Sunday, 24 April 2022

புத்தக வெளியீடு கோவையில்..

சிறுகதைகள், திறனாய்வுகள்

புத்தகங்கள் வெளியீடு

அகிலா  


அன்பின் வணக்கம்..

கோவை இலக்கியச் சந்திப்பின் வழி, என்னுடைய நான்கு புத்தகங்கள் வெளிவர இருப்பதை பெருமையுடன் பகிர்கிறேன். 

நாள் : 24.04.2022 ஞாயிறு 

நேரம் : காலை 10 மணி

இடம் : ரோஜா முத்தையா அரங்கம், விஜயா பதிப்பகம், கோவை 


வெளிவரும் நூல்கள் : 

#சீமாட்டி (சிறுகதை தொகுப்பு)

#சமகால_இலக்கியம் - தொகுதி 1

#சமகால_இலக்கியம் - தொகுதி 2

#நின்று_துடித்த_இதயம் (மூன்றாம் பதிப்பு)

புத்தகங்களை வெளியிட்டு, உரைகள் நிகழ்த்தி, வாழ்த்துரை வழங்க இசைந்திருக்கும் ஆளுமைகளுக்கு என் பேரன்பு 🙏 

விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா, அவைநாயகன் அவர்கள், டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அவர்கள், ஓவியர் ஜீவானந்தன், எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் அவர்கள், கவிஞர், தோழி மஞ்சுளா தேவி, கவிஞர் அன்பு சிவா, பேச்சாளர் கவிஞர் மகேஸ்வரி சற்குரு, எழுத்தாளர் இளஞ்சேரல், கவிஞர் பொன் இளவேனில். 

எமரால்ட் பதிப்பகம், விஜயா பதிப்பகம், டிஸ்கவரி புக் பேலஸ் என புத்தக பதிப்பகத்தார் மூவருக்கும் என் அன்பு கலந்த நன்றி.. 🙏🙏

சிறுகதை தொகுப்புக்கு அணிந்துரை வழங்கிய இயக்குனர் பிருந்தா சாரதி அவர்களுக்கு என் அன்பை தெரிவித்துக் கொள்கிறேன். 

புத்தகங்களை சுவாசிக்கவும் வாசிக்கவும் உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றேன்..  


~ அகிலா..

Wednesday, 20 October 2021

தவ்வை நாவலுக்கு சௌமா விருது & திருப்பூர் இலக்கிய விருது

  சௌமா விருது 20212021 க்கான சௌமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தவ்வை நாவலுக்காக நான் விருது பெறுவது பெரும் மகிழ்வே. விருது வழங்கும் விழா அக்டோபர் 30 ஆம் தேதி மணப்பாறையில் நடைபெறுகிறது. சௌமா கல்வி நிர்வாக குழுமத்திற்கும் விருது குழுவினருக்கும் எனது நன்றியும் மகிழவும். 

அதன் அழைப்பிதழ் இங்கே : 
தவ்வை நாவல் வெளிவந்து இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது. செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட திருப்பூர் இலக்கிய விருது தவ்வை புதினத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளது. இப்போது சௌமா விருது. 

தவ்வை அனேக மதிப்புரைகளையும் பெற்றிருப்பது சிறப்பே. முனைவர் பெண்ணியம் இரா பிரேமா, உரையாளர் சரவணன் மாணிக்கவாசகம், பெண்ணியச் செயல்பாட்டாளர் குறிஞ்சி அமைப்பின் நிர்வாகி பேரா சுபசெல்வி, பேரா விஜயராணி, ஷீலா சிவகுமார், ரஞ்சித் குமார் ஆகியோர் உரை எழுதியுள்ளனர். 

அந்த உரைகளை கட்டுரைகள் பகுதியில் பகிர்ந்துள்ளேன். வாசித்துக்கொள்ளலாம். 

 
தவ்வை நாவல் குறித்து உரையாளர் ஷீலா சிவக்குமார் உரை

  தவ்வை புதினம் - மதிப்புரை


தவ்வை குறித்து உரையாளர் ஷீலா சிவக்குமார் அவர்களால் எழுதப்பட்ட இந்த மதிப்புரை மெய்யெழுத்து இணைய இதழில் வெளிவந்துள்ளது. 
அதன் இணைப்புக்கு : தவ்வை


...................

