Skip to main content

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature

(நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில் 
நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை)



அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும்

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள்

ஆய்வுரை: து அகிலா 
எழுத்தாளர், மனநல ஆலோசகர்
கோயம்புத்தூர்


சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும்

காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.  

சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புநிலை மக்களின் பாடுகளை முன்னிலைப்படுத்தும் பின்நவீனத்துவம் என பல்வேறு வகைப்பாடுகளாக இயங்கி வருகின்றன. இந்த ஆய்வுரை, சிறுகதை இலக்கியத்தில் இயங்கிவரும் பெண் கருத்தியல்கள் குறித்து முன்னிலைப்படுத்துகிறது.  

பெண்ணியக் கோட்பாடு என்பது ஆண் பெண் பாலின சமத்துவமின்மையின் தன்மையைப் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பெண்ணியக் கோட்பாடுகளானது, மானுடவியல், சமூகவியல், அரசியல், தத்துவம், இலக்கியம், கல்வி, உளவியல் பகுப்பாய்வு, குடும்ப அமைப்பு, வீட்டுப்பொருளாதாரம், இணையம், தகவல் தொடர்பு, ஊடகங்கள் போன்ற பல்வேறு பகுப்பு தளங்களில் இயங்குகின்றன. 

இலக்கியத்துக்குள், அதிலும் குறிப்பாக சிறுகதை இலக்கியத்துக்குள், இக்கோட்பாடுகள் எவ்வாறு முன்மொழியப்பட்டுள்ளன, அவை இலக்கியத்தில் இருந்து பொதுசமூகத்துள் ஏற்படுத்தும் தாக்கம் என்ன, அதனால் பெண் படைப்புகளில் தொடர்ந்து நேரும் மாற்றங்கள் என்னென்ன என்று பார்க்கலாம். 

சிறுகதை இலக்கியத்துள் பெண் கருத்தியல்கள்

அண்மை இலக்கியங்களில், பெண்ணின் உடல் உழைப்பு சுரண்டலை சுட்டும் கதைகள், பாலியல் ரீதியாக பெண்ணுடல் சுரண்டப்படுவதை எழுத்தாக்கிய கதைகள், பெண்ணுக்கான சமூக பொது கட்டமைப்புக்களை மறுக்கும் அல்லது உடைக்கும் வகையிலான சிறுகதைகள், பெண்ணின் கருத்துச் சுதந்திரத்தை வலியுறுத்தும் கதைகள் போன்றவை வெளிவருவதைக் காணலாம். 
   
பெண் என்னும் சொல்லுக்கு, சமூகத்தின் பயன்பாட்டில், கலாசாரம் பண்பாடு சார்ந்த ஒரு வடிவம் உண்டு. பெண் என்பவள் அன்பில் மிகுந்தவளாகவும், இரக்கக்குணம் கொண்டவளாகவும், பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் வாய்க்கப்பெற்றவளாகவும், தாய்மை உணர்வு மிகுந்தவளாகவும், பக்தி மிக்கவளாகவும், வேலைக்கு சென்றாலும் கணவன் மற்றும் கணவன் வீட்டாரிடம் மரியாதையாக பணிவுடன் நடப்பவளாகவும், குழந்தைகளை பராமரிப்பவளாகவும், உடல் வேட்கை அற்றவளாகவும், பிற ஆண்களுடன் பழகாதவளாகவும் இருக்கவேண்டும் என்பதே அது.  

கடவுள் பக்தி மிகுந்து இருத்தல், கோவிலுக்குத் தவறாமல் செல்வது, விரதம் இருப்பது, பண்டிகைகளைத் தவறாமல் கொண்டாடுவது, அன்றைய தினத்தில் வீட்டைச் சுத்தமாக்குவது, பலகாரங்கள், பட்சணங்கள் செய்வது, உறவுகளை நட்புகளை அழைத்து விருந்து உபச்சாரம் செய்வது போன்றவை கூடுதல் சமூக அடையாளங்கள்.   


சிறுகதைகள்: 

1. ஐ கிருத்திகாவின் ‘இடைவேளை’ சிறுகதை: பெண்ணின் உடல் உழைப்பு சுரண்டல்

தன் பெண்களில் இரண்டாமாவளின் திருமணத்தை நடத்தும் தாயின் கதை இது. கல்யாண வேலைகள், மருதாணி, ஜடை பின்னுதல், மறுவீட்டு பலகாரங்களுக்கான ஆயத்தங்கள், பிளவுஸ் தைக்கிற முனைப்புகள், வேலைகள் எதிலும் பங்கெடுத்துக் கொள்ளாமல் அதற்கான செலவுகளுக்காக கோபப்படும் ஓய்வு பெற்ற கணவன், பட்சணங்கள் செய்துக்கொடுத்து சேமித்த காசு திருமணத்திற்காக செலவு செய்தல், திருமணம் செய்வித்த மூத்த மகள், மருமகன், குழந்தையுடன் வருகை, மருமகனைக் கவனித்துக்கொண்டேயிருக்க வேண்டுமென நினைக்கும் மகள் மற்றும் சம்பந்தி வீட்டார் என்று குடும்ப வேலையின் சிரமங்களை சொல்லும் கதை, அவள் தூங்காமல் கழிக்கும் நிலையை வலுவாய் எடுத்துரைக்கிறது. இறுதியில் திருமணத்திற்கு புறப்பட்டுச் செல்லும் அதிகாலை வேளையில் அந்த வேனில் தூங்கும் அவளின் காலநேரம் மட்டுமே அவளுக்கான வேலைகள் ஏதுமற்ற இடைவேளை என்பதாக முடிகிறது கதை. 

“அம்மா வேனில் ஏறிக்கொண்டாள். இருக்கைகள் நிரம்பியிருந்தன. கடைசி இருக்கையில் ஆளில்லை. கடைசி சீட்டுக்கு வந்தவள் முருகா என்று அமர்ந்தாள். மூட்டுவலி மூச்சு விடுவது போல சீரான இடைவெளியில் வலித்துக் கொண்டிருந்தது. இரண்டு கார்களும் கிளம்ப பின்னாலேயே வேனும் ஒரு குலுங்களோடு கிளம்பியது. ஜன்னல் வழியே வெயில் படாத காற்று குளிர்ந்து வீசியது. அம்மாவுக்குக் கண்கள் சொருகிக் கொண்டன. கல்யாணம் நிச்சயமானதிலிருந்தே அவளுக்கு சரியான தூக்கமில்லை. கல்யாணத்திற்காக கொஞ்சம் கடன் வாங்க வேண்டியிருந்தது. அத்தோடு விசேஷம் நன்றாக நடந்து முடிய வேண்டுமே என்கிற கவலை வேறு. அடிக்கடி விழிப்பு தட்டிற்று. அதனால் அடித்துப்போட்டது போன்ற உறக்கங்கள் அவளுக்கு வாய்க்கவில்லை. நன்றாக தூங்கிய உணர்வின்றி அவள் அலமலந்து போனாள். 
தூளியாட்டம் போல வேன் அசைந்து விரைய, அம்மாவுக்குக் கண்கள் சொக்கிக் கொண்டன. உள் திறப்புகள் அனைத்தும் தாழிட்டுக் கொள்ள, சிறு குழந்தையின் புன்னகை தேசத்துக்குள் புகுந்துவிட்டவள் வாய்பிளந்து, தலைசாய்த்து உறங்கினாள்.”
என்று ஆசிரியர் கதையை முடித்திருப்பார். 

பெண்களின் உடலானது ருதுவானது முதல், கருத்தரிப்பு, குழந்தை பேறு, கருக்கலைப்பு, குடும்ப கட்டுப்பாடு, கர்ப்பக்கால பிரச்சனைகள், மாதவிடாய் நிற்றல் காலம் என தொடர் உடல் உபாதைகளால் அவதிப்பட்டுக்கொண்டே இருப்பதை நமக்குத் தெரியும். இதனிடையில், குடும்பத்துக்கான குழந்தைகளுக்கான, அவள் பார்க்கும் பணியின் நிமித்தம் ஏற்படும் அலைச்சல் உட்பட அதீத உடல் உழைப்பு அவளை இன்னமும் சிரமப்படுத்துவதை ஏராளமான கதைகள் பேசுகின்றன.    
பெண்ணின் உடல் உழைப்புதான் குடும்பத்தின் மூலதனம். பெரும்பாலான நடுத்தர வர்க்கத்து குடும்பங்களில் பொருளாதாரத்தை ஈட்டுபவனாக ஆண் இருப்பதும், பெண்கள்தான் வீட்டை, குழந்தைகளை, வயதானவர்களைக் கவனித்துக் கொள்பவர்களாக இருப்பதும் தெரிந்ததே. உழைத்து தளர்ந்துப்போன அம்மாக்களையும் ஆச்சிமார்களையும் அநேக வீடுகளில் நாம் பார்க்கலாம். 

