நாங்கதாங்க பெண்கள் 2
இது புதியதரிசனம் இதழில் தொடராய்
தற்சமயம் வெளிவந்துக் கொண்டிருக்கிறது..
புதிய தரிசனம் இதழ் எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்
புதிய தரிசனம் இதழ் எல்லாக் கடைகளிலும் கிடைக்கும்
பெரும்பாலும் வீட்டில் இருக்கும் பெண்கள் பாவங்க. வீட்டில் கணவர், குழந்தைங்ககிட்டே அப்படி இப்படின்னு கொஞ்சம் சத்தம் கொடுப்பாங்கதான். மற்றபடி பார்த்தால் சீக்கிரம் மனசு இறங்குவாங்க. ‘என்னடா’ ன்னு கணவர் சொன்னாலே சமாதானம் ஆகிடுவாங்க. உள்ளே பெரிதாக மனக்கசப்புகள் இருக்காது.
வேலைக்கென்று போய் வெளியுலகை எட்டிப்பார்க்கும் பெண்கள், கொஞ்சம் போராடும் குணம் சார்ந்து இருப்பாங்க. அது அவர்களின் வெளியுலக வாழ்விற்கு தேவையாய் இருப்பதால். அந்த மாதிரி பெண்கள் கொஞ்சம் பந்தாவாக தைரியமாக இருப்பாங்க. அந்த பந்தாவே அவங்களுக்கு அழகுதான்.
எங்க ஏரியாவில வியாழக்கிழமை அன்னைக்கு மார்கெட் போடுவாங்க. அங்கே சேலையைத் தூக்கி இடுப்பில் செருகிய ஒரு குண்டு பெண்மணியைப் பார்க்கலாம். ரொம்ப கறாராகப் பேசுவாங்க. சுத்தும் முத்தும் அவங்க போடும் சத்தத்திலேயே கடைக்கு போன நாம மிரண்டுவிடுவோம்.
'இவ எங்கடி போனா, நீ வந்து அவ கடைல இருக்கே....’
‘ஏய் மல்லிகா, இவளே....உன் கடைல இவ இருந்தா, அவ கடையை யாரு பார்ப்பா...சின்ன கிழவியா...'
என்று அதிகாரக் குரல் கொடுத்துக்கிட்டே இருப்பாங்க அந்த அம்மணி இந்த அதிகாரம் இல்லைன்னா அங்கே யாருமே சரியா வேலை செய்யமாட்டாங்களோன்னு எனக்கு தோணும். இவ்வளவு சத்தத்திற்கு நடுவிலும் அவங்க ரெண்டு பெரிய பெண்பிள்ளைகளும் உட்கார்ந்து படிச்சுகிட்டு இருக்கும். அவங்ககிட்டே மட்டும் குரல் தாழ்த்திப் பேசுறதைப் பார்த்திருக்கேன். ஒருவகையில் அந்த பெண்மணி பாவம்தான். அதிகாரமா வெளியே இருந்தாலும் உள்ளே பலாச்சுளை போலதான் இருக்காங்க.
எனக்கு தெரிஞ்ச இன்னொரு அம்மா எங்க ஊருல இருக்காங்க. சாவிக்கொத்து இடுப்பில் சொருகி பந்தாவா அலைவாங்க. எப்படியும் பீரோவுக்குல ஒரு 200 பவுனாவது தேறும்ன்னு நாங்க எல்லாம் நினைப்போம். பொண்ணுங்களை எல்லாம் கட்டிக்கொடுத்தப் பிறகு ஒரு 20 பவுனுதான் உள்ளே இருந்திருக்கும். ஆனாலும் பந்தாவை விட்டுவிடாம நடப்பாங்க.
சாவிக்கொத்துன்னா சாதாரணமா இருக்காது. அவங்க விசாலமான இடுப்புல அதுவும் விசாலமா இருக்கும். பெரிய பூ மாதிரி டிசைன் போட்டிருக்கும். அவங்க நடக்கும் போது ஜங் ஜங் ன்னு சத்தம் கேட்கும். வீட்டை விட்டு வெளியே போகும் போது யார் கண்ணுலயும் சாவி கொத்து உறுத்தாம இருக்க, அதுக்கு மேல ஒரு பெரிய கைக்குட்டையை நாலாய் மடித்து இடுப்பில் சொருகி இருப்பாங்க. அவங்க இறந்தப்போ அதே மாதிரி ஒரு சாவிகொத்து செய்து கைக்குட்டையை மடித்து சொருகிதான் அவங்களை காட்டுக்கே அனுப்பினாங்க. கடைசி வரை அதிகாரமா அழகாவே இருந்தாங்க. அப்படியும் சில பெண்கள் வீட்டிலேயும் வெளியிலேயும் அதிகரமாகவே வாழ்வார்கள்.
வெளியில் மட்டும் பந்தாவா வாழும் பெண்கள் அனேகம் பேர். ஒரு தடவை சென்னையில் உள்ள லேண்ட்மார்க் கடைக்குப் போயிருந்தேன். பெண்மணி ஒருவர் ஒரு சின்னப் பையனை கைத்தடியாக கூட்டி வந்திருந்தார். அவன் பொருட்கள் எடுத்து வைக்கும் கூடையை தூக்கி கொண்டு பின்னாடியே செல்ல, இந்த அம்மா அவன் பத்தாது என்று, அங்கு கடையில் இருக்கும் இன்னும் இருவரை அழைத்து, 'இந்த பைலை எடுப்பா, அந்த நோட்புக்கை எடு, என்னால் குனிய முடியாது....' என்றெல்லாம் ஏக பந்தா பண்ணிக் கொண்டிருந்தார்கள்.
நான் வெளியே வரும்போது பார்த்தால், அந்த அம்மா அவங்க கார் டிரைவர் கிட்டே கத்திக்கிட்டு இருந்தாங்க. 'உனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்...எங்கே போனே' என்று. அவன் அதற்கு கூலாக, 'வீட்டுக்குத்தானே போகணும்...ஏதோ பெரிய ஆபீஸுக்கு போற மாதிரி...’ என இகழ்ச்சியாக கூறினான். வெளியே இவ்வளவு பந்தா பண்ற அவங்களுக்கு வீட்டில் மரியாதையே இல்லை என்பது அப்போதுதான் தெரிந்தது. இப்போ அவங்களை பார்த்தா அதிகாரமா தெரியலை. பாவமாக தெரிந்தது.
இதே போல என் தோழி ஒருத்தி இருக்கா. எப்போவுமே சேலை முந்தானை float ல - அதாவது மடிப்பு வைக்காம விட்டுருப்பா. சேலை முந்தானையின் ஓரத்தை இந்த பக்கமாக சுத்தி பிடிக்கவும் மாட்டா. அது தரை எல்லாம் பெருக்கிகிட்டே வரும். நாங்க தோழிகள் எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டா. இதுதான் பந்தாவே என்பாள்.
ஒரு தடவை ரிசப்ஷன் ஒன்றுக்கு போயிருந்தோம். இதே மாதிரி ஸ்டைலா அலைஞ்சிகிட்டு இருந்தா. மேடைக்கு போய் மணமக்களை வாழ்த்த போனோம். மேடையின் மேல் படிக்கட்டு ஏறும்போது பின்னால் வந்த பெண்மணி இவளின் தரையில் கிடந்த சேலையின் மீது கால் வைத்திருக்க, இவள் மேலே நகர, சேலை இழுத்து கீழே விழுந்துட்டா. ரொம்ப கஷ்டமா போச்சு. கைல அடி வேற. ஒரு வாரம் கைக் கட்டோட கஷ்டப்பட்டா. இப்போ ஒழுங்கா முந்தானை ஓரத்தை கைக்குள்ளே பிடிச்சிகிட்டு போறா. ஆனாலும் சேலை எப்போவும் போல ப்லோட்ல தான், அதே பந்தாவுடன். மாத்தவே முடியாது அவளை....ஆனாலும் அதுகூட அவளுக்கு அழகுதான்.....
எப்படியிருந்தாலும், நாங்கதாங்க பெண்கள்... இன்னும் பேசுவோம்...
நாங்கதாங்க பெண்கள் 2 =
ReplyDeleteAhila Puhal = அருமையான தொடர், அருமையான விவரிப்பு. எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
நன்றி & வாழ்த்துகள் திருமதி
Ahila Puhal
நம்மைப் பற்றி நாம் தானே பேசமுடியும்... அருமையா இருக்கு... ஒவ்வொரு ஆளுமைக்கும் பின்னே பல மனவியல் காரணங்கள் இருக்கு அகிலா.... ஏனெனில் பெரும்பாலும் அடுத்தவரால் ஆளுமைப்படுத்தப்படும் மூளை பெண்களுடையது....
ReplyDeleteவாவ் !! அருமையான பதிவு ..ஆமாம் :) இந்த float டைப் சல்வார் துப்பட்டாலியும் ஒரு தோழி போடுவா ..இதே போல ஸ்கூட்டரில் மாட்டி அவ பட்ட பாடு ..இப்பெல்லாம் ஒழுங்கா பின் பண்ணி knot போடறா :)
ReplyDeleteஎனக்கு தெரிந்த ஒரு பெண்மணி கூட அழகா 80 வயதிலும் சுருக்கமில்லாம வெங்கடகிரி புடவை மட்டுமே இறக்கும் வரை கட்டி பந்தாவா செல்வதை பார்த்திருக்கேன் .அது ஒரு கம்பீரம் !
சிலருக்கு அவங்க பேச்சு அழகு ,சிலருக்கு உடுத்தும் உடையழகு ,சிலருக்கு மானரிசம்ஸ் எவ்ளோ சொல்லலாம் !!
நாங்க தாங்க பெண்கள்... ரொம்ப நல்லா இருக்கு...
ReplyDeleteதொடருங்க....