நூல் : தவ்வை 
பக்கங்கள்: 208
விலை: ரூ. 250/–
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
உரை : ஷீலா சிவக்குமார் 
................................ 

‘ராணியாய், ஜமீன்தாரிணியாய், எஜமானியாய் இந்தப் பெண்கள் வாழ்ந்த வாழ்க்கைக்குப்பின்னால் எத்தனை சிக்கல்கள் இருந்திருக்கும்’ என்ற வைசாலியின் சிந்தனையே நாவலின் கருவாக அமைந்துள்ளது.

சாதாரண வாத்தியார் வீட்டுப் பெண்ணான, அறிவும் அழகும் நிரம்பிய தவ்வை, பணக்காரக் குடும்பத்தின் மருமகளாகிறாள். கணவன் தன் குறைபாட்டை மறைக்க அவளைப் பலவாறு இம்சிக்கிறான். அதை தன் மாமியார் மாமானாரிடமோ தன்னைப் பெற்றத் தாயிடமோ சொல்லாமல் தனக்குள்ளேளே வைத்து எல்லா துன்பங்களையும் அனுபவிக்கிறாள். துன்பத்திலிருந்து மீள கணவன் சொல்லும் வழி அவளைக் கோபப்படுத்துகிறது. ஆனாலும் அவளுக்கு வேறு வழி எதுவும் இருக்கவில்லை. இப்படியாக பெண் என்பவள் எப்படி இரகசியங்களை தனக்குள்ளேயே காத்து, அதன் வலியை தான் மட்டுமே அனுபவிக்கிறாள் என்பதை விளக்குகிறது இந்நாவல்.
இந்நாவலில் பொருளடக்கமே புதுமையாக உள்ளது. முன்னொரு காலம் என்று 7 அத்தியாயங்களும் பின்னொருகாலம் என்று 7 அத்தியாயங்களுமாக இடையிடை கலந்து கலந்து கதம்பம் போல் கோர்க்கப்பட்டுள்ள பாங்கு – அழகு.

திருமணம் ஆனது முதலான தவ்வையின் பழங்கதைகளைப் பேசும் முன்னொருகாலம் மாடக்குழி, அழிகம்பி, வெற்றிலை, நாகம், அம்மா, காளை, பகழி என்று செல்கிறது.

பின்னொருகாலம், எண்பத்தைந்து வயதிலும் பூ வைத்துக்கொள்ளும் தவ்வையின் செயலைக் காட்சிப்படுத்தும் பிச்சிப்பூவில் ஆரம்பித்து விறகடுப்பு, வாய்க்கால், அரண், நிலம், அருகன், கொற்றி என்று முடிகிறது. பின்னொரு காலம், வயதான தவ்வையின் இப்போதைய நிலையைச் சொன்னாலும் கூட அவள் நினைவுகளில் முன்னொரு காலத்தின் நிகழ்வுகளே ஓடிக்கொண்டிருப்பதைக் காண முடிகின்றது.
குழந்தை பிறக்காததற்குக் காரணம் யார் என்பதை மிகநுணுக்கமாக ஊகித்தறியும் ராமநாதனின் பெரியம்மாள் - பொன்னம்மா, ‘பாத்துப் பொழைச்சுக்கோ. மாப்பிள்ளை பேச்ச மீறி நடக்காத’ என்ற தவ்வையின் அம்மா - பார்வதி  இவர்கள் இருவரும்தான் கதையில் திருப்பத்தை ஏற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்.
அதுவரை ரங்கனை வெறுத்து வந்த ராமநாதன், பொன்னம்மாவின் பேச்சிற்குப் பிறகே, அவசரமாக தன் குழந்தையின் தகப்பானாக ரங்கனைத் தேர்வுசெய்கிறான். 

‘நீங்க என்ன சொன்னாலும், எத்தன தடவ சொன்னாலும் எப்படிச் சொன்னாலும், நா இதைச் செய்யமாட்டேன். என்னை எங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிவிடுங்க’ என்ற தவ்வை தன் தாயின் பேச்சிற்குப் பிறகே மனம் மாறி, குழந்தையையும் பெற்றுக்கொள்கிறாள்.
தனது பிரச்சனையை மனம் விட்டுத் தாயிடம் பேசவேண்டும் எனத் துடிக்கும் தவ்வை. அடுத்தடுத்த வேலைகளோடு, வந்து சேரும் அன்னை, இருவரும் பேசிக்கொள்ளும் இடங்கள் மிக யதார்த்தமாக உள்ளன. 