இன்றுவரை, இப்படியாக குடும்பம் குடும்பம் என்று கட்டிக்காத்து ஓடாய் போகும் பெண்களுக்கு என்று எந்த ஊதியமும் இல்லை என்பதே நிதர்சனம். உடல் உபாதைகளுக்கு நடுவில் பெண்ணின் தினசரி பாட்டுக்கான உழைப்பும் சேர்ந்துக்கொள்ளும் போது, அதை எளிதாய் ‘அவ வேலைக்குப் போகல, சும்மா வீட்டில் உட்கார்ந்து பட்சணம் சுட்டுக்கொடுத்திட்டு இருக்கா..’ என்று சொல்லி கடக்கும் நம் வீட்டு ஆண்களை இக்கதையிலும் காண்கிறோம். ஆனால் எப்போதும் இயங்கும் இந்த வீடுதான் ஆணுக்கும் அவனின் கடைசி காலத்தில் அடைக்கலம் தருகிறது என்பதை மறந்துவிடுகிறான். யாரும் துணையில்லாமலும் பெண்களால் அனுசரித்துக்கொண்டு அதிக வருடம் வாழ்வதும் இந்த கட்டமைப்பினால்தான் முடிகிறது.  


2. கலைச்செல்வியின் ‘அம்சம் பாட்டி’ சிறுகதை: 

பாட்டிக்கு தொண்ணூறு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும். தனியாக உதவிக்கு ஒரு பெண் அமர்த்தப்பட்டு வாழ்ந்துவருவாள். அவளின் மகளின் கணவன் இறந்திருப்பார். அவளை அழைத்துச்செல்ல வண்டி வரும்போது, நான் போகமாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பாள். மறுநாள் தூக்குவதற்குள் அவளை அழைத்து வரச்சொல்லிவிட்டுச் செல்வார்கள். உதவிக்கான பெண் எவ்வளவு சொல்லுவாள். பாட்டி மருமகனைப் பற்றி உயர்த்தியே பேசினாலும், நான் வரமாட்டேன் என்றே சொல்லும். இரவில் தானாக உடைந்து அழும் அவள், ‘சாவு வீட்டுல எல்லோரும் என்னைப் பார்த்து இவ இன்னும் உயிரோடு இருக்காளே, அவ மருமகன் செத்துப்போயிட்டாரேன்னு சொல்லுவாங்க’ என்று சொல்வது அந்த பெண்ணுக்குக் கேட்கும். இதே கதையை வாஸந்தி ‘பயணம்’ என்னும் சிறுகதையில் வயதானவளின் இறப்பு (சூடு சாதத்தை அவதிஅவதியாகத் தின்று இறந்துபோவாள்) வரை கொண்டு சென்றிருப்பார். 


3. ராம்தங்கம் அவர்களின் ‘ஊழிற்பெருவலி’ சிறுகதை: பெண்ணுடல் சுரண்டல் 

சேலை விலகி அலங்கோலமாக கிடக்கும் பெண் ஒருத்தியை பேருந்து நிலையத்தில் சந்திக்க நேரும் ஒருவன், அவள் விபச்சாரம் செய்பவள் எனப் புரிந்துக் கொண்டுவிடுகிறான். அவள் ஏன் இத்தனை சுத்தமற்று இருக்கிறாள் என்று யோசிக்கிறான். அவளின் ஜாக்கெட் விலகி மார்பகங்கள் எல்லாம் வெளியில் தெரியும் நிலையில், சைக்கிளில் வரும் ஒரு பையன் அந்தக் ஊக்குகளை மாட்டி விட்டு சேலையை ஒழுங்குபடுத்தி செல்கிறான். அவன் என் மகன் என்கிறாள். அங்கே அவள் தன் கதையை சொல்லத்தொடங்குகிறாள். ஒருவனை நம்பி வந்து ஏமாந்து பலரிடம் தன் அழகு காரணமாக பொலிவிழந்து போனதையும், இருந்தும் தான் அழகு என்ற கர்வத்துடன் தொழில் செய்து வந்ததையும் கூறுகிறாள். ஒருமுறை இவளின் வளரிளம் பருவத்திலுள்ள சித்தி மகள், இவளைத் தேடி வந்து வீட்டில் தங்கியிருந்தவளை, இவளின் வீட்டுக்கு வாடிக்கையாக வரும் போலீஸ்காரர்கள் கெடுத்ததில் இறந்துவிடுகிறாள். அதிலிருந்து தன் அழகின் மீதும் தான் செய்யும் தொழிலின் மீதுமான வெறுப்பே தன்னை இத்தனை சுத்தமற்றதாக இருக்கச்சொல்கிறது என்கிறாள். முகம் சுளிக்கும் அளவுக்கு இருந்தாலாவது பெண்ணுடம்பு மீதான பிடிப்பு, பார்க்கும் ஆண்களுக்குப் போகுமென நினைத்ததையும், ஆனால் அவளைப் பார்க்கும் ஆண்கள் எல்லோரும் அதை பொய்யென மாற்றிச் செல்கிறார்கள் என்று வேதனையுடன் சிரித்து, அங்கிருக்கும் பேருந்து நிலைய தூணில் சாய்ந்து, சரிந்து இறந்துபோவதாக கதை முடிகிறது.  

பெண்ணுடலின் மீதான ஆண் இனத்தின் விருப்பு இயற்கையான ஒன்றுதான் எனினும், அவ்வுடம்பின் உயிர்வாதைகளையும் ஆணினம் கருத்தில் கொள்ளாதிருப்பதே இக்கதை நமக்குச் சொல்லும் ஒன்று.   

“Our bodies are not for sale or rent.”

~ என்கிறார் பத்திரிகையாளர், சமூக செயற்பாட்டாளர் ருசிரா குப்தா.. 
ருசிரா குப்தா கடந்த 12 ஆண்டுகளில் இந்தியாவின் சிவப்பு விளக்குப் பகுதிகள் மற்றும் குடிசைப் பகுதிகளில் இருந்து 20,000 க்கும் மேற்பட்ட பெண்கள், பெண்பிள்ளைகள் பாலியல் கடத்தலிலிருந்து காப்பாற்றியுள்ளார். 

பல படைப்பாளிகள் பெண்ணுடலின் மீதான ஆண் அடக்குமுறையை, சுரண்டலை கதைகளாகப் படைத்திருக்கிறார்கள். கமலா தாஸின், ‘குட்டி வேசிக்கு ஒரு பொம்மை’, அம்ரிதா ப்ரீத்தம் அவர்களின் ‘ஷாவின் வேசி’ போன்ற கதைகள் நாம் கண்முன் வருகின்றன. 


4. மலர்வதி அவர்களின் ‘ஒரே ஒருக்கா கேசு கொடுக்கணும்’ சிறுகதை: 

தினமும் குடித்துவிட்டு வந்து ரீனாவை போட்டு அடிக்கும் தாசுவுக்குப் பாடம் கற்றுக்கொடுக்க நினைக்கும் ரீனா அவளின் சித்தி ‘ஒரு தடவ போலீஸ்ல கேஸ் குடுத்துரலாம்’ என்று சொல்லும் யோசனையைக் கேட்கிறாள். கேஸ் கொடுத்துவிடுகிறாள் ரீனா. அன்றே அவனைப் பிடித்துக்கொண்டு போய் ஸ்டேஷனில் வைக்கிறார்கள். அவன் ‘இனிமேல் அடிக்கவே மாட்டேன் பொண்டாட்டியை’ என்று சொல்லிக் கதறுகிறான். அங்கிருந்து தப்பித்து ஓடிவிடுகிறான். போலீஸ் அவனைத் தேடுகிறது. 

இந்த கதையில், ‘ஒரே ஒருக்கா கேஸ் குடுக்கணும்’ என்று ரீனா நினைப்பதன் காரணம், ஒரு முறை போலீஸில் பிடிபட்டு விட்டால், அதன் பிறகு பயந்து, திருந்தி தன்னை அடிக்காமல் இருப்பான் என்று நினைக்கிறாள். ஆனால் அவன் ஓடிப்போனதால் ஊரில் இருப்பவர்கள் எல்லாம் ரீனாவைப் பிடித்து திட்டுகிறார்கள். அவளின் மாமியார், நாத்தனார், உறவுக்காரர்கள் என்று எல்லோரும் அவளைக் கடும்கோபத்துடன் வைகிறார்கள். ‘குடிச்சுட்டு வந்து அடிக்கான்.. அவ்வளவுதான மக்கா.. இதுக்கா கேசு எல்லாம்?’ என்று சொல்கிறார்கள். இப்போது அவளுக்குள் ஒரு பயம் உண்டாகிறது, ‘நாம தெரியாம கேஸ் குடுத்துட்டுமோ.. இது அத்தனை பெரிய விஷயமில்லயோ?’ என்று. வக்கீல் வந்து தன் பங்குக்கு, அவளைப் பயம் காட்டிவிட்டுச் செல்கிறார். ‘போலீசில் இன்னும் நாலைந்து தீராத கேஸ்களை எல்லாம் இவன் மேல் போட்டு இருக்கிறார்கள்’ என்று. எல்லோரும் சேர்ந்து அவளை பயமுறுத்த, அவள் மிகவும் பயந்து அவன் வந்தால் போதுமே என்று வேண்டிக்கொண்டிருக்கிறாள். 

இந்த கதை பெண்ணின் மீது சமூகம் தொடுக்கும் மறைமுகமான ஒரு போரைச் சுடுகிறது. பெண்ணை மன உறுத்தலுக்குள் (guiltiness), மன உலைச்சலுக்குள் தள்ளும் ஒரு உத்தியாகும். சமூகத்தில் இருக்கும் மற்ற பெண்களைப் போல நீயும் அடி உதை வாங்கிக்கொண்டு பேசாமல் இருக்கவேண்டியது தானே என்று சொல்லும் தீர்மானம். அவள் என்றுமே ஆணுக்குக் கட்டுப்பட்டு இருந்தாகவேண்டும் என்ற நிபந்தனையை மீண்டும் மீண்டுமாய் பெண் மீது சுமத்தும் அபாயம்.  


5. கார்த்திக் புகழேந்தியின் கொடிக்கால் சிறுகதை: குலப்பெருமை காத்தல் 

கொடிகால் பரம்பரையில், காலம்காலமாக அவர்களுக்குள்ளேயே திருமணம் செய்துகொண்டு அந்த பரம்பரையை காப்பாற்றி வரும் ஒரு குடும்பம் தான் ஆவுடையாபுரம் பெரிய வீட்டில் இருப்பது. அதிலிருக்கும் இளைய மகன், அவர்களுக்குக் கீழான சாதிப்பெண்ணான செல்லியை விரும்புவது தெரிந்ததும், குடும்பமே கொந்தளிக்கிறது. மூத்த மருமகள் தனக்கு நிகராக கீழ்சாதி மருமகளா என்று கோபமடைந்து, அந்த காதலை முடிப்பதற்காக அந்த பெண் செல்லியை கொலை செய்துவிடுகிறார்கள். அவள் இறந்த பிறகுதான் ஊருக்கே தெரிகிறது அவள் பிள்ளையுண்டாகி இருப்பது. அவள் இறந்து போனது தெரிந்ததும் கொடிக்கால் குடும்பத்து இளையவனும் இறந்து போகிறான். கொடிக்கால் பரம்பரையில் இது பெரிய தோஷமாக கருதப்படுகிறது. மூத்தவனுக்கு ஏழு பெண் குழந்தைகளும் அதன் பிறகு ஒரு மகனும் இருக்கிறார்கள். அந்த மகனின் மீது, இறந்து போன இளையவனின் ஆவி, தேகமேறி விடுகிறது. மூத்த மருமகள், மகன் ரெங்கதாசனுக்காக பேய் ஒட்ட மறவன்மடம் கரும சண்டாளன் காளமுத்து தேவரிடம் குறிகேட்டு, பேறுகால குடிசை ஒன்றை தங்கள் தோட்டத்திலேயே கட்டி அதன் முன் பேறுகாலச் சாமான், மருந்துப் படையல் வைத்து, ‘புள்ள பொறந்திருக்கு’ என்று சொல்லி தன்னுடைய மகன் ரெங்கதாசனை நார்பெட்டியில் வைத்து, செம்மண்ணில் மஞ்சள் பூசி, வாய், மூக்கு, கண்ணு என வனாந்திரமாக வைக்கப்பட்ட செல்லி உருவத்தின் முன்னாக போடுவதுடன் கதை முடிகிறது.     

சாதி, குலம் மற்றும் சாமி நம்பிக்கைகளைப் பேணிக்காப்பதும் பெண்ணே, குலம் தழைக்க அவை மீறப்பட்டுவிடாமல் இருக்க கொலையைச் செய்வதும் பெண்ணே என்பதும் இக்கதை காட்டுகிறது. 

பிறந்த பெண்சிசுக்களின் இறப்பு என்பது கள்ளிப்பால் கொடுத்ததாக அங்கிருக்கும் வயதான பெண்களின் மீது பழிச்சுமத்தப்படுவதும் நாம் அறிந்ததே. இதன் பின் நிலவும் முக்கியமான ஒன்று என்னவென்றால், ஆணாதிக்க சமூக கட்டமைப்புதான். குடும்பம் என்பதை ஆண் சொல்லும்படியாகதான் நடத்த விரும்புகிறாள் அக்குடும்பத்து மூத்த பெண்கள். அவர்கள் போக்கிலேயே மற்ற பெண்களும் செயல்படுகிறார்கள். அப்போதுதான் சமூகக்கட்டுக்குள் அந்த குடும்பம் நிலைநிற்கமுடியும் என்பதை ஆண் உறுதியாக அவளுள் ஏற்றிவிடுகிறான் என்பதே நிதர்சனம். 
 

6. லாவண்யா சுந்தரராஜனின் அப்பா சிறுகதை: பெண் பிள்ளைகள் 

பெண் பிள்ளை பிறந்தால் அப்பாக்கள் தலையில் வைத்துக் கொண்டாடுவார்கள் என்னும் போலித்தனமான கருத்தை லாவண்யா இக்கதையில் போட்டுடைக்கிறார்.

 ஒரு பெண்பிள்ளை என்றால் சரி, ‘என் அம்மா பிறந்திருக்கிறாள்’ என்று ஆனந்த யாழை மீட்டும் தகப்பன்களைப் பார்த்திருக்கிறோம். இரண்டாவதும் பெண்பிள்ளை? சரி, பரவாயில்லை.. என்று பேசாமல் இருப்பதுண்டு. மூன்றாவதும் பெண்பிள்ளை? சரியே இல்லை.. மூன்றாவது என்று வரும்போதே, அது நிச்சயமாக ஆண் குழந்தைக்கான எதிர்ப்பார்ப்புதான் என்பது நமது இந்தியா குடும்பங்களில் நிகழும் நிதர்சனம். 

லாவண்யா இந்த கதையில், மூன்றாவதாக பிறந்த பெண் பிள்ளையின் மீது காட்டும் வாஞ்சையற்ற நெருக்கம், மூத்தவளிடம் மட்டும் அப்பா பேசுவது, அப்பாவுக்கும் மூன்றாவது குழந்தைக்கும் இடையே இருக்கும் உரசல்கள், நாயைக் கண்டு பயந்து அப்பாவின் கையைப் பற்றும் அக்குழந்தையின் கையை வேண்டா வெறுப்பாக பற்றிக்கொண்டு, பின் உதறுவது என்று சின்ன சின்ன விஷயங்களைக் கோர்வையாக எழுதுகிறார் லாவண்யா. திருமணமாகி சென்றுவிட்ட அவளுக்கு, அப்பாவின் இறப்பு ஒன்றும் பெரிதாக படவில்லை. 

“நீளமான பொட்டலம்மாக சுத்தி தான் உங்களை வீட்டுக்கு கொண்டு வந்தாங்க. அம்மாவும் அக்காவும் முகத்த பாக்கணும்னு பிடிவாதமா சொன்னாங்க. அதுக்காக மெதுவா பிரிக்கும் போது உங்க பத்தி போன முகம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே தெரிந்தது. கோணலா இருந்த உதடு ஏதோ சொல்ல வருவது போல இருந்தது. இவ்வளவு நாள் இல்லாம இப்போ உயிர் போன அப்புறமா என்கிட்ட ஏதா வது பேசப் போறீங்களா என்ன. இப்படி வெறும் உடம்பா கிடக்கும் போது கொஞ்சம் அழற அளவுக்காவது நீங்க எனக்கு அப்பாவா இருந்துருக்கலாம். போங்கப்பா எனக்கு உங்கள இப்பவும் பிடிக்கல..”   
என்று கதை முடிகிறது. 

ஆண் என்பவன் மட்டுமே குடும்பத்தின் முழுமையான வாரிசாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் சமூகம் இது. மூன்று ஆண் பிள்ளைகளைப் பெற்ற தகப்பன் ஒருநாளும் மூன்றாவது ஆண்பிள்ளையை தேவையற்றவனாக நினைத்து வருத்தப்பட மாட்டான்.  


7. அகிலாவின் ‘பிடிமானக்கயிறு’ சிறுகதை : பெண்ணுக்கான கயிறு 

பெண்ணுக்கும் அப்பாவுக்குமிடையே அவளின் காதலைக் குறித்து நடக்கும் உரையாடலில், பல நாள் போராட்டத்தில், அவளின் அம்மா வெறும் மௌனச்சாட்சியாக இருக்கிறாள். அந்த தகப்பன் மகளை அடிக்கும்போது பெரிதாய் தடுக்க முனையாமல் அம்மா இருந்தது அவளுக்குள் எரிச்சலை உண்டுசெய்கிறது. மகள் தனது காதல் வெற்றி பெற சாப்பிடாமல் இருந்து போராடுகிறாள். ஆனால் சாதி வழக்கத்தில் தீவிரமாக இருக்கும் அவள் அப்பா அவளின் படிப்பை நிறுத்த முடிவெடுக்கிறார். இவள் வேறு வழியில்லாமல் காதலைத் தியாகம் செய்யத் துணிகிறாள். மீண்டும் கல்லூரிக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறாள். ஹாஸ்டலுக்குக் கிளம்பும்முன் தாயிடம் கேள்வி வைக்கிறாள், ‘ஏன் அவள் தனக்கும் பேசாமல், தன் கணவருக்காகவும் பேசாமல் மௌனமாக இருந்தாள்’ என்று. 

அவள் தாய் அதற்கு,
“நா இந்த வீட்டுக்கு வந்தப்போ எனக்கு வயசு பதினாறு. அதுவரைக்கும் பள்ளிக்கூடம் போனமா வந்தமான்னு இல்லாம, டான்ஸ் கத்துக்கிட்டேன், பாட்டும்தான். நல்லா ஆடுவேன். ஆனா ஒங்கப்பா இதுக்கு மேல டான்ஸ் வேண்டாம்னு சொல்லிட்டார். நானும் சரின்னு இருந்துட்டேன். எனக்கு இப்போவும் ஆடணும்னு தோணினா நீங்க யாரும் இல்லாதப்போ ஆடிக்கிறேன். உங்க முன்னாடி கூட ஆடமுடியும்..” கண்களை அகல விரித்தாள் தனா.  
“ஆமா.. அந்த சுதந்திரம் எனக்கு ஒங்கப்பா குடுத்திருக்கார். ஆனா அத தாண்டி மேடையில ஆட எனக்கு சுதந்திரம் கிடையாது. எனக்காக ஒங்கப்பா கொடுத்த பிடிமான கயிறு அதுவரைக்கும்தான் போகும். உங்கண்ணனுக்கும் உனக்கும் ஒவ்வொரு பிடிமான கயிறு வச்சிருக்கார். என்ன, அந்த கயிறுகளின் நீளம் என்னுதை விட அதிகம். இப்போ நீ அந்த கயிற்றின் கடைசிக்கு வந்துட்டே. இனி இழுத்தாலும் நீ ஒரு இஞ்ச் கூட மேல போகமுடியாது.”  
அம்மாவை புதிதாய் பார்த்தாள் தனா. என்னவெல்லாமோ சொல்றாளே.. சாப்பிட்ட தட்டுகளை உள்ளே போட்டுவிட்டு வந்த கண்ணம்மா தொடர்ந்தாள், “இது மாதிரி உங்கண்ணனும் அவன் குடும்பத்துக்குன்னு ஒரு கயிறு தயார் பண்ணிகிட்டான். நீ காதலிக்கிறதா சொன்னீயே, அவனும் கூட இந்த மாதிரி ஒரு கயிறு உனக்காக வச்சிருப்பான். நீ அந்த எல்லைக்குள்ள நின்னா ஓகே. இல்லேன்னா எதித்து எதித்து நின்னு சலிச்சு போகும். நீ படிச்சு முடிச்சு வேலக்கு போயி ஒங்க அப்பாவ சம்மதிக்க வச்சு அந்த பையனையே கூட கல்யாணம் பண்ணிக்கலாம். ஆனா எது முக்கியமின்னு நீ தெரிஞ்சுக்கணும். அந்த பிடிமான கயிறுதான் இங்க முக்கியமே தவிர, இவன கட்டுறதா, அவன கட்டுறதா என்பது முக்கியமில்ல. எனக்கு அது புரியும். ஒனக்கும் ஒருநாள் இது புரியும்.” என்றபடி தனாவின் பார்வையிலிருந்து நகர்ந்தாள் அம்மா.        
என்றவாறு கதை முடிந்திருக்கும். 

காலம்காலமாக பெண்களின் பிடிமானக்கயிற்றை ஆண்கள் கைகளில் தானே இன்னும் விட்டு வைத்திருக்கிறோம். பெண் மூப்பு எடுத்தால் அழிவு என்றுதானே சொல்லப்பட்டு வந்தது. இன்றைய சமூக நிலையில் மாற்றம் ஏற்பட்டு இருப்பினும், இன்னும் சில காத தூரம் நாம் பயணிக்கதான் வேண்டியுள்ளது.   


8. லஷ்மி சரவணகுமாரின் ‘த்தூ’ சிறுகதை: தாய்மை என்னும் பிம்பம்
 
தாய்மை என்பது பெண் தனது உடல் சார்ந்த சுகங்களை விட்டுவிடுத்து கடைசி வரை அந்த குழந்தைகளுக்காக வாழ்தல். ‘அம்பது வயசாச்சு.. இன்னும் என்ன அலங்காரம்?’ ‘பேரப்பிள்ளைகளை பாக்குற வயசுல என்ன சினிமா கினிமா எல்லாம்’ என்று தன் மனைவியிடம் கேட்ட கணவன்மார்கள் உண்டு.   

இக்கதையில், அப்பா என்னும் கதாபாத்திரம் இறந்த பின்பு, இவனின் அம்மாவுக்கும் பெரியப்பா முறையிலான ஒருவருக்குமான உறவில், அம்மா கருவுற்று கலைத்து விட்டு வருகிறாள். அதைத் தெரிந்துக்கொண்டு வரும் அப்பனைப் பெற்ற அப்பத்தா, சண்டையிழுக்கும் போது, அப்பத்தாவின் ஒழுக்கத்தைக் குறித்து கேள்வி வைக்கிறாள் இவனின் அம்மா.

இன்னொருவருடன் உறவு கொண்டுதான் அப்பத்தா தன் மகனைக் கருவுண்டதாகச் சொல்கிறாள் அம்மா. கோபித்துக்கொண்டு செல்லும் அப்பாத்தா சிறிது காலத்தில் இறக்கிறாள். இறப்புக்கு வரும் இருவரும் கேவலப்படுத்தப்படுகிறார்கள் ஊராரால். அவன் அம்மா காணாமல் போகிறாள். இவன் சொந்தக்காரகளின் உதவியால் படித்து வேலை, திருமணம் என்று முடித்து பழனி கோவிலுக்கு வருகிறான் ஒருமுறை. அம்மாவை கோவிலின் முன்னிருக்கும் பிச்சைக்காரர்கள் கூட்டத்தில் பார்க்கிறான். பத்து ரூபாயைப் போட்டுவிட்டு கூட்டத்தோடு கூட்டமாக நகர்ந்துவிடுகிறான். அவனுள் அவனுக்கு சோரூட்டும் அவளின் முகம் வந்து செல்கிறது.  

அம்மா என்பதும் அப்பத்தா என்பதும் பெண்களுக்கான மிக உயரிய ஸ்தானமாக காலம்காலமாக பிள்ளைகளின் மனதில் வளர்க்கப்பட்ட கட்டமைப்பு உடையும் கதை இது. குடும்பத்தின் ஒழுக்கம் என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவில் ஆனது. பெண் தவறு செய்யும்போது தண்டனை கடுமையாகவும் ஆண் செய்தால் அது ஒரு சாதாரண ஒழுக்கமீறல் என்பதாக முடிந்துவிடுவதையும் கதை முன்னிறுத்துகிறது. இக்கதையில் தாய்மை கொண்ட பிம்பங்கள் வெகு எளிதாக உரையாடல்களின் மூலமே உடைக்கப்பட்டு வெளிபடுவது புரிகிறது. அதுவும் படைப்பாளி ஓர் ஆண் என்பதே இதில் கவனத்துக்குரியது. அம்மா, அப்பத்தா போன்றவர்களும் பெண்தான் என்பதை சுட்டும் ஒன்றாகவும் இக்கதையைக் கொள்ளலாம். 


9. எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் ‘பெரிய வார்த்தை’ சிறுகதை: பெண்ணின் ஒழுக்கம் 

அந்த பெரிய குடும்பத்தில், வயதானவர் நோய்வாய்ப்பட்டு இருக்க, சொத்து பிரிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவரின் மகன்களில் ஒருவன் படிக்காதவனாக லாரி ஓட்டுனராக இருந்து, ஒரு பெண்ணை மணந்து கொண்டு, அவளுக்கு ஒரு குழந்தையையும் கொடுத்துவிட்டு இறந்து போகிறான். அந்த பெண் தன் மகனுடன் சொத்துக்காக இந்த பெரிய வீட்டுக்கு வந்து நிற்கிறாள். குடும்பத்துக்குள் பேச்சு நீளும்போது அந்த பெண் குறித்து அவமானகரமாக, ‘நீ இரண்டு ரூபாய்க்காக ரோட்டோரத்தில் உடம்பை விற்றவள்தானே? என் மகனை அப்படித்தானே வளைத்து போட்டாய்’ என்றும், ‘இந்த பையன் என் மகனின் பையன் தான் என்பதற்கு என்ன உறுதி? நீ இன்னும் அந்த தொழிலைதானே செய்து கொண்டிருக்கிறாய்’ என்பது போன்ற வார்த்தைகள் அவளை நிலைகுலைய செய்கின்றன. 

சண்டை ஏதும் செய்யாமல், அவள் அங்கிருந்து தன் மகனை கூட்டிக்கொண்டு வெளியேறிவிடுகிறாள். பேருந்தில் செல்லும்போது, அந்த வீட்டுக்குள் நுழையும் போது அவளிடம் இருந்த பவ்யத்தை உதறிவிட்டு, நிமிர்ந்து அமர்கிறாள். 

இந்த கதையில் எஸ்ரா அவர்கள் குறிப்பிட்டு சொல்லி இருப்பது போல பெண்ணுக்கான அவமானங்கள் எப்போதுமே அவர்களின் உடலை குறித்து அல்லது அவர்களின் ஒழுக்கத்தை குறித்து அமைவதை நாம் பல இடங்களில் பார்த்துவருகிறோம். இந்த கதையை அவர் முடித்திருக்கும் விதத்தை பார்க்கும் போது, அவள் இதை எதிர்பார்த்து வந்ததாக தன் மகனிடம் சொல்வதை நோக்கும்போது, யார் என்ன சொன்னாலும் பெண் அதுகுறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை என்பதை இன்றைய காலகட்ட பெண்ணுலகம் உணர்த்திக்கொண்டு போவதை காணலாம். 


10. அம்பை அவர்களின் ‘வில் முறியாத சுயம்வரங்கள்’ சிறுகதை: பெண்ணின் முடிவெடுக்கும் சுதந்திரம் 

கணவனை இழந்த ஐம்பத்தைந்து வயது பெண்மணி. தனியாக இருக்கிறாள். நண்பன் நந்து இரவு சமையலுக்கான மீனுடன் மாலையில் வருவதாகச் சொல்லியிருந்தான். பிள்ளையும் பெண்ணும் திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆகியிருக்கிறார்கள். மாலையில் அழைக்கிறார்கள். பேசிக் கொண்டிருக்கும் போது பையன் சொல்கிறான் நாங்கள் உங்களுக்காக ஒரு ஏற்பாடு செய்திருக்கிறோம். இங்கெல்லாம் அமெரிக்காவில் வயதானவர்கள் தாங்கள் விருப்பப்பட்டால் உடன் ஒரு வயதான துணையை தேடிக்கொள்ளலாம். அதற்கு முன் தங்களின் சொத்துக்களை தங்கள் சொந்தங்களுக்கு எழுதி வைத்து விடுகிறார்கள். அது போல நீங்களும் கூட யாரையாவது துணைக்கு ஏற்றுக்கொள்ளலாம். எங்களுக்கு அதில் எந்த விதமான ஆட்சேபமும் கிடையாது. இங்கே அதற்காகவே ‘சுயம்வர்’ என்னும் இணைய தளம் உள்ளது. அதில் பதிவு செய்து வைத்துக்கொண்டால் உங்களுக்கு ஏற்றவாறு யாரையாவது பார்த்து தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறான். 

இந்த பேச்சுக்கு இடையில் அம்மாவான சாந்தி சொல்கிறாள், ‘எனக்கு இங்க ஒரு நண்பன் இருக்கிறான். அவனையே நான் ஏற்றுக்கொள்கிறேன்.’ உடனே மகள் சொல்கிறாள், ‘ஏதாவது ஏமாற்றிவிடப் போகிறார்கள்’ என்ற சந்தேகத்தை கிளப்புகிறாள். எல்லாவற்றுக்கும் பதில் சொல்லிக் கொண்டு வந்த சாந்தி கடைசியில் மகனின் கேள்வியான, எங்களுக்கு பிடிக்க வேண்டாமா என்பதற்கு உங்களுக்கு ஏன் பிடிக்க வேண்டும் என்று கேட்கிறாள். 

உடனே அவன் இறங்கிவந்து அப்போது அங்கிருக்கும் சம்பந்தி வீட்டிலாவது அவரிடம் பேசி உங்களின் நண்பர் எப்படிப்பட்டவர் என்று கேட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்கிறான். அதற்கு பதிலாக சம்பந்தியை நான் ஏன் கேட்கணும் இது என்னுடைய முடிவு என்கிறாள். அவன் என்னுடன் கல்லூரியில் ஜூனியராக படித்தவன். அப்போதே என்னை மிகவும் விரும்பியவன். ஆனால் என்னைவிட வயது குறைந்தவன் என்பதால் விலகிவிட்டேன். அருண் உங்கப்பாவை காதலித்தேன். திருமணமும் செய்துக்கொண்டேன் என்று சொல்கிறாள். வேற எதுவும் பேசாமல் சரி என்று பிள்ளைகள் சொல்லிவிட்டு போனை வைத்து விடுகிறார்கள். 

மாலையில் வரும் நந்து மீனை வறுத்து சமையல் செய்து கொண்டிருக்கிறான். அவனுடன் அவனிடம் பிள்ளைகள் பேசியதை சொல்கிறாள் தன்னுடைய முடிவையும் சேர்த்தே சொல்கிறாள். 
“அவளையே பார்த்தான் சிறிது நேரம். சிரித்தான் மிகவும் நிறைவான குரலில், ‘மீனை திருப்பி போடணும்’ என்று விட்டு எழுந்து போனான்.” 
என்று கதையை அத்தனை மிருதுவான மொழிநடையில் முடிக்கிறார் அம்பை. 


11. பிரமீளா பிரதீபனின் உரப்புழுக்கள் சிறுகதை: பெண் முடிவெடுத்தல் 

பிரமீளா பிரதீபன் இலங்கை சிறுகதை எழுத்தாளர். இந்த கதை தேயிலை தோட்டங்கள் மற்றும் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களின் தினசரி வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டது. 

சுரேகா என்ற பெண் ஒரு தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்க்கிறாள். இவள் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் மானேஜரான அனுர மாத்தியாவின் ஆசைக்கு இணங்க மறுக்கிறாள். அவன் ஆசைக்கு இணங்கும் பெண்களை நாற்றமடிக்கும் புழுக்கள் நெளியும் உரக்கிடங்குகளில் வேலைக்குப் போடாமல், தோட்டத்தில் வேறு எதிலாவது வேலைக்கு அமர்த்துவான். 
‘உன்னை உரக்கிடங்கில் இருந்து வேறு பக்கம் வேலைக்கு மாற்றுகிறேன் நீ என்னுடன் சௌகரியமாக இருக்கலாம்’ என்று சொல்கிறான். அவள் அதற்கு ஒத்துக்கொள்ளாத போது, இதற்கு முன்பிருந்த கயான் மாத்தியாவுடன் இணைத்து அவளைப் பேசி இழிவுபடுத்துகிறான். அவளின் கணவனிடமும் இது குறித்து சொல்லியிருக்கிறான். வீட்டுக்கு போனதும் அவளுடைய கணவன் குடித்துவிட்டு வந்து இவளை அடித்து ‘என்ன பத்தினியாட்டம் வேஷம் போடுகிறாய்.. அனுர மாத்தியாவை அனுசரித்து போனால் என்ன’ என்று கேட்கிறான். 

தோட்டத்து பெரிய துரையிடம் சொல்லிவிடும் முடிவுடன் மறுநாள் அழகாக சிங்காரித்துக்கொண்டு வேலைக்குச் செல்கிறாள். அனுர மாத்தியா அவளைப் பார்த்ததும் புரிந்துக்கொள்கிறான். அவளுக்கு வேறு இடத்தில் வேலை போடுகிறான். அவனுடைய அங்கிருக்கும் வீட்டில் காத்திருக்க சொல்கிறான்.  அவள் அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே நேராக நடந்து, தோட்டத்தில் இருக்கும் பெரிய துரையின் பங்களாவின் முன் போய் நிற்கிறாள். பெரிய துரை எட்டிப்பார்க்கிறார். அவரிடம் எல்லாவற்றையும் சொல்கிறாள். பெரிய துரை ‘என் வீட்டிலேயே சமையலறை வேலையை பார்த்துக்கொண்டு இங்கேயே இரு’ என்று சிரித்தபடி சொல்கிறார். அவளுக்கும் புரிந்தது. அவள் ஒரு முடிவுக்கு வருகிறாள். கதையை ஆசிரியர் இவ்வாறு முடிக்கிறார். 

“இத்தனை நேரமும் தன்னில் உருண்டதாக உணர்த்திய உரப்புழுக்கள் யாவும் ஒருமித்து பெரியதொரு வடிவம் கொண்டேழுந்து தன்னை தப்பிக்கவிடாமல் கொஞ்சம் கொஞ்சமாய் தின்ன தொடங்கி இருப்பதாக முழுமையாக நம்பத் தொடங்கினாள்.  

விளையாட்டு புத்தி கொண்ட பூனையிடம் சிக்கிக்கொண்டு சதா அங்குமிங்கும் திரியும் எலியாய் இருப்பதைவிட, தன் கூரிய பற்களால் சிங்கம் சிக்கிய வலையை கடித்து, சிங்கத்திற்கு சில நிமிடங்கள் ஒத்தாசையாக இருந்துவிட்டு, ஓடி தப்பிக்கும் எலியாக இருந்து விடுதல் ஒரு வகையில் சரியாக இருக்கக்கூடுமோ என்று யோசித்தாள். பூனையோ சிங்கமோ தெரிவு செய்வதில் தான் வித்தியாசமே அன்றி, எலி எலியாகத் தானே இருக்க வேண்டும். எலியால் சிங்கத்தையோ பூனையையோ எதிர்த்து வாழ்ந்து சாதித்து காட்டுதல் என்பது எவ்வகையிலுமே சாத்தியமில்லை என்னும்போது. 

பதிலுக்கு, அவளும் பெரியதுரையைப் பார்த்து தயக்கத்துடன் சிரித்தாள்.“

பெண்ணுக்கு வேறு எந்த வழிகளும் இல்லாமல், முட்டுச்சந்தில் மாட்டிக்கொள்பவளாகவே நிலைமை தொடர்கிறது. அடுத்தவனிடம் பொ எனச்சொல்லும் கணவன், தன் கீழ் வேலைசெய்யும் பெண்களை தனக்கு சாதகமாக வளைக்க நினைக்கும் ஆண்கள். இவர்கள் எல்லோரிடம் இருந்து தப்பித்து வேறொரு ஊருக்குச் சென்றாலும் அங்கேயும் இதே ஆண்கள்... என்பது தொடர்கதையாகவே பெண்களுக்கு வாய்க்கப்பெறுவது துரதிஷ்டமே. சமூகத்தின் எந்த திக்குமே பெண்ணை வாழவைப்பதில் இத்தனை சிக்கல்களை உள்ளடக்கி இருப்பது இக்கதையின் மூலம் காட்சிபடுத்தப்படுகிறது.   


12. காலபைரவன் அவர்களின் இருவழிப்பாதை சிறுகதை: பெண்ணுக்கான பிடித்தம் 

கோவில் விசேஷங்களில் கலந்து கொள்ளும் வில்லுப்பாட்டுகாரனாக அந்த ஊருக்கு வரும் அவன், தற்செயலாக அங்கு கடை வைத்திருக்கும் அம்சவேணியையும் அவள் கணவனையும் சந்திக்கிறான். அவளைப் பார்த்ததும் அவனுக்குள் ஒரு பொறி. அவளும் சிரிக்கிறாள். தண்ணீர் எடுத்து வரும் சாக்கில் கடையிலிருந்து அவள், அவளுடைய வீட்டு பக்கம் சென்று அங்கே இவனுடன் கூடுகிறாள். அந்த ஊரில் தங்கியிருந்த அத்தனை நாட்களிலும் அவனும் அவளும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவன் கிளம்பும் நாள் வரும்போது அவளிடம், தன்னோடு வருமாறு அழைக்கிறான். அதற்கு அவள், உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும், ஆனால் கணவனையும் குழந்தைகளையும் விட்டு வர முடியாது என்று சொல்லிவிடுகிறாள். 
சில வருடங்கள் கழித்து மீண்டும் அதே ஊருக்கு அவனுடைய வில்லுப்பாட்டு குழு வருகிறது. அப்போது பழைய நினைவுகளில் மூழ்கி அம்சவேணியைத் தேடுகிறான். ஆனால் அவளின் கடை அங்கு இல்லை. விசாரித்த பார்க்கும் போது அவள் அந்த ஊருக்கு கிணறு வெட்ட வந்த செட்டியார் ஒருவருடன் ஓடிப்போனதாக டீக்கடைக்காரன் சொல்லுகிறான். இவனுக்கு பாம்பை மிதித்தது போன்ற உணர்வு வருகிறது. தான் அவள் நினைவுடனே இருந்ததும் ஆனால் அவளுக்கு தன்னை விட அந்த சேலத்து செட்டியாரை எவ்வாறு அதிகமாக பிடித்தது என்றும் யோசிக்கிறான். 

“அந்த சேலத்து செட்டியாரை ஒரே ஒரு முறை அந்தக் கணத்தில் அவனுக்கு பார்க்க வேண்டும் போல இருந்தது. தன்னிடம் இல்லாத ஏதோ ஒன்று அவளிடம் இருந்திருக்க வேண்டும். அதுதான் அம்சவேணியை அவன் உடன் அழைத்துச் சென்றிருக்கும் என்றும் யோசித்தான்.” 
இந்த இரு கதைகளிலும், இரு பெண்களும் சுரேகாவும் அம்சவேணியும், கட்டாயத்தின் பேரிலோ கட்டாயமற்றோ, திருமண பந்தம் தாண்டி வேறு உறவில் இருந்தாலும், யாரை அதில் தேர்ந்தெடுக்க வேண்டுமென்பதில் அவர்களுக்கு ஒரு சுதந்திரம் இருப்பதாகக் கதைகள் நமக்கு சுட்டுகின்றன. இக்கதைகளின் படைப்பாளிகள் பிரமிளாவாகட்டும் காலபைரவன் ஆகட்டும், இருவருமே பெண்ணுக்கான நெருக்கடியான வாழ்வுக்குள்ளும் ஒரு சிறுவெளியை ஏற்படுத்தி, அவளின் முடிவை அவளே எடுக்கிறாள் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்களென தோன்றுகிறது. இங்கு தி ஜானகிராமனின் அலங்காரத்தம்மாள் கதாப்பாத்திரம் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை. 


13. சல்மா அவர்களின் ‘கருகமணி’ சிறுகதை: எளிய பெண்களின் முடிவெடுக்கும் தன்மை 

இச்சிறுகதை, தன்னைச் சுற்றி காணும் லௌதீக பொருட்களின் மீதான பெண்ணின் ஆசையை சொல்கிறது. சாக்கிரம்மா, வீட்டு வேலை பார்க்கும், வெளிநாட்டில் வேலை செய்யும் சவுகத் அலி வீட்டில் ஆண்டெனாவுடன் கூடிய பெரிய டிவி பெட்டி வந்திறங்கியதும், தெருவில் எல்லோரும் அங்கு போய் உட்கார்ந்து பொழுதைக் கழிக்கிறார்கள். அந்த மகமூதாவின் வீட்டில் தான் இவளும் பொழுதுக்கும் டிவி பார்க்கிறாள். சினிமா பைத்தியமான இவள் தன் வீட்டுக்காக டிவி வாங்க ஆசைப்படுகிறாள். இரண்டு நாட்களாக தன் வீட்டில் டிவி பார்க்காமல் இருக்கும் சாக்கிரம்மாவைப் பார்க்க வீட்டுக்குச் செல்கிறாள் மகமூதா. அங்கு புதிதாக வாங்கிய டிவி பெட்டியின் முன்னமர்ந்து சாக்கிரம்மா பார்த்துக் கொண்டிருக்கிறாள். அங்கே சாக்கிரம்மாவின் கணவன் சுல்தான், டிவி வாங்க தன்னுடைய தாலியிலுள்ள தங்கக் கருகுமணியை விற்றுவிட்டதாக திட்டிக்கொண்டிருக்கிறான். அதற்கு சாக்கிரம்மாவின் எளிய பதில்தான் இக்கதையின் உச்சமே. 

‘அதற்கு சாக்கிரம்மா, “ஏன் இவரு தங்கத்துல தான் கழுத்துல தொங்குவாரோ, கருகுமணியில தொங்கமாட்டாரோ?”
ஏழ்மையில் இருக்கும் பெண்கள் முடிவுகளை தங்களுக்கு உகந்த வகையில் சட்டென எடுத்துக்கொள்கிறார்கள். 

பெண்களின் பிரச்சனையாக விவரிக்கப்படும் கதைகளில் அழுகையும், ஒப்பாரியும், குழந்தைகளின் பாடும், குடும்பத்தின் சங்கடங்களும், பண பிரச்சனையும், நிறைவேறாத அவர்களின் சின்னசின்ன ஆசைகளும் மிக முக்கியமாக வெளிப்படுகின்றன. இந்த புலம்பல்களின் பின்பாடாக, நாம் பெண்ணின் சார்பாக முன்வைப்பது, பெண், தான் பிறந்து வளர்ந்த குடும்பம் விட்டு வெளிவந்து, தனக்கும் தான் சார்ந்த ஆணுக்குமான ஸ்திரமான ஒரு வீடு, குடும்பம், வலிமை மிக்க சந்ததியினர், சமூகத்தின் பார்வையில் உயர்ந்துவிட்ட வாழ்க்கை நிலை போன்றவைகளை அமைக்க முற்படுகிறாள். இருந்தும், ஆணின் மனம் பெண்ணின் மனதைப் போல ஓரிடத்தில் நிலைகுத்தி நிற்பதில்லை. வலம் வந்துகொண்டே இருப்பதையும், ஊர் சுற்றிக்கொண்டே இருப்பதையும் பலகதைகள் பிரதிபலிப்பதைக் காணலாம். 

பெருமாள் முருகனின் ‘பெருவழி’ கதையில், அம்மா என்பவளை புலம்புவளாக மனதிற்குப் பிடிக்காதவளாக, அவளின் சில நேரத்து அன்பும், கரிசனமும், அவனின் அறையைக் கூட்டிச் சுத்தம் செய்யும் வேலைக்காரியாக மட்டுமே பிடிக்கிறது மகனுக்கு என்பதை அழுத்தமாகச் சொல்லியிருப்பார். 

கா சி தமிழ்க்குமரன் ‘பொலையாட்டு’ கதையில், மனைவி புலம்பத் தொடங்கி கதை முழுவதும் அவனைத் தீட்டித்தீர்த்து புலம்புவாள். கடைசியாக ஆசிரியர் எழுதுவார், 

“இவ்வளவு நேரம் பேசிய அயர்ச்சியில் பெருமூச்சு விட்டாள். முதுகை காட்டி திரும்பி படுத்திருந்த குமரவேல் அவ்வப்போது கால்களை ஆட்டிக்கொண்டு தூங்க பழகியிருந்தான்.” 

கடந்து வந்த இரண்டு நூற்றாண்டுகளாக பெண்கள் போராடி பெற்றுக்கொண்ட விடயங்களில் முக்கியமானது, வீட்டின் மூலையிலிருந்த சமையலறையில் இருந்து சிறிதளவேனும் பெற்ற விடுதலை. இன்றைய ஆண்கள் வீட்டின் நிர்வாகத்திலும், சமையலிலும் கைக்கொடுக்க முன்வந்திருப்பது கூட, பெண்களின் கல்வியால், பெண்களால் குடும்பத்துக்கு கிடைக்கும் பொருளாதார ஆதரவால்தான். இன்றும் பல பெண்கள் குடும்ப வன்முறைக்குள் இருந்து வெளிவர இயலாமல் இருப்பதையும் நாம் காண்கிறோம்.   


வெகுஜன வாசிப்பும் அண்மைக்கால பெண் இலக்கிய உலகமும்

அண்மைக்கால இலக்கியத்தைக் குறிப்பிடும்போது, இருபதாம் நூற்றாண்டில் பெண்களின் உலகம் இலக்கியங்களின் வழி புதியதொரு உலகமாக மாறிவந்ததை நாம் நினைவுகூற வேண்டியதாகிறது. 

புதுமைபித்தன், லக்ஷ்மி, சிவசங்கரி, தி ஜானகிராமன், வாஸந்தி, சுஜாதா, நாஞ்சில் நாடன், கி ராஜநாராயணன், அசோகமித்ரன், ஜெயகாந்தன், அம்பை, ஜோதிர்லதா கிரிஜா, ஆர் சூடாமணி, ஜி நாகராஜன் போன்றோரின் படைப்புகளில் பெண்களின் மாறிவரும் உலகம் என்பது, பெண் கல்வி கற்பது, கல்லூரி செல்வது, வேலைக்கு செல்வது, காதல் மணம் புரிவது, குடும்ப வன்முறை மற்றும் உளவியல் ரீதியான வன்முறைக்குப் பின் விவாகரத்து பெறுவது, பாலியல் வன்முறைக்குப் பின்பான மீண்டுவருவது, அலுவலக வேலையையும் வீட்டுவேலைகளையும் சமன்செய்யும் பெண்களின் நிலைப்பாடுகள் என்பது போன்றவைகளாக இருந்துவந்தது. 

பெண்களின் விடுதலையாகவும் அவர்களின் புது உலகமாகவும் இப்படைப்புகள் கொண்டாடப்பட்டன. ஜெயகாந்தன், அம்பை போன்றோரின் படைப்புகளில் பெண்கள் முற்போக்கு சிந்தனை கொண்டவர்களாகவும் விரைவாக அடுத்த கட்ட நகர்வை வாழ்க்கையில் எடுப்பவர்களாகவும், மனதிடம் அதிகம் படைத்தவர்களாகவும் காட்டப்பட்டனர். 

ஜெயகாந்தனின் ‘அக்கினி பிரவேசம்’, அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’, புதுமைபித்தனின் ‘பொன்னகரம்’, வாஸந்தியின் ‘பயணம்’, சிவசங்கரியின் ‘அவர்கள் பேசட்டும்’ போன்ற பல சிறுகதைகள் அன்றைய காலகட்டங்களில் ஏற்படுத்திய தாக்கங்களை நாம் மறந்துவிட முடியாது. 
 
கணவன் இறந்தாலோ, விட்டுவிட்டு வேறொருத்தியின் பின்சென்றுவிட்டாலோ பூ விற்றாவது, பத்துப்பாத்திரம் தேய்த்தாவது பிள்ளைகளைப் படிக்கவைத்து முன்னேற்றும் தாய்மார்கள் இன்றும் நம்மில் உண்டு. ஆனால், நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த பெண்களுக்கு இத்துணிவு வர அவர்கள் குடும்ப உறவின் பிணைப்புகளை, பந்தங்களை அறுத்தெறிந்து வருவதற்கு இயலாத சூழல் இருப்பதை நாம் காணலாம். பொருளாதார வாய்ப்புகள் குறைவாக இருந்தால், அல்லது வீட்டில் இருக்கும் பெண் என்றால், தனது சௌகரிய சூழலிலிருந்து (Comfort zone) வெளிவர அத்தனை பயம் கொள்வாள். இவையெல்லாமே இச்சிறுகதைகள் பேசிய உளவியல்தான். நடுத்தர வர்க்க பெண்களின் இந்த உளவியலை அதிகமாக பேசியது எழுபது எண்பதுகளில் வந்த சிறுகதைகள் எனலாம்.

இவற்றில் பெரும்பாலானவை, வெகுஜன இதழ்களில் வெளிவந்து பொது மக்களை இலக்கியத்தின் வாசிப்பு வட்டத்துக்குள் இழுத்துவந்து அதன் மூலம் பெண்ணுலகம் குறித்த பலத்த அறிமுகத்தைக் கொடுத்தது எனலாம். ஆனால், அக்காலகட்டத்தில், வெகுஜன எழுத்துலகில் நாவல்கள் அல்லது தொடர்கதைகள் பரிணமித்த அளவுக்கு சிறுகதைகள் எடுபட்டிருக்கவில்லை என்பதே உண்மை. மேலும் சிறுகதை எழுதுவது நெடுங்கதைகளை விட சிரமமானது. கருப்பொருள், வடிவம், மொழிநடை என்று மெனக்கெடல்கள் அதிகம். அதுபோல வெகுஜன பத்திரிக்கைகளுக்கு என்றிருக்கும் பக்க அளவு, சமூக கட்டமைப்புகளைக் கடந்து வர புதிதாய் ஒரு கருத்தியலைப் பேச இங்கிருக்கும் சங்கடங்கள் போன்றவை சிறுகதைகளைத் தீவிர இலக்கியத்தை நோக்கி தங்களின் போக்கை வடிவமைத்துக் கொள்ள செய்தன எனலாம். 

இன்றைய வெகுஜன இதழ்களிலும் இதுபோன்ற நிலை இருந்து, என்னுடைய ‘தேவானை’ சிறுகதை நிராகரிக்கப்பட்டது. அதை பின்னர் பெண் படைப்பாளிகள் சேர்ந்து வெளியிட்ட ‘அன்றில் முற்றம்’ தொகுப்பு நூலில் வெளிவந்தது.  

இன்றைய சிறுகதை உலகத்தில், பெண்களின் கருத்தியல்கள், இணைய இதழ்களிலும், இலக்கிய இதழ்களிலும், சிறுகதை தொகுப்புகளாகவும் தீவிர இலக்கியத்தின் குறியீடுகளாக வெளிவருவது நல்லதொரு முன்னேற்றமே. பெண்கள் மற்றும் ஆண்களின் சமூகப்பாத்திரங்கள், அவர்களின் அனுபவங்கள் மற்றும் விருப்பங்கள், அணுகுமுறைகள், பணி முறைமைகள் ஆகியவற்றை இரு பாலினத்தவரையும் குறித்து பேசும் ஒன்றாக அண்மைக்கால சிறுகதைகள் இருக்கின்றன. வெகுஜன பத்திரிக்கைகளில் ஏற்றுக்கொள்ளப்படாத எழுத்துகள் பல, இவ்வழிகளின் மூலமே நமக்குக் கிடைக்கின்றன. 

லக்ஷ்மி சரவணகுமார், எஸ் ராமகிருஷ்ணன், உமா மகேஸ்வரி, லாவண்யா சுந்தரராஜன், ஜா தீபா, பிரமீளா பிரதீபன், கமலதேவி, ஐ கிருத்திகா, சுஷில்குமார், கலைச்செல்வி, கார்த்திக் புகழேந்தி, சல்மா, மலர்வதி, அகிலா, காலபைரவன், சு வேணுகோபால் என்று பலரின் கதைகள் இதற்கு உதாரணம். 

தீவிர இலக்கிய கருத்தியல்களை எடுத்தியம்பும் சுதந்திரத்தை இன்றைய இணைய இதழ்கள், வலைத்தளங்கள், அச்சுப்புத்தகங்கள் தருகின்றன எனலாம். விளிம்பு நிலை இலக்கியங்களான தலித் இலக்கியம், பாலின வேறுபாடுகள் குறித்துப் பேசும் இலக்கியங்கள், பெண் கோட்பாடுகளை முன்னிறுத்தும் கதைகள் என பலவற்றை இவை தருகின்றன. 

பின்நவீனத்துவ இலக்கிய செயல்பாட்டுக்குள் இன்று புதிய பெண்ணியம் New Feminism (போஸ்ட் ஃபெமினிசம் , பின்நவீனத்துவ பெண்ணியம், கருப்பு பெண்ணியம், லெஸ்பியன் பெண்ணியம் போன்றவை ஒட்டுமொத்தமாக "புதிய பெண்ணியம்") இயங்கிவருகிறது. 

லிபரல் பெண்ணியம், சோஷலிச பெண்ணியம், தீவிர பெண்ணியம் எல்லாம் கடந்து இயங்கும், பழமையையும் புதுமையையும் சேர்த்தே சொல்லும், இந்த ‘புதிய பெண்ணியம்’ என்பது, பெண்ணியத்தின் மூன்றாவது அல்லது நான்காவது அலை என்றே கொள்ளப்படுகிறது. 

New feminism holds that women should be valued in their role as child bearers, that women are individuals with equal worth as men; and that in social, economic and legal senses they should be equal, while accepting the differences between the sexes. 

இன்று பெண் கருத்தியல் நிலைப்பாடுகளைத் தீவிரமாக முன்னிறுத்தும் கதைகள் பல இந்த புதிய பெண்ணியத்தைத் தழுவியே எழுதப்படுகின்றன. 


மாற்றங்களை வேண்டி.. 

"பெண்ணியம் ஒரு சித்தாந்தமாக, பாலினம் மற்றும் பாலின முன்னோக்குகளை, கல்வியியல் துறைகளில் முக்கியமான கருப்பொருளாக நிறுவுவதிலும், பொதுவாக, பொது வாழ்வில் பாலின பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் வெற்றி பெற்றுள்ளது"
என்று பெண்ணிய செயல்பாட்டாளர் ஏஞ்சலா ஹெய்வுட் கூறுகிறார். 

ஆண்களை மையமாகக் கொண்ட ஆடைக் கட்டுப்பாடுகள், கலாசார கட்டுப்பாடுகள் போன்றவற்றை இங்கு நாம் பார்த்த சில கதைகள் தகர்கின்றன எனலாம். எல்லா பெண்களும் தங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் அவர்களே தேர்வு செய்ய வேண்டும் என்றும், அன்றாட நடவடிக்கைகளில் ஆண்களைப் போலவே அவர்களுக்கும் வாய்ப்புகள் இருக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. 

ஆணுக்கு மட்டுமே இருந்த உடல் விழைவுகள் இன்று பெண்ணுக்கும். உடல் அரசியல் பல சிறுகதைகளில் விரிவாகவே பேசப்பட்டுள்ளதைக் கண்டோம். ஒரு காலத்தில் வெகுஜன பத்திரிக்கை ஒன்றில் தோப்பில் முகமது மீரான் அவர்களின் ‘கணவன் இல்லாத அம்மா’ என்னும் கதையின் முடிவை பலர் ஆட்சேபித்தும் அது பண்பாட்டுக்கு எதிரானது என்று சொன்னதால்அவரின் சிறுகதைகளைத் தொகுக்கும் போது, அக்கதையைச் சேர்த்த அவர், அதை பாதியில் முடித்துக்கொண்டு, அதற்கான இவ்விளக்கத்தையும் முன்னுரையில் சேர்த்து விட்டிருக்கிறார். எனக்கும் அதன் முடிவு தெரியாது. 

நாகரிகம், உடை மற்றும் உணவுமுறை, உடற்பயிற்சி திட்டங்கள், ஒப்பனை அறுவை சிகிச்சைகள், குழந்தைப்பேறு போன்றவற்றின் மாறிவரும் சித்தாந்தங்கள் மூலம் பெண்களின் உடல்கள் புறவயப்படுத்தப்பட்டு அதன் வரையறைகள் முற்றிலுமாக மாறிவருவதை நாம் காணமுடிகிறது. 
இன்றைய திரைத்துறை பெண் நட்சத்திரங்கள் அதற்கு சாட்சி. இளமை வயதுகள் கடந்தும் Protagonist முதன்மை பாத்திரங்களில் நடித்து வருவதைக் காணலாம். 

அடுத்ததாக, பெண்கள் வீட்டுப்பிரச்சனையை, குடும்பப்பிரச்சனைகளை மட்டுமே எழுதுகிறார்கள் என்று விரலைச் சுட்டும் எத்தனையாயிரம் விரல்களுக்கு முன், இன்றைய எழுத்துலகில் இயங்கிவரும் ஆண் மற்றும் பெண் படைப்பாளிகள் பேசும் இந்த பெண் இலக்கியத்தின் கோட்பாட்டு தீவிரம், வேறு வகையானது என்பதையே நான் முன்வைக்க விரும்புகிறேன். இது புதிய பெண்ணியம் சார்ந்தது. எங்களின் இந்த புதிய எழுத்துக்களை வாசித்துவிட்டு, அவர்கள் விரல்களைக் குற்றச்சாட்டுக்காக நீட்டலாம். 
தொடர்ந்து இது குறித்து பேசவும் கருத்துகளைப் பரிமாறவும் விவாதங்கள் தொடரவும் இக்கருத்தரங்கம் முன்மாதிரியாக அமையவேண்டுமென நான் விரும்புகிறேன். 

இன்றைய சமகாலச் சிறுகதைகள் பிரதிபலித்து வரும் பெண்ணிய சித்தாந்தத்தை சரிவரப் புரிந்துக்கொள்ளும் தன்மை அமையும்போது, பெண் சார்ந்த கருத்தியல்கள் தீவிரமாகப் பேசப்படும் என்பதை நான் முழுவதுமாக நம்புகிறேன். 

நன்றி!





பெண்ணெழுத்து 

"பெண் தன் உணர்வுகளை, சிந்தனைகளை, 

சமூகப்பார்வையை எழுத்தாய் படைக்கவேண்டிய 

அதிக கட்டாயத்தில் இருக்கிறாள். 


இங்கே பெண்ணெழுத்தின் தேவை இருக்கிறது. 

பெண்ணெழுத்தை சமமாய் பாவிக்கும்வரை, 

ஆண் பெண் எழுத்துகளின் இடையே இருக்கும் 

மெல்லிய கோடு அழிக்கபடாமல் இருக்கும்"


~ அகிலா..































Comments

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி