தேவந்தி
நூல் : தேவந்தி
ஆசிரியர் : எம் ஏ சுசீலா
27/7/2014 அன்று நடந்த
கோவை இலக்கிய சந்திப்பில் நான் ஆற்றிய மதிப்புரை
சுசீலாம்மாவின் தேவந்தி என்னும் இந்த நூல் 1979
– 2009 வரைக்கும் அவர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு. இது ஒரு வடக்கு வாசல்
பதிப்பக வெளியீடு.
எம் ஏ சுசீலா
கல்விப் பணியில் தமிழ்த்துறை பேராசிரியராக 36 வருடங்கள் பணியாற்றியவர் மதுரை பாத்திமா கல்லூரியில். இடையில் இரண்டு வருடங்கள் அதே கல்லூரியில் துணை முதல்வராகவும் இருந்திருக்கிறார். அதனால் இவரின் இந்த தொகுப்பில் கல்வித்துறை சம்பந்தப்பட்ட கதைகள் நிறைய காணமுடிந்தது.
கல்விப் பணியில் தமிழ்த்துறை பேராசிரியராக 36 வருடங்கள் பணியாற்றியவர் மதுரை பாத்திமா கல்லூரியில். இடையில் இரண்டு வருடங்கள் அதே கல்லூரியில் துணை முதல்வராகவும் இருந்திருக்கிறார். அதனால் இவரின் இந்த தொகுப்பில் கல்வித்துறை சம்பந்தப்பட்ட கதைகள் நிறைய காணமுடிந்தது.
ஆரம்ப காலம் தொட்டே இலக்கியத்திற்காக தன்னை
அர்ப்பணித்துக் கொண்டவர். சிறுகதை, கட்டுரை, நூல் மதிப்புரை ஆய்வு, மொழியாக்கம்
என்று பல தளங்களில் இயங்கி வருபவர். தற்பொழுது ஒரு நாவலும் பிரசுரத்தில்
இருக்கிறது.
இந்த தொகுப்பில் மொத்தம் 36 சிறுகதைகள்
அடங்கியுள்ளன. பெரும்பாலானவை பெண்களின் வாழ்வியல் பிரச்சனைகளை எடுத்துரைக்கிறது.
படிக்க படிக்கவே நம் தினசரி வாழ்க்கை கண் முன் விரிகிறது. எழுந்த நேரத்தில்
இருந்து படுக்கும் நேரம் வரை நமக்குள் நடக்கும் விஷயங்களை சாதாரணமானவை அல்ல என்பதை
இந்த கதைகள் சொல்லிச் செல்கிறது.
ஒவ்வொரு சின்ன நிகழ்விலும் கூட நாம் நிறைய
யோசித்து முடிவு எடுக்கிறோம் என்பது இவரின் கதைகளைப் படிக்கும் போது உணர
முடிகிறது. நடுத்தரவர்க்கத்தின் பெண்கள் குடும்பத்திலும் ஆணாதிக்க சமூகத்திலும்
படும்பாட்டை இவரைத் தவிர இவ்வளவு இலகுவாக அதே சமயம் ஆணித்தரமாக வேறு யாராலும் பதிய
வைக்க முடியுமா என்பது எனக்கு தெரியவில்லை.
இனி கதைகளை சற்று பார்ப்போம்...
இழப்புகள்
எதிர்பார்ப்புகள்
ஒரு அக்றினை பொருளை வைத்து கொண்டு
என்னவெல்லாம் நிகழ்கிறது என்பதை சொல்லும் கதைதான் இழப்புகள் எதிர்பார்ப்புகள்.
ஒரு ஆசிரியர் பிய்ந்து போன இனிமேல்
பயன்படுத்த முடியாது என்ற நிலையில் உள்ள தன் பழைய செருப்பை விட்டொழித்து, பொருளாதார
நெருக்கடியான நிலையிலும் புது செருப்பு ஒன்றை வாங்குகிறார். அதில் ஒரு செருப்பை
மட்டும் மழை நாள் ஒன்றில் தெருவில் நிறைந்து ஓடும் நீரில் பேருந்து நிலையத்தில்
தொலைத்துவிடுகிறார். மனம் கனத்து போய் மற்றொன்றை வீட்டிற்கு செல்லும் வழியில்
வீசிவிடுகிறார் .நீரில் தொலைந்த செருப்பு, செருப்பே இல்லாத ஒரு சிற்றாள் பெண்ணிடம்
அதே நாளில் சிக்குகிறது. அவள் மற்றுமொரு செருப்பும் அதே நீரில் வருமென்று
எதிர்ப்பார்த்து காத்திருக்கிறாள்.
இது ஒரு சிறு நிகழ்வுதான். இதை அந்த இரண்டு
பெண்களும் எப்படி கையாளுகிறார்கள் அவர்களின் மன உணர்வுகள் இதையெல்லாம் இந்த
கதையில் சிறப்பாய் சொல்லியிருக்கிறார். செருப்பின் மீது
அவர்கள் கொள்ளும் கட்டாயத்தை அழகாய்
கதைப்படுத்தியிருக்கிறார், ஒருவருக்கு இழப்பும் மற்றொருவருக்கு
எதிர்ப்பார்ப்புமாக...
இயல்பு
இயல்பான ஓட்டத்தில் சொல்லப்பட்ட கதைகள்
ஏராளம். பள்ளிக் கதைகள், கல்லூரி கதைகள், நட்பு கதைகள், சமூகக் கதைகள்.
சந்திப்பு
நட்பை பறைசாற்றும் கதைகளில் ஒன்று இது.
பெண்களால் நட்பை பெரிதாய் திருமணத்திற்கு பிறகு காப்பாற்ற முடியாமல் போகும் நிலையை
இந்த சிறுகதையில் சொல்லியிருக்கிறார்கள்.
தன் வீட்டுக்கு வருகை தருவதாக இருக்கும்
தோழியை நினைத்து என்னவெல்லாம் பேச வேண்டும் அவளிடம் என்று யோசித்து வைத்திருந்து
அவள் வந்ததும் அவளின் சூழல் – கணவரின் கண்டிப்பு, குழந்தைகளின் நிலை இவையெல்லாம் அவற்றை
செய்யவிடாமல் தடுப்பதும் கடைசியில் ஏமாற்றமே மிஞ்சுவதும் பெண்களின் மிக பெரிய
சாபக்கேடு என்றுதான் சொல்லவேண்டும். அதை சுசீலாம்மா சொல்லிச் சென்ற விதம் அருமை.
பெண்ணியத்தை
சத்தமாக பேசும் கதைகள்...
புதிய பிரவேசங்கள், உயிர்தேழல், சங்கிலி, தேவந்தி
என்னும் கதைகள் பெண்ணீய கருத்துக்களை தெளிவான சிந்தனையுடன் எழுதப்பட்டிருக்கின்றன.
புதிய பிரவேசங்கள்
புதிய பிரவேசங்கள் என்னும் கற்பனை கதையில்
சீதை, இலங்கையில் இருந்து வெளியேறும் முன் ராமனால் சிதைக்குள் இறங்க
பணிக்கபடுகிறாள். ஆனால் சீதையோ, அக்கினி பிரவேசம் செய்து என் பெருமையை
நிலைநாட்டிக் கொள்வதைவிட, அதை செய்யாமலிருப்பத்தின் மூலம் எதிர்காலத்தில் என்
பெயரால் எரியூட்டப்படும் என் சகோதரிகளின் எண்ணிக்கையை குறைக்க நினைக்கிறேன்.
அதனால் நான் இறங்க மாட்டேன் என்கிறாள். இங்குதான் யதார்த்தமாய் மிக மென்மையாய் கதை
சொல்லி போன சுசீலாம்மா சத்தமிட்டு பெண்மையை பறைசாற்றி இருக்கிறார்.
சத்தமிடாமல்
பெண்ணியத்தை பறைசாற்றியும் இருக்கிறார் மூன்று கதைகளில்...
கண் திறந்திட
வேண்டும்
செல்லி என்னும் ஏழை சிறுமிக்கு படிக்க
வேண்டும் என்பது மிக பெரிய ஆசை. அம்மா இறந்து போக அனாதை விடுதியில்
படித்துவருகிறாள். அங்கிருந்து ஒரு பணக்கார வீட்டிற்கு வேலைக்கு
அனுப்பப்படுகிறாள். அங்கு அவளின் படிக்கும் ஆசை கேலிப்படுத்தப்படுகிறது. அவர்கள்
அவளை தன் அமெரிக்காவில் இருக்கும் தன் அண்ணன் வீட்டிற்கு வேலைக்கு அனுப்ப ஏற்பாடு
பண்ணுகிறார்கள். விமான பயணத்திற்கு முந்திய நாள் செல்லி தன் தமிழ் ஆசிரியையின்
முகவரியைக் கையில் எடுக்கிறாள். மறுநாள் இவர்கள் பெட் காப்பிக்காக தேடும் போது
அவள் இல்லை வீட்டில்...
சத்தமில்லாத பெண்ணிய சாதனை இது.
யதார்த்தமாக அமைதியாக சாதிப்பதை சொல்லியிருக்கிறார் சுசீலாம்மா. நிறைய வீடுகளில்
பெண்கள் இதை சாதிக்கிறார்கள்.
விட்டு விடுதலையாகி
மாதவிடாய் பிரச்னையை இதில்
கையாண்டிருக்கிறார். ஒரு பெண் திருமணமாகி கணவன் வீட்டில் கடைசி மருமகளாக
செல்கிறாள். அவளுக்கு வெளியே போகும் சந்தர்ப்பங்கள் குறைவாக அமைகின்றன. பிள்ளைகள்
எல்லோரும் பெரிதான பிறகு ஒரு நாள் கணவர் அவளை தொலைவில் இருக்கும் கோவிலுக்கு கூட்டிச்
செல்கிறார். பேருந்தில் பயணிக்கும் சமயம், அவள் சுற்றுப்புறங்களை அழகாய் ரசித்து
வருகிறாள். இறங்கும் சமயம், மாதவிடாய் வந்ததற்கான அறிகுறிகள். கோவிலுக்கு
செல்லவேண்டும். வருடங்கள் கழித்து வெளியே வந்திருக்கிறாள். அந்த மகிழ்ச்சியை இழக்க
விரும்பாமல் மாதவிடாய் வந்ததை கணவரிடமும் குடும்பத்தினரிடமும் இருந்து மறைத்துவிடுகிறாள்.
இது போல நிஜ வாழ்வில் பெண்களுக்கு
அனுபவங்கள் உண்டு. கோவிலில் வைத்து ப=நடைபெறும் விஷேசங்களின் பொழுதுகளில்,
வீட்டில் நடக்கும் சிறு நிகழ்வுகளின் போது இப்படி நடப்பதுண்டு. அதை தள்ளி போடும்
மாத்திரைகளால் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகள் வருவதால் இதை மறைத்து வாழவேண்டிய
சூழல். நடைமுறை யதார்த்தம் இது. பாராட்டுகள் சுசீலாம்மாவிற்கு..
பொம்பளை வண்டி
நான் ரொம்ப ரசித்த கதை இது. கொஞ்சம்
சிரித்தே விட்டேன் இந்த கதையை படித்து முடித்தபோது...
ஈஸ்வரி ஓர் ஏழை பெண். எப்போவும்
சந்தேகப்படும் புருஷன் அவளுக்கு. குடித்துவிட்டு வந்து அடிப்பதும் உதைப்பதுமாய்
இருப்பவன். அவனை நினைத்தாலே இவளுக்கு பயம். அதிகமாய் பேசமாட்டாள். தன் உறவுகளுடன் பக்கத்து
டவுனுக்கு ஒரு திருமணத்திற்கு செல்கிறாள்., சீக்கிரம் வந்து விடவேண்டும் என்பது
அவனின் கட்டளை.