‘நா ஒரு எட்டு போயி ஒங்கக்காக்காரியை பார்த்துட்டு வாறேன். அவ என்ன பண்ணி வச்சிருக்காளோ... தெரியலயே!‘ என்று புலம்பிக்கொண்டே வரும் பார்வதி, மகளின் நி்லையைப் பார்த்து, அவள் மேல் இருந்த கோபம் பதற்றமெல்லாம் வடிஞ்சு, ‘‘தவ்வ...!’’ என்று அழுகையுடன் அழைக்கும் இடம் ஒரு தாயின் அன்பை வெளிப்படும் நெகிழ்வான தருணத்தைப் படம் பிடிக்கிறது.
இந்தப் பிரச்சனையை அம்மா வேறு விதமாய்க் கொண்டுபோய்விடுவாளோ என்ற பயத்தில் மனதில் உள்ளதைச் சொல்லமுடியாமல் தவிக்கும் தவ்வை, இந்த வீடு, இந்த நல்ல மனுஷங்க இல்லேன்னா நமக்கு ஏதுடி வாழ்வு என்று கலங்கும் அம்மா, என்ன பிரச்சனை வந்தாலும் நீயே சமாளித்துக்கொள் என்று சொல்லி வெளியேறும் இடம், எளிய மனிதர்களின் வாழ்க்கை நிலையை விளக்குகிறது. சாய்ந்துகொள்ள அம்மாவின் தோள் கிடைத்ததே தவ்வைக்குப் போதுமாய் இருந்தது என்ற வரியின் வலிகள் ஆழமானவை.

தன் பேரன் விசாகனை தவ்வை சந்திக்கும் இடம் நெகிழச்செய்கிறது. ‘இவன் அவனேதான். அதே பனைமரமென வளர்ந்த தேகம், அடர்ந்த கருமை நிறத்தின் பளபளப்பு, தொண்டைக்குழியின் உருண்டை, நீண்டு தொங்கும் கைகள்...’ ரங்கனின் மறுபிறப்பாகவே விசாகன் தவ்வைக்குத் தோன்றுகிறான். 

‘அய்யா... நீ இருக்கியா?’ என்று கேட்பதும், ‘உள்ளார வாய்யா...’ என்று விசாகனின் கையைப் பிடித்து முன்கட்டுக்கு அழைத்துச்சொன்று, நாற்காலியைக் காட்டி, இங்கன உட்காருய்யா’ என்பதும் ‘இருய்யா... தண்ணி கொண்டோறேன் என்று எழுந்து சென்று கொண்டுவந்து தருவதும் உணர்ச்சி மயமான காட்சிகள். தவ்வை செல்லியம்மனுடன் பேசும் இடம் சிறப்பாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
முதல் அத்தியாயத்தில், ‘கன்னக்கதுப்புல செவப்பு மின்னுது புள்ள காதில் கிசுகிசுத்த குரல் காதருகில் கேட்க, திடுக்கிட்டு வாளியைக் கீழே போடுகிறாள் முதியவளான தவ்வை. ‘சாவு இன்னும் வராததற்குக் காரணம் இந்தக் குரலாகவும் இருக்கலாம்.’  என்று நினைக்கிறாள்.  இன்னமும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கும் அந்தக் குரல் சார்ந்த நிகழ்வுகள் பற்றி எதுவும் நாவலில் குறிப்பிடப்படவில்லை. தவ்வைக்கும் ரங்கனுக்குமான உறவு இரண்டு பத்திகளில் முடிவடைந்து விடுவது ஏமாற்றம் தருகிறது. 

இருவருக்குமான உறவில் அவளின் மனம் என்ன நிலையிலிருந்தது என்பதைக் குறிப்பிட்டிருந்தால், இன்னமும் சிறப்பாக இந்நாவல் அமைந்திருக்கும் என்று தோன்றுகிறது. இருப்பினும் நாவலின் நடையும், கட்டுக்கோப்பும், திருநெல்வேலி மக்களின் இயல்பான பேச்சும், காட்சிகளைக் கண்முன்னே சித்தரித்துக்காட்டும் நேர்த்தியும் ‘தவ்வை’ காலத்தால் அழியாத நாவல் என்பதை உறுதிப்படுத்துகின்றது.

