பெண்களுக்காக....... எலும்பு சம்பந்தமான மருத்துவமனை ஒன்றிற்கு சமீபத்தில் செல்ல நேர்ந்தது. ஒரே ஒரு மருத்துவர் வைத்தியம் பார்க்கும் இடம் தான் அது. ஆனால் ஒரு கல்யாண வீடு போல் காட்சி அளித்தது. எங்கு பார்த்தாலும் பெண்கள்....பெண்கள்..... ஏன் இந்த அவல நிலை பெண்களுக்கு....நாற்பது வயது முதல் தொண்ணூறு வயது பாட்டி வரை அங்கு பார்க்க முடிந்தது. பெரும்பாலான பெண்கள் பருமனாகவே இருந்தார்கள். நொண்டிக் கொண்டும், சரிந்து நடந்து கொண்டும், நடக்கவே முடியாமலும் எத்தனை விதமானவர்கள்.... ஆண்கள் சற்று குறைவுதான். அப்படியே இருந்தாலும், பெரும்பாலானோர் விபத்தில் சிக்கி அதனால் எலும்பு சிகிச்சைக்கு வந்திருந்தார்கள். எழுபதுகளில் இருந்த ஒரு தம்பதியர், அங்கு வந்திருந்தனர். அந்த கணவர் தான் மனைவியை தாங்கி பிடித்து, கூட்டி வந்து, இருக்கையில் அமர வைப்பதும், இரத்த பரிசோதனைக்காக அழைத்து செல்வதும், மறுபடியும் அமர வைப்பதுவுமாக அருகிலேயே நின்று கவனித்து கொண்டிருந்தார். மனைவி மீது அவருக்கு இருந்த கரிசனம் என்னை ஆச்சரியப்படுத்தியது.