பெண்களும் அம்மாக்களும்
நீயா நானா என்னும் தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் பெண் பிள்ளைகளுக்கும் அவர்களின் அம்மாமார்களுக்குமான விவாதம். பிள்ளைகள் தங்களுக்கு திருமணத்திற்கு 100 பவுன் நகை, கார் என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்ததும் பெற்றோர் முழித்துக்கொண்டிருந்ததும் எல்லோராலும் பார்க்கப்பட்டது.
அதில் பேசிய பெண்பிள்ளைகளைத் தராசில் ஏற்றாதவர்கள் கிடையாது. பெற்றோரின், உடன்பிறந்தோனின் சிரமம் உணராது பேசியது அவர்களேதான். அதன்பின் படிந்திருக்கும் நியாயங்களைப் பற்றியும் நாம் பார்க்கவேண்டும்.
அவர்கள் தங்கள் பெற்றோர் மீது வைத்த முதலும் முடிவுமான குற்றச்சாட்டு, சிறுவயதில் இருந்தே சாப்பாடு, படுக்கை, படிப்பு என்பதில் தொடங்கி திருமணம் வரை தொடரும் ஆண், பெண்ணென்ற பால் பாகுபாடு.
ஆண், பெண் பாகுபாடு பார்ப்பது பெரும்பான்மையான மத்தியதர குடும்பங்களில் வழக்கமான ஓன்று. பையனுக்கு திருமணம் முடித்துவைத்து அவனோடு இருக்கப்போகிறோம், அவன்தான் நம்மைக் காப்பற்றப் போகிறான் என்னும் பழைய நூற்றாண்டின் இந்திய சமூக கோட்பாடுதான் இதற்கு காரணம்.
இந்த கால சூழலில் பெண்ணுக்கு படிப்பு கொடுப்பது கட்டாயம், கௌரவமென ஆக்கப்பட்ட சூழ்நிலையில் அவளுக்கு கல்வி கொடுக்கப்படுகிறது. பள்ளியிறுதியில் நன்றாக படித்தால் இஞ்சினியரிங் படிப்பும் இல்லையென்றால் ஏதோ ஒரு பட்டப்படிப்பை கொடுத்து, திருமணம் செய்து அனுப்புவது என்பது முடிவு செய்யப்பட்ட ஓன்று.
இதை தெளிவாய் சொல்லி வளர்க்கிறார்கள் பெற்றோர். இதை அருமையாய் புரிந்துக்கொள்ளும் இந்த பெண் பிள்ளைகளுக்கும் நம் திருமணம்தான் இவர்களுக்கும் நமக்குமான கடைசி பந்த நிமிடம் என்பதை உணர்ந்துக் கொள்கின்றனர். அதனால்தான் திருமண நேரத்தில் 80 பவுன் நகை, கார், வீடு, நிலம் போன்ற எதிர்பார்ப்புகள் அவர்களின் மனதில்.
அடுத்ததாய், முன்பெல்லாம் திருமணம் செய்தபிறகு கிடைக்கும் வாழ்க்கைதான் இறுதிவரை சாசுவதம் என்னும் மனநிலை இருந்தது. அதற்காக தன்னை முழுமூச்சாய் அனுசரிக்க ஆணும் பெண்ணும் கற்றுக்கொண்டார்கள்.
இப்போது அப்படியில்லை. வசதிக்காகவும் வாய்ப்புகளுக்காகவும் ஆசைப்பட்டு முடித்து வைக்கப்படும் திருமணங்கள், அதன்பிறகு அந்த உறவு தொடர்வதில் உள்ள சிக்கல்கள், கணவன் என்னும் ஆண்மகனின் மீதான நம்பிக்கையற்ற நிலை, பெண்ணியம் என்பதன் உண்மை கருத்தறியாமல் நடந்துக்கொள்ளும் பெண்ணின் தன்னிச்சையான சுதந்திர போக்குகள் இவையெல்லாமே திருமணபந்தத்தை கேள்விக் குறியாக்குகின்றன.
இந்த மாதிரியான சமூக காலத்தின் அழுத்தம் இப்பெண்களின் மனதில் சஞ்சலத்தை உண்டாக்குகின்றன. பின்னாளில் தனக்கு பொருளாதார நெருக்கடி இல்லாமல் வாழவேண்டும் என்னும் அச்சம் கலந்த நோக்கே பெற்றோரிடம் போடும் நிபந்தனைகளுக்கு காரணம்.
பெற்றோரே, உங்களின் வளர்ப்பை மாற்றிக்காட்டுங்கள். ஆணோ பெண்ணோ பாகுபாடின்றி படிக்கவைக்கிறோம், வேலை பார்க்க வைத்து திருமணம் செய்விக்கிறோம் என்னும் முறைமையை பெற்றோர்கள் ஏற்கவேண்டும். அதிலேயே பெண் நிமிர்வதற்கான வழிகளையும் ஆணை உயர்த்திப் பிடிக்கும் சமூக வாழ்வியல் சமன்பாடும் தென்படும்.
தனிமனிதனிடம் இருந்துதான் சமூகத்துள் சிந்தனைகள் ஊன்றப்படுகிறது. அச்சிந்தனையை பால் பாகுபாடின்றி சமன் செய்வோம். பாசம் மறந்து, எதிலும் நம்பிக்கையற்று, பணம் ஒன்றே குறிக்கோளாய் பேசும் இளைய சமுதாயத்தை மாற்றிக்காட்டலாம்.
~ அகிலா..
சிறப்பாக அலசி உள்ளீர்கள்
ReplyDeleteமின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html