இதற்கு முன்பாக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருந்தாலும் கூட, ‘‘தவ்வை அகிலா’’ என்று அறியப்படும் அளவிற்கு இந்நாவல் சிறப்பாக அமைந்துள்ளது. 

தவ்வை நாவல் குறித்து பேரா விஜயராணி மீனாட்சி உரை

  தவ்வை புதினம் - மதிப்புரை

..............


தவ்வை குறித்து பேரா விஜயராணி மீனாட்சி  அவர்களால் எழுதப்பட்ட இந்த மதிப்புரை பிப்ரவரி மாத படைப்பு குழுமத்தின் 'தகவு' இதழில் வெளிவந்துள்ளது. 

தகவு

அதன் புகைப்படங்கள் ...............

புத்தகம் : தவ்வை

அறிமுகம் : பேரா விஜயராணி மீனாட்சி

..,,,,,,,,,,,,,,,


ஆதி காலம் தொட்டு பெண்ணினுள் பெருங்கதையோ சிறுகதையோ உறைந்துதான் கிடக்கிறது. பெண்கள் தான் எத்தனை எத்தனை விதமாய் எத்தனை எத்தனை ஆயிரம் ரகசியங்களோடு.....ஊர், நாடு, இனம், மொழி, மதம், சாதி என எல்லாமே மாறியிருந்தாலும் பெண்கள் ஒன்றுதான்.

ஆணாதிக்கச் சமூகம் தீர்மானித்து வைத்திருக்கும் குடும்ப உறவும் அதன் தீர்மானங்களும் பெண்ணுக்குப் பலவித பிரச்சனைகளை வாரிவழங்குகிறது. இங்கே பெண்ணுணர்வுகளுக்கு இடமேயில்லை. சாதி மதம் ஏழை பணக்கார வர்க்கப்பாகுபாடு இப்படி எதை நோக்கினும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுவேறானவை. அதிலும் இதில் குழந்தைப்பேறென்பது மிகமுக்கிய சூழல். அந்தவகையில்
"தவ்வை" எனும் இந்த நாவலில் தோழர் "அகிலா" அவர்கள் பதினான்கு அத்தியாயங்களாகப் பிரித்து முன்னொரு காலம் பின்னொருகாலமாய்ச் சொல்லி செல்லும் கதையாடலின் தலைப்புச் சொற்களை பொருத்தமாகக் கையாண்டிருக்கிறார்.

எண்பத்தைந்து வயதைத்தொட்ட தவ்வையின் வாழ்க்கை ரகசியங்களால் நிறைந்த, பாலியல் குறைபாடுள்ள ஆண்மையற்ற கணவன் ராமநாதனின் வன்மத்தாக்குதலையும், நெருக்கடியையும், உளச்சிக்கலையும் உருவாக்கி, அதன்பொருட்டு மனபேதலிப்புக்கு ஆளானதால் அந்தப் பெரியவீட்டை விட்டுவிலகி ஓட்டுவீட்டில் வாழும் வைராக்கியம் பெற்ற பெரும்பாடு.

பேரனின் ஒற்றைச் சொல்லுக்குத் தலையசைத்துச் சம்மதிக்கவைக்கும் வித்தை தெரிந்த பேரன் மனைவி வைசாலி(பெண்மனம் பெண்ணுக்குத்தானே தெரியும்) ரகசியச்சாவி கண்டுணரும் அதேநேரம் குடும்பக்கட்டமைப்பைச் சீர்குலைக்காத, பெண்ணின் ஆளுமையைச் சிதைத்துவிடாத அற்புத உளவியல் நிபுணர்.