வரும்போது கொஞ்சம் கூட்டத்தோட ஒரு பஸ்
வருகிறது. ‘இது பெண்கள் வண்டி..ஆம்பளைங்க ஏறாதீங்க . எடுய்யா கைய , இறங்குயா முதல’
அப்படின்னு உள்ளிருந்து கண்டக்டரின் குரல். ஆச்சரியமாக இருக்கிறது அவளுக்கு.
ஆவலுடன் வந்த உறவு பெண்கள் கண்டக்டருடன் சேர்ந்து ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஆண்கள்
ஏறும் போது சத்தம் போடுறாங்க. ஈஸ்வரிக்கும் தைரியம் வந்து, இறங்கும் போது தன் மேல்
இடித்த ஒரு ஆணை பார்த்து, மாடு மாதிரி வந்து விழுறியே..கண்ணு தெரியலையா... பொம்பளை
வண்டின்னு பெரிய போர்டு வச்சிருக்காங்களே பார்க்கலையான்னு சத்தம் போடுகிறாள்.
அந்த நேரத்துல அந்த ஆளின் முகம் அவள்
கண்ணுக்கு தெரியவில்லை. அவ புருஷன் முகம்தான் கண்ணுக்கு தெரிஞ்சிது
அவளுக்கு...ன்னு சுசீலாம்மா எழுதியிருக்காங்க. இவ்வளவு பெண்ணியம், சுதந்திரம்
பேசுற எனக்கு அதை படித்த பொழுது சந்தோஷமா இருக்குன்னா ரொம்ப பயந்து வாழ்கிற
பெண்களுக்கு இந்த கதையை படிச்சா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்...யோசித்து பார்த்தேன்...மகிழ்ச்சி
சுசீலாம்மா..
நீங்க சத்தமில்லாம பெண்ணியத்தை கதாபாத்திரங்களின்
வழியாக சொல்லி, சத்தமிட்டு பெண்ணியம் பேசும் பெண்களுக்கும் பிடித்தவர்கள் ஆகிப்
போனீர்கள்..
இன்னும்
நிறைய கதைகள்..
கன்னிமை கதையில் தன் தாய்மையை
களங்கப்படுத்திய கணவனை வீசியெறியும் கல்யாணி, உயிர்த்தெழலில் அனுவின் ரௌத்திரம், தாயும் தன் குழந்தையை தள்ளிடப்
போமோ? என்னும் கதையில் குழந்தைகள் காப்பகத்தில் கைக்குழந்தையை விட்டு விட்டுத் தவிப்போடு
வேலைக்குச் செல்லும் பானு இப்படி பெண்களை மகுடம் சூட்ட வைத்துவிட்டார்.
அதுக்காக ஆண்களைப் பற்றி கதையே இவர்
எழுதவில்லையா என்று யோசிக்காதீங்க. மண்ணில் விழாத வானங்கள் என்பதில் கந்தசாமி
வாத்தியாரின் நேர்மையை அழகாய் எடுத்தியம்புகிறார். பொன்னை விரும்பும் பூமியிலே
என்னும் கதையில் ஊனமுற்ற தன் மனைவியை தூக்கி சென்றே பிருந்தாவன் தோட்டத்தைச்
சுற்றிக் காட்டும் கணவன், அப்பா மகன் உறவை பற்றிய நேரமின்மை கதை எல்லாமே அழகாய்..
கணவன் மனைவிக்கு இடையேயான சிறு கருத்து
வேறுபாடுகளும் பேசிக் கொள்ளாமலே இருவரும் மன உளைச்சலுக்கு ஆளாவதுமான உணர்வுகளை
நான் பேச நினைப்பதெல்லாம் என்னும் கதையில் சொல்லி இருக்காங்க.
சரி, எத்தனையோ கதைகளை
பேசிவிட்டோம். இந்த தலைப்புக்கான கதையை சொல்லவேண்டாமா என்ன...
தேவந்தி..
நான் கேட்டிராத புதிய பெயர்...
சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் தோழியாய், நல்ல
சேவகியாய் இருந்த தேவந்தியின் கதை. என்னை மிகவும் பாதித்த கதை.
கண்ணகியின் கதையைவிட மிக துயரமான கதை. நம் சமூகத்தின்
சில மூடத்தனமான உணர்வுகளால் வடிவாக்கம் பெறுகிற செயல்களின் பலிகடாவாக ஆக்கப்படும்
பெண்களின் படிமமாக விளங்குகிறாள் இந்த தேவந்தி.
இவளின் கதை வெளியே தெரியாமலே போய்விட்டது.
சுசீலாம்மா தேடிபிடித்து தேவந்தியை வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள். சபாஷ்..
தேவந்தியின் கணவரின் வளர்ப்பு தாய், அவளின்
மாமனாரின் முதல் மனைவி மாலதி. அவளுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. அவரின்
இரண்டாம் மனைவியின் குழந்தையை வளர்த்து வருகிறாள். ஒருநாள் குடும்பத்தில் அனைவரும்
வெளியே சென்றுவிட்டனர். அச்சமயத்தில் குழந்தைக்குப் பால் புகட்டும் பொழுது, குழந்தைக்கு
சிரசில் பால் ஏறி, குழந்தை மூர்ச்சையாகின்றது. குழந்தையின் இறந்துவிட்டதாக
நினைக்கிறாள்.
அங்கிருக்கும் எல்லா கோயில்களுக்கும்
குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஓடி தெய்வங்களிடம் மன்றாடுகின்றாள். தன் குலதெய்வமான
பாசண்டச் சாத்தன் நினைவுக்கு வருகின்றது. அக்கோயிலுக்கு விரைந்து பதற்றத்துடன்
சென்றவள் மயக்கமுறுகின்றாள். மயக்கம் தெளிந்து குழந்தையின் அசைவுகளைக் கண்ணுற்று
தன் குலதெய்வம் குழந்தையின் உயிராய் வந்துவிட்டதென நம்புகின்றாள். மாற்றாளின்
குழந்தை உயிரைக் கொன்றுவிட்டதாக வரும் பழி சொற்களுக்கு பயந்து, மற்றவர்களிடம்
இதுப்பற்றி சொல்லாமல் அவனிடம் மட்டும் அதை சொல்லி, சிந்தனையில் பாசண்டச் சாத்தனைப்
பதிக்கின்றாள். அவனும் தான் பாசண்டசாத்தன் என எண்ணிக் கொள்கின்றான்.
தேவந்தியை மணந்து கொண்டவன் உலகத்தின்
பார்வைக்கு மட்டும் கணவன் என்னும் உறவைக் காட்டிக்கொள்கின்றான். தன் பிற
உறவுகளுக்கு தன் கடமைகளை நிறைவாக செய்பவன் தேவந்தியை மட்டும் புறக்கணிக்கின்றான். எல்லோரிடமும்
தன் கடமைகள் நிறைவு பெற்றுவிட்டதாய்
எண்ணிக் கொண்டவன், தேவந்தியிடம் எஞ்சிய
வாழ்நாட்களைக் கோயில் வழிபாட்டில் கழித்துக் கொள்ள சொல்லி தீர்த்த யாத்திரை
செல்கிறான். ஊரார் தன் மீது பழி சுமத்தாமல் இருக்க தன் கணவன் தீர்த்த யாத்திரை
சென்றிருப்பதாகவும், அவன் நலமுடன் திரும்ப தான் கோயில்களில்
வழிபடுவதாக கூறி காலம் கழிக்கின்றாள்.
குழந்தைக்கு புரை ஏறியதும் அவள் கோவிலுக்கு
சென்று குழந்தையை கீழே கிடத்தும் போது, தொண்டையின் அடைப்பு நீங்கி, குழந்தை
பிழைக்கிறது என்பதை தேவந்தி புரிந்துக் கொள்கிறாள். மாந்தர்களின் அறியாமையில்
இருந்து விடுபட முடியாமல் கோவில் என்றும்
நோன்பு என்றும் பெயர் பண்ணி வாழ்ந்து வருகிறாள்.
பெண் என்பவள் எப்போவும் ஆணைவிட கொஞ்சம்
புத்திசாலித்தனம் மிகுந்தவள்தான். பெண்கள் அதிகமாக யோசிப்பார்கள் அப்படின்னு
ஆணைகள் சொல்லுவாங்க ...ஆனால் அது இல்லை உண்மை...பெண்கள் ஆழமாக யோசிப்பார்கள்
என்பதே இந்த தேவந்தியின் மூலம் நாம் புரிந்துக் கொள்ளலாம்.
அவளின் கதையை கண்ணகியிடம் கூறிவிட்டு, கண்ணகியிடம்
தேவந்தி வைக்கும் கேள்விகள்தான் இதில் திருப்பமே.
‘மனித கடமைகளில் மனைவிக்கு ஆற்ற வேண்டிய
கடமை என்பதும் உட்பட்டிருக்கிறதா?...இல்லையா?...அப்படி அதுவும் உட்பட்டது என்றால்,
மனித நிலையில் ஆற்ற வேண்டிய எல்லா கடமைகளையும் என் கணவர் முழுமையாக
செய்துமுடித்துவிட்டார் என்று எப்படி சொல்ல முடியும். மனைவி என்ற மனித
உயிருக்குள்ளும் தனியாக ஓர் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் ஏன்
கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுவதேயில்லை’
இந்த கேள்வி கேட்பதற்காகவே அவரை நான்
சந்தித்தே ஆகவேண்டும் என்கிறாள்.
இன்றில்லை..என்றோ ஒரு யுகத்தில் நான் இந்த
கேள்வியைக் கேட்காமல் விடமாட்டேன் என்கிறாள். இந்த மாதிரியான மௌனங்கள் உடைபடும்
தருணத்தை நிச்சயம் நிகழ்த்திக் காட்ட தவற மாட்டேன் என்றும் சூளுரைகிறாள்.
தேவந்தி கதை இந்த நூலின் மகுடம். அதை
அற்புதமாக எழுதி இருக்கிறார் கதாசிரியர்.
இதில் இருக்கும் அனைத்து கதைகளையும் பேச
வேண்டும் என்றால், நேரம் போதாது. இதிலும் ஒர் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்,
எல்லோருடைய வீடுகளிலும் நுழைந்து எப்படி நம் பிரச்சனைகளை எல்லாம் கண்டுபிடித்து
எழுதியிருக்காங்கன்னு நான் தனியா அம்மாகிட்டே பேசி கேட்கனும்ன்னு வச்சிருக்கேன்
ஏன் சொல்கிறேன் என்றால், எழுதனும்னு நான்
எப்படா கம்ப்யூட்டர் கிட்டே உட்காருவேன்னு வீட்டுல இருக்கிறவங்க பார்த்துகிட்டே இருந்து,
ஏதோ ஒரு வேலையை திணிப்பார்கள் அல்லது முணுமுணுப்பை ஒலிப்பெருக்கி வைத்து
சொல்வார்கள். இதை எல்லாம் தெரிந்துதான் சுசீலாம்மா தடை ஓட்டங்கள்ங்கிற கதையை
எழுதியிருப்பாங்க போல.
பெண்ணின் எழுத்திற்கு எப்படியெல்லாம்
முட்டுக்கட்டைகள் வரும்னு அந்த கதைல சொல்லியிருக்காங்க. ஒரு பெண்மணி தன் எழுத்து
பணியை தொடர மிகவும் ஆசைப்படுகிறார். எல்லா கடமைகளும் முடிந்து எழுத ஆரம்பிக்கும்
பொழுது வயதாகி சோகை பிடித்த விரல்கள், எழுதும் எழுத்தை ஒவ்வொரு திசைக்கும்
இழுத்துச் செல்வதாய்... டாக்டர் கைக்கு strain கொடுக்காதீங்கன்னு என்று சொல்லி பேனாவிற்கு
முற்றுப்புள்ளி வைக்கிறார். இதை படித்ததும் நான் நினைப்பதை கண்டிப்பாக இன்றே
எழுதவேண்டும் என்கிற உணர்வு எனக்குள் வந்தது. நிஜம் சொல்லும் கதை...
