூன்று வயது வரை வரும் கனவுகள் night terrors எனப்படும் வகையைச் சார்ந்தவை. நடு இரவுக்கு மேல் குழந்தைகள் எழுந்துக்கொண்டு அழும். தூக்கச் சிக்கும் சேர்ந்துக்கொள்ள ஒரு மணி துளிகளாவது பயத்துடன் கத்திக் கொண்டிருக்கும். மெதுவாய் பேசி பாட்டுப்பாடி அவர்களை ஆற்றுப்படுத்தித் தூங்க வைக்கவேண்டும். 

பள்ளிப் பருவங்களில் (5 - 8 வயது வரை) தன் வயதையொத்த சக பிள்ளைகளிடம் காட்டும் அன்பு, வெறுப்பு, புரிதலின்மை, பெற்றோர்களின் வாக்குவாதம், சண்டை, விபத்து, வீட்டின் இருட்டு மூலைகள், பேய், பிசாசு பயம் போன்றவை அதிகமிருக்கும். அவர்கள் பள்ளி விட்டு வந்தபிறகு யார் யாருடன் என்ன பேச்சு பேசினார்கள் என்பதை நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இரவில் படுக்கும் அறையின் கதவிலோ கட்டிலின் தலைமாட்டிலோ, 'நல்ல கனவுகளுக்கு மட்டுமே இங்கே அனுமதி' என்று அவர்களையே எழுதச்சொல்லி ஒரு போர்டு செய்து மாட்டிவிட வேண்டும். இது அவர்களின் பயத்தைப் போக்கும். அம்மா இங்கதான் படுத்திருக்கேன், அப்பா இதோ படுத்திருக்காங்க என்று அவர்களுக்கு உதவிக்கு ஓடிவருவாங்க என்னும் நம்பிக்கையை இரவில் படுக்கப் போகும்முன் கொடுங்க.

கனவுகளைப் பற்றிக் காலை எழுந்ததும் நினைவூட்டாதீர்கள். பகல் முழுமையும் அது அவர்களைத் தொந்தரவு செய்யும். கேஷுவலாக அதைக் கையாளுங்க. பதின்பருவத்தில் வரும் கனவுகள் அவனை/அவளை முழு மனிதத்துவம் வாய்ந்த மனிதர்களாய் மாற்றும் குணம் வாய்ந்தவை. திரில்லர் கதைகள் படிப்பது, திரில்லர் படங்கள் பார்ப்பது போன்றவை அவர்களின் மனித மனதின் மிருகத்தனமான பக்கத்தைச் சீண்டிப் பார்ப்பவை. கொலை, பாலியல் வன்முறைகள் போன்றவற்றைப் பற்றி அவர்கள் எவ்வாறு யோசிக்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். சனி ஞாயிறுகளில் ஒரு Questionnaire - yes or no குறிப்பது போன்ற வினாதாள் ஒன்றைக் கையில் கொடுத்து அவர்களின் சமூக புரிதலைத் தெரிந்துக்கொள்ள வேண்டும். பக்கத்து தெருவில் நடந்த அல்லது பேப்பரில் படித்த, நியூசில் கேட்ட கொலை, பாலியல் வன்முறை, திருட்டு போன்றவைக் குறித்தக் கருத்துகளைக் கேட்டு அறியலாம். அல்லது எழுதச்சொல்லலாம். இது சமூகம் குறித்த அவர்களின் பதட்டத்தைக் குறைக்கும். கனவுகளை சாதாரணமாக்கும். 

பெரியவர்கள் ஆனபிறகு வரும் கனவுகள் வாழ்வின் குழப்பமான மனநிலை, பிரச்சனைகள், மன அழுத்தங்கள், பாலியல் போதாமை, பொருளாதார நிலை போன்றவற்றின் தாக்கத்தை அதிகம் கொண்டிருக்கும். எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு இருப்பதாய் நாம் நம்பவேண்டும். நம் மனதையும் நம்ப வைக்க வேண்டும். முட்டுச்சந்தில் போய் நிற்பதாய் ஆன கனவுகளுக்கு இதுதான் காரணம். ஐம்பது அறுபது தாண்டிய வயதில் வரும் கனவுகள் மிகுந்த கவலையைத் தருவதாய் அமையும். முன்னத்து வாழ்க்கையின் அடிச்சுவடுகள் தொடர்வதாய் தோன்றும். இப்படி வாழ்ந்திருக்கலாமோ இந்த மாதிரி செய்திருக்கலாமோ வாழ்க்கையைத் தொலைத்துவிட்டோமோ பொண்ணை பிள்ளையை முன்னமே கட்டிக் கொடுத்திருக்கனுமோ இன்னமும் சேமித்திருக்கனுமோ போன்ற குற்ற உணர்வு ஊட்டக்கூடிய கேள்விகள் அரிக்கும். இவை கனவுகளில் 'நான்' என்னும் அகந்தை மிக்க மனிதனை போட்டு வதைக்கும். நிகழ் காலத்தின் வயதை முகத்தைச் சுட்டாமல் கனவுகள் வந்து கலங்கடிக்கும். 

இச்சமயங்களில் நம் மனதை ஆற்றுப்படுத்துதல், நாம் நன்றாக சிறப்பாகவே வாழ்ந்தோம் என்ற மனப்பாங்கை வளர்த்தல், சொற்பொழிவுகள் கேட்டல், ஆன்மீகத் தேடல், நடைபயிற்சி, மராத்தன் போன்ற மனிதர்களுடன் புழங்கும் துறைகளில் நுழைதல் போன்றவை கை கொடுக்கும். கனவுகளின் எல்லைகள் நம் எண்ணங்கள் தான். அதை எதுவரை, எப்படி கொண்டு செல்கிறோம் என்பதே கனவுகளை சரிபடுத்தும் வழிமுறைகள் ஆகும். 

~ அகிலா.. 
மனநல ஆலோசகர்
எழுத்தாளர்

9 comments:

 1. கொஞ்சம் பொறுங்க... என்ன கனவு வருகிறது என்று பிறகு சொல்கிறேன்... நன்றி சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா.. சொல்லுங்க

   Delete
 2. Replies
  1. ரொம்ப நன்றிங்க

   Delete
 3. ஐம்பது அறுபது தாண்டிய வயதில் வரும் கனவுகள் மிகுந்த கவலையைத் தருவதாய் அமையும்.//

  அப்படியா? அப்படிப் பொதுவாக ஒரு விட முடியுமா?

  எனக்கு எழுபது வயதாகிறது. ஒருமுறைகூட எனக்கு வாழ்க்கையில் தோல்வி அடைந்து விட்டதாக கனவு வந்ததே இல்லை.

  நமக்கு வரும் கனவுகளுக்கும் நம் வாழ்க்கைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றுதான் பல ஆங்கில வலைத்தளங்களில் படித்திருக்கிறேன். 

  ReplyDelete
  Replies
  1. எல்லோருக்கும் இத்தகைய கனவுகள் வரும் என்பதில்லை. அதுதான் 'பொதுவாய்' என்பதன் பொருள்.
   தாமதமான திருமணங்கள், அதனால் தாமதமாகும் குழந்தை பிறப்பு, நாற்பதுகளில் இருந்து இருக்கும் மன உளைச்சல் stress எல்லாம் தான் இப்போது இருக்கும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரும் கனவுகளுக்குக் காரணம்.

   Delete
 4. ஒரு விட முடியுமா?=கூறி விட முடியுமா?

  ReplyDelete
 5. நல்லதொரு வழிகாட்டல்..... பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....