பெரும்பாலான பெண்களுடைய தெய்வ வழிபாட்டின் தீவிர ஈடுபாடு கூட தனக்குள்ளான ரகசியங்களை மன அழுத்தங்களை வெளியேற்றும் வடிகால் போன்ற மடைமாற்று வித்தைதான். இங்கே தவ்வை யாரிடமும் பகிர்ந்துகொள்ளமுடியாத மனஅழுத்தத்தை செல்லியம்மனிடம் கொட்டித்தீர்க்கிறாள்.?
ராமநாதனோடு கழியும் ஒவ்வொரு இரவும் தவ்வைக்கு நரகத்தைக் காட்டியது. பிள்ளைப்பேறு பற்றி தோண்டித்துருவிக் கேள்வி கேட்கும் பொன்னாத்தாளிடம் பம்மிக்கொண்டு பழியெல்லாம் தவ்வைமீது போடும் அதே ராமநாதன் கண்ணுசாமியிடம் தனது இயலாமையை சொல்லி தீர்வு கேட்கிறான். ஜென்மத்திலும் அந்த பாக்கியம் இல்லை என நாடிபார்த்து ஜாதகம் பார்த்து சொன்னபின் அதற்கான தீர்வாய் மனைவியை வேறொருவனோடு கூடி பிள்ளைபெற்றுத்தரச் சொல்கிறான். குடும்ப கௌரவம் கருதியும், தனக்கு வாரிசு வேண்டியும் அந்த ஒருவனை அவனே தீர்மானிக்கிறான். அவன் தான் ரங்கன். அதைக் கேட்டமாத்திரத்தில் ராமநாதனை எரித்துவிடுபவளாய்க் கோபம் கொண்டவள் கணவன் காலில் விழுந்து காரியம் சாதிக்க நினைக்கிற போது தொடங்குகிறது அவளது மனச்சிக்கல்.

இதெல்லாம் நினைத்தும் பார்க்கயியலாத தவ்வை அம்மா வீட்டுக்கே கிளம்ப தடுத்துநிறுத்தப்பட்டவளாய் தாயாரால் புத்திமதி சொல்லப்பட்டு (அதாவது காலங்காலமாக பாத்துப் பொழச்சுக்கோ, மாப்பிள்ள பேச்ச மீறி நடக்காத இப்படியான புத்திமதிகள்) பெண்ணின் வாழ்வியல் யதார்த்தமும் இக்கட்டும் உணர்கிறாள். அதன்பிறகான வருடக்கட்டுக்கான திருவிழா நாளொன்றில் அவளுள் ஜனிப்பு உண்டானதை எத்தனை நாசூக்காக சொல்லாண்டிருக்கிறார் கதாசிரியர். பிழையற்ற இந்த இருவரையும் மீண்டும் சந்தேகிக்கிறான் ராமநாதன். தவிப்பும் பைத்தியமுமான மனநிலையில் ஊசலாடுகிறது அவனின் மனநிலையும்
ரங்கன் பாவம் அவனென்ன செய்வான்? அந்த வீட்டுக்காக இரவு பகல் பாராது உழைப்பு ஒன்றையே தருபவனாகவும் சங்கரலிங்கத்தை உயிராய் மதிப்பவனாயும் கிடந்தவன் தவ்வையின் தூய அன்பில் மூழ்குகிறான். அவனது அர்த்தமற்ற வாழ்க்கைக்கு பொருள்கிடைத்தாற்போல உணர்கிறான்.

காலம் கடந்தும் பெண்ணின் ஆழ்மனம் வைத்திருக்கும் வெப்பம் ஒருபோதும் உலகத்தை பொசுக்குவதை ஒளிபரப்பியே செல்கிறது என்ற மென்மையான உணர்வை நம்முள் நிகழ்த்தி பல விசாரங்களை எழுப்பிச் செல்லும் பிரதி .


தவ்வை நாவல் குறித்து முனைவர் பெண்ணியம் இரா பிரேமா உரை

  தவ்வை புதினம் - மதிப்புரை 


தவ்வை குறித்து முனைவர் இரா பெண்ணியம் பிரேமா அவர்களால் எழுதப்பட்ட இந்த மதிப்புரை Bookday (Thamizh Books.com) இணைய இதழில் வெளிவந்துள்ளது. 
அதன் இணைப்புக்கு : தவ்வை
..................

புத்தகம் : தவ்வை 

புத்தக ஆசிரியர் : அகிலா 

புத்தக மதிப்புரை : முனைவர் பெண்ணியம் இரா. பிரேமா 

பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ் 

.......................................

எழுத்தாளர் அகிலா அவர்களின் தவ்வை நாவல் பெண் சார்ந்த புனைவாகும். பெண் எழுத்தாளர்கள் தொடாத ஒரு கருவினை அவர் தொட்டுப் பேசியுள்ளார். 


எழுத்தாளர் தி ஜானகிராமன் இக்கருவினை  தன்னுடைய "நள பாகம்" என்ற நாவலில் எடுத்தாண்டுள்ளார். ஆனால் அந்நாவலில் இக்கருவினை, பெண் சார்ந்த புனைவாக அன்றி , ஆண் சார்ந்த புனைவாகப் பேசியுள்ளார்.


எழுத்தாளர் பெருமாள்முருகன் தன்னுடைய "மாதொருபாகன்" என்ற நாவலில் இக்கருப்பொருளை ஒரு தனிப்பட்ட சமூகம் சார்ந்ததாக எடுத்தாண்டுள்ளார். இந்த இரு எழுத்தாளர்களுமே பெண்ணின் உளவியலை அணுகிப் பார்க்கத் தவறிவிட்டனர்.


சகப் பெண் எழுத்தாளர்கள் தொட்டுப்பார்க்கத் தயங்கும் ஒரு விவாதத்திற்குரிய கருப்பொருளை எழுத்தாளர் அகிலா அவர்கள் தன் முதல் நாவலிலேயே தொட்டுப் பார்த்து இருப்பது அவருடைய தனித்துவத்தை நமக்கு உணர வைக்கின்றது. பெண் உடல் சார்ந்து நடத்தப்படும் ஆணாதிக்க அதிகாரத்தினை முன்வைத்து  இக்கதை நகர்த்தப்படுகின்றது.


இந்த உலகம் பெண்களைப் பிரசவிக்கும் உயிர் இயந்திரமாகவே பார்க்கிறது. தாய்மைக்கான தகவமைப்புக்காக அவள் உடல் கடக்க வேண்டிய வலிகள் பற்றிய அக்கறையோ கருணையோ இந்த உலகுக்கு இல்லை. திருமணம் குழந்தைப் பேற்றிற்காக அங்கீகரிக்கப்பட்ட சமூக ஒப்பந்தமாக விளங்குகிறது. ஒரு பெண் தாய்மை அடைய தாமதமானால் ஊரும் உறவும் அவள் மனதில் சொருகும் அம்புகள் கிழிக்க வெளிப்படும் கண்ணீர், குருதி வடிவமாகிறது.


அறிவியல் தொழில்நுட்பம் குறிப்பாக மருத்துவ தொழில்நுட்பம் வளராத முந்தைய தலைமுறை காலகட்டம் வரை பெண்கள் குழந்தை பெற்றுக் கொடுக்கவில்லை என்றால் அவர்கள் "மலடி" என்று தூற்றப்படுவதுடன், பல குடும்பங்களில் அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய கணவன்மார்கள் மறுமணம் செய்து கொள்வது மிகச் சாதாரணமாக சமூகத்தில் நடைபெறும் நிகழ்வாக இருந்து வந்துள்ளது. அதைத் தவிர இச்சமூகத்தில் குழந்தை பேற்றுக்காக வேறு பல கொடுமைகளையும் பெண்கள் அனுபவித்து இருக்கிறார்கள். கணவன் ஆண்மை அற்றவனாக இருந்தாலும், அவன் தன்னுடைய இயலாமையை மறைத்து, அதைத் தன் மனைவியின் இயலாமையாக, தன்  குடும்பத்தினருக்கும் சமூகத்திற்கும் பிரதிபலிக்கின்றான்.


தன்னை  ஆண்மை உள்ளவனாக அடையாளம் காட்டிக்கொள்ள அவன் செய்யக்கூடிய உட் சூட்சுமங்களை இக்கதை எடுத்துப்பேசுகின்றது. தனக்காக இன்னொருவனின் கருவைச் சுமக்கும் மனைவியை அவன் நாள்தோறும் செய்யும் சித்திரவதைகள் இக்கதையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


இந்நாவலில், 'தவ்வை' என்ற பாத்திரம் பெண்களுக்கே உரிய ஆசாபாசங்களோடு படைக்கப்படவில்லை. கணவனின் அன்புக்கு ஏங்குவது,  தாய் பாசம் என்ற பெண்களுக்கேயான குணநலன்கள் இப் பாத்திரப் படைப்பின் மூலம் உடைக்கப்படுகின்றன. தவ்வை, தான் பெற்ற குழந்தையைப்  பெரிதாகப் போற்றி, பரிவு காட்டியதாகக் கதை ஆசிரியர் ஓரிடத்திலும் பதிவு செய்யவில்லை. அதற்காக ஏங்கியதாகவும் காட்டவில்லை. இக்கதையில் இதனை ஒரு பெரும் மாற்றமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 


குழந்தை பிறப்பு, அதன் வளர்ப்பு, அதனுடைய நலன் இவற்றிலேயே தன்னுடைய நேரத்தின் பெரும்பான்மையைச் செலவழிக்கக் கூடிய பெண்கள் தான் நடைமுறையில் நாம் காணும் பெண்கள். ஆனால் தன் வாழ்க்கையைக் குழந்தை வளர்ப்பிலும் குழந்தை பாசத்திலும் மூழ்கடித்துக் கொள்ளாமல், மனநோய்க்கு ஆட்பட்ட தன்னை அதிலிருந்து தானே மீட்டெடுத்து, தன் வாழ்வைத் தானே முடிவெடுத்து வழிநடத்துகின்ற கதாபாத்திரமாக தவ்வை படைக்கப்பட்டுள்ளாள். 


மாமனார் காட்டிய வழியில் தன்னை ஆசிரியையாக உருவாக்கிக் கொண்டு, தான் வாழும் நாட்களை ஆக்கபூர்வமாக ஆக்கிக்கொள்கிறாள். வயதான காலத்திலும் தன் வாழ்க்கையைத் தானே எதிர்கொள்ளும் மனப்பக்குவம் பெற்று வாழ்கின்ற பெண்ணாக தவ்வை படைக்கப் பட்டிருப்பது ஒரு புதிய வழித்தடத்தைப் பெண் சமூகத்திற்கு அமைத்துக் கொடுக்கின்றது. அத்துடன், குடும்பத்தினரால் பாதிக்கப்பட்ட பெண்ணினத்திற்கு ஒரு புதிய நம்பிக்கையைத் தருவதாகவும் அமைந்துள்ளது.


தவ்வை - மனைவி, தாய் என்ற பிம்பத்தைத் தாண்டி, தான் தனிப்பட்டவள் என்ற பிம்பத்தை உருவாக்கிக் கொண்டுள்ளாள். இது படைப்பாசிரியரின் நுட்பமான வெற்றி எனலாம். பெண் ஆணுக்கானவள். அவனைச் சார்ந்து வாழவேண்டும் என்று விதிககப்பட்டவள் என்ற மரபார்ந்த பிம்பத்தைத் தகர்த்தெறிகின்றாள். நுகர்வு கலாச்சாரத்தைத் தகர்த்தெறிந்த பெண்ணாக தவ்வை காட்சியளிக்கின்றாள்‌. அத்துடன் காம இச்சைகளைத் துறந்த பெண்ணாக உருவாக்கபட்டிருக்கிறாள். தவ்வை தனித்துவம் மிக்கவள். வாழ்க்கைப் போராட்டத்தில் தன்னைக் கரைத்துக் கொண்டவள் அல்லள். அவள் அதிலிருந்து மீண்டு எழுந்து, தனக்கான வாழ்வை வாழ்பவள் என்ற புதிய பெண் பிம்பத்தைத் தன் கதாபாத்திரத்தில் வழி ஆசிரியர் படைத்துக்காட்டியுள்ளார்.


பெண்  மரபார்ந்த விழுமியங்களை மீறும்போது, தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறாள். அவளுக்கு தண்டனை அளிக்கும் அதிகாரம் ஆணுக்கானதாக இச்சமூகம் கற்பிக்கின்றது. பெண் தனக்கான குடும்ப எல்லையை /தாம்பத்திய எல்லையை மீறும்போது, அவள் உடல் ரீதியாகத் தண்டிக்கப்படுகின்றாள். அப்பொழுது அவள் வீட்டில் இருந்து விரட்டியடிக்கபடுகின்றாள். சில பல இடங்களில் கணவன் மனைவியைக் கொன்று அவள் தலையை வெட்டி எடுத்து வரும் சம்பவங்களும் நிறைவேறியுள்ளன. இதற்கெல்லாம் அப்பாற்பட்டு ஒரு பெண் வீட்டை விட்டு வெளியேறி தனித்துவமிக்கவளாக அதே கிராமத்தில் செல்வாக்கோடு, தன் புகுந்த வீட்டாருக்கும்  ஊருக்கும் நம்பிக்கை உடையவளாக வாழ்ந்து வருவது என்பது ஒரு புதிய பரிணாமமாக, பெண்ணினத்தின்  மீட்சிக்கான வழிமுறையாக இனம் காணமுடிகிறது.  