கதைகளை அலசிவிட்டோம்.
இனி கதை எழுதிய கைகளின் எழுத்தின் போக்கை அலச நினைக்கிறேன்.
ஆசிரியரின் 30 வருடத்து கதைகள் இவை. முதல்
சில வருடங்கள், அதாவது 1979 முதல் 1986 வரையுள்ள கதைகளில் இயல்பின் சுவடுகள்
தெரிகிறது. இயலாமையின் சுவடுகளும் தெரிகிறது. அவை மனிதங்களை தாங்கிப்பிடிப்பவையாய்
இருக்கின்றன. இந்த ஆணாதிக்க சமூகத்தின் கட்டுப்பாடுகளுக்கு, இயற்கையின்
உபாதைகளுக்கு, சூழலின் கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்டே கதைகள்
புனைக்கப்பட்டிருக்கின்றன. ஆசிரியரின் மன ஓட்டம் பெண்களின் பரிதாப நிலையை பிட்டு
வைக்கிறது. எழுச்சி எழுத்துக்கள் இந்த காலகட்டத்தில் அவர் எழுதவில்லை.
1989 க்கு பிறகுதான் அவரின் எழுத்துக்களின்
ஒரு உத்வேகம், பெண்களின் காப்பாளனாக தன்னை நிலை நிறுத்தி இருக்கிறார். யதார்த்தங்களின்
பூட்டுக்களை உடைத்திருக்கிறார்.
மென்மையாய் சென்று இறுதியில் உக்கிரமான ஒரு
எழுத்தை கொடுத்து பெண்ணியத்தை உறுதிப்படுத்துகிறார்.
வாஞ்சையாய் பெண்ணை தழுவி, இப்படிதான் நீ
இருக்கவேண்டும் என்று நிமிரச் செய்யும் இவருடைய எழுத்துகள் எனக்கு பிடித்திருக்கிறது.
அவரின் பெண்ணிய எழுத்துக்கள் இன்றும் சமுகத்திற்கு தேவையாகதான் இருக்கிறது.
அவரின் விசாலமான அனுபவம் இன்றைய சூழலில்,
பெண்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு பாதை போடும் கதைகளை நிறைய எழுத வேண்டும்
என்று கேட்டுக்கொள்கிறேன்.
பெண்களின் சிந்தையை வியந்து போற்றும், அதுவும்
பெண்மையை போற்றும் பெண் படைப்பாளி சுசீலம்மாவின் நூலைக் என் கையில் கொடுத்து,
என்னை மதிப்புரை வழங்கக் கூறிய கோவை இலக்கிய வட்டத்திற்கு என் நன்றி..
வணக்கம்
ReplyDeleteநூல் பற்றி நல்ல திறனாய்வு.. இன்னும் பல படைப்புக்கள் வெளிவர எனது வாழ்த்துக்கள்.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 போட்டி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
Deleteஅருமையான திறனாய்வு அகிலா. எழுத்தாளர் சுசிலா அவர்களின் பெண்ணியக் கட்டுரைத் தொடரை ஒரு முறை படித்த போதே அவரின் சில சிறுகதைகளையும் படித்தேன்...அதில் பொம்பள வண்டி யும் ஒன்று மனதை ஈர்த்த கதை. உண்மையில் அவரின் கதைகள் அருமையாய் பெண்ணியம் பேசியுள்ளது. உங்கள் தொகுப்பு அவரின் தேவேந்தியை படிக்கச் சொல்கிறது.... எங்கு கிடைக்கிறது?
ReplyDeleteநன்றி எழில்...
Deleteஅந்த புத்தகம் கிடைப்பதுதான் அரிதாய் இருக்கிறது. சுசீலம்மா அவர்களே வரவழைத்து தருவதாகக் கூறினார்கள்..
அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.