போராட்ட களம்..
கேரள மாநிலத்தின் மூணாறு தேயிலை தோட்ட பெண் தொழிலாளிகள் 2015 யில் ஊதிய உயர்வுக்காக போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றனர். அந்த காலகட்டத்தில் அவர்களின் ஒழுக்கம் குறித்தும் அவர்களின் ‘பெம்பிளை ஒருமை’ அமைப்பு குறித்தும் கேரள மின் துறை அமைச்சரும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளா மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர்.எம்.எம்.மணி மிகவும் மோசமாகப் பேசியதாகக் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அதை எதிர்த்து குரல் கொடுத்திருக்கின்றனர் அந்த பெண்கள்.
அவர் அரசு அதிகாரிகள் மீதே ஒழுக்கம் சார்ந்த குற்றம் சுமற்றியதாகவும். ‘பெம்பிளை ஒருமை’ அமைப்பு போராட்டம் நடந்த காலகட்டத்திலும் இம்மாதிரியான ஒழுக்க சீர்கேடான விஷயங்கள் நடந்ததாக மட்டுமே அமைச்சர் கூறியதாகவும் அவரின் மலையாள பேச்சின் தமிழாக்கம் சுட்டுகிறது.
https://thetimestamil.com/2017/04/24/கேரள-அமைச்சர்-தமிழ்-பெண்/
பெண்ணை மட்டுமே குறிக்கும் படிமங்களான, ‘கற்பு’, ‘வேசி’, ‘விபச்சாரம்’ போன்ற சொற்பிரயோகங்கள் கம்யூனிசத்துக்குள்ளும் பேசப்படுவதால், ஆண் பெண் இருபாலாரின் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் இந்த கம்யூனிச சதுரத்துக்குள் நடுநிலை கொண்டு பார்க்கப்படும் என்று முழுமையாய் நம்புவதற்கில்லை.
ஒவ்வொரு முறையும் ஆண்களின் ஒழுக்கம் சார்ந்த முறைகேடுகள் நடக்கும்போதும் அதை பெண்ணின் மீதே திருப்ப, பெண்ணுக்கு எதிரான அடக்குமுறைக்குள் கொண்டுவந்து நிப்பாட்டவே அரசியல்வாதிகளும் ஊடகங்களும் முயற்சிக்கின்றன.
இதன்மூலம் போதைக்காகவே பெண் என்னும் நடைமுறை, ஒவ்வொரு முறையும் இந்த ஊடகங்களால் முன்னிறுத்தப்படுகிறது. பெண்களை மூர்க்கமாய் எழச்சொல்லுகிறது. ‘ஆணாதிக்கம், ஆணாதிக்கம்..’ என்று பெண்கள் முழங்க முழங்க ஆண் சமூகம் சந்தோஷமாய் படையல் சாப்பாடு சாப்பிடுகிறது. கலகத்தை உண்டு பண்ணிய திருப்தியுடன் ஊடகமும் அடுத்த பக்கம் முகம் திருப்பிக்கொள்கிறது.
பெண்களை ஒழுக்கம் கொண்டு ஊனப்படுத்தாமல் தனிமனிதனும் சரி, ஊடகங்களும் சரி, அரசாங்கம் செய்யும் அரசியலாளர்களும் சரி இருப்பதில்லை.
அவர்கள் என்ன இலட்சியத்துக்காக, தேயிலை தோட்ட பெண் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்தும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரச்சனை குறித்து அதை 9 நாட்கள் போராட்டத்தில் அடைந்தும்விட்ட பிறகு, இத்தனை மாதங்கள் கழித்து அவர்களை இழிவுபடுத்தி பேசிய அமைச்சரின் பேச்சு கண்டிக்கதக்கதே. அவர் கிராமத்து ஸ்டைலில் பேசிவிட்டார், அதுதான் சரியாய் புரிந்துக் கொள்ளபடவில்லை என்றெல்லாம் முதலமைச்சரே சாக்குபோக்கு சொல்கிறார்.
ஒரு பிரச்சனைக்காக போராடிய பெண்களைக் கொச்சைப்படுத்தி பேசி, பெண்ணின் ஒழுக்கத்தை குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கி அவளை பலவீனபடுத்தப் பார்க்கும் விஷயங்களைச் செய்கிறார்கள்.
அமைச்சர் சொன்னதை தவறு என்று ஒத்துக்கொள்ளாத முதலமைச்சரும், தான் பேசியது தவறு என்று மழுப்பலாய் ஒரு மன்னிப்புடன் அமைச்சரும், அதை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என போராடும் பெண்கள் உறுதியாயும் இருக்கிறார்கள்.
பெண்களுக்காவே படைக்கப்பட்டிருக்கும் ஒழுக்கக் கோட்பாடுகளை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய சமயம் இது. இம்மாதிரியான நிகழ்வுகள் நம்மை சீர்தூக்கி பார்க்கவைத்து சரி செய்துக்கொள்ளவும் முன்னேற்ற வழிகளை காட்டவும் உதவும் என்பதில் சந்தேகமில்லை. போராட்ட களம் நம்மை உயர்த்திக்கொள்ள வழிவகுக்கட்டும்..
திசை மாறாமல் போராடுங்கள் பெண்களே!!
பாவம் அந்த பெண்கள்
ReplyDelete