பெண்களின் அழுகையை இந்நாவல் முன் நிறுத்தவில்லை. பெண்களின் வலியை உணர்த்தினாலும், அவ்வலியைத் தன் அனுபவத்தால் தூக்கி எறிந்து, தனித்துத் தன்னை நிலைநாட்டிக் கொண்டு இச்சமூகத்தில் வாழ்ந்து மறைந்த ஒரு சில பெண்களின் குறியீடாக தவ்வை படைத்துக் காட்டப்பட்டுள்ளாள். ஆணாதிக்கச் சமூகத்தில் அப்படி தங்களை நிலைநிறுத்திக் கொண்டவர்கள் தான் கொற்றவை, செல்லியம்மன், காளி, மாரி, துர்க்கை, அங்காளி என்ற பெண் தெய்வங்கள் என்று நாவலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். "ராணியாய், ஜமீன்தாரினியாய், எஜமானியாய்- இந்தப் பெண்கள் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பின்னால் எத்தனை சிக்கல்கள் இருந்திருக்கும்" என்று அவர் குறிப்பிடுவது எத்தனை எதார்த்தமான உண்மை.


தவ்வை நாவல் பாத்திரப் படைப்பில் மட்டுமன்றி உத்திகளைக் கையாள்வதிலும் சிறந்து விளங்குகின்றது. இந்நாவலில் கதை நடந்த காலம் முன்னும் பின்னுமாகப் பேசப்படுகின்றது. அதனைப் பின்னொரு காலம், முன்னொரு காலம் என்று  குறிப்பிட்டுள்ளது வாசகர்கள் நோக்கில் அமைந்துள்ளது.


திருநெல்வேலி வட்டார வழக்கு கதை முழுவதும் பயணிக்கின்றது. இரட்டைக் கட்டு வீடு, கொல்லைப்புறம், படலை, இடுக்கு, பத்தாயம், கட்டாந்தரை, புட்டம், பின் கட்டு, பத்துத் தண்ணி, சுண்டக் கறி, கொசுவம், மாடக்குழி, விறகடுப்பு, பகழி, வாய்க்கால் என்று வட்டார சொற்கள்கள் நாவல் முழுதும் புழங்குகின்றன.


கதை நாயகி தவ்வை, பெண் நாட்டுப்புற தெய்வமான செல்லியம்மனைத் தன் தோழியாகப் பாவிக்கிறாள். சில நேரம் செல்லி அம்மனாகவே தன்னைப் பாவித்துக்கொள்கிறாள். 

'செல்லி தானே நம்ம கடவுள். அவதான காவல் தெய்வம்! நான் அழும் போதெல்லாம் என் கண்ணைத் துடச்சு விடுவா....!.  நான் சிரிக்கும்போது அவளும் சிரிப்பாள்...!'என்ற தவ்வையின் வாக்கு இதனை உறுதி செய்கின்றது.


குடும்ப அமைப்பில், பெண்கள் தங்களை இப்படி தெய்வமாகப் பாவித்து கொள்வது ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் நடந்தேறியுள்ளது.

'ஒவ்வொரு பெண்ணும் இளையவர்களின் தவ்வைதான். கட்டுக்கோப்பான குடும்ப அமைப்பை யாருக்காகவோ எதற்காகவோ காப்பாற்றிக் கொண்டே தீப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்' என்ற நாவலாசிரியரின் கூற்று இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.


மொத்தத்தில், எழுத்தாளர் அகிலாவின் தவ்வை நாவல் தமிழ் இலக்கியத்திற்கு புதிய வரவு மட்டுமல்ல ; புதுமையான வரவும் கூட; மரபார்ந்த பெண் பிம்பத்தை மாற்றியமைக்கும் முயற்சியே தவ்வை. அடிமை வாழ்வு வாழும் பெண்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக இந்நாவல் அமையும் என்பது உறுதி.