வெற்றிடம் நோக்கியதாய் அமைந்தேவிட்டது அந்த கூண்டின் அடையாளம்... ஒட்டையிட்ட சிறு பானைகளும் நட்டுவைத்த மரக்கிளைகளும் தட்டும் சில கிண்ணங்களுமாய் பறவைகளற்றுப் போயிருந்தது... காதல் சிட்டுக்களையும் அதன் கீச்சுக்களையும் கொஞ்சும் கிளிகளையும் சிறு குஞ்சுகளையும் அடை காத்திருந்திருக்கிறது வருடங்களாய்... எஞ்சியது ஒன்றுமில்லாமல் மிச்சமாய் இருக்கும் கம்பிகளுடன் இவ்வமயம் தனித்தே நிற்கிறது... தன்னருகே வந்தமரும் சிறகுகளை ஆசைக்கொண்டு அழைத்துப் பார்த்தது அதன் சட்டமிட்ட கம்பிகளே அதற்கு சுமையாகிப் போனதை உணராமல், இன்னமுமாய் காக்கைகளிடம் பேசிக்கொண்டே கதவு திறக்கக் காத்திருக்கிறது...