Monday, 11 September 2023

யுவன் சந்திரசேகரின் படைப்புலகம் | மாற்று மெய்மை

 மாற்று மெய்மை


எழுத்தாளர் யுவன் சந்திரசேகரின் படைப்புலகம் 


 மதுரை வட்டார வழக்கில், புதுமையாய், யதார்த்தவியலில் ‘மாற்று மெய்மை’ என்னும் கோட்பாடுகளை முன்னிறுத்தி, தன் புதினங்களாலும் சிறுகதைகளாலும் தனித்துயர்ந்து நிற்கும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்கள். அவரின் படைப்புகள் குறித்தும் அதில் புழங்கும் கதை உத்திகள் குறித்துமான ஆய்வுகள் சமகால இலக்கிய உலகில் மிகவும் அவசியமான ஒன்றே     

யுவன் சந்திரசேகரின் படைப்புலகம் 

நாட்டார் வழக்கியலில் கதைசொல்லிகள் சொல்லும் கதைகள் தலைமுறைகள் கடந்தும் நம்முள் காலூன்றி நிற்கின்றன. ஓரிரு கதாபாத்திரங்களுடன் தொடங்கி, பல தலைமுறைகளை, கதைகளன்களை, பலவித தளங்களை, காலகட்டங்களைக் கடந்து புதிதாய் இணைப்பு கதைகளை வடிவமைத்து, முடிவுறாத கதைதன்மையுடன், நம் முன்னோர்கள் இட்டுக்கட்டிய கதைகள் சுவாரசியம் மிக்கவை.  

அதன்பிறகான இலக்கிய உலகில், அவ்வழக்கியலில் இருந்து கதை இலக்கியம் சற்று மாறி, உருமாறி, மையக்கருவாய் ஒன்றை நிலைப்படுத்தி, முடிவு நோக்கி நகரும் தன்மையுடையதாயும், வணிக நோக்கின் சாயம் பூசிக்கொண்டும் பயணிக்கத் தொடங்கியது. சில அழகியலை மட்டும் பிரமாதப்படுத்தியும் வெளிவந்துள்ளன.  

இம்மாதிரியான கதையமைப்புகளில் இருந்து வேறுபட்டு, மனித அனுபவங்களினூடே கதைகள் பின்னும் உத்தியை, சுந்தர ராமசாமியின் ‘ஜே ஜே சில குறிப்பு’களில் காணலாம். யுவன் சந்திரசேகர் அவர்களின் எழுத்துகளிலும் அந்த மாயம் வேறுவிதமாய் வெளிப்படுகிறது.

வெளிப்படையாய் சொல்லப்படாத ஒரு மையத்தை நோக்கி உதிரிகதைகளாய் கோர்த்து ஒற்றை கதையாய் தருவதே அவரின் படைப்பின் சிறப்பு. ஒவ்வொரு கதையும், வாசிப்பனுபவத்தை சாதாரண கணிப்பிலிருந்து மேம்படுத்தி, நுட்பமான அடுக்குக்கு நகர்த்துகிறது. 

யுவன் சந்திரசேகரின் இயற்பெயர் எம்.சந்திரசேகரன். 1961 யில் மதுரை சோழவந்தான் அருகே உள்ள கரட்டுப்பட்டியில் பிறந்தவர். தகப்பனார் இவரின் இளம்பிராயத்திலேயே இறந்துவிட்டார். மூத்த அண்ணனின் வளர்ப்பில் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வணிகவியல் பட்டம் முடித்து, வங்கி ஊழியராக பணியில் சேர்ந்தார். 

கவிதைகளில் தொடங்கிய இவரின் இலக்கிய வாழ்வு, சிறுகதைகள், புதினங்கள் என்று வளர்ச்சியுற்றது. அவரின் புதினங்கள் கனவுலகமும் நனவுலகமும் கைகோர்த்து கொண்டு பயணிப்பதைப் போன்ற வாசிப்பின்பம் தருபவை. மந்திரவாதிகள், சித்தர்கள், ஞானிகள் போன்றோரின் இயல்புக்குள் நம்மை கணிக்கும், நம்மால் அறியமுடியாத யதார்த்தம் அடங்கியிருப்பதாகச் சொல்கிறார் கதைகளில். அவரின் இசை ஆர்வமும் துறவிகளின் மீதான பெரும் பற்றும் வெளிப்படுகின்றன.



‘வேறொரு காலம்’, ‘புகைச்சுவருக்கு அப்பால்’, ‘ஒற்றை உலகம்’, ‘தோற்றப்பிழை’, ‘கை மறதியாய் வைத்த நாள்’ என்பதான கவிதை நூல்களும் ‘குள்ளச்சித்தன் சரித்திரம்’, ‘பகடையாட்டம்’, ‘கானல் நதி’, ‘மணல்கேணி’, ‘வெளியேற்றம்’, ‘நினைவுதிர் காலம்’, ‘பயணக்கதை’ போன்ற புதினங்களும், ‘நீர்ப்பறவைகளின் தியானம்’, ‘ஒளிவிலகல்’, ‘ஏற்கனவே’, ‘கடல் கொண்ட நிலம்’, ‘ஏமாறும் கலை’ என்பதான சிறுகதை தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. 


படைப்பில் இயங்கும் உத்திகள் 

புதுமைப்பித்தன் அவர்கள் சிறுகதைகள் பற்றிச் சொல்லும்போது, 

“..கதையை வாசிப்பது, நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல். கதை முடிவடையும்போது அதைப்பற்றிய சிந்தனை முடிவடைந்துவிடாது. இப்படிப்பட்ட கதைகள் முடிந்த பிறகுதான் ஆரம்பமாகின்றன என்று சொன்னால் விசித்திரவாதமாகத் தோன்றும். ஆனால், அதுதான் உண்மை..” 

யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் இவ்வகையைச் சார்ந்தவையே. கதைகள் முடிந்தபிறகே அவை குறித்த எண்ணவோட்டங்கள், விவாதப்பொருட்கள், படிமக்குறிப்புகள் நம் மனதில் தோன்றத் தொடங்குகின்றன. அவரின் கதைகள் மற்றும் புதினங்களின் சிறப்பம்சமே கதைக்குள் விரவிக் கிடக்கும் உதிரிகதைகளின் வடிவமைப்பும் அதற்குள் நிகழும், ‘மாற்று மெய்மை’ எனப்படும் தற்செயலான இயல்பு நகர்வுமாகும். ஒரு செயலின் பொருட்டு மற்றொன்று நிகழ்கிறதென்ற கூறுமுறையை, புதிதாய் கண்டுக்கொள்ளும் ஆச்சரியத்துடன், வாசகனின் வாசிப்புக்கே விட்டுவிடும் தன்மையும் கொண்ட எழுத்துலகம் யுவன் அவர்களுடையது. 

ஒவ்வொரு கதைக்குள்ளும் இருக்கும் தனித்தனி கதைகளும் பல ஊடுஇழைகளை தன்னகத்தேக் கொண்டு, அந்த கதையின் கட்டுமானத்தைப் பலப்படுத்துகிறது. அதில் அவர் கையாண்டிருக்கும் மொழிநடை, வட்டார வழக்கு, எண்ணக் குறியீடுகள் முதலியன சிறப்பான ஒரு வாசிப்பின்பத்தை வாசகனுக்குக் கொடுக்கின்றன. 

வாழ்க்கை சார்ந்த விவரணைகள், குறியீடுகள், அவதானிப்புகள் போன்றவை அவரின் அனைத்துக் கதைகளிலும் இருக்கின்றன. எழுதுபவனின் அனுபவங்களாய் இவற்றை நாம் கொண்டாலும் மொழிநடையும் அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் நடைமுறை யதார்த்தங்களும் தனித்துவம் வாய்ந்தவை. படிக்கும் வாசகனுக்கு பரந்த அனுபவவெளியைத் திறந்துவிடுகின்றன அல்லது அவனின் நினைவலைகளைக் கலைத்துச் செல்கின்றன.. 

ஒவ்வொரு கதையையும் ஒரு தொகுப்பு கதையெனச் சொல்லலாம். ஒன்றுக்குள் இருக்கும் நான்கைந்து உதிரிக்கதைகளையும் பின்னி பல இழைகள் கொண்ட ஒரு மையக்கரு நோக்கி பயணப்படவைக்கிறார். உதிரிக்கதைகளில் சில தொடர்பற்றவையாகப் பாவனை செய்கின்றன. ஆனால் சிரத்தையுடன் அவற்றையும் மையக்கருவின் வேறொரு இழையுடன் கோர்த்துவிடுகிறார். முதல் முறையில் பிடிபடாத தொடர்பு மறுவாசிப்பில் பிடிபடுகிறது. 



கதைக்குள் கதைகள்


“நூற்றிச் சொச்சம் நண்பர்கள்” என்னும் சிறுகதையில், அதை பெருங்கதை என்று டால்ஸ்டாயின் மொழியில் சொல்லலாம், கிட்டத்தட்ட பதினைந்து உதிரிக்கதைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. 

கதையின் முதல் பாகமாய், முகவரி தேடி இலங்கையிலிருந்து வந்திருக்கும் மனிதருக்கு, உதவும் நோக்கில், கதாசிரியர், அந்த வீடுவரை கொண்டு விட்டுவிட்டு, உடனே திரும்பாமல் நின்று வேடிக்கை பார்ப்பதும், அவருக்கு அங்கே சரியான பதில் கிடைக்காமல் திரும்பும்போது, ‘நமக்கெதுக்கு வம்பு’ என்று, அவருக்கு உதவாமல் கால் எட்டி நடையிட்டு வீடடைவதும் மனித இயல்பாய்க் சுட்டப்படுகிறது. 

நண்பனை நம்பி ஊர் வரும் ஒருவரின் முகம் எதிரேயே, அவரின் நண்பர் வாசல் கதவை அடைத்து செல்வதாய் அதில் வருகிறது. அடுத்த பாகத்தில் இன்னொரு சம்பவமாய் எழுத்தாளர், தன் நண்பனை ஒரு ரயில்பயணத்தில் டிக்கெட் பரிசோதகராகச்சந்திக்கிறார். அடையாளம் கண்டு விசாரிக்கும்போது, அவர், இவரை வேறொரு பெயரிட்டு அழைக்க, இவர் மறுக்க, அடையாளம் காணமுடியாமல் நகர்கிறார் அந்த மனிதர். 

 அடுத்ததாய் நாடக ஒத்திகை என்றலையும் நண்பன் மதுரதாசின் நட்பும் அவனின் தற்கொலையும். அடுத்த பாகமாய் உள்ள உதிரிக்கதையில், குள்ளமான உயரதிகாரியும், அவரின் விருப்பமாய் இருக்கும் போன்சாய் மரங்களும், அவரின் உருவம் வளராத மங்கொலாய்டு குழந்தையும் வருகிறார்கள். 

அடுத்த உதிரிக்கதையாய், சற்று தலைகனம் ஏறிய எழுத்தாளனும் அதன்பிறகு வரும் ஒன்றில், கதாசிரியரின் அப்பா இறந்தது குறித்தும் அவரின் நினைவாய் அதற்குள் தொடரும் நினைவலைகளும் அவர் சொல்லிய, அலிகள் குறித்த விவரணைகளும், அடுத்ததாய், கல்லூரி காலத்து நினைவலைகளாய், இலக்கியக்கூடம், இமயவரம்பன் என்னும் நண்பனும் இலக்கியவாதியும் பின்னர் திருடனுமானவன் பற்றியும் வருகின்றன. 

அடுத்ததில் காதலாய் கிருஷ்ணவேணி, அடுத்ததில் மனைவி பத்மினி மற்றும் அச்சமயத்து நண்பர்கள், அவர்களின் உரையாடல்கள். அடுத்ததாய் ஒரு ரயில் பயணம் அதில் சந்திக்கும் வட இந்தியன், அவனின் தற்கொலை, அதன்பிறகு வரும் இன்னொன்றில் சந்தானகோபாலன் என்னும் உடன் வேலை செய்யும் நண்பன், அவனுடனான உறவு, அவன் வீட்டில் ஓர் இரவில் நேரும் சந்திப்பு, அவனின் அறிவுவெளி, அதிலிருந்து டான் ஜுவான், அதில் கேஸ்டனடா, அந்த கதையில் வரும் காரை கடக்கும் நாயொன்று, அது ஒருவேளை சூனியக்காரனாய் இருக்கும் சாத்தியம் குறித்த அலசல், மறுபடியும் சந்தானகோபாலன், அவர் வீட்டின் புல்வெளியில் இரண்டு நாய்கள், அவற்றின் ஒட்டுதல், அதன் வழியே நண்பர்களுக்கு இடையேயான இடைவெளி முடிவுக்கு வந்து ஒன்றாகி பிரிதல் என்று ஒரு கதைக்குள் இத்தனையையும் அடுக்கி, சொற்கள் கொண்டு சமைத்து, ஒன்றன் மேல் ஒன்றாய் உறவு அமைத்துக்கொண்டேச் செல்கிறார். 

சொற்கள்தான் எவ்வளவு வசியமானவை. அதன் வடிவத்தை அமைப்பை மனிதன்தான் உண்டாக்குகிறான். அவற்றினுள்ளும் தன் உணர்வுகளை இருத்தி, அவனும் இருக்கிறான். யுவனின் சொற்களும் அவ்வகையானவையே. நம்மை மயக்கி உள்ளிருத்துபவை. மனம் மருகாமல், கலங்காமல், தன்னை வெளிப்படுத்திக்கொள்ளாமல் எவராலும் இக்கதைகளிலிருந்து வெளிவர இயலாது என்பதே நிஜம். அத்தனை வல்லமை அவரின் மொழிநடைக்கு இருக்கின்றது.. 

மேலே குறிப்பிட்ட இந்த கதையில் மெல்லிய சரடு ஓன்று எல்லா கதைகளையும் என்று சொல்ல முடியாவிட்டாலும், பெரும்பான்மையானவற்றை இணைக்கிறது. அந்த சரடையும் இடையில் வரும் ஒரு பாகத்தில், எங்கோ கேள்விப்பட்டதாக அவர் எழுதியிருக்கும் ஒரு கதையில் புகுத்தியிருக்கிறார். ஒரு ராணுவ வீரன் குண்டடிபட்டு இறக்கவிருக்கிறான். அவனின் நண்பன் இன்னொரு முகாமில் இருக்கிறான். அங்கு போகவும் அவனை காப்பாற்றவும் விழைகிறான். அவனின் அதிகாரி போகவிடவில்லை. இருந்தும் செல்கிறான். அவனின் நண்பன் இறக்கும்போது இவனிடம் முணுமுணுத்துவிட்டு இறக்கிறான். அதிகாரி என்ன சொன்னான் என்று கேட்கிறார். ‘நீ வரவேண்டும் என்று நினைத்தேன். வந்துவிட்டாய்’ என்று சொன்னதாய் சொல்கிறான். ‘நூற்றி சொச்சம் நண்பர்கள்’ என்னும் இந்த கதைக்குள் அமைந்த பதினைந்து உதிரிகதைகளுக்கும் மையக்கருவாய் இது அமைந்துவிடுகிறது. 

இவ்வாறே அவரின் அனுபவங்கள் உதிரிக்கதைகளாய் எழுதப்பட்டு, ஒற்றை சிறுகதையாகிறது.  



மாற்று மெய்மை அல்லது மாற்று யதார்த்தம்

பெரும்பாலும் கதைகள் புதினங்கள் வாழ்வின் பொதுத்தன்மையை பிரதிபலிப்பது வழக்கம். நனவுகள், நினைவுகள், கனவுகள் என்று நீண்டுக்கொண்டே செல்லும் அதைக் கொண்டே, இயல்பாய் கதைகள் நகர்தல் உண்டு. இவ்வாறன்றி, பொதுத்தன்மையிலிருந்து விலகி, ‘மாற்று மெய்மை’ என்று தனக்கே உரித்தாக ஒரு பாணியை உருவாக்கி அதில் பயணித்திருக்கிறார் ஆசிரியர். 

ஒரு கதைக்குள் இணைந்திருக்கும் உதிரியான பல கதைகளும் அவற்றை இணைக்கும் சரடாய், மையக்கருவும்.சேர்ந்த யதார்த்தவியல் எழுத்துலகம் யுவன் அவர்களுடையது. தற்செயலாய் நடக்கும் செயல்கள் யாவும் நாம் அறிந்த தற்செயல்கள் அல்ல, உண்மைகள் அல்ல, மாற்று உண்மைகள் என்கிற கோட்பாட்டை வைக்கிறார். அதை மாற்று மெய்மை என்றும் அழைக்கிறார். 

கதைகள் என்பவை, பிரபஞ்சம் அறிந்த ஏதோ ஓர் உண்மையை இயம்புபவை..அதற்கும் மேலே, மாற்று உண்மைகள், பிரபஞ்சத்தின் நிஜங்களோடு பொருந்தி அந்த தற்செயலாய் நடக்கும் செயல்களின் காரண காரியங்களை ஆய்ந்தறிய முற்படுகின்றன. நிஜத்தையும் மாற்று மாயத்தன்மையையும் தன் கதைகளில் இணைக்கிறார்.


வட்டார வழக்கியல் 

கதை எதுவாகினும் வாசிப்பனுபவத்தைப் பூர்த்தி செய்வது, அந்தந்த வட்டார மொழிவழக்கே. கி ராஜநாராயணன் கதைகளில், அவரின் மொழிநடையில், கரிசல்காட்டு மண்ணின் மணம் வீசாமல் இருந்ததில்லை. யுவன் சந்திரசேகரின் எழுத்துநடையும் அவ்வாறே. மதுரையில் வாழும் பிராமணர், கோனார், நாடார், இஸ்லாமியர் போன்ற பலதரப்பட்ட சமூகத்தினரின் வழக்கு மொழியில் மிகுந்த தேர்ச்சி பெற்றவராய் விளங்குகிறார் யுவன் அவர்கள். 

“சிவராமன் போனாலும் போனான், உங்கப்பன் உயிரைப் பாதி கொண்டுபோயிட்டன். பாதிச்சவமான்னா திரிஞ்சன்...” என்று பிராமணர் மொழியும்,

“ பீப்பிக்காரவுகளுக்கும் அவ மேல ஓர் பார்வெ இருந்துருக்குண்றது இவ அத்துட்டு கைப்பிள்ளெயோடே வந்து நிக்கிறப்பத்தானே தெரியிது..” என்று மதுரை மண்ணின் வட்டாரவழக்கும்,

“குந்தி துரியோதனனை திருமணம் செய்துக்கொண்டதில் மதுரதாஸ் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டானாம்” என்று நாடக கதாபாத்திரங்களைக் கொண்டு விவரிக்கும் நகைச்சுவை பாங்கும், 

“அணு, கடவுள், சுயம் இவையெல்லாம் ஒரே தளத்தின் வெவ்வேறு சாயல் கொண்ட அடிப்படைத் தொன்மங்கள். இவற்றில் எதையேனும் ஒன்றை நம்பாமல் மனித சிந்தனை நகர்வதில்லை” என்று துறவியின் வரிகளும்,    

“அப்பண்டா ஒங்களுக்கு இந்த எலே பத்தாது. பெருசு கொண்டாறேன்.... நெய்யாத்திங்கர வெத்தில இது. அய்யா நெறயப் பாக்கனூங்குறாஹல்லே..” என்ற இஸ்லாமியர் வாய்மொழியும்,

“மாமா நீங்க அசப்புலே மானேக்ஷா மாதிரியே இருக்கேள்..” 

“அவன் எனக்கு ஜுனியர்டா அவந்தான் என்னை மாதிரி இருக்கான்..” என்ற நகைசுவையான உரைநடையும் யுவன் அவர்களுக்கே உரியது.   

ஒரு கதையில், அவரின் அப்பாவின் இறப்பு குறித்து, 

“அப்பா சாகவில்லை. அப்பா செத்ததும், சொந்தக்காரர்கள் வந்து பிலாக்கணம் கூட்டி மூக்கைச் சிந்திப் போட்டு சுடுக்காட்டுக்கு தூக்கிக்கொண்டு போனதுவும் ..... எல்லாமே சொப்பனம்தான்..

இன்று சொப்பனம் என்ற வார்த்தையை உபயோகிக்க மாட்டேன். கனவு என்றோ டிரீம் என்றோதான் சொல்வேன்.சொப்பனம் என்பது அப்பாவின் வார்த்தை..அன்று என்னிடம் இருந்த வார்த்தைகள் அப்பாவின் வார்த்தைகள்.

...அதோ வரும் பேருந்தில் அப்பா வந்து கொண்டிருக்கிறார். வேஷ்டியின் சொருகுநுனிக்குப் பக்கத்தில் உண்டாக்கிய ஏந்தலில் பப்பரூமுட்டும் நாணாவையர் ஓட்டல் பூரிசெட் ஒன்றும் வைத்துக் கட்டிக்கொண்டிருக்கிறார். 

பேருந்து ஜெயராஜ் கடையைத் தாண்டும்போது ஜன்னலோர இருக்கையில் இருந்து பொடிபோட்ட வலது கையை உதறிக்கொண்டே இருக்கையை விட்டு எழுவதைப் பார்த்தேன். பேருந்து அண்ணா மன்றத்துக்கு எதிர்ல் நிற்கிறது. 

முதலில் ஒரு கிழவி, பிறகு சுந்தரக் கோனார், பின்னால் அவர் சம்சாரம், நாட்டு வைத்தியர் சம்முகம்பிள்ளை. விசில் சத்தம். பேருந்து உறுமுகிறது. மெல்ல நகர்கிறது. நான் குமுற ஆரம்பித்தேன்..” 

மொழி ஆளுமையும், நுணுக்கமும், அதை கவனமாக கையாள்கிற விதமும் யுவன் அவர்களின் படைப்புகளில் புலனாகிறது. வாசிப்பவர்களுக்கு கதைத்தளத்திலேயே தாமும் இருப்பதுப்போன்ற பிரமையை ஏற்படுத்திவிடுகின்றது. 



உளவியல் பார்வை 

மனம் என்பது எண்ணங்களின் அழுத்தமான குறியீடாக உரைக்கப்படுகிறது. எப்பொருளை நோக்கும் பொழுதும், அதன் இணையாய் தோன்றும் நினைவலைகள் நம்மை பின்னோக்கி, கடந்துவந்த காலத்திற்குள் அங்கு நிகழ்ந்தவைகளுக்குள் இட்டுச்செல்லாமல் இருப்பதில்லை. அதை நாம் வெறும் நிகழ்வாய் காண்கிறோமா அல்லது நம் கால இட மாற்றத்தின் முக்கிய குறியீடாகக் கொள்கிறோமா என்பது நம் சிந்தனையின் வசமே. 

பேருந்து நிறுத்தம் சென்று நிற்கும் சமயம், அங்கு நம்மை கடக்கும் பேருந்தின் உள்ளிருந்து வீசப்படும் ஒரு மனிதனின் பார்வை எங்கோ பார்த்த சலனத்தை உண்டு பண்ணாமல் இருப்பதில்லை. அது இரு ஜோடி கண்களின் தற்செயலான ஒரு சந்திப்புதான். ஆனால் அது தற்செயல் அல்ல என்னும் வாதத்தையும் நம்மால் வைக்கமுடியும். இத்தனை பரிச்சயமாய் ஒரு பார்வை, ஆழமாய் ஏதோ சொல்வதுபோல, முடிந்தால் ஒரு புன்னகையை அள்ளித் தாயேன் என்னும் கெஞ்சலை கொடுத்துவிட்டு நகர்வதை மறுப்பதற்கில்லை. அவ்வாறான ஓன்று அன்றைய முழுநாளையும் நம்மை தொந்தரவு செய்யாமல் விடுவதில்லை, அல்லது ஒய்வு நேரத்திலாவது வந்து போகும் கனவுகளில் ஒன்றாய் அமையாமல் போவதில்லை. 

 இப்படியான ஒரு வாதத்தையும் ‘தற்செயலாய் எதுவும் நடப்பதில்லை’ என்பதையும் ஆசிரியர் எல்லா கதைகளிலும் முன்வைக்கிறார். இதிலிருந்தே மாற்று மெய்மையையும் உருவாக்குகிறார். அதையே அவர் தன் கதைகளின் கோட்பாடாக்குகிறார்.    

 ஆசிரியர் பெரும்பாலான கதைகளில் தன்னை முன்னிலைப்படுத்தியே கதை படைத்திருக்கிறார். அதில் இயங்கும் கதாபாத்திரங்களில் முக்கிய கதாபாத்திரம் (Protagonist) எனப்படுவது எழுத்தாளரின் பார்வையிலும் கணிப்பிலுமாக நகர்கிறது. மற்ற பிற கதாபாத்திரங்கள் மைய கதாபாத்திரத்தின் துணைநிலை குணங்களைச் சுமந்து நடமாடுகின்றன. எல்லா கதைகளிலும் வரும் கதைசொல்லியாக வரும் கிருஷ்ணன், அவனின் நண்பர்களாகக் காட்டப்படும் இஸ்மாயில், எம் யுவன், சிவா போன்ற கதாபாத்திரங்கள் ஆசிரியரின் உணர்வுகளை ஒத்தியங்கும் பண்புகளைக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறே படைக்கப்பட்டிருக்கின்றன. வித்தியாசம் உணர்த்தும், எதிர்நிலை கருத்து புனையும் கதாபத்திரங்களாக (Antagonist) சிலவற்றையும் முன்வைக்கிறார்.  

ஆசிரியர் முக்கிய பாத்திரமாக உருவகப்படுத்தும் தன்னிலிருந்து, தன் உணர்வுகளை உடைத்து, பிரித்தெடுத்து, இணையாகவும் எதிராகவும் சமதளத்தில் மற்ற கதாபாத்திரங்களைப் பயணிக்கச் செய்கிறார். இது ஒரு வகையில் விவாதங்களுக்கான சுவாரசியத்தை உண்டுபண்ணுகிறது எனலாம். சில தர்க்கங்களை எண்களிட்டும் சொல்கிறார். யுவனின் இம்முறை, அனுபவங்களை மாற்று மெய்மையாய் கதை படைக்கும் உத்தி, தமிழ் இலக்கியத்திற்கு புதிது எனலாம்.  

எல்லா குணநலன்களையும் ஒரே கதாபாத்திரத்தின் மீதே அடுக்குவதற்கு பதிலாய், அவற்றை உடைத்து, பற்பல பாத்திரங்களை படைக்கும் உத்தியை சக எழுத்தாளனுக்கும் அறிமுகப்படுத்துகிறார் யுவன் அவர்கள். 

தன்னை மட்டுமே பிரமாதமாய் கொண்டாடும் அல்லது தாழ்வாய் இறக்கிக்கொள்ளும் மனநிலை, தன்னை அடுத்தவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள், தான் பேசுவதை எவ்வாறு எடுத்துக்கொள்கிறார்கள் போன்றதான மனசிக்கல்களைத் (PersonalityPersonality Disorderdisorder) தவிர்க்க ‘நான் என்னும் நிலை’யிலிருந்து விலகுதல் உளவியல் ரீதியாக ஒரு தீர்வாகக் காட்டப்படுகிறது. அவரின் ‘கருநிற மை’ சிறுகதை ஓர் எடுத்துக்காட்டு. இன்னும் பல கதைகளிலும் இம்மாதிரியான உளவியல் சிக்கல், அதை விடுவிக்கும் நோக்கு அனைத்தும் விரவிக்கிடக்கின்றன.    

கதைசொல்லியாக வரும் கிருஷ்ணன், அவரின் மனைவி பத்மினி, பணியாற்றிய வங்கி சூழல் போன்றவை ஆசிரியரின் நிஜவாழ்வு தன்மையை சுட்டும் விதமாய் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

“எப்போதும் உன்னைப் பற்றியே நினைக்கிறாய்..” என்று இன்னொரு கதைசொல்லியாக வரும் இஸ்மாயில் சொல்கிறார். 

அதிகபட்சமான நினைவுகள் நம்மை சார்ந்தே இருக்குமானால் மன அழுத்தத்தின் பிடியில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆசிரியரும் அவ்வட்டத்துக்குள்ளே இயங்குவதாகக் கணிக்க இயலுகிறது.

கதைசொல்லியாக இருக்கும் ஆசிரியரின் இம்மாதிரியான உடைத்தெழுதும் பாணி, அவரின் படைப்புகள் அனைத்தையும் உள்வாங்கும் ஒரு வாசகனுக்கு, தன் மனசிக்கலை விடுவிக்கும் வியூகமாகவே, ஆசிரியர் இவ்வாறு எழுதிவருவதாகக்கூட படலாம். உதாரணமாய், ‘இடம் பெயர்தல்’ என்னும் கதையைச் சொல்லலாம். தன் வாழ்வில் காணாமல் போனதாகக் கூறப்படும் வருடங்கள் குறித்து எழுதியிருக்கிறார். அதை கதையாய் ஏற்றுக்கொள்வதை விட அனுபவ குறியீடாய் வாசிப்பது சுலபமாகவும் நேர்மையாகவும் உள்ளது. 

பெரும்பாலான கதைகளில், ‘நான்’ என்னும் தன்மை இடத்திலிருந்து எழுதப்பட்டிருப்பது குறித்து, ஆசிரியரும் விளக்குகிறார், அது அவருக்கு எளிதாய் இருப்பதாக. கிருஷ்ணன், அவரின் மனைவி பத்மினி, இரு குழந்தைகள் என்ற குடும்ப நிலை, அவரின் வங்கி உத்தியோகம், வேலை மாற்றம், உயரதிகாரிகள், பணி சூழல, பிறந்து வளர்ந்த கிராமம், பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை, நட்பு வட்டம் போன்றவை அவரின் அனைத்து படைப்புகளிலும் காணக்கிடைக்கின்றன. 

இம்மாதிரியான அனுபவ எழுத்துகள் சமயங்களில் வாசிப்பு அனுபவத்தைப் பிரமாதப்படுத்துகிறது. நமக்கென இருக்கும் அனுபவங்களை அதனுடன் இணைத்துப்பார்த்து ரசிக்கவும் வருத்தப்படவும் மகிழவும் வைக்கின்றன. ஆனால் சலிப்பையும் சில பொழுதுகளில் மறுக்காமல் தருகின்றன. படித்ததையே மீண்டும் மீண்டுமாய் வாசிக்கும் ஓர் உணர்வுக்குள் வாசகனைப் புகுத்திப்பார்க்கின்றன. ஒரு மனசோர்வு ஏற்படுவதைத் தவிர்க்க இயலவில்லை. 

கிருஷ்ணன், சிவா போன்று கதைசொல்லிகளாக வருகிறவர்கள் கதைகள் முழுமையும் தங்கள் அனுபவங்களைச் சொல்லிக்கொண்டேச் செல்கிறார்கள். கதைகளின் ஓட்டம், மொழிவளம் சுவாரசியம் கூட்டுகின்றன. வாசிப்பின்பமும் அதிகரிக்கிறது, ஆனால் முழுமையடைவதில்லை. கதையின் படிமம் என்று ஏதும் குறிப்பிட்டு சொல்லமுடியாத நிலையில், இவ்வாறான நவீனத்துவம் வாய்ந்த படைப்புகள் இலக்கியத்தில் ஏற்கப்படவேண்டிய முகமே.   



எழுத்து மெய்மை   

கவிதையானாலும் கதைகளானாலும் எப்படைப்பானாலும் யதார்த்தத்தைப் பறைசாற்றும் வண்ணம் அமைபவை விருப்ப வாசிப்புக்குள் அடங்குகின்றன. நினைவுகளின் இயல்பு நகர்வை நனவுகளில் உணர்வது, ஞாபக அடுக்குகளைக் கலைத்து கலைத்து அடுக்குவது, கனவுகளுக்கு உருவமும் உயிரும் கொடுப்பது, தன்னை விட்டு தான் வெளியே நிற்பது போன்றவை, மனித மனதின் மிகவும் நுட்பமான நிகழ்வுகளுள் ஓன்று. அதை தன் கதைகளின் வெவ்வேறு பரிமாணங்களின் மூலம், யுவன் சந்திரசேகர் அவர்கள் தானும் உணர்ந்து, நம்மையும் உணரவைக்கிறார். அனுபவங்களின் வழியாக இலக்கியத்தின் புதிய மெய்மையாய், மாற்று மெய்மையை படைத்திருக்கிறார் ஆசிரியர். தமிழ் இலக்கிய படைப்புலகின் ஆளுமைகளில் ஒருவராக, உளவியல் வழி, யதார்த்தத்தை மிகச் சிறப்பாய் கட்டமைத்திருக்கிறார் என்பதில் நமக்கு பெருமிதமே.



****************** 


கட்டுரை | எழுத்தாளர் அகிலா  

(கருத்தரங்க கட்டுரை) 
(உலகத் தமிழ் பண்பாட்டு மையம், பன்னாட்டு கருத்தரங்கு 

டாக்டர் என் ஜி பி கலை அறிவியல் கல்லூரி, கோவை, 

தலைப்பு : வைகை தமிழ் : எழுத்தாளர் யுவன் சந்திரசேகர்

இடம் : தியாகராசர் கல்லூரி, மதுரை)

(8.12.2017)




 


Tuesday, 22 August 2023

அறவி நாவல் : ஓர் அறிமுகம்

 அறவி நாவல் 

(உரை: கவிஞர் நித்யா)



அறவி புத்தகம் வாங்க,

கவிஞர் நித்யாவின் அறவி புதினம் குறித்த உரைக்குள் 'பெண்ணின் சுயம்' குறித்த ஒரு நீண்டதொரு அலசல் நிகழ்கிறது. இத்தனை அதிகமான கதாபாத்திரங்கள், பெண்ணின் உடலரசியல், குடும்ப அமைப்பு, ஆண் தோழமை என்ற பலவித அடுக்குகளுக்குள் இருக்கும் என்னுடைய 'அறவி' புனைவுக்குள் அநாயாசமாக சுயத்தைத் தேடியிருக்கிறார் உரையாசிரியர். அகம் சார்ந்து இயங்கும் பெண்களை அடையாளப்படுத்துகிறார். புனிதம் குறித்த அர்த்தப்படுத்துதல் சிறப்பு. 'வசந்த காலத்திற்குத் தயாராகும் இலையுதிர்க்காலம் போல' என்று குறிப்பிடுகிறார். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் நிகழ வேண்டிய உணர்வு இதுதான் என்பதை புதினம் சுட்டியிருக்கிறது என்று நான் நம்புகிறேன். நன்றிங்க நித்யா. 


"விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்

சிட்டுக் குருவியைப் போலே" 

எனும் பாரதியின் குரலை, அறவியின் ஒற்றை குரலாய், நான் பதித்திருப்பதையே, 'விடுதலையாகி நிற்பாய்' என இவ்வுரைக்குத் தலைப்பாக்கி இருக்கிறார் நித்யா அவர்கள். 

அறவி புதினம் குறித்த ஒவ்வொருவர் உரையிலும் ஒவ்வொரு பார்வையை நான் உள்வாங்குகிறேன். நன்றியுடன் நான்.. 


****************************


விடுதலையாகி நிற்பாய் - நித்யா 

..............................................................

"விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்

சிட்டுக் குருவியைப் போலே"

-பாரதியார்

                           

                                  விடுதலை என்பது என்ன? சுதந்திரம் என்பது என்ன? எதிலிருந்து விடுதலை? எதற்காக? யாரிடமிருந்து? அதிலும் ஒரு பெண்ணுக்கான சுதந்திரம் எதுவாக இருக்கும்? ஒரு பெண்ணுக்கு சுதந்திரம் யாரிடமிருந்து பெறப்படுகிறது? பெரும்பாலான நேரங்களில் சுதந்திரம் என்பது தனக்குத்தானே வழங்கிக் கொள்வதாக அமைகிறது. குடும்ப அமைப்போ, சமூக அமைப்போ தரக்கூடியதைக் காட்டிலும், நமக்குள்  நிகழ்ந்து கொண்டிருக்கும் அகப் போராட்டத்தில் வென்றோ, தன்னுள் ஒளிந்து கொண்டிருக்கும் தனது வலியை சத்தமிட்டு அழுது தேற்றவோ சுதந்திரம் தேவைப்படுகிறது.

                                 எத்தனை குடும்பங்களில் பெண்கள் தனக்காகவும் வாழ்கிறார்கள் என்று கணக்கிட்டால் பெரும்பாலும் விழுக்காடு குறைவாகவே இருக்கும். பெண் என்பவள் ஒரு சுயம். அவள் அம்மாவோ, மனைவியோ, மகளோ, மருமகளோ மற்றும் பெயர்களும் அவற்றிற்கான பொறுப்புகளோ அல்ல. ஆனால் பெண் என்பவள் பெரும்பாலும் மேற்சொன்ன பிம்பங்களுக்குள்ளே தான் வாழ்ந்துகொண்டிருக்கின்றாள். அவளுக்கான படிப்பினை அவளை அப்படித்தான் வார்த்தெடுக்கிறது.

                                இந்நாவல் மூன்று தலைமுறைப் பெண்களையும் அவர்களுக்கிடையேயான உறவுமுறை, பிணக்குகள், படிப்பினைகள் பற்றியும், பெண்களுக்குக் கிடைக்கும் கல்வி எப்படி தன் பார்வையை மட்டுமல்லாது, தனது முந்தைய தலைமுறையையும் அவர்களின் பார்வையையும் மீட்டெடுக்கிறது, குடும்ப வாழ்க்கை பெண் சார்ந்தும், பெண்ணைச் சிதைத்தும் தன்னை எப்படி வடிவமைக்கிறது என்பது பற்றியும் பேசுகிறது. செல்லம்மா என்னும் ஆச்சி, அவளது பேத்தி தேவகி, தேவகியின் தோழி வசு, அவர்களுக்கிடையே நிகழும் கடிதப் பகிர்வு, கடிதத்தின் மூலம் தேவகியும் வசுவும் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது, தேவகி மற்றும் வசுவின் குடும்பங்கள், தேவகியின் மகளான யமுனா தனது தாயின் குழந்தைப்பருவ வலியைக் களைவது, யமுனாவின் திருமண உறவு முறிவு மற்றும் திருமண உறவு குறித்த புரிதல், வசுவின் இளைய மகன் சரவணனுடன் யமுனாவின் புதிய பயணம் என்று பயணப்படுகிறது. மேலும் அறவி நம்மை திருச்செந்தூரிற்கும், இங்கிலாந்துக்கும் அழைத்துச்செல்கிறாள். வீடு என்பது செங்கற்களால் மட்டுமானதல்ல, வீட்டில் பெண் தனது உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் நிரப்பிவைக்கிறாள். வீடென்பது அவளது ஆளுமை என்றும் அவ்வீடுடனான அவர்களது பிணைப்பு பற்றியும் பேசுகிறது இந்நாவல்.

 

பெண்ணுடல்:                                

                         சிறுவயதில் உடல் உறுப்புகள் பற்றிய எந்தவொரு அறிவும் இல்லாத எப்படி மற்றவர்கள் தன்னை தொட அனுமதிக்க வேண்டும், ஓர் ஆண் தன்னைத் தொட்டால் அது தவறு என்ற புரிதல் இல்லாத சிறுமி. தனது பெற்றோரை இழந்து தனது ஆச்சி செல்லம்மா வீட்டில் வசிக்கும் சிறுமி தேவகி காய்ச்சலுற்ற பலவீனமான நிலையில் உறங்கிக்கொண்டிருக்கும்போது கொடிய மிருகத்தால் காயப்படுத்தப்படுகிறாள். ஆனால் காயப்பட்டது என்னவோ அவள் மனம்; அவளது குழந்தைப் பருவம்.

                         தன் அனுமதியின்றி தன்னுடைய உடலில் நிகழ்த்தப்படுபவை அனைத்துமே மனதை பாதிப்பவை, உடலோடு சேர்ந்து மனதையும் சிதைப்பவை.

                        தன்னைத் தொடுவது தன்னுடைய பெரிய மாமன் என்று அறிந்தும், எதற்காகத் தன்னை இப்படித் தொடுகிறான் என்று தெரியாமலேயே அன்று அந்த நிகழ்வு அவளுக்கு நடந்தேறுகிறது. ஒரு நாள் மட்டுமா? தொடரும் அந்த மோசமான நிகழ்வால் தேவகி எத்துணை பயந்து போகிறாள்… அவள் கண்களில் தெரியும் அந்த மிரட்சி எத்தனை கேள்விகளை முன்வைக்கிறது. சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தொற்றால் வேதனை? எதனால் இப்படி ஆனது என்ற புரியாமை. இன்னும் தேவகிகள் இதே கேள்விகளோடு தான் நம்மை மிரள மிரளப் பார்க்கிறார்கள்.

                        தனக்கு நடந்தது தவறு என்று தெரியாமலும், தன்னை மாமா இப்படி அணுகிவிட்டாரே என்ற குழப்பத்திலும் தவிக்கிறாள். அதைத் தனது ஆச்சியிடம் சொன்னால் மாமா உறவு இல்லாமல் போய்விடும் என்ற பயத்தில் உண்மையைச் சொல்லாமல் தேவகி தவிர்க்கிறாள்,- மனதளவில் பாதிக்கப்படுகிறாள்.

                      சிறுவயதிலேயே பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளைக் கையாளும் குழந்தைகள் மனரீதியாக அதிகம் பாதிப்படைகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு வகையான அழுத்தத்தோடு பாதுகாப்பற்ற மனநிலையிலேயே வாழ்கிறார்கள்.

அதனால் ஒவ்வொரு இரவிலும் கனவுகள் வருகின்றன. அவள் உடல் காயப்படுத்தப்படுகிறது. அவளது பயந்து மிரள்கிறாள்.

“என்னைய.... என்னைய.... யாராவது காப்பாத்துங்க” என்று தேவகி மட்டுமா குரல் எழுப்புகிறார். அது ஒரு தேவகியா எத்தனை தேவகிகள், வாசுகிகள், வசுமதிகள் என்று எத்தனை எத்தனை பெண்கள்.

                      பெரும்பாலும் அனைத்து வகையான குற்றங்களும் உடலின் பேரிலும், காதலின் பேரிலும் நிகழ்த்தப்படுகின்றன. நான் உன்னை நேசிக்கிறேன் என்பதில் தொடங்கும் அன்பு உடலைக் கைப்பற்றுவதற்கான ஏற்பாடாகத் தான் இருக்கிறது. பெண் ஒருபோதும் தானாக வாழ அனுமதிக்கப்படுவதேயில்லை. சுயம் தொலைத்த சூழ்நிலைக் கைதியாகவே அவள் வெவ்வேறு உறவின் பெயர்களில் வலம் வருகிறாள். அப்பெயர்கள் தருகின்ற பொறுப்பு, அங்கீகாரம் என்று அதற்குள்ளாகவே தன்னை நிறுத்தி வைக்கிறாள். அதிலேயே நிறைந்து கரைந்து போகிறாள், பிறகு நான் தனி மனுஷி தனக்கென்று தனி விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன என்பதை மறந்து சுயம் தொலைத்தவளாகவே வாழ்ந்து மாண்டும் போகிறாள்.

                     வசுவும் அப்படித்தான்… தன்னுடைய நெருங்கிய தோழி தேவா மன வளர்ச்சி குன்றிய ஓர் ஆணைத் திருமணம் செய்யப்போகிறாள் என்பதைத் தடுத்து நிறுத்த முற்பட்ட வசு, திருமண உறவில் உடல் இணைவு எத்தனை முக்கியம் என்பதை உணர்ந்த, தன் தோழிக்கு அநியாயம் நடக்கக்கூடாது என்பதை உணர்ந்த வசு தான் பின்பு தனக்கு அநியாயம் நடக்கிறது. அதை நாமே அனுமதிக்கிறோம் என்பதை மறந்தவளாகிறாள்.

                      மறுத்தல், வேண்டாம், பிடிக்கவில்லை என்று சொல்வதெல்லாம் தவறானதே என்ற கருத்து பிம்பம் நம்மிடையே நிலவிவருகிறது. பிடிக்காத உடையை, பிடிக்காத உணவை, பிடிக்காத படிப்பை, பிடிக்காத வேலை, பிடிக்காத உறவு என்று பிடிக்காததைச் செய்து கொள்கின்ற, ஏற்றுக்கொள்கின்ற மனோபாவம் நாளடைவில் மன அழுத்தத்தையும், சுயத்தை இழப்பதற்கான அச்சாணியாகவும் மாறக்கூடும்.

                    தனக்கு ஒன்று வேண்டாம் என்று மறுப்பது சுயத்திற்கான ஆரோக்கியமான விடயம்… அதே போல தனக்கு ஒன்று வேண்டும் என்று கேட்பதும், தனக்கு என்ன வேண்டும் என்கின்ற தெளிவும் தான் சுயத்தை மேம்படுத்துகிறது. சுயத்தை இழந்து செய்யப்படுபவை அனைத்தும் சலிப்பையே தரும்.


நவீன பெண்கள்                    

                            21 ஆம் நூற்றாண்டுப் பெண்களுக்கு தனக்கு என்ன வேண்டும் என்கின்ற தெளிவு இருக்கிறது. உறவுகள் குறித்தும், திருமணம் குறித்தும் அவர்களிடையே புரிதல் இருக்கிறது. திருமணம் என்பது ஒரு சாதனை அல்ல. அனுசரித்துக் கொண்டேயிருப்பது ஒன்றும் புனிதம் அல்ல என்ற நோக்கை கல்வி அவர்களுக்கு வழங்கியிருக்கிறது. அப்படிப்பட்ட பெண் தான் யமுனா… அவளது தாய் தன்னுடைய திருமண முறிவு குறித்துக் கவலையுற்று, “யம்மு நான் வாழ்ந்த இந்த அறவி வாழ்வை நீயும் முன்னெடுத்து விடாதே. அது ஒரு கொடுங்காலம் பெண்ணுக்கு” என்ற போது, “அம்மா இப்போது பெண்களின் உலகம் மாறிவிட்டது. ஒவ்வொருவரும் எங்கள் தனிப்பட்ட உரிமைகள், விருப்பங்கள் பொறுப்புகள் தாண்டி தனிமனிதர்களாக வாழக் கற்றுவருகிறோம் என்று கூறுகிறாள்”. உண்மை தானே! 

                            தனிமனிதராக நாம் நம்மை உணர வேண்டியது அவசியமும் கூட. ஆனால் யமுனாவைப் போல் வசுவாலும், தேவகியாலும் யோசிக்க முடியமா? அல்லது செல்லம்மாவால் தான் முடியுமா? அவர்களுக்கு இப்படி யோசிக்கவேண்டும் என்று கூடத் தெரியாமல், தன்னை ஒரு குடும்ப அமைப்புக்குள் இருத்தி, ஏதும் அற்றவர்களாக ஆனவர்கள். இது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் உணர்வுச் சங்கிலி. இதிலிருந்து அறுபட்டு புதிதாகத் தன்னை மீட்டெடுக்கக் கல்வி என்னும் ஆயுதம் தான் உதவும்..உதவியது.. உதவுகிறது. 

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு மட்டுமல்ல… 

கற்பவரால், கற்றலால் தான் தன்னைப் பற்றிய சிறப்பை உணரவும் முடியும்.  

                       அதற்கு நாம் சற்று நமது வட்டத்திலிருந்து வெளிவந்து சிந்திக்கவேண்டும். ஏன், எதற்கு, எதனால் என்று கேள்விகள் கேட்கவேண்டும். கேள்விகள் தான் மாற்றத்தை அசைத்துப்பார்ப்பவை. கேட்கப்படும் கேள்விகள் பெறுவது விடைகளை மட்டும் அல்ல, புதிய பார்வையை, புதிய அணுகுமுறையை, புதிய தலைமுறையை…

                       அப்படித்தான் ஈரோட்டுக்கிழவன் கேட்டான், “பெண் ஏன் அடிமையானாள்” என்று… விடைகள் கிடைத்தன, கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. இன்னும் கிடைக்கும் இப்போது கேள்விகள் ஒன்றானாலும், கேட்கப்படுகின்ற குரல்கள் நிறைய. அந்தக் குரல்களில் ஒரு குரலாகத்தான் யமுனாவும், அதற்கான விடையாகத்தான், தன்னுடைய தாயை மீட்டெடுக்கிறாள்.

                         தன்னைப் பற்றியும், தன் சுயத்தைப் பற்றியும், தனது வலியையும், கடந்தகாலத்தையும் ஏற்றுக்கொள்ள மெல்லப் பழகும் தேவகி, தன்னுடைய தோழியான வசுவிற்கு ஒரு புதிய பார்வையை, குடும்பத்திற்காக வாழ்ந்தது போதும் உனக்காகவும் வாழக் கற்றுக்கொள் என்கிறாள். 



பெண்ணின் குடும்ப அமைப்பு 

                        தன்னுடைய கணவன், மகள், மருமகள் பேரக்குழந்தைகள் அனைவரையும், காலை உணவு, மதிய உணவெல்லாம் அளித்து அவர்களைத் தயார்படுத்தி அனுப்பும் வசு தன்னையும் தயார்படுத்த மறந்தேபோகிறாள். தனக்கும் வயிறு இருக்கிறது அதற்கும் உணவளிக்கவேண்டும் என்பதை மறந்தவளாக தன்னை விட வீட்டுவேலைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவளாக சுயம் தொலைத்தவளாக மாறியிருக்கிறாள் தன்னை உணராமலே.

                      இந்தச் சமூகம், குடும்ப அமைப்பு பெண்ணை எப்படி வைத்திருக்கிறது? உணர்வுச் சுரண்டல், உழைப்புச் சுரண்டல் என பெண்ணை அவளது பலம் கொண்டும் அவளது பலவீனம் கொண்டும் கட்டமைத்திருக்கிறது. இது தகவமைத்துக்கொள்ளவேண்டிய, கொண்டிருக்கின்ற காலம்.

                       உடலுறவில் ஈடுபட்டால் ஏற்படும் பிரச்சனைகளை அறிந்தும் அதனால்  உடலும் மனமும் பாதிக்கப்படுகிறது என்பதை உணர்ந்தும் வசு தனது கணவனுக்கு இணங்குகிறாள். பிறகு தொடர் இரத்தப்போக்கு மாத்திரைகள் என்று அவதியுறுகிறாள். பிறகு தேவகியுடனான கடிதப் பரிமாற்றம், தன் உடலுக்கு செவி சாய்க்கும் விழிப்பைத் தருகிறது. 

                       கணவனாக இருந்தாலும் அனுமதி பெற்றே அணுகவேண்டும் என்ற சட்டமும் புரிதலும் இல்லாத காலம். பெண் உடல் ஆணின் தேவைக்காக என்பதை மறுக்காத பெண் சமூகம். நாள் முழுக்க வீட்டு வேலைகள் செய்து, அனைவரது தேவைகளையும் பூர்த்திசெய்து களைத்து சலித்த பெண்ணுக்கு இரவும் அவளது உடலும் அவளுடையது இல்லை என்பது எத்தகைய வேதனையைத் தரும். கணவன் தான் என்றாலும் உடலுறவால் தன் உடல் பாதிக்கப்படுகிறது என்பதை அறிந்தும் மறுப்பு சொல்லாதது வசுவின் குற்றமென்றாலும், அப்படியான ஒரு படிப்பினையைத் தானே அவளது முந்தைய தலைமுறைப் பெண்கள் கற்றுத்தந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது வசுவும், அம்மாக்களும் அதிலிருந்து மீளவும், மாறவும் முயல்வதே சற்று ஆறுதலளிக்கிறது.

                       வசு அறுவைசிகிச்சை செய்து கொள்கிறாள். அதனால் தன்னுடைய கணவன் வேறொரு பெண்ணோடு தினமும் இருந்துவருகிறான் என்று அறிந்து அதை அறிவோடு அணுகி  முற்றுப்புள்ளி வைக்கிறாள். அதன் பிறகான நாட்களில் வசுவின் கணவர் இறந்துவிடுகிறார். இழப்பு என்பது வெறுமையை நிறைத்துச்செல்கிறது ஏன் எப்படி இனி என்ன செய்வது என்று கலங்கவைக்கிறது. வசுவும் தனித்துக் கலங்கிக்கொண்டிருக்கும் போது பெங்களூரில் தனியாக வசிக்கும் வசுவின் இளைய மகன் தன்னோடு வந்துவிடும்படி அழைக்கிறான். வசு தன்னை மாற்றிக் கொள்ள அவளது இளைய மகனான சரவணன் உதவுகிறான். ஆனால் முதலில் மாறியது அவன் தான். தன்னுடைய கூண்டை விட்டு வெளிவந்ததும், தனது காதலால் அவன் கற்றுக் கொண்ட விடயங்களுமே அவனுக்கு வாழ்வைப் பற்றிய தரிசனத்தைத் தந்தன. தன் அம்மா  இன்னும் காணாத உலகை அறிமுகப்படுத்துகிறான். 

                        மேலும் கூண்டுக்குள் இருப்பதைப்போலவே அதிலிருந்து வெளிவந்து வாழ முற்படுவதும் சற்றுக் கடினம் தான். தனக்குச் சிறகிருப்பதை மறந்ததும், அந்த செளகர்ய வாழ்விற்குப் பழகியதும்தான் அதற்குக் காரணம். அதன் பிறகு பறப்பதும், புதிய வெளியைக் கையாள்வதும் முயற்சியினாலும் விருப்பத்தினாலும் நிகழ்வது.

                      அது தான் வசுவுக்கும் நேர்கிறது. தனது இளைய மகனோடு பெங்களூர் வந்த பிறகு அனைத்துமே புதிதாகத் தெரிகிறது. புதிய உலகம் அவளை இரு கைக்கூப்பி வரவேற்கும் போது சற்று மிரள்கிறாள். பிறகு ஒவ்வொன்றாகக் கற்றுக்கொண்டாலும், பெங்களூர் வந்த பிறகு, தனது ஆளுமை பொருந்திய தான் கட்டமைத்து உருவாக்கிய வீடு தன் கையைவிட்டுத் தனது மருமகள் ஆளுமைக்குச் செல்வதைத் தாங்கமுடியாது தவிக்கிறாள். அம்மாக்கள் இப்படித்தான்… தான் இல்லையென்றால் வீட்டில் ஒன்றும் சரியாக நடக்காது என்பதை நம்புபவர்கள். நம்பப் பழக்கப்படுத்தப்பட்டவர்கள். வீட்டில் உள்ள அனைவரது தேவைகளையும் தன்னைத் தவிர யாராலும் சரியாக கவனிக்க இயலாது என்று எண்ணிக்கொள்பவர்கள். உங்க அம்மா இல்லைனா வீடு  நல்லாவே இல்லடா என்று கணவனும், பிள்ளைகளும் சொல்வதில் அவளுக்கு அத்தனை பெருமிதம் வாய்க்கிறது. “ஒரு வேலைக்காரி போலத்தான் நா இந்த வீட்ல இருக்க”னு சொல்லும் அம்மாக்கள் மறைமுகமாக, தான் இல்லாமல் அனைவரும் சற்றுத் தவிக்கும்படி செய்துவிடுகிறார். வசு சரவணனோடு வந்தபிறகு, அவள் செய்த வேலைகளைச் செய்ய நான்கு வேலையாட்கள் வைத்திருந்தார் வசுவின் மருமகள். அவளது ரசனைக்கு ஏற்ப வீட்டைச் சிறிது மாற்றியிருந்தாள். 

                           வசுவும் தேவாவும், சரவணனுக்கும் யமுனாவிற்கும் திருமணம் செய்து வைக்க விரும்புகிறார்கள். வசு பெங்களூர் வந்த பிறகு, யமுனாவிற்குத் தனது கணவனுடனான விவாகரத்திற்குப் பிறகு , சூழ்நிலை ஏதுவாக அமைகிறது. கடிதத்தில் தொடர்ந்துகொண்டிருந்த தோழிகளின் உணர்வுப் பரிமாற்றம்  சரவணனோடு வந்த பிறகு இணையத்தின் வழியாகத் தொடர்ந்து, அது சரவணனும் யமுனாவும் இணைய உதவுகிறது.

                          வசுவும் சரவணனும் இங்கிலாந்து செல்வது என்றும், அங்கேயே  தங்கி சரவணன் தன்னுடைய  பணியைத் தொடர்வது என்றும் முடிவெடுக்கிறார்கள். ஆனால் ஏனோ வசுவிற்குத் தன்னுடைய வீட்டிற்கே சென்று விடவேண்டுமென்றும் தன் மிச்ச நாட்களை அங்கேயே கழித்துவிடவேண்டும் என்று நினைக்கிறாள்.

                         ஆனால்   நிலைமை வேறுவிதமாக இருக்கிறது. வீட்டில் இருப்பவர்கள் இனி வசு வரமாட்டாள் என்று வீட்டை அவர்களுக்கேற்றபடி மாற்றியிருக்கிறார்கள். தங்கள் வாழ்வில் வசுவின் இல்லாமயை எளிதாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இத்தனை நாளாய் வசு வலம் வந்த வீடு வசுவின் மருமகள்  அதிகாரத்திற்குள் வந்தது. இதை வசு தன்னுடைய வீட்டிற்குச் சென்றதும் உணர்கிறாள். தான் ஒரு விருந்தாளி என்ற உணர்வு மேலெழும்புகிறது. தான் இனி யாருக்கும் தேவையில்லை என்று உணர்கிறாள் .

                           அம்மாக்கள் தங்களது உலகத்தை வீட்டிற்குள் உருவாக்குபவர்கள். வீட்டினுள் இருக்கும் ஒவ்வொரு பொருளும் சுவர்களும் அவர்களோடு உரையாடுபவை. ஒவ்வொரு வீடும் வீட்டின் அறைகளும் பெண்ணின் கனவுகளையும், ஆசைகளையும், ஏக்கங்களையும் வலிகளையும் ஏமாற்றங்களையும் நிறைத்துக்கொண்டிருப்பவை. வீடு அவளது ராஜ்ஜியம். அது பறிபோன பின்னான இழப்பு, தனது குழந்தைகளுக்கென்று ஒரு துணை வாய்த்துவிட்டது. இனி என் துணையோ இருத்தலோ, தேவையில்லை என்ற நினைப்பு, தான் ஒரு ராணியாக வலம் வந்த வீட்டில் ஏதோ ஒரு விருந்தாளி போல இருக்க விரும்பாததோ. ஏதோ ஒன்று அவளை இவ்வுலக வாழ்விலிருந்து அழைத்துச்சென்றுவிட்டது. தேவா தனது நெருங்கிய தோழியை இழந்துவிட்டாள்….

                        வசுவின் இழப்பு தேவாவை பாதிக்கிறது. ஆனால் வாழ்வின் மீதான புதிய பார்வை, பக்குவம் அவளை அந்த இழப்பை ஏற்றுக்கொள்ளப் பழக்குகிறது. 


வாழ்தல் இனிதே

                       தேவாவிற்கும் ராய்ஸிற்கும் இடையிலான உறவு கவிதை போன்று இருக்கிறது. இளங்கவிஞனின் முதல் கவிதை போன்று. ஒரு ஆணுக்கும் பெண்ணுக்குமான உறவு உடல் சார்ந்தோ பெயர் சார்ந்தோ இருக்கவேண்டிய அவசியமில்லை.

                        மனதின் இளைப்பாறலுக்காக, பகிர்தலுக்காக, சக மனித வாஞ்சையுடனான தேநீர் கணங்களாக, ஞாபகங்களை மீட்டெடுக்கும் நடை  பயண உறவாக, கடந்த கால ஆழங்களில் இருந்து மீட்டெடுக்கும் காப்பானாக இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

                         ராய்ஸிற்கும் தனது கடந்த கால வலியை தேவகியோடு பகிர்ந்ததன் மூலம் சரிசெய்துகொண்டார். ராய்ஸின் போர்க்கால நிகழ்வுகள், உடல்கள் கதறல்கள், உடல்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள், தங்கள் குழந்தைப் பருவத்தை இழந்த சிறுமிகள் என அனைத்திலிருந்தும் வெளிவர தேவகியுடனான பகிர்வு உதவி செய்தது. ராய்ஸின் கடந்தகாலம் தேவகியைத் தனது கடந்த காலத்திலிருந்தும் வெளிவர உதவி செய்தது. தேவகி தனக்கு நேர்ந்ததை ஏற்றுக்கொள்ளவும், தனக்குள் காயப்பட்டு மருகிக்கொண்டிருந்த சிறுவயது தேவகியைத் தேற்றவும் கற்றுக்கொண்டாள். 

                          வாழ்க்கை  இப்படித்தான். கடந்த காலத்தோடு முடிந்துவிடுவதில்லை. அது நீண்டு கிடக்கிறது. வசந்தகாலத்திற்குத் தயாராகும் இலையுதிர்காலம் போல…. அப்படி ஒரு புரிதல் தரிசனம் தான் இங்கிலாந்து சென்றதும் தேவகிக்கு வாய்த்தது.

வாழ்தல் இனிதே….

                         

அறவியுடன் ஒரு பயணம் 

                      இறுதியாக, ஒவ்வொருவரும் தனக்காக நேரத்தை ஒதுக்கிக்கொள்ளவேண்டும். ஒவ்வொரு நாளும் தனக்குப்பிடித்த விடயங்களையும் செய்யவேண்டும். பேணுதல் சுயத்திலிருந்து தான் மலர வேண்டும்.

                        தனக்குப் பிடிக்காததை மறுக்க வேண்டும். சமையலறை வீடு தாண்டி ஓர் உலகம் இருக்கிறதை உணர வேண்டும். அதற்குக் குடும்பம் ஒத்துழைக்க வேண்டும். ஏனெனில் இவ்வாழ்க்கை சார்ந்ததும் இணைந்ததுமானது. காலம் காலமாக நிலவிவரும் பெண்கள் குறித்தான, பெண்களுக்கான கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைப் பெண்கள் தங்கள் தலைமுறைக்கேற்றபடி அமைத்துக்கொள்ளவேண்டும். 

                        பெண்ணுக்கான பற்றுதல் என்ன? அவள் தன் வாழ்க்கையை எதனோடு பிணைந்து வைக்கிறாள்? தன்னை எதைக் கொண்டு கட்டமைக்கிறாள் அவளது தேடல் என்ன? எதை அவள் இழக்கிறாள் என்ற கேள்விகளும் அதற்கான விடைகளுமாக அறவி நம்மை ஒவ்வொரு பக்கமாக அழைத்துச் செல்கிறது.

                       அறவியுடனான இந்தப் பயணத்தில் நாம் அறிந்து கொண்டதும் புரிந்து கொண்டதும் ஏராளம். தம்மைப் பற்றியும் அம்மாவின் சுதந்திரத்தில் எத்தனை எத்தனை சிக்கல்கள் பின்னப்பட்டிருக்கின்றன என்பதும் பெண் எப்படி எல்லாம் தன்னையும் தன்னைக் கொண்டு பிறரையும் மீட்டெடுக்கிறாள் என்பதுமாகும்.

அறவியை நாவலாகத் தந்த அகிலா அம்மாவிற்கும்,

சிறந்ததொரு படைப்பைத் தந்த

காலச்சுவடுக்கும் நன்றி.. 

 *************************

Friday, 11 August 2023

பெண் எழுத்தும் சிறுகதைகளும் | கட்டுரை

பெண் எழுத்தும் சிறுகதைகளும்

(9.8.2023 அன்று கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் நடந்த  
சாகித்ய அகாடெமி கருத்தரங்கக் கட்டுரை) 


Women’s Writing and Short Stories
Sahitya Akademi
Nari Chetna programme

பெண் எழுத்தும் சிறுகதைகளும்

(படைப்பாக்கம்: து. அகிலா
எழுத்தாளர், மனநல ஆலோசகர்
கோயம்புத்தூர்)


பெண் எழுத்து

                         பண்பட்ட அறிவார்ந்த சமூகம் என்பது தனி மனிதனின் விருப்பங்கள், முன்னெடுப்புகள், ஏமாற்றங்கள், மனமுறிவுகள், மகிழ்ச்சிகள், வருத்தங்கள் போன்ற அகவெளிபாடுகளை மட்டுமன்றி, சடங்குகள், சம்பிரதாயங்கள் அவற்றின் மீதான மதவொழுக்க கோட்பாடுகள், வர்க்கரீதியான பாகுபாட்டுக் குறியீடுகள், சாதீய நிலைபாடுகள், மொழி மற்றும் வரலாற்றுக்கூறுகள் என்று புறவயப்பட்ட கட்டமைப்புகளையும் சுமந்துக்கொண்டே இயங்குகிறது. காலம்காலமாய் அவன் படைக்கும் இலக்கியங்களும் மனிதனையும் அவன் இயங்கும் இச்சமூகத்தையும் குறித்து பேசிவருவதும், அதன் வழியே மொழி அதன் திண்ணத்துடன் வளர்ந்து வருவதும் கண்கூடு.  

                     படைப்புலகில் பெண்கள் எழுதும் படைப்புகளின் அவசியம் குறித்து நாம் பேசவேண்டியுள்ளது. இங்கு இரண்டு கண்ணோட்டங்களை எடுத்துக் கொள்வோம். 

ஒன்று, ரஷ்ய எழுத்தாளர் பியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் எழுத்துகள் குறித்து நாவலாசிரியர் துர்கனேவ் சொல்லும்போது, ‘அவரின் கதைகளில் இருக்கும் தத்துவார்த்த மனநிலை, நமக்குள் நிறைய கேள்விகளை எழுப்பிவிட தவறியதில்லை’ என்கிறார். ஒவ்வொரு படைப்பும் இவ்வாறான கேள்விகளை எழுப்ப தவறுவதில்லை. அதுதான் அந்த படைப்பின் மிகப்பெரிய உன்னதம். 

இரண்டு, கட்டுரையாளர் ஜோசப் பிராட்ஸ்கி (Josepy Brodsky) ‘Less Than One: Selected Essays’  என்னும் கட்டுரையில், 'படைப்பாளியின் சுயம் வெளிபடாத படைப்புகள் இல்லை' எனச் சொல்கிறார். 

இவ்விருக்கூற்றுகளையும் சரிவர நாம் நோக்கும்போது, ஒரு படைப்பாளியின் பால் பாகுபாடும் இதில் சில விழுக்காடுகள் பங்கேற்கும் உண்மை புலப்படும். பெண் படைப்பாளியின் சுயம் பெண்ணாகவே, பெண் உணர்வாகவே வெளிப்படும் என்பதும், அத படைப்பில் அவர் நம்முள் எழுப்பும் கேள்விகள் பெண் குறித்த புரிதலுக்கு நம்மை இட்டுச்செல்லும் என்பதும் உண்மை. 

                    இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலங்களில் பெண்களின் நிலை, பெண்கல்வியின் அவசியம், பெண்சிசு கொலை, குழந்தை திருமணம், வரதட்சணை கொடுமை, ஆணாதிக்க சிந்தனை, பெண்ணடிமைத்தனம், குடும்ப வன்முறை போன்றவற்றைப் பற்றி பெண்கள் பேசவேண்டிய எழுதவேண்டிய அவசியங்கள் இருந்தன. பெண்கள் தீவிரமாக எழுதத் தொடங்கிய காலகட்டமும் அதுதான். பெண் சமூக உளவியலை, பெண் படைப்பாளிகளால் நேர்த்தியாக தங்கள் படைப்புகளில் வைக்க முடிந்தது எனலாம். இம்மாதிரியான பெண்ணெழுத்துகளின் மூலமே பெண் குறித்த சமூக பார்வைகள் நமக்கு அதிகமாய் கிடைக்கப்பெறுகின்றன என்றும் கூட சொல்லலாம். இதுதான் பெண்ணெழுத்தின் அவசியம்.  

                   கவிதைகளில் பெண்ணுக்கான படிமங்களாய் உறைந்திருந்த மலர், நிலா, நாணம், மென்மை, கற்பு போன்ற சொற்கள் இன்று அர்த்தமற்றதாக மாறி காலங்கள் ஆகின்றன. எண்பதுகளில் எழுதிய மூத்த பெண் கவிஞர்கள் இரா மீனாட்சி, திரிசடை, கிருஷங்கனி போன்றோரின் கவிதைகளே அதற்கு சான்றாகி, அதன் பின்னான சுகிர்தராணி, சல்மா, குட்டி ரேவதி போன்றோரின் விளிம்புநிலை பெண்களைக் குறித்த கவிதைகள் பெண்ணெழுத்துலகில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது எனலாம். பெண்ணின் படைப்புலகம், அவர்கள் எழுதும் புனைவுகளில் பெண்ணுலகின் அழகியலையும் அறவியலையும் மட்டுமல்லாமல் அவர்களின் ஆக்ரோஷ உலகையும் வெளிப்படுத்தியதைக் காணலாம்.    

                    இருபத்தொன்றாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் சமகால பெண்களின் சமூக பிரச்சனைகளான, அதாவது பெண்கள் படித்து, வேலைக்குச் செல்லத்தொடங்கியிருந்த ஒரு காலகட்டம் அது.. பாலியல் வன்முறை, விவாகரத்து, இரண்டாம் விவாகம், போன்றவற்றைக் கொண்ட படைப்பாக்கங்கள் வரத்தொடங்கின. இன்றைய பெண் எழுத்துகளில் பெண்ணை புரிந்துக்கொள்ளவே முடியாது என்னும் கோட்பாடுகளை உடைக்கும்வண்ணம், பெண்ணின் மனம் சார்ந்த வெளிபாடுகளும், உடல் அரசியலும், பணியிடம் சார்ந்த பாலியல் சீண்டல்கள், குழந்தை பெறுதல் குறித்த விழிப்புணர்வு, தனியொரு பெற்றோராய் சமூகத்தில் வாழுதல் போன்றவைக் குறித்து வெளிப்படையாக படைப்புகள் மூலம் பேசப்படுகின்றன. 

                   சமகால தமிழிலக்கியத்தில் பெண்களால் படைக்கப்படும் புனைவுகளில் எழுத்துமுறை மாற்றங்கள் ஆச்சரியப்படுத்துகின்றன. நவீனத்துவத்தின் கூறுகளைத் தங்கள் எழுத்துகளில் கையாளுவதில் பெண் படைப்பாளர்கள் தனி கவனம் கொள்கிறார்கள். வரவேற்கத்தக்க மாற்றங்களை இன்றைய பெண் எழுத்துலகம் கண்டு வருகிறது.   


பெண்களின் சிறுகதையுலகம்

ஒவ்வொரு முறையும் ஒரு பெண் தனக்காக எழுந்து நிற்கும்போது, அவள் பெண்ணினம் முழுமைக்காகவும் எழுந்து நிற்கிறாள்.
என்கிறார் எழுத்தாளரும் பெண்ணியலாளருமான மாயா ஏஞ்சலோ


                    ஔவையாறில் தொடங்கி இன்றுவரை பெண்ணெழுத்தின் அவசியத்தை சமூகமும் இலக்கியமும் வெளிப்படுத்திக்கொண்டே வருவதைக் காணலாம். சமூக வாழ்வின் நேரும் பெண் விடுதலை சிந்தனைகளின் கூறுகள் படைப்பிலக்கியங்களில் வெளிபட தொடங்கி காலங்கள் ஆகின்றன.   

                   இருபதாம் நூற்றாண்டின் பெண் படைப்பாளிகளின் சிறுகதைகள் பெரும்பான்மை, குடும்பத்தில் இருந்து பெண்ணின் விடுதலை மற்றும் உரிமைகள் குறித்து பேசின. ஆணும் பெண்ணும் நிகரென கொள்ளும் குடும்ப வாழ்வே சமூகத்தின் அடித்தளம் என்று பேசின. சமையலறையும் வீடும் மட்டுமே பெண்ணுக்கானது அல்ல, கல்லூரியும் அலுவலகமும் பெண்ணுக்கானதே என்று பேசின. பெண் கல்வி மற்றும் குடும்ப உரிமைகள் குறித்தும் பொதுஜனப் பத்திரிக்கைகளில் எழுதப்பட்ட கதைகளால் வீட்டில் இருந்த பெண்களிடம் மனமாற்றம் ஏற்பட்டதை மறுக்கவியலாது. 

                   பெண் சமையலறை கடந்து வெளியுலகை எட்டிப்பார்த்த காலகட்டத்தில் அவளின் சமூக அச்சங்கள், கல்வி, பொருளாதார மேன்மை, அலுவலக வாழ்க்கை, குடும்பம் என்ற அனைத்தையும் சித்தரிக்கும் கதைகளாக எழுதியவர்கள்தாம் அம்பை, சிவசங்கரி, வாஸந்தி, ராஜம் கிருஷ்ணன், இந்துமதி, அனுராதா ரமணன் போன்ற பலர். இவர்களின் சிறுகதைகள் அன்றைய இருபதாம் நூற்றாண்டின் பெண்கள். இந்த பெண் கதாபாத்திரங்கள் ஆணின் அடுக்குமுறையை எதிர்க்கும் புரட்சி பெண்களாகவும், வரதட்சணை கோரும் மாப்பிள்ளை வீட்டாரை மறுப்பவர்களாகவும், திருமணத்தில் தன் அபிப்பிராயம் கோருபவர்களாகவும், காதல் மணத்தை அதிகம் ஆதரிப்பவர்களாகவும், கல்லூரி சென்று கல்வி கற்பவர்களாகவும், பணிக்கு செல்லும் பெண்களாகவும், அலங்கார விரும்பிகளாகவும், உடை கலாசாரத்தை மாற்றி அமைப்பவர்களாகவும் படைக்கப்பட்டுள்ளனர். 

                  அம்பையின் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை’ பேசும் பெண்ணின் நுண்ணரசியல் பேசப்படவேண்டிய ஓன்று.  சமையலறையை தவிர, வெளியுலகம் தெரியாத பெண்ணின் கடைசிகால வாழ்வின் உளவியல் குறித்து பேசுகிறது. திருமணம் என்று ஆனால், புகுந்த வீட்டில் சமையலறையை தன் கைக்குள் கொண்டுவருவதே பெண்ணின் மிகப்பெரிய இலட்சியமாய் போதிக்கப்பட்ட வரலாற்றைப் பற்றி பேசுகிறது இக்கதை. அம்பையின் கதைகளில் பெண்ணின் விடுதலை நோக்கு குறித்த பார்வை தெளிவாய் முன்வைக்கப்படுகிறது. அதுவே அவரை தேசிய அளவில் பேசப்படும் படைப்பாளியாய் உருவெடுக்க வைத்தது எனலாம். 

                  சிவசங்கரியின் ‘சோறு ஆறுதுங்க’ என்னும் சிறுகதையில், பெண்ணை ஆக்ரமிக்கும் ஆணின் ஆணவம் தெளிவாய் சுட்டப்படுகிறது. சினிமாவில் இயங்கிய ஒருவன் அதை விட்டுவிட்டு சொந்த ஊரில் புகைப்பட ஸ்டுடியோ வைத்து வாழ்கிறான். பெண்கள் குறித்த நல்ல அனுமானத்துக்கு அப்பாற்பட்ட கருத்துகளுடன் இருக்கும் அவன், வீட்டு வேலை செய்யும் புதிய பெண்ணொருத்தியைக் கண்டதும் அவளை அடையும் நோக்கில், தனது உதவியாளனை அழைக்கிறான். இவன் அந்த பெண்ணுக்கு தூண்டிலாய் கொடுக்க, வாங்கி வைத்திருக்கும் பிரியாணியை, வாத நோயால் படுத்தபடுக்கையாய் இருக்கும் கணவனுக்குக் கொண்டு செல்லும் கவனத்திலே இருக்கும் அவள், ‘நீ என்னைச் சட்டுபுட்டுன்னு அனுப்பிச்சா சூட்டோடே அதுக்குக் கொண்டு கொடுப்பேன் – அனுப்பிடறயா’ என்று தன்னுடைய வறுமையைச் சாதகமாக்கும் அந்த ஆணின் வக்கிரம் தெரியாமல் கேட்கும், பெண்ணின் இயலாமையும் அறியாமையும் புரியவருகிறது நமக்கு.  

                  இருபத்தொன்றாம் நூற்றாண்டின் கதைகள் சமையலறையே பெண்ணுக்கானது மட்டுமல்ல, ஆணுக்கானதும்தான்; குழந்தை பராமரிப்பிலும் ஆணுக்கு பங்குண்டு என்பதையும் எடுத்துரைத்தன. இன்று அக உணர்வுகளை வெளிபடுத்தும் கதைகளின் தளம் கூடியிருக்கிறது. இன்றைய பெண் எழுத்துகள் நவீன எழுத்துமுறையை கையாளவும் அவற்றுள் தங்களின் அக உணர்வுகளை கதையில் முதன்மைபடுத்தவும் தொடங்கியிருக்கின்றன. அன்றைய காலகட்டத்தில் ‘என் கதை’ எழுதிய கமலா சுரையா சந்தித்த  சமூகம் கொடுத்த உளைச்சலை இன்றைய பெண் படைப்பாளுமைகள் அசாதாரணமாக தங்களின் எழுத்தின் மூலம் கடந்து வருவதைக் காணும்போது பெண்களின் எழுத்துலகம் மாறிவருவதை பேருவப்போடு காணலாம். 

                  சமகால சிறுகதைகள் எழுத்துலகில் பெண் படைப்பாளிகளான உமா மகேஸ்வரி, கலைச்செல்வி, அகிலா, சல்மா, லாவண்யா சுந்தரராஜன், பிரமீளா பிரதீபன், ஐ கிருத்திகா, அம்பிகாவர்ஷினி, மலர்வதி, ஜா தீபா, விஜி முருகானந்தம் போன்றோரின் சிறுகதைகள் பெண் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் களமாக விளங்குகின்றன. பெண்ணின்  சமூக சிக்கல்களை ஆராயும் இவ்வெழுத்துகள், அவர்களின் உடல் சிக்கல்களையும் உளவியல் சிக்கல்களையும் சேர்த்தே பேசுகின்றன. 


சில கதைகள்: 

                   ‘மரப்பாச்சி’ என்னும் சிறுகதையில், உமா மகேஸ்வரி அவர்கள் பேசும் பெண் உளவியல் மிகப் பெரிது. மரப்பாச்சி பொம்மையின் உருவில் தோழியை, சக உணர்வாளியை பார்க்கும் சிறு பெண்ணொருத்தி, காதலின்பால் மயக்கமுறும் பொழுதில் மயிரடர்ந்த மார்பினை கொண்ட இளம் வாலிபனை கனவுகாணும் சொந்தத்தையும் மரப்பாச்சியிடமே காண்கிறாள். தன் உடம்பின் மீது ஆதிக்க செலுத்த முயலும் மாமாவினால் அவளின் கனவுகளின் இனிமை தவிடுபொடியாகிறது. உடல் என்பதன் மீதான அசூயை அவளை மரப்பாச்சி பொம்மையிடம் இருந்து விலக்குகிறது. மரப்பாச்சியை விட்டு விலகும் இந்த செயல், உடல் சிராயும் உலகத்துள் அதிரடியாக இழுத்து வரப்பட்டு தன் குழந்தைத்தனத்தை இழக்கும் வளரிளம் பெண்களின் உளவியலை சொல்கிறது.  யதார்த்தம் வேறாகவும் கற்பனை உலகம் வேறாகவும் சிதைந்து வாழ்தல், வளரிளம் பெண்களுக்கு பெரும் மனச்சோர்வை உண்டுபண்ணும் என்பதை இக்கதையில் சுட்டுகிறார்.

                   லாவண்யா சுந்தரராஜனின் ‘செண்பகா சித்தி’ என்னும் கதை பெண்கள் குறித்த ஆண்களின் மனநிலையை அப்பட்டமாக பிரதிபலிக்கிறது. ஒரு பெண், அவள் அம்மாவாக இருக்கட்டும், சித்தியாக இருக்கட்டும், பாட்டியாக இருக்கட்டும், மனைவியாக இருக்கட்டும் யாராக இருந்தாலும் பெண்கள் என்றால், நெகிழ்ந்த உடை உடுத்தக்கூடாது, சிறுவயதில் இருந்து ஆணுக்குப் பிடித்தமானதாக இருந்த செயல்கள் இறுதிவரை அவனுக்குச் செய்யப்பட வேண்டும், பிடித்தமான சமையல்  செய்யவேண்டும், தோசையைக் சூடாக ஊற்றிக் கொடுக்கவேண்டும், வீடு கவனிக்க படவேண்டும், அன்பு, பாசம், பரிவு என்ற பெண்களுக்கான இலக்கணங்களில் குறைவு பட்டுவிடக் கூடாது என்பதை மிகத் தெளிவாகச் சொல்லிச்செல்லும் கதை இது. கதையின் நாயகன் திருமணம் ஆகாத இன்றைய இளைஞன். சிறுவயதில் தான் கண்டு ரசித்த அதே சித்தியே தனக்கு வேண்டும். திருமணமான குழந்தை பெற்ற சித்தியை அவன் வெறுக்கிறான், அவள் முன்பு மாதிரி பாசம் காட்டுவதில்லை என்பதற்காக. அவளின் ஆடை அலங்காரங்களில், அலுவலக பரிமாற்றங்களில் குறை காணுகிறான். பெண்ணை உடைமையாகக் கருதும் போக்கும் இங்கிருந்துதான் தொடங்குகிறது. அவளின் சிறு மீறல்கள் கூட பெரும் பிரளயமாக, அவள் தன்னை விட்டு போய்விடுவாள் என்னும் சந்தேகமாக, பயமாக உருக்கொள்ளும் சாத்தியங்களை, தன் குடும்பத்து பெண்களை தான் விரும்பும் பார்வையிலேயே வைத்திருக்க விரும்பும் ஆண்களின் செயலை இக்கதை சொல்லிச் செல்கிறது. 

                      ஜா தீபா அவர்களின் ‘ஊறா வறுமுலை’ கதையில், குழந்தையில்லா பெண்ணை கோவில் கோவிலாக அழைத்துச் செல்லும் கணவனை காட்டுகிறது. அவளின் வழியாக அந்த திரௌபதி அம்மனே பதில் சொல்வதாக கதை முடிகிறது. தவமிருக்கும் திரௌபதி அம்மனின் சிலையைப் பார்த்து பேச்சி என்னும் அந்த பெண் கதாபாத்திரம், 

“ஆம்பளைங்க மாதிரி எல்லாத்தையும் தூரப்போன்னு உதறிட்டா பொம்பளைங்க தவமிருக்க முடியும்.. ஆளு அழகா சேலை கட்டி நெத்தியில சந்திரா சூரிய நெத்திச்சூட்டி எல்லாம் வச்சிக்கிட்டுல்லா தவம் இருக்கா..’, பேசுவதாக வரும் இடம் சிறப்பு. 

ஆசிரியர் ஓரிடத்தில் சாமிக்கு உடை மாற்றுவதை இவ்வாறு எழுதுகிறார்: 

‘திரௌபதி அம்மனுக்கு வேறு சேலை அணிவிக்கப்பட்டது. பாண்டவர்களுக்கு திரை கட்டாமல் வேறு துண்டு வேட்டிகள் மாற்றப்பட்டன.’  

சேலை கட்டும்போது மறைவு இருந்ததை சொல்லாமல், வேட்டி கட்டும்போது திரை மறைப்பு இல்லாமல் போனதைச் சொல்கிறார். பெண் எப்போதுமே ஓர் உடைமைதான் என்பது இங்கு சொல்லாமல் சொல்லப்படுகிறது. 

                    ஐ கிருத்திகாவின் ‘சுமை’ என்னும் சிறுகதை ஏழ்மை நிலையில் இருக்கும் தாயொருத்தியின் கையறு நிலையை உறக்கப் பேசுகிறது. இறந்து போன கணவனின் அரை மாத ஓய்வூதியத்தில் ஜீவிக்கும் ஒரு தாய், தனது மகளின் திருமணத்தை குடியிருக்கும் வீட்டை அடமானம் வைத்து நடத்துகிறாள். மகளின் பிரசவம் மற்றும் குழந்தை சீர் போன்றவற்றிற்கான பணம், சிசேரியன் பிரசவ செலவுக்கே சரியாகிவிடுகிறது. மகளின் மாமியார், குழந்தை பிறந்ததும் சொன்னது தினமும் உறுத்திக்கொண்டே இருக்கிறது அவளுக்கு. 

“குழந்தைக்கு ஒரு பவுனில் செயினும் அரை பவுனில் வளையலும் போட்டிருங்க. இன்னும் மூணு மாசமிருக்கே.. நீங்க செய்வீங்க..” 

                          வீட்டுக்குவந்து செல்லும் உறவினர்கள், மறுமகன் போன்றோருக்கான சமையல், குழந்தை பராமரிப்பு, மற்றும் வீட்டுச்செலவுக்கென மளிகைக்கடன் ஏறிக்கொண்டே செல்கிறது. ஒரு நாள் மகள் சொல்கிறாள், ‘அம்மா! பாரேன்.. குழந்தை முகம் பார்த்து சிரிக்கிறாள்..’ என்று. இவளும், ‘மூணு மாசமாச்சுல்ல.. முகம் பார்க்கத்தானே செய்யும்..’ என்று. அவளுக்குள் இப்போது மூன்று மாதங்கள் முடிந்துவிட்ட அழுத்தம் வருகிறது. மீண்டும் அவளுள், ‘ஒரு பவுனில் செயினும், அரை பவுனில் வளையலும்..’ ஓடத்தொடங்குகிறது என்று முடிகிறது கதை. இந்த கதை அவள் அதற்கு என்ன செய்தால் என்னும் முடிவை நமக்குச் சொல்லவில்லை. எல்லா பிரச்சனைகளுக்கும் முடிவு கதைகளில் சொல்லப்பட வேண்டும் என்பதில்லை. நிலையை உணர்த்தினால் போதுமென ஆசிரியர் நிறுத்தியிருப்பதில் ஒரு சோகம் வாசிப்பவரின் எண்ணக்கிடங்கை சற்று அசைத்துப் பார்க்காமல் விடுவதில்லை. 

                            இந்த இடத்தில் உமா மகேஸ்வரியின் ‘வருகை’ என்னும் சிறுகதை நினைவுக்கு வருகிறது. அதை, மாப்பிள்ளையின் அம்மாவின் முன் கைகட்டி, தலைகுனிந்து குறுகி நிற்கும் பெண்ணைப் பெற்றஒரு தகப்பனின் அவலத்தை உமா மகேஸ்வரி அவர்கள், ‘நாற்காலி கூட அப்பாவை விட உயரமாய் தெரிகிறது’ என்று குறிப்பிடுகிறார்.  

                        பெண்ணியம் செல்வகுமாரியின் ‘கூடையில் ஒழுகும் ஈரம்’ என்னும் சிறுகதையில், மீனவ சமூக பெண்ணொருத்தி, கணவன் இல்லாத கையறு நிலையில் அதிலிருந்து மீண்டு வர மீன் விற்று குழந்தைகளை வளர்த்தெடுக்கிறாள். பெண்களின் இம்மாதிரியான சாமர்த்தியத்தை மட்டும் அதில் சொல்லிவிடு நின்றுவிடாமல், மீன் கூடையுடன் பொது பேருந்தில் பயணிக்கவியலா சங்கடத்தையும் அதனால் பிடித்துத் தள்ளப்படுவதையும், செய்யும் வேலையில் நேரும் சமூகத்தின் புறக்கணிப்பையும் பதியவைத்திருப்பார். 

                      கலைச்செல்வியின் ‘கட்டுக் கழுத்தியம்மன்’ சிறுகதை, சமூக கட்டாயமான குழந்தை பிறப்பை முன்னிலைபடுத்தும் சமூகத்தின் மூடநம்பிக்கைகளும் ஆணாதிக்க சிந்தனைகளும் பெண்ணுக்கான தடைகளாக எவ்வாறு அமைகின்றன என்று சுட்டுகிறது. பெரும்தனக்காரரான தன் கணவன் அவரிடம் உள்ள குறையால், தன்னை அணுகாமல் இருப்பதையும், அதனால் குழந்தையின்மையையும் தன் தாயிடம் பகிரும்போது, அந்த தாய் கொதித்தெழுகிறாள். அதை காணும் அப்பெண்ணின் கணவன், பெண்களுக்கு இத்தனை அடங்காத்தனமா என்னும் ஆண் ஆளுமையில் அவர்களை தீயிட்டு கொளுத்துகிறான். மௌனியாய் அதை காணும் அவரின் தம்பி அதற்கு வாழ்நாள் சாட்சியாய் இருக்கிறான். இறந்த தன் மனைவியை ‘பிள்ளைத்தாச்சி இறந்துவிட்டாள்’ என்று பொய் சொல்லி கோயிலும் எழுப்புகிறான். அதில் திருவிழாவும் நேர்த்திகடன்களும் பெண்களால் வழிவகையாய் நடத்தப்படுகின்றன என்னும் நிதர்சனத்தை சொல்லியிருப்பார் கலைச்செல்வி.

                   அகிலாவின் ‘நாமெல்லாம் வெயிலுக்கு பொறந்தவங்க’  என்னும் சிறுகதையில், தாயற்ற தன்னை அணுகும் தகப்பனை விலக்கி வைக்க தினமும் போராடி வாழும் பெண், அவன் இறந்து போகும் சமயம், அழாமல் அமர்ந்திருக்கிறாள். கதையின் முடிவில் ஆசிரியர் எழுதுகிறார் :

“‘ஆம்பளங்க யாராவது வந்து காலு விரல இழுத்து கட்டுங்கப்பா..’ என்று யாரோ சொல்ல, டெய்லர் சதாசிவம் தன் கையில் வைத்திருந்த ஒட்டுதுணியை வைத்து விரல்களை கட்டிக்கொண்டிருந்தார்.

‘அப்படியே மூக்கில பஞ்ச வச்சிருங்கண்ணே..‘ என்றாள் அமுதா சத்தமாக. மல்லிகாவும் ஜெகனம்மாவும் ஒருசேர அவளைத் திரும்பிப்பார்த்தார்கள். வெயில் சூடேற தொடங்கியிருந்தது.”    


                    பிரமீளா பிரதீபனின் ‘அது புத்தனின் சிசுவல்ல’ என்னும் சிறுகதையில், சித்தார்த்தன் வெளியேறிய பின்னான யசோதாராவின் நிலையை இன்றைய நவீன காலத்து பெண்ணுடன் ஒப்பிட்டு கேள்வி எழுப்புகிறார். ‘ராகுலன் பிறப்பான், ஆனால் அவன் புத்தனின் சிசுவல்ல..’ என்கிறார். பெண் உரிமைக்கான கட்டுடைப்புகள் அவரின் பல கதைகளில் நேருகின்றன. ‘உரப்புழுக்கள்’ என்னும் சிறுகதை தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களின் அன்றாட வாழ்வியலை எடுத்துச் சொல்கிறது. ஆண்களின் உடல் வன்மங்களுக்கு பலியாகும் அப்பெண்களின் அவலநிலை, கட்டிய கணவனே அடுத்தவனுடன் அவளைப் பகிரும் சோகம், அதனால் வெறுப்புறும் பெண் எடுக்கும் வித்தியாசமான ஆனால் அதே போன்றதொரு முடிவு போன்ற பெண் வாழ்வின் நெருக்கடிகள் இக்கதை முழுவதும் பேசப்படுகின்றன.      

                       மலர்வதியின், ‘லில்லி பெண்ணுக்கு அப்பனில்லை’ என்னும் கதை கன்னியாகுமரி மாவட்டத்து வட்டார வழக்குமொழியில் எழுதப்பட்டிருக்கிறது. தகப்பனில்லா சிறு பெண்ணின் உள்ளக்கிடங்கைச் சொல்கிறது. அவளின் தாய் அவள் தகப்பன் இறந்துவிட்டான் என்பதைச் சொன்னபோதும், அவளின் குழந்தை மனம் அதை ஏற்றுக்கொள்வதில்லை. 'அப்பன் மாதிரி' என்று நினைக்கும் அவளின் அப்பனின் கூட்டுக்காரன் நல்லவனில்லை, தன்னிடம் பாலியல் சீண்டல்கள் செய்கிறான் என்று தெரிய வரும்போது, அவள் அவளின் தாய் சொன்னதை நம்புகிறாள். ‘எனக்கு அப்பனில்லை.. வேறு யாரையும் அப்பனாக நினைக்கவும் முடியாது’ என்பதையே. பெண் குழந்தையைக் கூட ஆண் சமூகம் பார்க்கும் விதமே வேறு என்பதை இக்கதையில் காட்டியிருப்பார் ஆசிரியர். 

                     அராபிய பெண்ணியச் சிறுகதைகள் தொகுப்பில் (தமிழில் ஜான்சி ராணி) இருக்கும் பெண் படைப்பாளிகளுள் ஷரீஃபா அல் ஷம்லான், பத்ரியா அல் பிஷீர், டெய்ஸி அல் அமீர் போன்ற பெண் படைப்பாளுமைகளின் சிறுகதைகள் பெண்ணிய பேசுபொருளாய் வாசிக்க கிடைக்கின்றன. 

                     ஷரீஃபா அல் ஷம்லான்  அவர்களின் ‘இரகசியம் மிக இரகசியம்’ என்னும் சிறுகதையில் வரும் படித்து வேலைக்குச் செல்லும் ஒரு பெண் தனது கணவனின் திருமணத்திற்கு அப்பாற்பட்ட வேறொரு உறவு குறித்து அறிந்ததும், அந்த உறவை கலைத்துவிட்டு, சமூக கட்டாயத்துக்காக ஒன்றும் நேராதது போல அவனுடன் சேர்ந்து வாழ்தல் என்பதாக செல்கிறது கதை. அவன் அவளை ‘நீ மிக நல்லவள்’ என்று புகழும்போது, தான் தன் கணவனை மீட்டெடுத்து வந்ததை ‘இரகசியம், மிக இரகசியம்’ என்று அவள் சொல்வது இன்னும் வேதனை என்கிறார் ஆசிரியர். 

                    பத்ரியா அல் பிஷீர்  அவர்களின் ‘புதன்கிழமை நாட்குறிப்புகள்’ என்பதில், குடித்துவிட்டு வந்து தன்னை அடித்து துன்புறுத்தும் கணவனை வெறுத்தாலும் மற்றைய பொழுதுகளில் அவன் தன்னையும் தன் குழந்தைகளையும் சரியாகத்தான் கவனிக்கிறான் என்ற நிலைப்பாட்டை கொண்டிருக்கும் பெண்ணின் மன உளைச்சலைச் சொல்லும் கதை இது. பொறுமை என்பதற்கு பெண்ணின் அளவுகோல் என்னவென்பதை வாசிப்பவர்களை யோசிக்க வைக்கும் கதை இது. 

                   டெய்ஸி அல் அமீர்  அவர்களின் ‘பூனை, பணிப்பெண், மனைவி’ சிறுகதையில், பணக்கார வீடு, அதில் தன் போகத்துக்கு வாழும் கணவன், அவனை தட்டிக் கேட்கவியலாத கையறு நிலையில் மனைவி என்று போகும் இந்த கதையில், அவர்கள் வீட்டு பணிப்பெண்ணானவள், எநாத் எஜமான் கோபப்பட்டான் என்னும் காரணத்திற்காக அந்த வீட்டை, வேலையைத் துறந்துவிட்டு சுயமரியாதையுடன் வெளியேறுவதைப் பார்க்கும் மனைவியும் அவளின் பூனையும் என்று முடிகிறது கதை. சமூக கட்டமைப்புக்குள் சிக்கி வெளியேற முடியாமல் உழலும் பெண்களை அதிகமாகப் பேசுகின்றன அராபிய நாட்டு பெண்களின் கதைகள்.  


சிறுகதைகளில் ஆண்-பெண் உறவு: 

                       மலர்வதியின் கதைகளில் வரும் கிறித்துவ இனத்துப் பெண்களாகட்டும், சல்மா படைக்கும் இஸ்லாமியப் பெண்களாகட்டும், தீபாவின் கதைகளில் வரும் இந்து பெண்களாகட்டும், பிரமீளாவின் கதைகள் காட்டும் சிங்கள பௌத்த மதத்துப் பெண்களாகட்டும், இனம், மதம், நிலப்பரப்பு கடந்து பெண் படைப்புகளை ஆராய்ந்தால், ஆண்களின் மீதான கோபம், வெறுப்பு, நம்பிக்கையின்மை போன்றவை குறித்த நிலைபாடுகளை நாம் அறியலாம். 

                      கடந்த நூற்றாண்டின் இறுதியில் வெளிவந்த லஷ்மி, சிவசங்கரி, இந்துமதி, வாஸந்தி, அனுராதா ரமணன் போன்றோரின் கதைகளில் வரும் பெண்களில் பெரும்பான்மையோர் ஆணின் ஆதிக்கத்துக்குள் சிக்கித் தவித்தாலும், தன் மகளிடம், ‘உன் அப்பாவைப் பற்றி உனக்கென்னத் தெரியும்.. அவர் ஆடாத ஆட்டமா..’ என்று பேசுபவர்களாகவும் ஆனால் தன்னைப் போலவே அவளும் ஆணுக்கு அடங்கி சாத்வீகமாய் வாழவேண்டும் என்று சொல்லித் தருபவர்களாகவும் இருந்தார்கள். பெரும்பாலான பெண் கதாபாத்திரங்கள் வீட்டிலிருந்து கணவனைத் திருத்த முயற்சி செய்பவர்களாக இருந்தார்கள். இருந்தும், சில பெண் கதாபாத்திரங்கள் கல்வி, வேலை என்று கணவனிடம் இருந்து விலகி வந்து வெற்றிகரமாக வாழ்ந்ததாக கதைகளில் பெண்ணுக்கான உத்வேகத்தைக் காட்டின. 

                     இன்றைய பெண் கதைகள் காட்டும் சித்திரம் வேறு வகையிலானது. சமூக கட்டுப்பாடுகளை உடைத்து வெளிவரும் பெண்கள், தங்களின் கல்வி அறிவால், திறமைகளால், உயர்ந்ததொரு நிலையை பெண் சமூகம் எட்டியிருக்க காரணமாக இருப்பவர்கள். பெண் படைப்பாளிகள் இந்த சமூக பிம்பத்தின் பின்னிருக்கும் கடுமையான உளவியல் பிரச்சனைகளை ஆழமாக அலசுகிறார்கள் தங்களின் படைப்புகளின் வழியே. பெண்களின் உயர்வுக்குப் பின்னான ஆண் வர்க்கத்தின் உழைப்பு மெச்சப்படும் அதே சமயத்தில், பெண்களின் கல்வி, வேலை திறம், ஆடை சுதந்திரம், கலாசாரம் மீதான ஆண்களின் சந்தேகங்களால் குடும்பங்களில் பெண்ணுக்கு நேரும் அவமானங்களை வன்முறைகளை, அதனால் அவள் அடையும் மன ரீதியான பாதிப்புகள் குறித்து பேசத் தொடங்கியிருக்கின்றனர்.  

                      வர்க்க வேறுபாடுகள் இன்றி, வேலைக்குப் போகும் பெண்களே இன்றைய பெண் சிறுகதைகள் முழுவதும் பயணிக்கிறார்கள். பணியிடங்களில் நேரும் துன்பங்கள், பாலியல் சீண்டல்கள் போன்றவற்றை இக்கதைகளில் காணலாம். ஆண் தோழமைகளுடன் ஆன புரிதலை எழுத்தில் கொண்டு வருகிறார்கள். வீட்டிலிருக்கும் ஆண்களின் இயல்பிலிருந்து அவர்கள் வித்தியாசப்படும் இடத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இன்றைய ஆண் சமூகத்தை சற்றேறக்குறைய சரியான கோணத்தில் அணுகுகிறது இந்த பெண் படைப்புலகம் எனலாம். இம்மாதிரியான பெண் படைப்புகள், பெண்களின் அக வெளிபாடுகளை, திறமைகளை, உணர்வு ஓங்குதலை, வாதத்திறமையை எடுத்தியம்பும் அதே நேரத்தில், அதற்கான ஆணின் இணையான மற்றும் எதிர்வினைகளையும் சொல்லிச் செல்கின்றன எனலாம். இப்படைப்புகள் பேசும் யதார்த்தங்கள் ஆண்களின் உலகில் ஒரு மாற்றத்தை எதிரொலிக்கவே செய்கின்றன. 

                       இன்றைய பெண் எழுத்துகள் பூட்டிய வீடுகளுக்குள் இருந்து எழுதப்படுவதில்லை. பணியிடங்களில், பயணங்களில், மொத்தமாய் சமூகத்துக்குள் நின்று எழுதுகிறார்கள். இரண்டாயிரங்களின் தொடக்க காலகட்டத்தில் நவீன கவிதைகளுக்குள் உடல் அரசியல் என்பதை சல்மா, குட்டி ரேவதி, சுகிர்தராணி போன்றோர் முன்வைத்து எழுதத்தொடங்கினார். இன்றைய சிறுகதைகளிலும் நாம் அதை காணலாம். 

மலர்வதியின் ‘பொட்டச்சி’ என்னும் சிறுகதை, ‘நீங்கள் என்னை மடத்துக்குள் தள்ளினாலும் என் உடலுக்கு நான் தீங்கு செய்யமாட்டேன். என் விருப்பத்தில் உள்ளவனுடன் நான் உறவில் இருப்பேன்’ என்னும் வாதத்தை முன்வைக்கிறது. 

லாவண்யா சுந்தரராஜனின் ‘முற்றத்து அணில்’ சிறுகதை, உறவுகளுக்குள் நேரும் நேர்கோடு மீறிய உறவு சித்திரத்தைப் பதிய வைக்கத் தவறவில்லை. கணவனின் தம்பியுடன் ஆன உறவை நாசூக்காக கடத்துகிறது இக்கதை. 

பிரமீளாவின் ‘ஓரிரவு’ கதை, ஓர் இரவில் நேரும் பெண்ணின் உடல் வேட்கையை, தூங்கவியாத பொழுதுகளை அவளின் மனவோட்டமாக நேர்த்தியாக எடுத்துரைக்கிறது. 

                            பெண்ணின் உடல் அரசியல் குறித்து எழுதப்படும் பெரும்பாலான கதைகளில் குழந்தை கதாபாத்திரங்களே இல்லாமல் இருப்பதையும் நாம் கவனிக்கலாம். 

எடு: மலர்வதியின் ‘ஒரே ஒருக்கா கேசு கொடுக்கனும்’, சல்மாவின் ‘யுத்தம்’, லாவண்யாவின் ‘சப்தபர்ணி மலர்கள்’, அகிலாவின் ‘மிளகாய் மெட்டி’, ஜா தீபாவின் ‘நீ நான்’

                             இவை அனைத்துமே கணவன்-மனைவி பிரச்சனைகள் குறித்து அலசுகின்றன. கணவன் மனைவி உறவுக்குள் குழந்தை என்ற ஒன்று வருவதற்குள் உறவுக்குள் நேரிடம் பிணக்குகள், வாக்குவாதங்கள், யதார்த்த காலத்து பிரச்சனைகள், சந்தேகங்கள், பொருளாதார சண்டைகள் போன்றவை முன்வைக்கப்படுகின்றன. குழந்தைகளைக் கதாபாத்திரங்களாகக் கொண்ட கதைகளில், குடிக்கும், சந்தேகப்படும் ஆண்களுக்கு எதிரான பெண்களின் போராட்டம் வேறு வடிவத்தில், பெண் குழந்தைகளைக் காப்பாற்றவேண்டிய நிர்பந்தத்துடன் உருமாறுகிறது.  


பெண்ணெழுத்தின் அவசியம் 

                             உலகெங்கும் எழுதிக்கொண்டிருக்கும் பெண் படைப்பாளிகளின் மொழி ஒன்றுதான். அவை பெண்ணுரிமை குறித்தே அதிகம் பேசுகின்றன. அவரவர்களின் இனம், நிலப்பரப்பு சார்ந்து கதைகள் படைக்கிறார்கள். யதார்த்ததில் பெண்ணுக்கான சுதந்திரம் விரிவடைகிறது எனினும், படைப்பு சுதந்திரம் இன்னும் முழுமையடைந்ததாக ஏற்க இயலாத சூழல் இன்றளவிலும் நிகழ்கிறது. பெண் படைப்புகள் பெண்ணின் உடல் மற்றும் மனம் சார்ந்த கட்டுடைப்புகளைச் சொல்ல இப்போதுதான் தொடங்கியிருக்கின்றன. 

இங்குதான் கவிஞர் சுகந்தி சுப்ரமணியத்தின்

‘நல்லது 

பேசிக்கொண்டிரு 

ஜாக்கிரதை 

சப்தம் வெளி வராதிருக்கட்டும் ‘ 

என்னும் இக்கவிதை நினைவில் வந்து, பெண்ணெழுத்து கடக்க நினைக்கும் தூரம் அதிகம் என்பதையும் நமக்கு சுட்டிக்காட்டுகிறது. 

                     பெண்ணின் மனதை, உடல் அரசியலை, சமூக புறக்கணிப்புகளை பேசவும் எழுதவும், அவற்றை இச்சமூகம் வாசிக்கவும் ஏற்கவும் பெண்மொழி, பெண்ணெழுத்து இன்னும் காத்திரமாய் வெளிவர நம் தமிழிலக்கியம் காத்திருக்கிறது. வரவேற்போம். 



பெண்ணெழுத்து 

"பெண் தன் உணர்வுகளை, சிந்தனைகளை, 

சமூகப்பார்வையை எழுத்தாய் படைக்கவேண்டிய 

அதிக கட்டாயத்தில் இருக்கிறாள். 


இங்கே பெண்ணெழுத்தின் தேவை இருக்கிறது. 

பெண்ணெழுத்தை சமமாய் பாவிக்கும்வரை, 

ஆண் பெண் எழுத்துகளின் இடையே இருக்கும் 

மெல்லிய கோடு அழிக்கபடாமல் இருக்கும்"


~ அகிலா..

*********

































Tuesday, 8 August 2023

பெண் எழுத்தும் சிறுகதைகளும் | சாகித்ய அகாடெமி |கருத்தரங்கம்

பெண்ணெழுத்து 

"பெண் தன் உணர்வுகளை, சிந்தனைகளை, 
சமூகப்பார்வையை எழுத்தாய் படைக்கவேண்டிய 
அதிக கட்டாயத்தில் இருக்கிறாள். 

இங்கே பெண்ணெழுத்தின் தேவை இருக்கிறது. 
பெண்ணெழுத்தை சமமாய் பாவிக்கும்வரை, 
ஆண் பெண் எழுத்துகளின் இடையே இருக்கும் 
மெல்லிய கோடு அழிக்கபடாமல் இருக்கும்"

~ அகிலா..



பெண்கள் எழுதும் படைப்புகளின் அவசியம் குறித்தும், சிறுகதை உலகில் பெண்களின் படைப்புகள் எவ்வாறாக உள்ளன, எந்த விதமான தாக்கத்தை சமூகத்தில் ஏற்படுத்துகின்றன என்பது குறித்தும் பேச உள்ளேன். 

கோவை PSGR கிருஷ்ணம்மாள் கல்லூரியில் 
காலை 10.30 மணியளவில் நிகழ்வு 

வாய்ப்புள்ளவர்கள் அவசியம் வாங்க.. 



அகிலாவின் 
'அறவி' நாவல் வாங்க, 





 

Monday, 3 July 2023

வரலாற்றின் மிச்சங்கள் - ரபி அரண்மனை

 இங்கிலாந்து - ரபி அரண்மனை 

(Rabi Castle, Durham County, England)



          வரலாறு என்னை எப்போதும் ஈர்க்கும் ஒன்றாகவே இருந்திருக்கிறது. அரண்மனைகள், கோட்டைகள், போர்கள் போன்றவை வியக்க வைத்திருக்கின்றன. அதன் பெருமைகள், சோகங்கள் என்னை ஆக்கிரமித்திருக்கின்றன. நானும் அந்த விழுமியங்களின் எச்சம்தான் என்பதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. நாகரிகங்களின் வரலாற்றின் வாசகனாக எனக்குள் ஒரு விழைவு எப்போதும் எரிந்து கொண்டேயிருக்கிறது. 

            இந்த முறை லண்டன் புத்தகத் திருவிழாவின் சந்திப்பில் புலம் பெயர்ந்த எழுத்துகள் குறித்து பேசிய எழுத்தாளர் சாம்ராஜ் அவர்களிடம் நான் வைத்த கேள்வி இதுதான்: ஏன் இங்கிலாந்திற்கு புலம் பெயர்ந்து வந்தவர்கள் இங்கிருக்கும் வாழ்வுமுறை உணர்த்தும் படைப்புகளைத் தருவதில்லை? என்பதுதான். அங்கு வந்திருந்த எழுதும் விருப்பமுள்ள இளம் தலைமுறையினர் இருவர் எழுத முற்படுவதாகத் தெரிவித்தனர். வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. படைப்புகளின் மூலம் ஒரு நாட்டின் நுணுக்கமான விவரங்களை அறியும் வாய்ப்பு வாசிப்பாளர்களுக்குக் கிட்டும். 

      வரலாற்றின் மீது இருக்கும் ஆர்வத்தினால்தான், என் பயண நூலான 'இங்கிலாந்தில் 100 நாட்கள்'  புத்தகத்தில் இங்கிருக்கும் கோட்டைகள் குறித்து ஓர் ஆய்வே செய்து எழுதியிருப்பேன்.

   'தவ்வை' நாவலுக்குப் பின்பு, ஜூலை மாதத்தில் கோவை புத்தகத் திருவிழாவில் வெளியாகவிருக்கும் எனது இரண்டாவது நாவலான 'அறவி' புதினத்திலும் சிறு வரலாறு ஒன்றை இணைத்திருக்கிறேன். 

   என் அடுத்த நாவல், வரலாற்றை, அதுவும் இங்கிலாந்தின் வரலாற்றை, மையப்படுத்தியே இருக்குமென நம்புகிறேன் (எழுதும் பொறி உள்ளே கனன்று கொண்டிருப்பதால், எழுதுவேனென நம்புகிறேன்.. நம்புவதுதானே நடக்கும்..)


ரபி அரண்மனை 

      நேற்று இங்கிலாந்தில் டர்கம் கவுண்டியில் (Durham County) இருக்கும் ரபி கேஸிலுக்கு (Rabi Castle) சென்றிருந்தபோது, இரண்டு வாரங்களுக்கு முன் சென்று வந்த அய்னிக் கேஸிலைப் (Ainwick Castle) போலவே இதுவும் ஒரு வாழும் அரண்மனை. Living Castle என்பார்கள். இன்னும் அரச குடும்பத்து வம்சாவழியினர் வசித்து வருகிறார்கள் என்பதே. சில பகுதிகளை அவர்கள் வைத்துக்கொண்டு மற்றவற்றைப் பொதுமக்களின் பார்வைக்கு விட்டுவைத்திருப்பார்கள். 

     இந்த ரபி அரண்மனையின் வரலாறும் மிக பெரியது. வீரம், அரச பதவி, அரசியல், பழிவாங்கல், பெண்களின் கதைகள் என்று பலவற்றைச் சுமந்திருப்பது. நிச்சயம் அடுத்த பயண நூலில் இவை இடம் பெறும். 

     அதன் பெரிய கூடங்கள், Barons hall, விரிந்து பரந்திருக்கும் தோட்டம், மான்களின் கூட்டம் இவையெல்லாம் ஏற்படுத்திய பாதிப்பைவிட அந்த கோட்டையின் தினசரி உள்ளியக்கம் (சமையல், பணியாளர்கள் முதல் ராணிகளின் ராஜ்ஜியம்) சார்ந்த விவரங்கள் ஆச்சரியப்பட வைக்கின்றன. எல்லாமே திட்டமிட்டப்படி அட்டவணை போடப்பட்டு செயல்படுத்தப்பட்டிருக்கிறது என்பது புரிகிறது. இதுபோலவே ஸ்டெர்லிங் (Sterling) அரண்மனையிலும் சில விஷயங்கள் ( இது குறித்து 'இங்கிலாந்தில் 100 நாட்கள்' புத்தகத்தில் இருக்கும்) என்னை ஆச்சரியப்படுத்தியிருக்கின்றன. 


புகைப்படங்கள்: 



















 எழுத்தாளர் அகிலா