Skip to main content

பெரிய மீசை

 பெரிய மீசை 

(சிறுகதை)



1

கடந்துப்போன பல வருடங்களாக லட்சுமியை நான் மறந்திருக்கக்கூடும் என்று நீங்கள் நினைக்கலாம். நானும் கூட மறந்திருப்பதாக எண்ணிக்கொண்டேன் அந்த கடிதம் வரும்வரை. பள்ளியில்லாத ஒரு சனிக்கிழமை. மதியம் கடந்த நேரம். கதவிடுக்கின் சிறுவெயில் கீற்றை கிழித்து சர்ரென்று வந்து விழுந்தது அந்த கடிதம். 

தபால்காரர் சண்முகம் எப்போதும்  இப்படிதான். முன்கேட்டின் உள்தாழ்பாளை தனது மெலிந்த கை நுழைத்து திறந்து, நீண்ட நடைபாதையைக் கடந்து, இருபுறமும் திண்ணை பிரித்து கிடக்கும் பரந்த படிகளில் ஏறிவந்து, கதவின் கீழிடுக்கு வழியாய் தள்ளிவிட்டுப்போவார். பெரிய தபாலாக இருந்தால், கதவின் பிடிதேய்ந்த, உருண்டையான வெளிவளைவை தட்டுவார். 

ஹாலில் தூக்கம் வராமல் புரண்டுக்கொண்டிருந்த நான் எழுந்துபோய் எடுத்துவந்தேன். இருள் அறை முழுவதும் அப்பிக் கிடந்தது. அம்மாவைத் தேடினேன். ஹால் கடந்து, திறந்திருந்த தாழ்வாரம் ஒட்டியிருந்த, சந்திரன் அண்ணாவின் அறைவாசல் படியில் தலைவைத்துப் படுத்திருந்தாள். அண்ணா அமெரிக்காவிருந்து வரும்போது மட்டுமே அந்த அறை பயன்பாட்டில் இருக்கும். இந்த முறை வந்திருந்தபோது அவனின் பெண்ணுக்கு என் பையன் சங்கரனைக் கட்டிவைக்கலாம் என்று அபிப்பிராயப்பட்டான். நான் பதிலேதும் சொல்லவில்லை. லட்சுமிக்கான பதில் அவனிடம் அன்று இல்லாததும் என் மௌனத்தில் ஒளிந்திருக்கலாம்.

இந்த பெரிய பண்ணைக்கார வீட்டின் அத்தனை ஜென்மங்களின் சாபங்களையும் வாங்கிக் கட்டிக்கொண்டு லட்சுமி, கல்கத்தா போனபிறகு,இரண்டு வருடங்கள் கழித்து என் பெயருக்கு கடிதம் எழுதியிருந்தாள். அப்பாவும் பெரியப்பாவும் பாட்டியும் சேர்ந்து அதை படிக்கும் முன்பே கிழித்து வீசினார்கள். மதியம் அம்மா என் கையில் அந்த கிழிந்த துண்டுகளை அடுக்கி, பசை கொண்டு ஒட்டி, யாருக்கும் தெரியாமல் என் கையில் திணித்தாள்.
‘ஓன் பள்ளி அட்ரேசுக்கு அவள இனி கடிதம் எழுதச்சொல்லு..’ என்று சொல்லி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு சென்றாள். 


2

அடுத்த தெருவில் இருக்கும் பள்ளிக்கும் சண்முகம்தான் தபால்காரர். பள்ளியில் அவரின் மகள் வயிற்றுப் பேரன் நான்காவது படிக்கிறான். அதனால் அங்கு என்னை வந்து பார்த்து விசாரித்து கடிதம் கொடுத்துச் செல்வது வழக்கம். ஒரு முறை,
‘நம்ம லட்சுமியா.. பின்னாடி முகவரியில் இருக்கே.. நல்லாயிருக்காளா..’ என்று விசாரித்தார். 
‘ம்ம்..’ என்று சற்று தயங்கிச் சொன்னதும் புரிந்துக்கொண்டார். இதுவரை அவர், என் வீட்டில் உள்ள யாரிடமும் சொன்னதில்லை. 

அவளின் கடிதங்கள் ‘அடியே தேவகி..’ என்ற விளிப்புடன் தொடங்கி, எங்களுக்கிடையே ஆன தோழமையின் நிமித்தமாய் அனேக குறும்புகளும் சந்தோஷங்களும் சுமந்து இருந்தன. என் பெரியப்பாவின் பெண் அவள். பெரியம்மா இவளைப் பெற்றெடுக்கும் போதே இறந்துவிட்டார். பெரியப்பாவிற்கு தன் மகனின் மீது மட்டும் அளவு கடந்த பாசமுண்டு. லட்சுமியை ‘துக்கிரி.. துக்கிரி’ என்பார் சிரித்துக்கொண்டே. அவளும் அவரை ‘பெரிய மீசை..’ என்பாள். காரணமும் அடுக்குவாள். ‘அந்த மீசை முடியெல்லாம் உதிர்ந்து காணாமல் போகும் போதுதான் அவர் கெத்து அடங்கும்..’ என்று சொல்லி சிரிப்பாள். 

அம்மாதான் லட்சுமிக்கு அளவுக்கு அதிகமாய் சுதந்திரம் கொடுத்தாள். ‘அம்மா இல்லாத பெண்..’ என்பாள் அடிக்கடி. லட்சுமி ரொம்ப துடுக்கு. ஒரு இடத்தில் அவளை நிறுத்த முடியாது. அய்யர் வீட்டு பெண்கள் மட்டுமே அப்போது பாட்டு கற்றுக்கொண்டிருந்தார்கள். இவளும் பிடிவாதம் பிடித்து கற்றுக்கொண்டாள். பரதநாட்டியம் அவள் சேரும்போது என்னையும் சேர்த்துவிட்டாள் அம்மா. நான் மாநிறம்தான். அவள் நல்ல கலர். ‘பெரியம்மா மாதிரி.. எல்லாவிதத்திலும்..’ என்று அழுத்தம் கொடுத்து சொல்லுவாள் பாட்டி.

நானும் அவளுமாய் இரட்டை சகோதரிகளாய் வலம் வந்தோம். ஒரு கட்டத்திற்கு மேல் பெரியப்பா நிப்பாட்டச் சொல்லி சத்தமிட்டார். 
‘இந்த பால்சாமி கோனார் வீட்டு வயது வந்த பெண்கள் மேடையில் ஆடுது என்று ஊரில் பேசினால், எவன் வந்து கட்டுவான் இந்த குழந்தைகளை..’ என்று குதித்தார். பாட்டியும் அவருடன் சேர்ந்துக்கொண்டாள். 

அம்மாவால் ஒன்றும் சொல்ல முடியாமல் போயிற்று. லட்சுமியின் படிப்பையும் பெரியப்பாவே இறுதி செய்தார். பள்ளிபடிப்பு முடிந்ததும் திருமணம் செய்துவைத்தார். கல்யாணம் பண்ணமாட்டேனென்று அழுதவளை கட்டிவைத்தார். அவளால் கட்டியவனோடு பொருந்த முடியவில்லை. 

‘அவன் ஊர பிடிக்கல. பஸ் பிடிக்க ஒரு கிலோமீட்டர் மண்ரோடு தாண்டனும். அவன் வீட்டயையும் பிடிக்கல. அவனயையும் பிடிக்கல....’ என்று சொன்னாள் என்னிடம். கல்யாணம் ஆகணும்னா, இதையெல்லாம் பிடித்திருக்கவேண்டும் என்பதை அப்போது நான் குறித்து வைத்திருந்தேன்.

மீண்டும் வீட்டோடு வந்தாள். வீட்டில் அவள் இருந்த எல்லா பொழுதையும் அவளுக்கு நரகமாக்கினாள் பாட்டி. இருந்தும் அம்மாவின் அழுத்தத்தால், என்னோடு கல்லூரி சேர்ந்தாள். 

