இன்றைய நாளில்... உருண்டோடிவிட்டன வருடங்கள் உன்னை இழந்து பால்யமும் பள்ளியும் மட்டுமே நினைவில் நிறுத்திவிட்டு மீதி வாழ்க்கை உன் கையில்தான் என்று கொடுத்துவிட்டு இந்த மண்ணையும் என்னையும் விட்டு வெகு தொலைவு பயணித்துவிட்டாய்.... இன்றும் உன்னை நினைக்க ஆயிரம் காரணங்கள் மனதின் துயரங்கள் எல்லையை தாண்டினால் உன் முகம் காட்டும் என் கண்ணாடி அழுவதை நிறுத்தி என் அகம் பார்த்திருக்கிறேன் அதில்... தைரியம் என்னும் வார்த்தையை ஏட்டிலிருந்து எண்ணத்திற்கு மாற்றியவள் நீ சமாதானம் என்னும் சொல்லை சாசுவதமாய் மனதில் நிறுத்தியவள் நீ... நாணிகோணி நடக்க சொல்லித் தரவில்லை நிமிர்ந்து நடக்க சொல்லித் தந்தாய் சண்டையிட கற்றுத் தரவில்லை சமரசமாய் வாழ கற்றுத் தந்தாய் உடைந்து போய் நின்றால் அதை கடந்து போக சொல்லித் தந்தாய் உவகை அதிகமானாலோ அமைதியாய் உட்வாங்க சொல்லிச் சென்றாய் என் முதல் நூலின் நகலொன்றை எடுத்து வைத்தேன் உனக்காக கையொப்பம் ஏதும் இடாமல் உன் நகல் நான்தான் என்பதால்... எத்தனையோ எண்கள் என் கைப்பேசியில் உன்னை அழைக்க என்று ஏதுமில்லை இதில்....