Skip to main content

கடவுளின் அம்மா

கடவுளின் அம்மா

(29-3-2015 யில் கல்கியில் வெளியான சிறுகதை)

காற்றில் பறந்த எண்ணெயற்ற முடியின் சொரசொரப்பில் விரல்கள் உரசி வலித்தது நங்கைக்கு. சேலையின் தலைப்பை இழுத்து மூடி ஜன்னலோரமாய் ஒடுங்கி அமர்ந்தாள். பேருந்தின் வெளியே ஒரு பெண் ஏதோ ஒரு மொழியில், கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாள். அவளின் சிணுங்கிய சிரிப்பு இவளுக்கு பிடிக்காமல் போயிற்று. சில மாதங்களாகவே இப்படிதான் இருக்கிறது இவளுக்கு. மனிதர்களின் சிரிப்பும் கொஞ்சலும் அன்னியமாய்படுகிறது. மாதவிலக்கு சுழற்சி நிற்கும் சமயங்களில் இப்படிதான் இருக்கும்னு தேவியக்கா சொன்னாள். இவளுக்கு ஒன்றும் புரியவில்லை. மீண்டும் பேசிக் கொண்டிருந்த அந்த பெண்ணை பார்த்தாள். தன் மேலேயே வெறுப்பு வந்தது.       

கூட்டம் நிரம்ப வண்டி கிளம்பியது. பீளமேடுக்கு டிக்கெட் எடுத்தாள். மதியம் இரண்டு மணி வரைதான் அந்த மருத்துவ கேம்ப் இருக்கும். இரண்டு வீடு வேலை முடித்துக் கிளம்பும் போதே மணி பன்னிரண்டைத் தொட்டிருந்தது. அங்கு இலவசமாய் ஸ்கேன் எல்லாம் பண்ணுவார்கள். போன முறையே கர்ப்பப்பை பரிசோதனை செய்தபோது சிறு கட்டி இருந்தது தெரிய வந்தது. கல்யாணமாகி இருபத்தியேழு வருடமாகிறது, வயிற்றில் ஒரு புழு பூச்சி கூட தங்கலை. ஆனால் கட்டி மட்டும் எங்கிருந்து வந்ததுன்னு புரியல அவளுக்கு.  

அந்த ஆஸ்பத்திரியின் இலவச முகாமில் எப்போதும் ஒரு வயசான டாக்டரம்மா இருப்பாங்க. போன முறையே அவளிடம் சொல்லியிருந்தாங்க, அடுத்த முறை செக் பண்ணும்போது கட்டி பெரிதாகியிருந்தால் ஆபரேஷன் செய்யவேண்டுமென்று. ஆபரேஷன் என்றால், ஆஸ்பத்திரி இருபது சதவீதம் பணம்தான் தருமாம். மீதியை நாமதான் கொடுக்கணும்.

பிள்ளை இல்லை என்பதை பேசியே போன வருஷம் மாமனார் இறந்த நோம்பிக்கு சொந்த சனம் எல்லாருக்கும் துணி எடுத்துக் கொடுத்ததும் ஒரு வார சாப்பாட்டு செலவை இவர்களே செய்ததும் நினைவுக்கு வந்தது நங்கைக்கு. அந்த கடனிலிருந்து இருந்து இப்போதான் விடுபட்டு கொஞ்சம் சேர்த்திருக்கிறாள். அதைதான் எடுக்கவேண்டும் என்று நினைத்திருந்தாள்..       

வீட்டுவேலை செய்து கிடைக்கும் ஆறாயிரம் பணத்தை தவிர அவளுக்கு வேறு வருமானம் கிடையாது. நங்கையின் வீட்டுக்காரன் சில சமயம் பெயிண்ட் வேலைக்கு போவான், அது இல்லாத நாட்களில் வீட்டில் சும்மாதான் இருப்பான். அதிக பலமில்லாதவனாகவும் சோம்பேறியாகவும் இருந்தான்.  

முன்பெல்லாம் கட்டிட வேலைக்கு போவான். நிறைய காசு கிடைக்கும். கூட்டாளிகளோடு சேர்ந்து தண்ணி போட்டு ரோட்டோரமாய் விழுந்துகிடப்பான். நங்கை போய் தூக்கிட்டு வருவாள். ‘எதுக்கு வீட்டுக்கு இழுத்துட்டு போறே..என்ன செய்தாலும் உனக்கு வயித்துல ஒண்ணும் தங்கல. விடுடி...’ என்று கேவலமாக சத்தம் போடுவான். முடியிழுத்து அடிப்பான். குனிக்குறுகிப் போவாள் நங்கை.

ஒரு கட்டத்தில் குடல் வெந்துப்போய் கிடந்தபோது, ஊரில் சுய உதவிக்குழு பெண்கள் சொன்னதைக் கேட்டு, பொள்ளாச்சி சென்று குடிமுறிவுக்கு சிகிச்சை செய்தாள். இப்போது ஒரு வருடம் ஓடிவிட்டது. குடிக்காமல் இருக்கிறான். ஆனாலும், மாலை நேரமானால் அவனின் பயம் முழித்துக் கொள்ளும். அவனருகிலேயே இருப்பாள் நங்கை.

தனித்து விடமுடியாத நிலை. தற்கொலை என்றெல்லாம் சென்டரில் பயம் காட்டியிருந்தார்கள். இதனால், இப்போதெல்லாம் இரவின் நேரங்கள் அவளுக்கு மிகவும் வேதனையாகிப் போய்விட்டன. கர்ப்பப்பை கட்டியின் வலி அந்த சமயங்களில் அதிகமாவதை உணர்ந்தாள். அவனிடம் சொல்லவும் முடியாமல் சகித்துக் கொள்ளும் சமயங்கள் நரகமாய் தோன்றும் அவளுக்கு. எதற்கு இந்த ஜென்மம். பிள்ளைகள் இருந்தால் அவர்களின் சந்தோஷங்கள், கவலைகளினால் இந்த நரகம் இல்லாமல் இருந்திருக்குமோ என் நினைத்துக் கொள்வாள்.  

போன முறை கேம்பிலேயே டாக்டரம்மாவிடம், எப்படி அவனுக்கு புரிய வைப்பதுன்னு கேட்க நினைத்தாள். இந்த முறை கண்டிப்பாக கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். பிஎஸ்ஜி ஸ்டாப் வரவும் இறங்கினாள். கேம்பில் கூட்டம் அதிகமாக இருந்தது. சீட்டு பெற்றுக் கொண்டு டாக்டரம்மாவைத் தேடினாள். காணவில்லை.

இவளை இன்னொரு டாக்டரிடம் அனுப்பினார்கள். அந்த பெண்ணுக்கு சிறு வயதுதான் இருக்கும். அழகாக இருந்தாள். அந்த பெண்ணைப் பார்த்ததும் இவளுக்குள் ஏதோ ஒரு உணர்வு, தாய்மை என்றது. தனக்கும் காலாகாலத்தில் குழந்தை பிறந்திருந்தால் இன்னைக்கு இந்த பெண்ணைப் போலதானே இருந்திருக்கும் என்னும் நினைப்பு மனசுக்குள் ஓடியது.

‘வாங்கம்மா, உக்காருங்க..’ என்ற அந்த பெண்ணின் குரலுக்கு அமர்ந்தாள். சிறு முடிக்கற்றை ஓன்று அந்த பெண்ணின் நெற்றி நிறைத்து கண்ணின் அருகே ஆடிக் கொண்டிருந்தது. ஒதுக்கிவிட்டு தலை கோதும் ஆசை வந்தது நங்கைக்கு. மாநிறமாய் இருந்தாலும் கண்களும் மூக்கும் அந்தந்த இடத்தில் செதுக்கி வைத்த மாதிரி இருந்தது. அந்த பெண்ணை சிறு வயதில் கற்பனை பண்ணிப் பார்த்தாள். சிட்டு மாதிரி ஓடிவந்து தன் காலை கட்டிக்கொண்டு அம்மா என அழைப்பது போலவும் தோன்றியது. பெருமூச்சு மட்டுமே வெளிப்பட்டது நங்கையிடமிருந்து, இது நிஜமில்லை என்பது போல். 

தனக்கு மட்டும் ஏன் குழந்தையில்லை என்னும் கேள்வி கண்ணீராய் வெளிவந்தது. அவனின் குடியில் வாங்கிய அடியில் ஓன்று கலைந்து போனதும், அவளின் நங்கையா ஒரு முறை அவங்க மகளின் வயதுக்குவந்த சடங்கின் போது, தன் பெண்ணை தொடவிடாமல் இவளின் கையைத் தட்டிவிட்டு, அவ விளங்கனுமே என நியாயம் பேசியதும் நினைவில் வந்துபோனது. விடைகளற்று போன கேள்வியாய் வாழ்க்கை அவள் முன் நின்றது.

‘கட்டி பெரிதாகிவிட்டது. எடுத்தாக வேண்டும்மா..’ என்ற அந்த பெண்ணின் சொற்கள் எதுவும் அவளின் சிறு மூளைக்குள் ஏறவில்லை. வெறுமே தலையாட்டிவிட்டு நகர்ந்தாள்.

‘நங்க..’ என்னும் குரல் கேட்கவே திரும்பினாள். இவளின் கூட்டுக்காரி ஒருத்தி நின்றிருந்தாள். ‘செக் பண்ணிட்டியா?..’, என்றவளிடம், அந்த வயதான டாக்டரம்மாவைப் பற்றி கேட்டபோது, அவங்க ரிடயர்ட் ஆயிட்டாங்களாம், மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்குன்னு ஒரு பள்ளியும் ஆஸ்பத்திரியும் நடத்திகிட்டு இருக்காங்களாம். அதனால் அவங்க இனி இங்கே வரமாட்டாங்க என்றாள் அவள்.

சென்ற முறை நங்கை செக்அப் வந்திருந்தபோது, அவங்க இதை இவளிடம் சொல்லிவிட்டு, ‘உன் வீட்டின் அருகில் தானே இருக்கிறது. ஓய்ந்த நேரத்தில் அங்கே வந்து அந்த குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறாயா. உனக்கும் மன சமாதானமாக இருக்கும்’ என்று சொன்னது நினைவுக்கு வந்தது.

கிட்டாத ஒன்றுக்காய் ஏங்கி, ஒவ்வொரு பிள்ளைகளாய் பார்த்து பெருமூச்சுவிடுவதை விடுத்து, பார்க்க வசதியில்லாமல் தாயும் தகப்பனும் விட்டுச்சென்ற அந்த மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்காக தன்னிடம் மிச்சமுள்ள வாழ்க்கையை கொடுத்தால் என்ன என்ற தோன்றியது நங்கைக்கு. தெளிவாய் திரும்பினாள் அந்த இளம் டாக்டரிடம். கர்ப்பப்பை எடுக்க எப்போது வர வேண்டும் என்று விசாரித்து வந்தாள்.


வீடு திரும்ப பேருந்தில் ஏறி அமர்ந்தபோது, அருகில் அமர்ந்திருந்த பெண் சூடியிருந்த மல்லிகையின் மணம் இவளின் நாசி தொட்டது. பள்ளியில் தனக்காய் காத்திருக்கும் குழந்தைகளை நினைத்து கொண்ட அந்த நிமிடத்தில், அது குழந்தையின் வாசனையாய், கடவுளின் மணமாய் அப்போது தோன்றியது அவளுக்கு.  


Comments

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி