Skip to main content

பொன்னியின் செல்வன் பாகம் 2

 பொன்னியின் செல்வன் 2 : ஒரு பார்வை
பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளிவந்த மறுநாள் திரைப்படம் பார்க்க, இங்கிலாந்தில் யார்க்‌ஷயரில் உள்ள மிடில்ஸ்பரோவில் சினிவேர்ல்ட் சினிமாஸுக்கு சென்றிருந்தேன். நுழையும்போது இரண்டாம் பாகம் பார்க்கப்போகிறோம் என்ற பெரியதொரு எதிர்பார்ப்பும் (பாகுபலி 2 க்கு ஒரளவுக்கு இருந்தது) என்னிடம் இல்லை எனலாம்.

மாலை ஏழு மணி காட்சி. சரியாக ஏழு மணிக்கு குடும்பமாக நாங்க (நான், கணவர், என் மருமகள், என் அக்காவின் மருமகள்) தியேட்டருக்குள் நுழைந்தோம். ஏழரை மணிக்குள் குடும்பமாக, நண்பர்களாக தமிழில் பேசிக்கொண்டே உள்ளே வந்து சேர்ந்தார்கள் நம் மக்கள். பாதி தியேட்டர் நிறைந்திருந்தது. மிடில்ஸ்பரோவை சுற்றியிருப்பவர்கள் மட்டும் இந்த தியேட்டருக்குத் தமிழ்படம் பார்க்க வந்திருக்கக்கூடும். லண்டன், பெர்மிங்காம் போன்ற நகரங்கள் என்றால் கூட்டம் சற்று அதிகமாக இருந்திருக்கலாம் என்பது இங்கிருப்பவர்களின் கருத்து. நண்பர்களாக வந்திருந்தவர்கள் சிலர் ஆங்கிலத்தில் பொ செ 1 குறித்து உரையாடிக் கொண்டிருந்தனர். ஆங்கிலத்தில் subtitles இருப்பதால் இந்தியாவின் பிற மொழி பேசுவோரையும் இங்குள்ள பிரித்தானியர்கள் ஒரிருவரையும் காணமுடிந்தது.


பொன்னியின் செல்வன் 2:

படம் தொடங்கிய நேரத்தில் இருந்து, முதலில் ஆதித்ய கரிகாலன் + நந்தினியின் சிறுவயது காதல் காட்சி, அடுத்ததாய் அருண்மொழிவர்மன் கடல் காட்சிகள், பாண்டிய நாட்டு ஆபத்துதவிகள் (ஆங்கிலத்தில் rebels என்று போடுகிறார்கள். ஆபத்துதவிகள் சொல் புதிதாய் அர்த்தம் கொடுக்கிறது; கவனிக்க வைக்கிறது) என்று கதை பிட் பிட்டாக சென்று கொண்டிருந்தது. ஏதாவது ஓரிடத்தில் திரைக்கதை நிதானிக்குமென பார்த்தால், ம்ஹூம்.. இந்த நிமிடங்களுக்குள் இந்த பிரேமுக்குள் இத்தனை கிளை கதைகள் வந்திருக்க வேண்டுமென chart போட்டு வேலை பார்த்திருப்பார்கள் போலும். ஆம் சரியான சொல்.. வேலை என்பதே.. Perfect ஆக புத்தகத்தின் மீதி பாகத்தை ஒரு வேலையாக செய்திருப்பது போலவே தோன்றியது. கல்கியின் கதை ஆவணப்பட்டிருப்பதாக தோன்றியதென்னவோ உண்மை (விடுபட்டுப்போன மணிமேகலை, மதுராந்தக சோழர் குழந்தையாய் இருந்தபோது இடம் மாறியது போன்றவை தவிர)

சில இடங்களில் ஓரிரு காட்சிகளை நிலைநிறுத்த முற்பட்டிருக்கிறார்கள்... உதாரணத்துக்கு, குந்தவை + வந்தியத்தேவன் காதல் காட்சி, ஆதித்ய கரிகாலன் + நந்தினி சந்திக்கும் கடைசி காட்சி... இரண்டில் பின்னது ஓரளவுக்கு பரவாயில்லாமல் தோன்றியதற்கு காரணம் விக்ரமின் வசனமும் நடிப்புமாக இருக்கலாம். இல்லையென்றால், விக்ரமை ஆதித்ய கரிகாலனாய் நமக்குப் பிடித்துப் போனதாலும் இருக்கலாம். குந்தவை வந்தியத்தேவன் காட்சி மனதுக்குள் பதிவதற்குள் காணாமல் போய்விட்டது. மற்றபடி காட்சிகளை எங்கும் நிலைநிறுத்த முடியாதபடி கடமை உணர்வு மணிரத்னத்தை உந்தியிருக்கலாம்.
பொன்னியின் செல்வன் அருண்மொழிவர்மன் வரும் காட்சிகள் பல சரியாக எடுபடவில்லை. எல்லாமே ஒரே மாதிரியான expressions... தன்னைக் கொல்ல வரும் யானைப்பாகனை கொல்வதாகட்டும், மகுடத்தை விட்டுக்கொடுக்கும் தருணமாகட்டும் blank glassy eyes.. போற்றுதலுக்குரிய பேரரசர், மரியாதைக்குரியவர், சரித்திர நாயகர் எனும்போது இந்த மாதிரியான ஒரு பிம்பம் திரைப்படத்திற்கென கட்டமைக்கப்படுகிறதா என்று தெரியவில்லை. அருண்மொழிவர்மனை நோக்கியே கதை நகரவில்லை. அதனால் முக்கியத்துவமும் இல்லை.

திரை வசனம் ஒன்றாம் பாகத்தில் இருந்ததைவிட, இரண்டாம் பாகம் சற்று பரவாயில்லை. இன்னும் செதுக்கியிருக்கலாம் கூர்மையை. ஒரு வரலாற்று கதைக்கான முக்கிய அம்சமான கூர்மை, ஏளனம், வன்மம், கருணை காட்டும் வசனங்கள் பெரிதும் தென்படவில்லை இந்த இரண்டு பாகங்களிலும் என்பது பெரும் மனக்குறையே.

தொடர் ஓட்டமான திரைக்கதைக்கு, பாடல்கள் ஒருவித நிதானத்தை, ஆசுவாசத்தைக் கொடுத்திருக்கும். அதுவும் இல்லாமல் இரண்டு நிமிட பாடல்களாக, துண்டு துண்டாக அமைந்திருந்தது அதிருப்தியே. சின்னஞ் சிறு கிளியே.. பாடலை இன்னும் கொஞ்சம் கேட்கலாம் போல் இருந்தபோது அது சின்னதாக, அதற்கு மேல் பாடாமல் நின்றுபோனது..

புத்த விஹாரம், கடம்பூர் அரண்மனை, அதன் சுரங்கம் போன்றவற்றை முயன்றவரை சரியாக காட்ட முயன்றிருக்கிறார்கள். கடைசி போர்க்காட்சி அத்தனை நேர்த்தியாக எடுக்கப்படவில்லை. போருக்குமுன் அரசர்கள் சந்திக்கும் கொள்ளும் காட்சியும் சரிவர வடிவமைக்கப்படவில்லை. இவையும் ஒரு வரலாற்று திரைக்கான வலுவை இழக்கச்செய்யும் காரணிகள்.
கல்கி பொ. செ கதையின் முடிவுரையில்,

"பொன்னியின் செல்வன்" கதையில் சிகரமான சம்பவம் அருள்மொழிவர்மனின் ஒப்பற்ற தியாகமே ஆகும். கதையில் வரும் சகல நிகழ்ச்சிகளும் இந்த மகத்தான சம்பவத்தை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றன. அதனாலேயே இக்கதையின் ஐந்தாவது பகுதிக்கு "தியாக சிகரம்" என்று பெயர் தரப்பட்டது.

இக்கதையின் சிகரமான நிகழ்ச்சி "பொன்னியின் செல்வன்" செய்த சாம்ராஜ்ய தியாகந்தான் என்பதைக் கதையைப் படித்து வந்த நேயர்கள் அனைவரும் உணர்ந்திருப்பார்கள் என்றே நம்புகிறேன். யாராவது அதை அறியவில்லையென்றால், அதற்குக் காரணம் ஆசிரியருடைய ஆற்றல் குறைவு என்றே சொல்ல வேண்டும். அந்தக் குறையைக் கதை ஆசிரியர் தாழ்மையுடன் ஒப்புக் கொண்டு, நேயர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டியதுதான்.

என்று சொல்லியிருப்பார்.. (கல்கியின் உரை முழுவதையும் இந்த பதிவின் பின்னூட்டத்தில் கொடுத்திருக்கிறேன்)

ஆனால் மொத்தத்தில், திரைப்படத்தில் இரண்டு பாகங்களுமே எடுத்தியம்பிய ஒன்றாய் பார்வையில் படுவது, ஆதித்ய கரிகாலன் + நந்தினியின் காதல், வன்மம் இரண்டு மட்டுமே. அந்த கதாபாத்திரங்களில் வலுவாய் அமர்த்தப்பட்டிருக்கும் நடிகர்களினாலும் இது நேர்ந்திருக்கலாம். நந்தினியைப் பார்க்கும் எந்த ஆணாக இருந்தாலும் (வந்தியத்தேவன், பெரிய பழுவேட்டரையர், பல்லவ மன்னன் பார்த்திபேந்திரன்) திரும்ப திரும்பச் சொல்லும் வசனம், 'நீங்க பேரழகி', 'உங்களைவிட யாரும் அழகியில்லை' என்பதே. ஐஸ்வர்யாராய் ஒரு காலத்தில் பேரழகி பட்டம் வாங்கியவர்தான். இல்லையென்று யார் சொன்னார்கள்? அதை ஏன் நந்தினி என்னும் கதாபாத்திரத்தின் மீது ஏற்றி வைத்திருக்கிறார் இயக்குனர் என்றுதான் புரியவில்லை. அது அந்த கதாபாத்திரத்திற்கு ஒருவகையான ஒழுக்கக்குறை சாயலைப் பூசுவதாக தெரிகிறதே..

இத்திரைக்கதை கல்கி தனது முடிவுரையில் குறிப்பிட்டு இருந்தபடி இராஜராஜ சோழனின் தியாகத்தை நோக்கி நகரவேயில்லை. மாறாக ஆதித்ய கரிகாலனையும் நந்தினியையும் சுற்றியே முதன்மைபடுத்தப்பட்டிருக்கிறதாக தோன்றுகிறது.

ஒரு நாவல், (அதுவும் தொடராக வந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். முழுமையாய் ஒரு நாவலை எழுதுவதற்கும் தொடராய் எழுதுவதற்கும் இருக்கும் வேறுபாடு எழுத்தாளர்களுக்குத் தெரியும்) திரைப்படமாகும் போது, இம்மாதிரியான அழுத்தங்கள், கதையின் போக்கை, அது நகரும் விதத்தை மாற்றிக்காட்டும் சங்கடங்களை உண்டுசெய்யும் என்பதை மறுப்பதற்கில்லை. பொன்னியின் செல்வன் திரைப்படமும் அப்படியே.. சில விதங்களில் தடுமாறியிருக்கிறது.

நான் குறிப்பிட்டிருக்கும் இம்மாதிரியான விமர்சனங்கள் இப்படத்தைப் பார்க்கும் தமிழர்கள் பலராலும் முன் வைக்கமுடிகிறது. இருந்தும், இன்றைய காலகட்டத்தில், இத்திரைப்படம் இந்தியாவில் இருக்கும் பல மொழி பேசும் மாநிலத்தவர்களால், பிற மொழி பேசும் வெளிநாட்டு மக்களால் பார்க்கப்படுகிறது எனும்போது, தமிழ் பேரரசர்களின் மீதான வெளிச்சம் பாய்ச்சப்படுவற்கான காயை நகர்த்தியிருக்கிறார் மணிரத்னம் என்பதில் ஆறுதல் கொள்ளலாம் நாம். 

இக்காலத்தில், திரைப்படம் என்பது அழியா சாசனம் போலதான். அதன் தாக்கம் நம் மொழியை, அதனை உலகுக்கு வெளிக்கொணர்ந்த இலக்கியங்களை, அதன் ஆளுமை பரப்பை அதிகப்படுத்திய பெரும் அரசர்களை புதிதாய் உலகத்தாரின் முன் காட்டும் சாத்தியங்களைக் கொண்டது. அதுவும் சரித்திர நாயகர்கள் எனும்போது அதன் ஆர்ப்பரிப்பு, நமது நாகரிகம் தெரியாதவர்களுக்குப் புதிதாகவும் தெரிந்தவர்களுக்கு நினைவுட்டலாகவும் அமையும் என்பதை எவ்வண்ணம் மறுக்க இயலும். இது எமது சரித்திரம் எனப் பறைச்சாற்றுதல் பெருமிதமே. அவ்வகையில் பொன்னியின் செல்வனைத் திரைக்கதையாக்கிய இயக்குனர் மணிரத்னம் ஒரு மாபெரும் கதைசொல்லியே..
நம் சரித்திரத்தைச் சொல்லும் திரைக்கதைகள் வருவது நல்லதே. அதனை விமர்சனப்படுத்தும் நிலையும் நன்றே. அடுத்தமுறை ஒரு வரலாற்று படைப்பை ஆவணப்படுத்தும் போது, இன்னும் கவனம் கொள்வார்கள் திரைப்படத்துறையினர் என்பதில் சந்தேகமில்லை..

~ அகிலா..
எழுத்தாளர்
30.4.2023
ஸ்டாக்டான்-ஆன்-டீஸ், இங்கிலாந்து.. Comments

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி