பெண் எழுத்தும் சிறுகதைகளும் (9.8.2023 அன்று கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் நடந்த சாகித்ய அகாடெமி கருத்தரங்கக் கட்டுரை) Women’s Writing and Short Stories Sahitya Akademi Nari Chetna programme பெண் எழுத்தும் சிறுகதைகளும் (படைப்பாக்கம்: து. அகிலா எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர்) பெண் எழுத்து பண்பட்ட அறிவார்ந்த சமூகம் என்பது தனி மனிதனின் விருப்பங்கள், முன்னெடுப்புகள், ஏமாற்றங்கள், மனமுறிவுகள், மகிழ்ச்சிகள், வருத்தங்கள் போன்ற அகவெளிபாடுகளை மட்டுமன்றி, சடங்குகள், சம்பிரதாயங்கள் அவற்றின் மீதான மதவொழுக்க கோட்பாடுகள், வர்க்கரீதியான பாகுபாட்டுக் குறியீடுகள், சாதீய நிலைபாடுகள், மொழி மற்றும் வரலாற்றுக்கூறுகள் என்று புறவயப்பட்ட கட்டமைப்புகளையும் சுமந்துக்கொண்டே இயங்குகிறது. காலம்காலமாய் அவன் படைக்கும் இலக்கியங்களும் மனிதனையும் அவன் இயங்கும் இச்சமூகத்தையும் குறித்து பேசிவருவதும், அதன் வழியே மொழி அதன் திண்ணத்துடன் வளர்ந்து வருவதும் கண்கூடு. படைப்புலகில் பெண்கள் எழுதும் படைப்புகளின் அவசியம் குறித்து நாம் பேசவேண்டியுள்ளது. இங்கு இரண்டு கண்ணோ