Monday, 11 February 2013

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்



வேடந்தாங்கல்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. சென்னையிலிருந்து 79 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. சுமார் ஒன்றரை மணிநேரத்தில் அங்கு சென்றடையலாம்.




இந்த சரணாலயம் 30 ஹெக்டேர் பரப்பளவில் வனத்துறையின் பாதுகாப்பின் கீழ் உள்ளது. பலவிதமான பறவைகள் வெவ்வேறு தேசங்களில் இருந்து இங்கு குளிர் காலங்களை கழிக்கவும் இனப்பெருக்கதிற்காகவும் வருகின்றன.

இங்கு சின்ன சின்னதாய் ஏரிகள் உள்ளன. அவற்றில் மரங்களும் பெரிய புதர்களும் இந்த பறவைகளுக்கு அடைக்கலம் கொடுக்கின்றன. இவற்றின் எச்சங்கள் இந்த ஏரி நீருக்குள்ளே விழுந்து சுற்றிலும் இருக்கும் விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்கும் பயன்படுத்தப்படுகிறது.





இங்கு காலையில் அதுவும் சூரிய உதயத்திற்கு முன் அல்லது மாலையில் சூரியன் அஸ்தமிப்பதற்கு முன் செல்வதே வசதி. அந்த நேரத்தில் தான் பறவைகள் பறப்பதையும் அவற்றின் சத்தங்களையும் ரசிக்கமுடியும்.









பாம்புதாரா, ஹெரான், சாம்பல் நிற பெலிக்கன் (கூழைக்கடா), கொக்கு வகைகள், மண்வெட்டி வாயன், ஸ்டார்க், வாத்து, நீர் காகம், எக்ரெட் வகை பறவைகள் என்று வகை வகையான பறவை இனங்களை காண முடிகிறது.








பறவைகளை மேலிருந்து பார்த்து ரசிக்க உயரமாக ஒரு டவர் கட்டப்பட்டு இருக்கிறது. புகைப்படம் எடுக்க வசதியாகவும் இருக்கிறது.




அங்கேயே சின்ன சின்ன கடைகள் காப்பி, டீ, டிபன் என்று கலக்கிக் கொண்டிருக்கின்றன. அந்த சாப்பாட்டிற்கு நான் கியாரன்ட்டி இல்லை.




நாங்கள் அதிகாலையிலே சென்று விட்டதால் ஒன்பது மணிக்கு வெளியேறும்போது தான் பள்ளிகளில் இருந்து குழந்தைகளையும், பிள்ளை, குட்டி மற்றும் சாப்பாடு கூடை என்று குடும்பமாகவும் மக்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

சாப்பாட்டு கூடை என்றாலே நம் மக்கள் என்ன செய்வார்கள் என்று உங்களுக்கே தெரியும். குப்பை + அதனால் குரங்குகளின் அட்டகாசம் என்பது. 





சுற்றுப்புறங்கள் பெரும்பாலும் சுத்தமாகவே இருக்கிறது. அதுவே மனதுக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறது. கிராமிய மணம் மாறவில்லை. சென்னையை மாதிரி இல்லை. சற்று குளிரும் இருக்கிறது.

ஆனால் கரையை ஒட்டிய இடங்களில் நீரின் மேற்பரப்பு பறவைகளின் சிறகுகள் மற்றும் எச்சங்கள் ஆகியவற்றால் அடர்த்தியாக மூடிக்கிடக்கிறது. அதிலிருந்து வெளிவீசிய நாற்றம் தாங்க முடியவில்லை. மக்கள் நிற்கும் இடங்களாகிய இந்த இடங்களில் இந்த சுகாதார குறைச்சல் சற்று நம் சுற்றுலா துறையின் மதிப்பை குறைக்கிறது. 




உள்ளே நுழைய சிறியவர்களுக்கு இரண்டு ரூபாயும் பெரியவர்களுக்கு ஐந்து ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. நான் வேடந்தாங்கல் போக முடிவு செய்து வலைதளங்களில் தேடியபோது 2008 இல் எழுதப்பட்டிருந்த வலைபதிவிலும் இதே பணம் தான் உள்நுழைய வாங்கியதாக அறிந்தேன். இப்போதும் அதே.






ஒரு ரூபாய் கூட்டி வாங்கினாலும் பரவாயில்லை நீரின் கரையை சற்று சுத்தப்படுத்தினால் பரவாயில்லை என்றே நினைக்க தூண்டுகிறது.











மற்றபடி ஒரு நாள் பொழுது முழுவதும் அமைதியாக அழகாக இயற்கையோடு, அதுவும் எனக்கு பிடித்த பறவைகளோடு கழிந்ததை நினைத்தால் மகிழ்ச்சியே.....


12 comments:

  1. இனிய அனுபவம்... படங்கள் அருமை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்...

      Delete
  2. வேடந்தாங்கள் பறவைகளை எங்களுக்கும் காட்டீட்டிங்க அகிலா....நன்றி

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்...நன்றி எழில்....

      Delete
  3. படங்களும் பகிர்வும் என்னை வேடந்தாங்கலுக்கு இழுத்து சென்று விட்டது அகிலா.79 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து கொண்டு இன்னும் சென்று பார்த்துவரவில்லையே எனப்ப்டுகின்றது.

    இங்கு எந்த காலங்களில் சென்றால் அதிகளவு பறவைகளைப்பார்க்கலாம்?

    ReplyDelete
    Replies
    1. போய் பாருங்க ஸாதிகா...ரொம்ப நல்ல இருக்கு...
      சீசன் நவம்பர் முதல் மார்ச் வரை....

      Delete
  4. http://www.kovaineram.com/2012/07/blog-post_11.html

    நானும் தான் எழுதி இருக்கிறேன்..எப்படியோ என்னை மாதிரியே ஊர் சுத்த ஆரம்பிச்சிட்டீங்க போல...

    ReplyDelete
    Replies
    1. உங்க அளவுக்கு இல்லேன்னாலும் கொஞ்சம் ஊர் சுத்துவோம்....

      Delete
  5. உல்லாச பறவைகள்....

    ReplyDelete
  6. படங்கள் மற்றும் எழுத்து வடிவம் அருமை .

    ReplyDelete
  7. நிஜம்தான் எங்க ஏரியா பக்கத்துல இருக்குறதால இதே மாதிரி பறவைகள் சரணாலயம்னு திருநெல்வேலி பக்கத்துல கூந்தங்குளம் போய் ஏமாந்தேன் , மறுபடியும் வேடந்தாங்கல் வந்து ரசிச்சேன்.. மீள்பதிவு செய்ததற்கு நன்றி சகோதரி

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....