ஒரு வருடத்தில் காதல் வலையில் விழுந்தாள். எனக்கும் தெரிந்திருந்தது. 
‘இது சரிப்படாது. பெரியப்பா ஒத்துக்கமாட்டார் லட்சுமி.’ என்றபோது, 
‘அப்பாவைப் பார்த்து என்னைவிட நீதான் ரொம்ப பயப்படுறடி. பார்த்துக்கலாம்..’ என்று தைரியமாய் சொன்னாள்.

 அரசல்புரசலாய் அந்த விஷயம் வீட்டுக்குள் நுழைந்ததும், பெரியப்பா அவள் கணவன் வீட்டில் கடைசி முறையாக சமரசம் பேசிமுடித்தார். அப்பாவிடம் அம்மா அவளை அங்கு அனுப்பவேண்டாமென சொல்லிப்பார்த்தாள். 

‘உன்னால்தானே கல்லூரி அனுப்பி, தனக்கு கல்யாணம் ஆனதை கூட மறந்துட்டு காதல் பண்ணிக்கிட்டு வந்து நிக்கிறா.. இனி அண்ணன்தான் முடிவு செய்வார்.. ‘ என்று முகம் காட்டிவிட்டார் அப்பா. சந்திரன் அண்ணனிடம் லட்சுமி குறித்து, நான் பேசப் போனபோது, ஒன்றும் சொல்லாமல் நகர்ந்துவிட்டான். அதை லட்சுமியிடம் சொன்னபோது சிரித்தாள். 
‘இந்த வீட்டு ஆண்களைப் பற்றி உனக்குத் தெரியாது. கோழைகள்’ என்றாள்.

மறுநாள் லட்சுமியை வீட்டில் காணவில்லை. அவளை காதலித்தவனையும் காணவில்லை. அவன் பெயர் முருகன் என்பதை அன்றுதான் அனைவரும் அறிந்தனர். அன்றோடு அவளை இந்த வீட்டில் அனைவரும் தலைமுழுகினார்கள், என்னையும் அம்மாவையும் தவிர.

இரண்டு வருடம் கழித்து வந்த கிழித்து ஒட்டப்பட்ட கடிதத்தின் வழிதான் அறிந்தோம் அவளுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை. நானும் இங்கிருந்து அவளின் கணவனுக்கு இரண்டாம் திருமணம் முடிந்ததை எழுதினேன். நான்கைந்து வருடங்களில் அதுவும் நின்றுபோனது. காலம் ஓடிக்கொண்டேயிருந்தது. 

சரவணனுடனான என் திருமணம், அண்ணன் அமெரிக்கா போனது, அங்கேயே ஒரு பெண்ணை மணந்தது, அது தாளாமல் பெரியப்பா மனம் உடைந்து அதிகார தோரணை இழந்து ஒடுங்கியது, சரவணனுக்கு மாற்றல் வந்தபோது, என்னை அனுப்ப மறுத்து பெரியப்பா அவரிடம் கெஞ்சியது, சரவணனும் அங்கும் இங்குமாக அலைந்துவிட்டு இப்போதுதான் இங்கு மாற்றலாகி வந்திருப்பது, இப்படி எத்தனையோ நடந்தேறிவிட்டது இத்தனை வருடங்களில்.  


3

லட்சுமியிடம் இருந்து கடிதங்கள் நின்றுபோன பிறகு சில காலம் பள்ளிக்கு என் பெயரில் வரும் கடிதங்களில் எல்லாம் அவளின் கையெழுத்தைத் தேடுவது என் வழக்கமாக இருந்தது. அம்மாவும் அவ்வப்போது அழுவாள். இப்போது ஒரு கடிதம், என் பெயருக்கு, அனுப்புநர் முகவரி இல்லாமல் வந்திருக்கிறது. லட்சுமியின் நினைவு வந்தது. இது லட்சுமியின் கையெழுத்து இல்லை என்று மனதில் பட்டதும், முகம் கழுவிவிட்டு வந்து படிக்கலாமென சாப்பாட்டு மேசையின் மீது வைத்துவிட்டு நகர்ந்தேன். அப்படியே அதை மறந்தும் போனேன். 

பெரியப்பாவின் அறையைக் கடக்கும்போது பார்த்தேன். படுத்திருக்கிறார் அவர். இப்போதெல்லாம் அறையை விட்டு அதிகமாய் அவர் வெளியே வருவதில்லை. வயதின் தளர்ச்சி. அவரின் அந்த பெரிய மீசை வெள்ளையாகி, நன்றாக மெலிந்திருந்தது. முழுதாய் உதிர்ந்தால்தானே கெத்து அடங்கும் என்னும் நினைப்புடன் லட்சுமி மீண்டும் வந்து மனதில் ஒட்டிக்கொண்டாள். 

அப்பாவும் பெரியப்பாவும் சில நாட்களில் சாயங்கால வேளையில், நான் பள்ளி விட்டு வீடு திரும்பும் சமயம், வீட்டு முன்திண்ணையில் அமர்ந்திருப்பார்கள். ஒன்றும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வெறுமனே தூரத்தில் தெரியும் சாலையையும் பள்ளிக் குழந்தைகளையும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். 

சரவணன் வந்தால் மட்டும் இருவரும் ஹாலில் அமர்ந்து அவருடன் உலக நடப்புகளை பற்றி சில பல குறைகளுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். தன்னிடமும் அம்மாவிடமும் அவர்கள் இந்த அளவுக்கு பேசியிருப்பார்களா என்பது நினைவில் இல்லை. லட்சுமி இந்த வீட்டு ஆண்களைப் பற்றி சொன்னதைப் புரிந்துக்கொள்ள தனக்கு இத்தனை காலம் ஆகியிருப்பதை நினைத்து சிரிப்பு வந்தது.

அம்மா மட்டும் இன்னும் அடுக்களையில் எல்லோருக்குமாய் உழைத்துக்கொண்டே இருக்கிறாள். இப்போதும் என்னுடைய மகன் சங்கரனுக்காய் ஏதோ செய்து அது சாப்பாட்டு மேசைக்கும் வந்துவிட்டது. மேசையில் அந்த கடிதம் காத்திருந்ததை அப்போதுதான் கவனித்தேன். 



4

மாடி சுவரின் மீதான என் பிடிப்பு இறுகி இருந்தது. காற்று என் சேலை தலைப்பை பறக்கவிட்டு வேடிக்கை பார்த்தது. என் கண்ணீர் துளிகளையும் சேர்த்துதான். அம்மா முடியாமல் இரண்டு கால் முட்டுகளையும் கைகளால் பிடித்துக்கொண்டே மாடிப்படி ஏறிவந்தாள். ‘உன்னை கீழே காணுமேன்னு தேடினேன்’ என்றாள். 

ஒன்றும் பேசாமல், கடிதத்தை நீட்டினேன். ‘என்ன இது’ என்று கேட்டுக்கொண்டே திறந்தாள் கடிதத்தை. இலேசான சத்தத்துடன் படிக்கத்தொடங்கினாள். 

“அன்புள்ள தேவகி சித்திக்கு,  

ராகுல் எழுதுவது. என் அறிமுகம் முக்கியமானதாய் நான் நினைக்கவில்லை. இருந்தும், இவ்வாறு உங்களை சித்தி என்றழைக்க உரிமை பட்டிருக்கிறேன். என் அம்மா லட்சுமி சொல்லித்தான் இதை எழுதுகிறேன். 

அப்பா தவறி இரண்டு வருடங்களுக்கு மேலாகிறது. நான் பொறியியல் படிப்பை முடித்து, அப்பா வேலை பார்த்த ரயில்வே துறையில வேலை பார்க்கிறேன். அவரின் பென்ஷன் அம்மாவிற்கு கிடைக்கிறது. இங்கு வீடும் இருக்கிறது. அதனால், அங்கு, ஊருக்கு வந்து சேரும் எண்ணம் அம்மாவிடம் இதுவரை இருந்ததில்லை. நான் கவனித்திருக்கவில்லை என்பதாகவும் இருக்கலாம். 

ஆனால், கடந்த ஆறேழு மாதங்களாக சற்று வித்தியாசமாக நடந்துக்கொள்கிறார். இரவில், ‘அம்மா உன்ன பார்க்கணும் போல இருக்கு’ என்று புலம்புகிறார். அடுக்களையில் சமையல் செய்யும்போது, இல்ல, ஏதாவது வேலை செய்யும் போதும் தன்னையறியாமல் உங்க பெயரைச் சொல்லியழைத்து பேசுகிறார். வேறு யார் பெயரை எல்லாமோ சொல்கிறார். அங்கிருப்பவர்களின் பெயர்கள் எனக்கு அதிகம் பரிச்சயம் இல்லாததால் எனக்கு அது பயத்தைக் கொடுத்திருக்கிறது. அவரிடம் கேட்டால், கண்களில் எட்டிப்பார்க்கும் கண்ணீருடன், நான் ஏதும் சொல்லவில்லையே என்கிறார். 

நேற்று அம்மாவிடம் இதுகுறித்து பேசினேன். அப்போதுதான் ஊருக்கு வருவது குறித்த அவரின் ஆசை புரிந்தது. ஒரு முறை மட்டும் அங்கு அழைத்து வரலாம் என்றிருக்கிறேன். ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் இருந்துவிட்டு நானே அழைத்தும் வந்துவிடுகிறேன். 

அதற்கு தாத்தாவின் அனுமதி வேண்டும் என்றார் அம்மா. அதற்குதான் இந்த கடிதம். 

தாத்தா உயிருடன் இருப்பாரா என்று கேட்டேன் அம்மாவிடம். 
‘நிச்சயம் இருப்பார். என்னை பார்க்காமல் அவர் உயிர் போகாது. நான் அவருக்கு நல்ல மகளாக நடந்துக்கொள்ளவில்லையோ என்ற குற்ற உணர்வு எனக்குள் உண்டு. அவர் காலின் கீழ் ஒரு நாள் பொழுதே இருக்க விரும்புகிறேன் ..’ என்று அழுகையினூடே சொன்னபோது மனம் கனத்துப்போனேன் நான். தாத்தா இதற்கு சம்மதிப்பாரா என்பதை நீங்கதான் கேட்டு சொல்லணும். 

சின்ன பாட்டியையும் தாத்தாவையும் கேட்டதாகச் சொல்லவும். உங்களுக்கு அதிகம் தொந்தரவு கொடுக்கிறேனோ என்றும் தோன்றுகிறது. ஆனால், நீங்கதான் பொறுமையாக இந்த குடும்பத்தை பிணக்கங்களின்றி பெரியவர்களை மனவருத்தப்படுத்தாமல் கொண்டு செல்கிறீர்கள் என்று அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன். என் கைப்பேசி எண்ணை கொடுத்திருக்கிறேன். தொடர்பு கொள்ளவும். 

உங்களின் பதிலுக்காகக் காத்திருக்கும் மகன்..”

கடிதத்தைப் படித்துவிட்டு அம்மா உடைந்து போய் அழுதாள். 
‘உங்க பெரியப்பா கிட்டே நீயே கொண்டு கொடு. இனி அவர் சொல்றதுக்கு என்ன இருக்கு? வரச்சொல்லி பேசு. எனக்கு லட்சுமியைப் பார்க்கணும். அவ இனி எங்கும் போகமாட்டா..’ அம்மா உணர்வு வயப்பட்டு அடுக்கிக்கொண்டே போனாள். 


5

பெரியப்பாவின் அறையில் மாலை நேரத்து மங்கலான வெளிச்சம் மட்டுமே இருந்தது. விளக்கை போட்டுவிட்டு, கடிதத்தை கையில் கொடுத்தேன். என்னவென்பதாய் புருவம் உயர்த்தினார். படித்து முடிக்கும்வரை காத்திருந்தேன். அவரின் பெரிய மீசை சிறு வயதில் பார்த்தது போலவே நீளம் இருந்தது. ஓரங்களில் ஒடிந்து போய், சற்று மெலிந்து, நரைத்து, காதுகளில் இருந்து வழிந்த கிருதாவைத் தொட முயற்சித்து கொண்டிருந்தது. வீட்டின் மூத்தவர் என்னும் கம்பீரம் அந்த மீசையின் மீதே ஒட்டியிருப்பதாக எனக்கு தோன்றியது.

கடிதம் வாசிக்க வாசிக்க அவரின் கண்கள் நடுங்குவதும் அது அந்த பெரிய மீசையின் மீதும் படிவதாக இருந்தது. முழுதாய் படித்து முடித்ததும், நான் கவனிக்கிறேன் என்பதை உணர்ந்து தன்னை நிதானப்படுத்திக்கொள்ள கடிதத்தை நிதானமாய், இருந்தமாதிரியே மடித்தார். கண்களின் ஓரமாய் விழவிருந்த கண்ணீருடன் என்னைப் பார்ப்பதைத் தவிர்த்தார். என்ன சொல்லுவார் எனப் பார்த்திருந்தேன்.
‘அப்பாவை வரச்சொல்லு, தேவகி..’ என்றார். 
‘நம்ம கிட்டே சொல்லமாட்டாரோ? பெரிய்ய மீசை.. அதுவும் நரைச்ச மீசை..’ அவருக்கு கேட்காத வகையில் மெதுவாய் சிரித்துக்கொண்டேன்.











Comments

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சீமாட்டி சிறுகதைகள் | அகிலா | உரை

  சீமாட்டி | அகிலா  Click to buy the Book புத்தகம் வாங்க புத்தகம் : சீமாட்டி (சிறுகதைகள்)  ஆசிரியர் : அகிலா  உரை :  பொள்ளாச்சி அபி   என் சிறுகதை தொகுப்பு 'சீமாட்டி'  கதைகளுக்குள் நுழைந்து பெண்ணின் அவதாரங்களை சரிவர புரிந்து எழுதப்பட்ட ஒன்றுதான் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி அவர்களின் இந்த உரை. நன்றி  சீமாட்டி | உரை  ஆண்டாண்டு காலமாய் ஆணாதிக்கத்தின் பிடியில், ஆண்களால் வடிவமைக்கப்பட்ட ஆட்சியதிகாரத்தின் பிடியில், அந்த அரசியல் சட்டங்களின் பிடியில், அல்லலுறும் அபலைகளின் வாழ்வை இதுவரை எத்தனையோ எழுத்தாளர்கள் எழுதி வந்திருக்கிறார்கள். இன்னும் அதை எழுதவேண்டிய தேவையும் இருந்துகொண்டே இருக்கிறது. அந்த வரிசையில் எழுத்தாளர் அகிலாவும் தொடர்ந்து பயணித்து வருகிறார். எழுத்தாளரான அவர் மனநல ஆலோசகராகவும் இருப்பதால் அவரது எழுத்துக்களில் அது கட்டுரைகளோ, கதைகளோ, பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதில், அவர்களின் எண்ணவோட்டங்களை அறிவதில், வாசகர்களை அறிந்து கொள்ளச் செய்வதில் கூடுதலான அக்கறையும், கவனமும்,துல்லியமும் வெளிப்படுகிறது. இதற்கு முன் தோழர் அகிலாவின் படைப்புகளாக வெளிவந்த தவ்வை, அறவி  என இரண்டு நாவல்கள், மி