காயம் | அகிலா | சிறுகதை

 

காயம் 


கேத்தியின் குளிர்ந்த காற்று, ஊட்டி பஜார் ரோடின் தணுப்பை விட அதிகம் பயம் காட்டியது. ஜுபிலி ரோடைக் கடந்து கீழிறங்கியது அந்த பாதை. நடப்பதற்கு கூட ஏதுவான பாதையாய் அது இல்லை. இரு சக்கர வாகனத்தை அங்கிருந்த தெருகுழாயின் ஓரமாய் புல் பூத்திருந்த மேட்டில் சரித்து நிறுத்திவிட்டு நடக்கத் தொடங்கி ஐந்து நிமிடமாயிற்று. பாதை சிறிதும் பெரிதுமான செடிகளின் இடையே வளைந்தது. நேற்றைய மழையின் மிச்சம் நீர், செடிகளின் அடியில் தங்கியும் தங்காமலும் மண்ணை நனைத்து வைத்திருந்தன. கவனமாய் நடக்க வேண்டியிருந்தது.

 சிறிது நடைக்குப்பின், சிறுவெளி திறந்தது. இருபது முப்பது குடியிருப்புகள் இருந்தன. ரேவதி சொன்ன வீட்டை அடையாளம் காண்பது சிரமமாக இல்லை. அந்த வீட்டின் முன் கூட்டம் சிறிதாய் கூடியிருந்தது. அதன் வாசலில் ஸ்வெட்டருக்குள்ளும் சால்வைக்குள்ளும் கைகளை நுழைத்துக்கொண்டு ஆண்களும் பெண்களும் நின்றிருந்தார்கள். காக்கி காற்சிராயை வைத்து போலீஸ் இருப்பதை தெரியமுடிந்தது. அருகே சென்றதும், மலைக்கே ஆன முகச்சுருக்கங்களும் சிறு கண்களும் இல்லாது இருக்க, சற்று விலகி எனக்கு வழிவிட்டார்கள்.

 குனிந்து வீட்டினுள் தலை நீட்டி எட்டிப்பார்த்தேன். யூகலிப்டசின் மணம் சட்டென நாசி நுழைந்தது. இங்கு எல்லா வீடுகளிலும் அநேகமாக இந்த மணம் இருக்கும். குளிரில் வலிக்கான ஒரே ஆயுதம் இதுதான். அது தவிர, துவைக்க முடியாத ரஜாய், ஸ்வெட்டர், சாக்ஸ்களின் புழுக்க நாற்றத்தை விரட்டவும் சரிப்படும்.

 உள்ளிருந்த இருட்டு பழக கண்கள் அவகாசம் கேட்டன. கதவின் ஓரமாய் இருந்த சுவரில் ஒரு பொந்து இருந்தது. அதற்குள் சிறிதாய் சாமி படம் ஒன்றும் அதன் முன் அணையும் போராட்டத்தில் ஓர் அகல்விளக்கும் எரிந்தும் கொண்டிருந்தது. அகலின் வெளிச்ச அசைவுகளில் என்ன சாமி என்பது சரியாய் பிடிபடவில்லை.  

வீட்டின் இன்னொரு சுவரில் காலண்டரும் துணிகளும் தொங்கின. அடுத்து திரும்பிய சுவரை ஒட்டிய தரையில் அந்த பெண் படுக்க வைக்கப்பட்டிருந்தாள். கட்டம் கட்டமாய் டிசைனில் இருந்த போர்வை போன்ற ஒன்றை கொண்டு, முகம் தவிர்த்து, முழுதாய் போர்த்தியிருந்தார்கள். இறந்திருந்த அந்த சிறு பெண்ணின் முகம் குழந்தைத்தனத்துடன் இருந்தது. வீட்டினில் உள்ளறையில் கூடியிருந்த பெண்கள் பெரிதாய் சத்தமிடாமல் அழுது கொண்டிருந்தனர். மேலாடைகளின் வெளியே தொங்கும் கொசுவத்தில் மூக்கை உறிஞ்சிக்கொண்டும் ரகசியமாக பேசிக்கொண்டும் இருந்தனர்.  

 பேசுவதற்கு ஆள் தேடியபோது. என்னையே பார்த்துக்கொண்டிருந்த அந்த பெண்மணியின் கண்களை நோக்கினேன். கண்கள் ஒரு நல்ல பேச்சு கடத்தி. யாருடனும் வெகு சகஜமாய் பாலம் போட்டுவிடலாம். கண்களைத் தவிர்ப்பவர்களை, பேச முற்படாதவர்களாக, சந்கோஜப்படுபவர்களாக கொள்ளலாம். அந்த பெண்மணி எழுந்து வந்தாள். வெளியே வந்து பின்பக்கமாய் நடந்தோம். அங்கே சிறிய மறைப்பிட்டு தேநீர் போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த பெண்மணி போய் இரண்டு லோட்டாகளில் தேநீர் கொண்டு வந்தாள்.

 ‘யாரும்மா நீங்க?’ என்று வினவினாள்.

‘பேப்பர்க்காரங்க..’ என்றதும் கண்களில் ஆச்சரியம் காட்டினாள். இறந்த பெண்ணின் அத்தை என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

 

 இரவு சாப்பாட்டுக்கு பின், ரேவதி லைனுக்கு வந்தாள்.

‘விவரம் சொல்லு வர்தினி’ என்றாள்.

‘சின்ன பெண்தான். பதினான்கு வயதுதான். அங்கிருக்கும் த மு ப கட்சியின் செயலாளரின் தம்பிக்கு இந்த பெண்ணின் மீது ஒரு கண் இருந்திருக்கிறது. அவள் வீட்டிலிருந்து மெயின் ரோடு ஏறும் இடத்தில் பெட்டிக்கடை வைத்திருக்கும் ஜகனுக்கும் ஒரு கண். அவளை ரேப் செய்தது யாரென்று யாருக்கும் தெரியவில்லை. பகலில் வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் நடந்திருக்கிறது. மாலையில் எல்லோரும் பேசியும் அவள் யாரென்று சொல்லாமல் ஒருவித ஷாக்கில் இருந்திருக்கிறாள். போலீசும் வந்திருக்கிறது. இரவு எல்லோரும் தூங்கியபிறகு தற்கொலை செய்திருக்கிறாள். கெரோசின்.’

 ‘அச்சோ.. யாராவது அவகிட்டே பேசிப்பார்த்தாங்களா ?’

 ‘பேசினா மாதிரி தெரியல. இங்கு உடல் குறித்த அறிவு குறைவு. ஒரு சம்பவம் நிகழ்ந்தால், வீட்டில் உள்ளவர்கள், அவளையே காரணம் காட்டி அடிக்கவும் செய்வார்கள். இவளையும் அடித்திருக்கிறார்கள். மானமே போச்சுன்னு இவர்களே ஊரையும் கூட்டியிருக்கிறார்கள். அத்தனை அடிக்கு பிறகும் அவளும் எந்த பெயரையும் சொல்லவில்லையாம். அன்றிரவு மிகவும் பயந்து போயிருந்திருக்கிறாள். அதுதான் இந்த முடிவு எடுத்திருப்பாள். ரொம்ப ஸ்டைலா டிரஸ் பண்ணிக்கும், திமிரா பேசும், அப்புறம் எவன் பார்த்துக்கிட்டு சும்மா இருப்பான்னு என்னிடம் சொன்ன பெண்மணி கூறினாள்.’   

 ‘இவர்களின் இந்த பேச்சே அவளை இந்த முடிவுக்குத் தள்ளியிருக்கும்’

 ‘பேசினதுக்கு என்கிட்டே இருந்து நூறு ரூபாய் வேற வாங்கிட்டாளே’ என்றேன்.

‘ம்ம்.. மோசமான உலகம்..’ என்றாள் ரேவதி.

கைப்பேசியை அணைத்துவிட்டு படுத்தபோது, அந்த பெண்ணின் முகம் ஏனோ வசந்தாவை நினைவுபடுத்தியது. நாங்கள் நாகர்கோவிலில் இருந்தபோது, வசந்தா, என் அம்மாவிடம் வீட்டு வேலைக்காக பூதலிங்கத்தால் சேர்த்துவிடப்பட்டவள்.   

 

அவள் எங்க வீட்டுக்குள் வரும்போது, எனக்கு பதினொன்றுதான். வசந்தா மூன்று நான்கு வயது என்னைவிட மூத்தவளாய் இருந்தாள். வளர்த்தி குறைவாகவும் தாட்டியான தேகமும் கொண்டிருந்தாள். தோள் பட்டைகள் சதுரமாகவும் பெரிதாகவும் இருக்கும். அவளின் பாவாடை குட்டையாகவும் அடியில் ப்ரில் இல்லாமல் மொட்டையாகவும் இருக்கும்.

என்னுடைய அம்மா தனி கவனம் எடுத்து எங்க பாவாடைகளில், ப்ராக்குகளில் ப்ரில் வைத்து, அது முழுவதும் வண்ண வண்ணமாய் லேஸ் வைத்து தைப்பாள். அவ பாவாடை ஏன் அப்படி இல்ல என்னும் கேள்விக்கு, அம்மா பதில் சொல்லாமல் சிரிப்பாள். பள்ளிவிட்டு வந்து நானும் வசந்தாவுடன் தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணி விட்டு விளையாடினால், அவளை விட்டு தள்ளியிரு என்று அருகில் வந்து காதை கடிப்பாள் அம்மா. அப்போவெல்லாம் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து நிற்பது என் வழக்கம். முழிப்பதன் காரணம் புரியும் என்பது போல் வசந்தா சிரிப்பாள்.

வந்த கொஞ்ச நாட்களிலேயே அவளை எனக்கு மிகவும் பிடித்துப்போனது. அவளுடைய விரல்கள் எல்லாம் குண்டாக மெத்து மெத்தென்று இருக்கும். நிறைய பேசுவாள். வேலையெல்லாம் அசுர வேகத்தில் செய்வாள். குவிந்திருக்கும் துணி அத்தனையும் கல்லில் அடித்து துவைத்தெடுத்து கொடியில் நிமிடத்தில் தொங்கவிடுவாள். மாட்டு தொழுவம் கழுவும்போது, ஒரு கை தண்ணியை ஊற்றும், மறு கை ஈக்கில் விளக்குமாறு கொண்டு தொழுவம் கழுவும். யாராவது தன்னைக் கவனிப்பது தெரிந்தால், திரும்பி அவர்களைப் பார்த்து முகம் நிறையும் ஒரு சிரிப்பு வைப்பாள். அம்மாதான் ‘வேலையைப் பாருடி’ன்னு அவளை திட்டுவாள். 

ஆண்களிடம் அவளுக்கிருந்த ஈர்ப்பு அலாதியானது. பக்கத்து தேவி வீட்டின் மேல் போர்ஷனுக்கு ஒரு பையன் குடிவந்திருப்பதே அவள் சொல்லிதான் எனக்கு தெரியும். அப்பாவின் கீழ் வேலை செய்யும் போலீஸ்காரர்கள் வீட்டுக்கு வருவார்கள். அம்மா அவர்களை வீட்டினுள் வரவிடுவதில்லை. முன்புறம் நிற்பது, வீட்டைச் சுற்றி பின்கட்டுக்கு வந்து வெளிவேலைகள் செய்வது, மதிய சாப்பாடை அப்பாவுக்கு எடுத்துச்செல்வது என்றிருப்பார்கள். இவளும் அவர்களுடன் வெகு சினேகமாய் இருப்பது வழக்கம்.

ஒரு பொழுதில், அவளைக் காணாமல் தேடிக்கொண்டு பக்கவாட்டு முடுக்கின் வழியாய் போனபோது, அங்கிருந்த நெல்லி மரத்தின் அருகாமை சுவரில் அவள் சாய்ந்திருக்க, ஆடர்லி முருகனின் கைகள் அவள் பிளவுஸின் மீது அமுக்கியிருந்ததைப் பார்த்தேன். என்ன செய்கிறார்கள் என்பதை புரிந்துக்கொள்ள நின்று கொண்டிருந்தேன். என்னைப் பார்த்ததும், வசந்தா அவனை விலக்கிவிட்டு என்னிடம் வந்து, ‘போலாம், வா’ என்று கூட்டி வந்துவிட்டாள்.

அம்மா இல்லாத ஒரு நேரத்தில், அது குறித்த என் கேள்விக்கு, என் கையைப் பற்றி இழுத்துச் சென்று, சாப்பாட்டு மேசையின் அடியில் தன் பெரிய உடம்பை நுழைத்துக்கொண்டாள். உடன் ஒட்டிக்கொண்ட என்னிடம், ‘உன் கையைக் கொடு’ என்றாள் சிரிப்புடன். அவள் சிரிப்பு எனக்கும் தொற்றிக்கொள்ள, வலதுகையை நீட்டினேன். விரல்களைப் பிடித்து, தன் பிளவுஸ் மீது இழுத்து வைத்த போது, அவளின் சற்று பெரிய தனங்களும் கடினப்பட்ட முலைகளும் விரல்களில் பட்டது. என்ன செய்கிறாள் இவள் என்று உணர்ந்ததும், பதற்றத்துடன் விரல்களை அவள் கைப்பிடியில் இருந்து விடுவித்து, இடதுகை விரல்களுடன் இறுக்கி சேர்த்து, அமரும்போது தொடையிடுக்கில் நுழைத்திருந்த சாட்டின் ப்ராக்குக்குள் விரல்களை ஒளித்துக்கொண்டேன்.

பயப்படாதே என்றாள் சின்ன சிநேகத்துடன். சிறிது அருகில் வந்து, கையைக் கொடேன் என்று மெதுவாய் சொன்னாள். சட்டென கையை அங்கிருந்தும் எடுத்து, நகம் கடித்தபடி மேசையின் அடியில் இருந்து வெளியே வர முயன்றேன். வசந்தா வாய்விட்டு சத்தமாய் சிரித்துக்கொண்டிருந்தாள். அந்த சிரிப்பு என் கால்களைப் பிடித்து மேசைக்கு அடியில் இழுப்பதாகவே தோன்றியது. கடைக்கு போன அம்மா ஏன் இன்னும் வரவில்லை என்னும் கவலை பற்றிக்கொண்டது. அம்மா வந்ததும் இவள் கெட்ட பொண்ணுன்னு சொல்லனும்னு நினைத்துக்கொண்டே வாசல் படிக்கட்டில் அம்மாவுக்காகக் காத்திருக்கத் தொடங்கினேன். அவள் வீட்டுக்குள்ளிருந்து வருகிறாளா என்று திரும்பிப்பார்த்தேன். அவள் பின்கட்டில் ஒன்றுமே நடவாதது போல ஏதோ வேலை செய்துக்கொண்டிருந்தாள். அன்று அம்மா வந்தபோது, வசந்தா பற்றி சொல்ல என்னிடம் ஏதும் இல்லாதது போல் இருந்தது.  

அதன்பிறகு வந்த மாதங்களில் அவளுடன் சேர்ந்து விளையாடாமல் இருந்தேன். அவளைக் கடக்கும்போது, ஓரக்கண்ணால் பார்த்தபடியே நடந்தேன். அப்போதும் அவள் என்னைப் பார்த்து சிரித்தாள். உனக்கு என்னை பிடிக்கும் என்று சொல்வது போலவே இருந்தது அந்த சிரிப்பு எனக்கு. 

  

சில மாதங்கள் கடந்து, பள்ளிவிட்டு வந்த ஒரு மாலையில், அம்மா அவளைத் திட்டிக்கொண்டிருந்தாள். உங்கம்மாவுக்கு சொல்லிவிட்டிருக்கேன், வரட்டும் என்ற அம்மா சொல்வது கேட்டது. அம்மா கொஞ்சமாய் திட்டினாலே, நான் அழத்தொடங்கி அப்பா வரும்வரை தேம்பிக்கொண்டிருப்பேன். அவளோ அழாமல், அம்மாவின் கைகளைப் பிடித்தபடி ஏதோ கெஞ்சிக்கொண்டிருந்தாள். அன்றிரவு, அப்பாவிடம் அம்மா வசந்தா பற்றி, அந்த பொண்ணு சரியில்லைங்க, அனுப்பிருவோம் என்று ஏதேதோ சொன்னாள். அப்பாவும் நாளைக்கு ஆள் அனுப்புறேன் என்றார்.

அந்த சனியன்று அவளின் அம்மா என்று சொல்லிக்கொண்டு வசந்தாவைப் போலவே குள்ளமாய் குண்டாய் ஒரு பெண்மணி வந்தார். சிறிது நேரத்திற்கெல்லாம் அடுக்களைக்குள் அந்த பெண்மணி கத்தும் சத்தம் கேட்டது. ஓடிப்போய் அடுக்களையின் இடதுபுற கதவைப் பிடித்துக்கொண்டு பார்த்தபோது, அந்த அம்மா வசந்தாவை துடைப்பத்தால் அடித்துக்கொண்டிருந்தாள். வசந்தா அழாமல் நின்றிருந்தாள்.

‘யாருன்னாவது சொல்லேன்.. இப்படி கல்லுளிமங்கன் கணக்கா நின்னா நான் என்ன செய்றது. அம்மா இனி அடிக்கல. சொல்லுடி இப்போவாவது. அவனுக்கே உன்னை கட்டி வைக்கிறேன்..’ என்று அழுது கெஞ்சினாள். வசந்தா ஒன்றுமே சொல்லாமல் நின்றிருந்தாள்.

அம்மாவைப் பார்த்தேன். அவள் பாட்டுக்கு அடுக்களையில் வேறு ஏதும் அந்த அறையில் நடக்காத மாதிரி சமையல் மேடையில் ஏதோ செய்துக்கொண்டிருந்தாள். வசந்தாவின் அம்மா, அம்மாவின் பக்கவாட்டில் போய் நின்று, ‘அம்மா மன்னிச்சுகோங்க. இப்படி இந்த சிறுக்கி மவ நடப்பான்னு நினைக்கல நானு. அங்கிட்டு ஊரிலேயும் ஒருத்தன் கூட பழக்கம் இருந்துச்சு. அவ அப்பன் அடிச்சே கொன்னுருவான்னுதான் இங்கே கொண்டுவிட்டேன். உங்க பொம்பள பிள்ளகளோட சேர்ந்து நல்லத படிக்கும்ன்னு நெனச்சேன். இப்படி வாயும் வயிறுமா ஆவான்னு நெனக்கல. ஊருக்கே கூட்டிட்டுப் போறேம்மா..’ என்று சொன்னாள்.

அம்மா மெதுவாக திரும்பி, ‘இங்க வந்தப்போ இருந்தே பாக்குறேன், எப்போவும் ஆம்பளைகளோடதான் பேசுறா. அவ இப்படிதான்னு நீ முதல்லேயே ஒரு கோடு காமிச்சிருந்தேன்னா எங்க வீட்டுக்குள்ளேயே விட்டிருக்கமாட்டேன். இல்ல, நானாவது சூதானமா இருந்திருப்பேன்..’ என்றாள்.

‘சரிம்மா.. நாங்க கிளம்பறோம்.’ என்று சொல்லிவிட்டு நிற்க, அம்மா அவளிடம், ‘சாப்பிட்டுட்டு போங்க, பூதலிங்கத்தை வரச்சொல்லி, பஸ் ஏத்திவிட சொல்றேன்’ என்றாள். அந்த அம்மா ஏதோ யோசனையுடன் தலையாட்ட, அம்மா அவளிடம் திரும்பி,‘யாருன்னு கேட்டுச் சொல்லுங்க அவகிட்டே.. அய்யா கிட்டே சொல்லி பேசி சரி பண்ணுவோம்,’ என்றாள். உடைந்து அழத் தொடங்கினாள் அந்த அம்மா.

‘அம்மா, யாரோடவாவது சிநேகம் வச்சிருந்தானு உங்களுக்கு ஏதாவது தெரியுமாம்மா?..’ என்று தயங்கிக் கேட்க,

‘இங்க அய்யாவுக்கு கீழ நாலஞ்சு போலீஸ்கார பசங்க வேல பாக்குறாங்க. வீட்டுக்கு வராங்க, போறாங்க. அதுல எல்லோரும் கல்யாணம் ஆனவனுங்க. யாருன்னு எனக்கு என்ன தெரியும். விசாரிக்கிறேன்..’ என்று அம்மா கரிசனமாய் சொன்னாள்.

‘கல்யாணம் ஆனவனுங்களா?.. அய்யோ, அப்போ இவ வாய திறந்தாலும் திறக்கலேன்னாலும், கலைக்கத்தான் செய்யனும்மா..’ என்று வாயைப் பொத்திக்கொண்டு அழுதாள். அம்மாவும் அழுதாள்.

கண்களில் கண்ணீர் கட்டியது எனக்கும். வசந்தாவின் கசங்கிய பிளவுசும் அந்த கைகளும் முருகனும் நினைவில் ஓடின. அம்மா கிட்டே சொல்லலாமா இதை எனத் தோன்றியவுடன், வசந்தாவைப் பார்த்தேன். அவளும் என்னைப் பார்த்தாள். போ என்பது போல் கண்களை உருட்டி தலை அசைத்து சைகை செய்தாள். ஏற்கனவே அவளிடம் எனக்கிருந்த அனுபவம் பயத்தை உண்டு பண்ணியது. மெதுவாய் நகர்ந்தேன். வராந்தாவில் கூடை சேரில் கால் மடக்கி உட்கார்ந்தேன். அவர்கள் கிளம்பி போனபின்பும் அங்கேயே அப்பா வரும்வரை உட்கார்ந்திருந்தேன். அம்மா என்னை திரும்பிப்பார்த்துக் கொண்டே சென்றாள். அவளுக்குத் தெரியும் அப்பாவிடம் பேச விஷயம் இருந்தால்தான் இப்படி நான் இருப்பேனென்று.

இரவில் படுக்கும்முன், பாலை நீட்டினாள் அம்மா. நான் குடிக்கமாட்டேன்னு தெரியும் அவளுக்கு. அப்புறம் எதுக்குன்னு நினைத்துக்கொண்டே வேண்டாம்னு தலையாட்டினேன். அப்பா வந்து அருகில் உட்கார்ந்து, ‘என்னமா..’ என்றார். இத்தனை நேரம் இருந்த பயம் கவலை எல்லாம் சேர்ந்து அழுகையாய் வெடிக்க, முருகனை அன்று கைக்காட்டினேன். அதன் பிறகு என்னவாயிற்று என்பது என் நினைவில் இல்லை.

பதினைந்து வருடங்கள் ஆகியிருக்கும். ஒரு முறை அப்பா என் வீட்டுக்கு வந்திருந்தபோது கேட்டார், ‘உனக்கு ஞாபகமிருக்கா வர்தினி, வசந்தான்னு..’

எப்படி மறக்கமுடியும் அவளை என்பதாய் தலையசைத்தேன்.

‘..வந்திருந்தாம்மா என்னைப் பார்க்க, ஆபீசுக்கு.. அவளும் அவ வீட்டுக்காரரும் ஒரு ஐந்து வயது பையனும். நல்லாயிருக்கா.’ என்றார். ‘..தைரியமான பொண்ணும்மா..’ என்று தனக்குத்தானே சிலாகித்துக் கொண்டார். அப்படியும் இருக்கலாமென நினைத்தேன். அந்த சமயம் என்ன நடந்தது என்று கேட்க அவசியமில்லாமல் அவள் வாழ்வில் காலமிட்ட கூட்டலும் கழித்தலும் புரிந்து போனது. பிறகு வந்த காலங்களில் வசந்தாவை முற்றிலும் மறந்துபோயிருந்தேன்.

அவளைப்போல இந்த பெண்ணும் இறக்காமல் இருந்திருக்கலாம். உடலை எரித்து உலகத்துக்கு வலியை காட்டியிருக்காமல் இருந்திருக்கலாம். வருடங்கள் கழித்து, புது தாலி தொங்க சந்தோஷமாய் வாழ்ந்திருந்திருக்கலாம். 

நடக்காத ஆசுவாசங்களுடன் உறங்கிப் போக மட்டுமே நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது போலும் என்ற அங்கலாய்ப்பில் ரஜாய்க்குள் நுழைந்தேன்.   













Comments

Popular Posts