Skip to main content

பெண் படிப்பாளி இல்லையா?


நேற்றைய தினம் எங்கள் வீட்டிற்கு ஏசி சர்வீஸ் பண்ண இளைஞன் (பொறியியல் படித்தவன்)  ஒருவன் வந்தான். எங்கள் வீட்டின் அலமாரி முழுவதும் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களைப் பார்த்தான். அதிசயித்துப் போய் ஒரு கேள்வி கேட்டான். 

'இவ்வளவு புத்தங்கங்களை சார் படிச்சிருக்காங்களா?' என்று. 

இந்த கேள்விதான் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. இதைவிட ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு வேறு எதிலும் காணமுடியாது. ஆண் என்பவன் மட்டும்தான் ஆழ்ந்து படிப்பவன் என்று யார் இவர்களுக்கு சொல்லிக் கொடுத்தது? இத்தனை நூல்களையும் அந்த வீட்டின் பெண் படித்திருக்கக் கூடாதா என்ன? எப்பொழுதுமே பெண் முட்டாளாகவே இருப்பாள் என்று இந்த இளைஞனுக்கு கற்றுக் கொடுத்தது யார்? 

அதே போல் என் கணவர் மாற்றலாகி போகும் ஊர்களுக்கு செல்லும் போது அவரின் கீழ் பணிபுரிபவர்கள் என்னிடம் முதலில் கேட்கும் கேள்வி, 'இங்கே இந்த கோவில் பிரசித்தம். அந்த கோவில் பிரசித்தம். கோவிலுக்குப் போகலாமா? ...'  என்பதே. 

பெண் என்றால் படிக்கும் திறனற்றவளாகவும் கோவில் மட்டுமே அறிந்திருப்பவளாகவும் காலம் காலமாக நினைக்கும் ஆண்களின் குறுகிய கண்ணோட்டமே காரணம். இப்படி நான் எழுதும் பட்சத்தில் சில ஆண்கள் நாங்கள் அப்படியில்லை என்பார்கள். சிலர் இல்லாமல் இருக்கலாம் பலர் இப்படிதான் இருக்கிறார்கள்...

இதே மாதிரிபட்ட ஒரு கேள்வியைத்தான் இந்த இளைஞனும் என் முன் வைத்திருக்கிறான். இன்றைய இளைஞனும் இப்படிதான் சிந்திக்கிறான் என்றால் இன்னும் பெண்களைப் பற்றிய நம் ஆண்களின் கண்ணோட்டம் மாறவில்லை என்பதே தெரிகிறது.  

அவனிடம் நான்தான் படிக்கிறேன் என்றேன். ஆனால் என்னை ஒரு இலக்கியவாதியாக அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. என் கவிதை நூலை அவன் கையில் திணிக்க வேண்டும் என்கிற ஆவலையும் கூட கட்டுப்படுத்தினேன். ஏனென்றால், எழுத்து உலகில் இருப்பதால்தான் இந்த பெண்மணி இத்தனையும் படிக்கிறார் என்பது அவனின் எண்ணம் ஆகிவிடும். மற்ற பெண்கள் எல்லாம் புத்தகம் பக்கம் போகமாட்டார்கள் என்பதை மறுபடியும் உறுதிப்படுத்திக் கொள்வான். அதை மாற்றதான் விரும்பினேன். 

சாதாரணமாய் பத்தாம் வகுப்பு படித்திருக்கும் பெண்கூட அதிகமாக புத்தகங்கள் படித்திருப்பாள் பிஹெச் டி படித்த அவள் கணவனைவிட. வார இதழ்களில் மாத இதழ்களில் வரும் பெரிய எழுத்தாளர்களின் எழுத்துக்களை எடுத்து பைண்ட் செய்து சேர்த்து வைத்திருப்பாள். பெண்கள் புத்தக கடைகளில் அவர்களுக்கு பிடித்த நாவல்களை பொது அறிவு புத்தகங்களை வாங்கி படிப்பதில்லையா? என்று அவனிடம் கேள்வி வைத்தேன். உன் அம்மா அப்படியில்லையென்றால் அவருக்கு புத்தகங்களை அறிமுகப்படுத்து என்றேன். 

என் தாயார் அப்படிதான் இருந்து எனக்கு படிக்கும் பழக்கத்தை உண்டு பண்ணினார் என்று அவனுக்கு எடுத்துரைத்தேன். பெண்களை வாசகர்களாக கொண்டுதான் பல எழுத்தாளர்கள் மேல் எழும்பியிருக்கிறார்கள் என்று அவனுக்கு புரிய வைத்து அனுப்பினேன்.

புரிந்தாலும் புரியாவிட்டாலும் இனி அடுத்த முறை புத்தக அலமாரியை எங்கு பார்க்கும் பொழுதும் என் வார்த்தைகள் அவன் நினைவுக்கு வரும். இனி என் முன் வைத்த அந்த கேள்வியை யார் முன்னும் வைக்கமாட்டான்.

வாசிக்கும் அறிவுக்கு ஆண் பெண் பேதமில்லை. 
பெண்களும் புத்தகங்களின் வாசனை அறிந்தவர்கள்தான்...    





Comments

  1. வருத்தமாகத்தான் இருக்கிற்து..ஆனால் ஆழமாக சிந்தித்தால்..பெரும்பான்மைதானே பொது கருத்துக்களை உருவாக்குகிற்து..நமது தேசம் இன்னும் நீண்ட தூரம் பயணம் போக வேண்டியிருக்கிறது..அன்று பாரதியின் கனவுகள் யாவும் சாத்தியாமாகும் .அதுவரை பெருமூச்சுகள்தான் நமக்கு மருந்து..சகோதரி..சிறந்து உயர்ந்து வாழ வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
    Replies
    1. பெண்களை பொறுத்தவரை சில கட்டுப்பாடுகள் இருப்பது இயல்பே. ஆனால் புத்தக கடைகளில் அவர்கள் குழந்தைகளுக்காக புத்தகம் வாங்குவார்கள். அந்த ஆண்மகனோ தனக்கு தேவையானதை தானே எடுத்துக்கொள்வார். தனக்கென்று பிடித்து எடுக்கும் புத்தகத்தின் விலைப் பார்த்து அதை மறுபடியும் எடுத்த இடத்தில் வைக்கும் பெண்களை நான் பார்த்திருக்கிறேன். திருமணம் முடிந்த பிறகு பெண்கள் தனக்கென்று எதுவும் செய்துக் கொள்வதில்லை. அதை வைத்து தான் இந்த சமுதாயம் அவர்கள் புத்தகம் படிப்பதும் இல்லை என்று உறுதி செய்துவிடுகிறது...

      பாரதி கண்ட கனவு நனவாகட்டும்...
      நன்றி...

      Delete
    2. டாக்டர் பால சுப்புர மணியன் கருத்தை நான் அப்படியே ஆமோதிக்கிறேன்

      Delete
  2. ஆண்களின் கற்றல் அவனுக்குமே மட்டுமே பயன்தரும்...பெண் கற்றால் பரம்பரையே கற்கும்... அறியாத மூடர்கள் பல...

    ReplyDelete
    Replies
    1. உண்மையே தனபாலன்...

      Delete
  3. அகிலா, ஸேம் ப்ளட்!! :-)

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா...நம்மை நாம் தான் உயர்த்திக் கொள்ளவேண்டும் போல...

      Delete
  4. புரிந்து கொள்ளும் மனிதர்கள் வேண்டும்... ஆண்களுக்கு நிகராக பெண்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்... கவலை வேண்டாம்....

    ReplyDelete
    Replies
    1. இந்த புரிதல் இருந்தாலே போதும் நண்பா...நன்றி..

      Delete

  5. '///இவ்வளவு புத்தங்கங்களை சார் படிச்சிருக்காங்களா?' என்று. இந்த கேள்விதான் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது///

    அடக்கடவுளே அந்த பையன் கேட்டதை நீங்க தப்பா புரிஞ்சுகிட்டீங்க போல இருக்கு? அவனுக்கு உங்களை பார்த்ததுமே புரிஞ்சு இருக்கும் இந்த அம்மா நிறைய படிப்பவர் சிந்திப்பவர் போல இருக்கு என்று அதனால் அந்த கேள்வியை உங்களிடம் கேட்காமல் உங்க வூட்டுக்காரர் இவ்வளவு புத்தங்கங்களை சார் படிச்சிருக்காங்களா? என்று உங்களிடம் கேட்டு இருக்கிறான். ஆண்களுக்கு பெண்களை போல விவரமா பேச வாராதுங்கோ...

    கொஞ்சம் மாற்றி யோசித்ததால் இந்த பதில்....

    ReplyDelete
    Replies
    1. அடடா...அவன் நினைக்காவிட்டாலும் நீங்களே சொல்லிக் கொடுப்பீங்க போல...
      நன்று..

      Delete
  6. //இப்படி நான் எழுதும் பட்சத்தில் சில ஆண்கள் நாங்கள் அப்படியில்லை என்பார்கள். சிலர் இல்லாமல் இருக்கலாம் பலர் இப்படிதான் இருக்கிறார்கள்...///


    ///இதே மாதிரிபட்ட ஒரு கேள்வியைத்தான் இந்த இளைஞனும் என் முன் வைத்திருக்கிறான். இன்றைய இளைஞனும் இப்படிதான் சிந்திக்கிறான் என்றால் இன்னும் பெண்களைப் பற்றிய நம் ஆண்களின் கண்ணோட்டம் மாறவில்லை என்பதே தெரிகிறது. ///


    இப்படி அந்த இளைஞன் கேட்கும் பட்சத்தில் உங்களை போல உள்ள சில பெண்கள் நாங்கள் அப்படியில்லை என்று சொல்லுகிறீர்கள் இப்படி சிலர் இல்லாமல் இருக்கலாம் ஆனால் பல பெண்கள் இப்படிதானே இருக்கிறார்கள்...அதனால் அந்த இளைஞன் அப்படி கேட்டு இருக்கலாமே?

    ReplyDelete
    Replies
    1. என்னை போல் இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள் போல என்று அவனும் தெரிந்துக் கொண்டிருப்பான் அல்லவா...அதையும் யோசியுங்கள்...

      Delete
  7. ஆணாதிக்கம் ஆணாதிக்கம் என் கிறீர்களே அது முந்தய கால கட்டத்தோடு ஒப்பிடும் போது இப்போது உள்ள காலகட்டத்தோடு ஒப்பிட்டு நோக்கும் போது நிறைய குறைந்துதானே இருக்கிறது. இன்னும் இருக்கிறது என்றால் அது ஆணின் தப்பு மட்டுமல்ல பெண்ணின் தப்பும் உண்டு. இதை கூறக் காரணம் அந்த ஆணை வளர்ப்பது ஒரு பெண்ணல்லவா? குழந்தை வளர்ப்பில் ஒரு ஆணின் பங்கைவிட பெண்ணின் பங்களிப்பு மிக அதிகம் அது மறுக்க முடியாத உண்மையல்லவா? ஒரு வளரும் ஆண் குழந்தை அப்பாவின் பேச்சைவிட அம்மாவின் பேச்சிற்கு அதிகம் முக்கியத்துவம் தருகிறான் என்பதும் உண்மையல்லவா?

    அதனால் குழந்தையை வளர்க்கும் தாய்மார்கள் வளர்க்கும் போது ஆண்குழந்தை உசத்தி என்றும் ராஜா என்று எதற்கும் அழக்கூடாது ஆண்பிள்ளை சிங்கம் வருங்கால குடும்பத்தலைவன் என்று தீமுட்டுவது போல சொல்லி வளர்க்க கூடாது.இப்படி செய்தால் ஆணாதிக்க எண்ணம் அவன் அடிமனதில் பதியாது அல்லவா

    ReplyDelete
    Replies
    1. இதை நான் முழுமையாக ஒத்துக் கொள்கிறேன்...பெண்ணின் பங்கு அதிகமாகவே இருக்கிறது ஆணாதிக்கத்தை வளரவிடுவதில்...

      Delete
  8. பெண்கள் படித்தும் குடத்துக்கள் இருக்கும் விளக்காகத் தானே இருக்கிறார்கள்...

    அவர்கள் தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொண்டால் தான் முன்னுக்கு வரமுடியும்.
    முயற்சிப்போம்.
    நல்ல பதிவு அகிலா மேடம்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்...கல்லூரி படிப்போடு எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிடுகிறார்கள். காரணத்தை குழந்தைகளின் மீது சுமத்துவார்கள். மலரும் நாள் வரும் ....
      நன்றி அருணா...

      Delete
  9. கடைசியில் சரியாகச் சொன்னீர்கள் அக்கா...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்...புரிய வைத்துதான் அனுப்பினேன்...
      நன்றி ...

      Delete
  10. ஆண்களுக்கு நிகராக பெண்கள் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்... கவலை வேண்டாம்....

    ReplyDelete
    Replies
    1. இது முன்னேற்றம் குறித்து இல்லை. பெண்களை ஆண்கள் நினைக்கும் பார்வை குறித்தே என் கவலை.
      நன்றி...

      Delete
  11. இதில் வருத்தபடவோ வேதனை படவோ ஒன்றுமில்லை எழுத்துலகம் ஆகட்டும் இல்லை எந்தவொரு துறையாகட்டும் பெண்கள்தான் சாதிக்கிறார்கள் என்பதை அறியாத ஆணினங்களில் அவனும் ஒருவன் ஆண்களில் பெரும்பாலானவர்கள். இப்படித்தான் என தவறாக நினைக்கும் புதுயுக்கவிஞரில் நீங்களும் ஒருவர் சில பேரரசு கவிஞர்கள் தங்கள் தான்தமிழை வளர்பது போல காட்டிகொள்வது போல இதுவும் புரிதலின் அச்சுபிளையே தவிர பெரும்பான்மையான ஆண்கள் பெண்களின் திறமையை பரிந்துகொள்பவர்கள்தான்

    ReplyDelete
    Replies
    1. புரிந்து கொள்வதால் மட்டும் மாறப்போவதில்லை ராஜன். பெண்ணும் எப்போதும் புத்தகங்கள் படிப்பாள் என்கிற கண்ணோட்டம் வேண்டும் ஆண்களுக்கு...
      நன்றி ராஜன்...

      Delete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி