Skip to main content

படைப்பாளியாய்..

ஒரு பெண் அங்கீகாரம் பெற..

வாசகசாலை பேட்டியில் செந்தில் அவர்களின் 'உள்ளே கனலும் நெருப்பு' சற்று யோசிக்கத்தான் வைத்தது. இதனை எழுதும் கட்டாயத்திற்குள்ளும் என்னை தள்ளியது எனலாம்.

"தமிழில் எழுதத் தெரிந்தால் அவர் எழுத்தாளராகிவிடும் சூழ்நிலையின் தொடக்கப்புள்ளி. ஃபேஸ்புக்கில் ’மொண்ணை’ வரிகளுக்கு இடப்படும் நூற்றுக்கணக்கான விருப்பக்குறிகள் தன்னைக் குறித்த மிகுதியான கற்பனைகளுக்கு வழிகோலுகின்றன போலும்." இதை அவ்வாறே ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இதுபோலவே இங்கு நிறைய உள்ளன. இம்மாதிரியான விஷயங்களில், ஒரு சிறு கோபம் என்னுள்ளும் ஓடிக்கொண்டிருக்கிறது. படைப்பிலக்கியம், அது ஒரு மகாசமுத்திரம். கொட்டிக்கிடக்கும் எழுத்துகளில் யாருடையதை நல்லதென்றும் அல்லதென்றும் வல்லமை வாய்ந்ததென்றும் பொல்லாமை பேசுவதென்றும் சொல்ல?

சமூகத்தின் மூலையில் கிடந்த சாராம்சங்களை எல்லாம் எழுத்தாக்கி வாசகனை யோசிக்கவைத்து அறிவை புரட்டிப்போட்ட சிறுகதைகளையும் நாவல்களையும் இலக்கியம் என்றும் அது ஒரு மாபெரும் தேவை என்றும் நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதை படைத்தவர்கள் எல்லாம் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார்களா என்றால் அது சாத்தியப்படுவதில்லை என்றே தோன்றும்.

வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் ரசனை வேறுபடும். ஜெயகாந்தனை பிடித்தவர்களுக்கு பாலகுமாரனைப் பிடிக்காமல் போகலாம். வாசந்தியைப் பிடித்தவர்களுக்கு அம்பையைப் பிடிக்காமல் போகலாம். யாரையும் யாருடனும் ஒப்பிடுதல் என்பதும் தவறுதான், ஒருவருக்கே என் உடல், பொருள், ஆவி என்றிருப்பதும் தவறுதான்.

இன்றிருக்கும் விருது பெற்ற, விருது பெறாத, சிறுகதை, பெருங்கதை எழுதும் எழுத்தாளர்கள் அநேகம் பேர் ஆண்கள்தான் என்பதை எங்கும் அடித்துச் சொல்லலாம். அந்த மாபெரும் சமுத்திரத்தில் என் போன்ற பெண்களும் சிறுகதை இலக்கியத்திற்குள் இருக்கிறோம் என்பதை நாங்களே தமுக்கடித்து கதறினால்தான் உண்டு. இதுதான் இன்றைய நிதர்சனம்.

படைப்பாளிகளுக்குள் ஆண் என்ன பெண் என்ன என்ற கேள்வி வருகிறதே உங்களுக்கு. நிச்சயம் உண்டு எனலாம். கவிதை எழுதும் பெண்களைப் பார்க்கலாம். நாலு அல்லது எட்டு அல்லது பதினைந்து வரிகள் எழுதுதல் பெண்ணின் ஒரு பகல் நேர உழைப்பின் காலத்தில் ஒரு சிறு பங்கே கடன் கேட்கும். ஒரு சிறுகதை என்பதோ நாவல் என்பதோ அவளின் பேனா முனை நெற்றி தேய்க்கும் நேரத்தை அதிகமாய் சாப்பிடும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஒரு ஆண் எழுதுகிறான் என்றால், அவனுக்கு காப்பி கிடைக்கும், சாப்பாடும் கிடைக்கும். குழந்தை சினுங்கினால் அதை நகட்டிச் செல்லவும் ஆள் இருக்கும். பெண்ணுக்கு அப்படியல்ல என்பது வெட்ட வெளிச்சம்.

இந்த நிலையில் ஆண்கள் முகநூலிலும் இணையத்திலும் விருப்பக்குறியிட்டு மகாஜனங்கள் போற்றுவதை, அதிமேதாவிகள் புத்தகமாக்கி விருதுக்கும் போகிறார்கள். மாலை நேர தேநீர், இரவு நேர தேநீர் பார்ட்டி என்று ஆண்களுக்கு நிறைய டீக்கடை பெஞ்சுகளும் அதன் மீதான கணிசமான பரிந்துரைகளும் ஏணி அமைத்து கொடுக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. சமீபமாக வந்த சுஜாதா விருது பட்டியலில் ஒரு பெண் படைப்பாளியின் முகம் இருந்ததா என்பதே ஒரு சாட்சி.

விருதுக்காக அனுப்பப்பட்ட படைப்பு குவியலில் என் சிறுகதை தொகுப்பும் ஓன்று என்பதை நான் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். அந்த விருது அறிவிக்கப்பட்ட பிறகு, நம் எழுத்து தகுதி சுற்றை எட்டவில்லையோ என்கிற நினைப்பில் நான் இருக்க, அது குறித்து எழுந்த சர்ச்சைகளும் விவாதங்களும் என் எண்ணம் உண்மையல்ல என்றது. அவ்வமயம் மௌனத்தை மட்டுமே பதிலாக்க முடிந்தது.

இருந்தும் ஒரு பெண், இங்கு படைப்பாளியாய் அங்கீகாரம் பெற ஒரு ஆணை விட அதிகமான உழைப்பு தேவையாகிறது என்பது மட்டும் மிக பலமாய் புரிகிறது. அங்கீகாரங்களை விட, அடுத்ததை நோக்கிய நகர்தலே ஒரு படைப்பாளியை செம்மையாய் செதுக்கும் என்னும் நம்பிக்கை எப்போதும் எனக்குள் உண்டு.

தொட்டு கடக்கும் காலத்தை சுவாசிக்கலாம். 
கடந்து போகிறதே என்று பிடித்து வைக்க முடியாது. 

Comments

 1. தொடர்ந்து எழுதுங்கள்
  அங்கீகாரம் ஒரு நாள் தானே வரும்
  வாழ்த்துக்கள் சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. அங்கீகாரத்துக்காக எழுதவில்லை. பெண் படைப்பாளிகள் ஒதுக்கப்பட கூடாது என்பதற்காகவே எழுதினேன்.

   Delete
 2. அங்கீகாரம் வேண்டி எழுதுதல் கூட
  ஒரு பலவீனமோ என எனக்குத் தோன்றுகிறது

  ReplyDelete
  Replies
  1. அங்கீகாரத்துக்காக எழுதவில்லை. பெண் படைப்பாளிகள் ஒதுக்கப்பட கூடாது என்பதற்காகவே எழுதினேன்.

   பெண்கள் எழுதுவதே சிரமத்தில் இருக்கும்போது, பெண் எழுத்தாளர்களையும் மனதில் கொள்ளவேண்டும் என்பத்ற்காகதான் எழுதினேன்.

   Delete
 3. புரிகிறது... என்றாலும் இதைப் பற்றிய நினைவுகள் மேலும் வேண்டாமே...

  ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந