தவ்வை நாவல் அறிமுகம்
~ சரவணன் மாணிக்கவாசகம்
தவ்வை - அகிலா:
ஆசிரியர் குறிப்பு:
கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், பெண்ணியவாதி, ஓவியர் மற்றும் மனநல ஆலோசகர். கோவையைச் சேர்ந்தவர். கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல் என பத்து தொகுப்புகளுக்கு மேல் வெளியிட்டுள்ளார். இந்த நூல் இவரது சமீபத்திய நாவல்.
1979ஆம் வருடம். மாடிப்படியில் ஆறேழு பெண்கள் சிரிப்பும் சத்தமுமாய் உட்கார்ந்திருந்தார்கள். காலையில் மணமுடித்த பெண்ணை அதில் ஒருவர் மாடிவரைக் கூட்டிப் போய் விட்டுவிட்டு வந்தார். முன்பின் அறிமுகமில்லா இருவர் எப்படி உறவுகொள்ள முடியும் என்ற சந்தேகத்திற்கு அன்றும் என்னிடம் பதிலில்லை. இன்றும் பதிலில்லை.
தவ்வை மணமுடிக்கையில் வயது பதினாலு. கணவன் ராமநாதனுக்கு வயது இருபது. ராமநாதனுக்கு படிப்பு வரவில்லை, வியாபாரம் வரவில்லை. கணக்கு சரிபார்க்க வரவில்லை. அப்பா இல்லாத பெண் தவ்வையை ராமநாதன் வீட்டில் பெண் கேட்டு வந்தது அவள் அதிர்ஷ்டம் என்றே அவள் அம்மா உட்பட எல்லோரும் நினைத்திருப்பார்கள். பணவசதி மட்டும் பெண்ணுக்கு எல்லாமாக போய்விடுமா!
வீட்டுப்பெண்ணிடம் வன்முறையில் இறங்குபவன் மனதாலோ, உடலாலோ, அறிவாலோ இல்லை ஏதாவது ஒருவிதத்தில் தாழ்வுமனப்பான்மை கொண்டவனாக இருப்பான். ஒரு முழு ஆண்மகனால் ஒரு பெண்ணிடம் வன்முறையில் இறங்கமுடியாது, உணர்ச்சிவசப்பட்ட ஏதோ ஒரு கணத்தில் தப்பித்தவறி அடித்தாலும் அவள் அழுவதைப் பார்த்துக்கொண்டு நிற்க முடியாது.
தவ்வை எண்பத்து ஐந்து வயதைக் கடந்து வாழ்க்கையை பின்னோக்கிப் பார்க்கிறாள். எல்லோரும் கடந்து வந்த வாழ்க்கை அல்ல அது. எல்லாமும் இருந்தும் எதுவுமே இல்லாதது போல் ஒரு வாழ்க்கை. தவ்வையிடம் யாருக்கும் தெரியாத ஒரு இரகசியம் இருக்கிறது. அவள் அதைச் சொல்லப் போவதில்லை. இரண்டு தலைமுறைகள் தாண்டி அவள் பேரனின் மனைவி அதைக் கண்டுபிடிக்கிறாள். ஆனால் அவளும் அதை யாருக்கும் சொல்லப் போவதில்லை.
பதினான்கு அத்தியாயங்கள் சரிபாதியாக நடந்த கதைக்கும் நடப்புக் கதைக்கும் பிரிக்கப்பட்டுள்ளன. அகிலாவின் I named the village எனும் ஆங்கிலக்கவிதைகளில் வரும் அதே வார்த்தை சிக்கனத்தையும், அழுத்தத்தையும் இந்த நாவலிலும் பயன்படுத்தியிருக்கிறார். முழுக்கவே திருநெல்வேலி வட்டார வழக்கில் வரும் நாவல். பெண்ணின் அகஉணர்வுகளை வார்த்தைகளில் வடிக்கத் தெரிந்திருக்கிறது. தவ்வையின் Depressionக்கான காரணம் நமக்குத் தெளிவாகத் தெரிவது, இவருக்கு நாவலில் கிடைத்த வெற்றியாகவே கருத வேண்டும். நிலச்சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ என்று இங்கே கதறிய பெண்களின் எண்ணிக்கை எவ்வளவாக இருக்கும்?
#நாவல்கள்
பிரதிக்கு :
டிஸ்கவரி புக்பேலஸ் 87545 07070
முதல்பதிப்பு நவம்பர் 2020
விலை ரூ 250.
Comments
Post a Comment
உங்க கருத்தை சொல்லலாம்.....