Skip to main content

தவ்வை நாவல் குறித்து பேரா விஜயராணி மீனாட்சி உரை

  தவ்வை புதினம் - மதிப்புரை

..............


தவ்வை குறித்து பேரா விஜயராணி மீனாட்சி  அவர்களால் எழுதப்பட்ட இந்த மதிப்புரை பிப்ரவரி மாத படைப்பு குழுமத்தின் 'தகவு' இதழில் வெளிவந்துள்ளது. 

தகவு

அதன் புகைப்படங்கள் ...............

புத்தகம் : தவ்வை

அறிமுகம் : பேரா விஜயராணி மீனாட்சி

..,,,,,,,,,,,,,,,


ஆதி காலம் தொட்டு பெண்ணினுள் பெருங்கதையோ சிறுகதையோ உறைந்துதான் கிடக்கிறது. பெண்கள் தான் எத்தனை எத்தனை விதமாய் எத்தனை எத்தனை ஆயிரம் ரகசியங்களோடு.....ஊர், நாடு, இனம், மொழி, மதம், சாதி என எல்லாமே மாறியிருந்தாலும் பெண்கள் ஒன்றுதான்.

ஆணாதிக்கச் சமூகம் தீர்மானித்து வைத்திருக்கும் குடும்ப உறவும் அதன் தீர்மானங்களும் பெண்ணுக்குப் பலவித பிரச்சனைகளை வாரிவழங்குகிறது. இங்கே பெண்ணுணர்வுகளுக்கு இடமேயில்லை. சாதி மதம் ஏழை பணக்கார வர்க்கப்பாகுபாடு இப்படி எதை நோக்கினும் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுவேறானவை. அதிலும் இதில் குழந்தைப்பேறென்பது மிகமுக்கிய சூழல். அந்தவகையில்
"தவ்வை" எனும் இந்த நாவலில் தோழர் "அகிலா" அவர்கள் பதினான்கு அத்தியாயங்களாகப் பிரித்து முன்னொரு காலம் பின்னொருகாலமாய்ச் சொல்லி செல்லும் கதையாடலின் தலைப்புச் சொற்களை பொருத்தமாகக் கையாண்டிருக்கிறார்.

எண்பத்தைந்து வயதைத்தொட்ட தவ்வையின் வாழ்க்கை ரகசியங்களால் நிறைந்த, பாலியல் குறைபாடுள்ள ஆண்மையற்ற கணவன் ராமநாதனின் வன்மத்தாக்குதலையும், நெருக்கடியையும், உளச்சிக்கலையும் உருவாக்கி, அதன்பொருட்டு மனபேதலிப்புக்கு ஆளானதால் அந்தப் பெரியவீட்டை விட்டுவிலகி ஓட்டுவீட்டில் வாழும் வைராக்கியம் பெற்ற பெரும்பாடு.

பேரனின் ஒற்றைச் சொல்லுக்குத் தலையசைத்துச் சம்மதிக்கவைக்கும் வித்தை தெரிந்த பேரன் மனைவி வைசாலி(பெண்மனம் பெண்ணுக்குத்தானே தெரியும்) ரகசியச்சாவி கண்டுணரும் அதேநேரம் குடும்பக்கட்டமைப்பைச் சீர்குலைக்காத, பெண்ணின் ஆளுமையைச் சிதைத்துவிடாத அற்புத உளவியல் நிபுணர்.

பெரும்பாலான பெண்களுடைய தெய்வ வழிபாட்டின் தீவிர ஈடுபாடு கூட தனக்குள்ளான ரகசியங்களை மன அழுத்தங்களை வெளியேற்றும் வடிகால் போன்ற மடைமாற்று வித்தைதான். இங்கே தவ்வை யாரிடமும் பகிர்ந்துகொள்ளமுடியாத மனஅழுத்தத்தை செல்லியம்மனிடம் கொட்டித்தீர்க்கிறாள்.?
ராமநாதனோடு கழியும் ஒவ்வொரு இரவும் தவ்வைக்கு நரகத்தைக் காட்டியது. பிள்ளைப்பேறு பற்றி தோண்டித்துருவிக் கேள்வி கேட்கும் பொன்னாத்தாளிடம் பம்மிக்கொண்டு பழியெல்லாம் தவ்வைமீது போடும் அதே ராமநாதன் கண்ணுசாமியிடம் தனது இயலாமையை சொல்லி தீர்வு கேட்கிறான். ஜென்மத்திலும் அந்த பாக்கியம் இல்லை என நாடிபார்த்து ஜாதகம் பார்த்து சொன்னபின் அதற்கான தீர்வாய் மனைவியை வேறொருவனோடு கூடி பிள்ளைபெற்றுத்தரச் சொல்கிறான். குடும்ப கௌரவம் கருதியும், தனக்கு வாரிசு வேண்டியும் அந்த ஒருவனை அவனே தீர்மானிக்கிறான். அவன் தான் ரங்கன். அதைக் கேட்டமாத்திரத்தில் ராமநாதனை எரித்துவிடுபவளாய்க் கோபம் கொண்டவள் கணவன் காலில் விழுந்து காரியம் சாதிக்க நினைக்கிற போது தொடங்குகிறது அவளது மனச்சிக்கல்.

இதெல்லாம் நினைத்தும் பார்க்கயியலாத தவ்வை அம்மா வீட்டுக்கே கிளம்ப தடுத்துநிறுத்தப்பட்டவளாய் தாயாரால் புத்திமதி சொல்லப்பட்டு (அதாவது காலங்காலமாக பாத்துப் பொழச்சுக்கோ, மாப்பிள்ள பேச்ச மீறி நடக்காத இப்படியான புத்திமதிகள்) பெண்ணின் வாழ்வியல் யதார்த்தமும் இக்கட்டும் உணர்கிறாள். அதன்பிறகான வருடக்கட்டுக்கான திருவிழா நாளொன்றில் அவளுள் ஜனிப்பு உண்டானதை எத்தனை நாசூக்காக சொல்லாண்டிருக்கிறார் கதாசிரியர். பிழையற்ற இந்த இருவரையும் மீண்டும் சந்தேகிக்கிறான் ராமநாதன். தவிப்பும் பைத்தியமுமான மனநிலையில் ஊசலாடுகிறது அவனின் மனநிலையும்
ரங்கன் பாவம் அவனென்ன செய்வான்? அந்த வீட்டுக்காக இரவு பகல் பாராது உழைப்பு ஒன்றையே தருபவனாகவும் சங்கரலிங்கத்தை உயிராய் மதிப்பவனாயும் கிடந்தவன் தவ்வையின் தூய அன்பில் மூழ்குகிறான். அவனது அர்த்தமற்ற வாழ்க்கைக்கு பொருள்கிடைத்தாற்போல உணர்கிறான்.

காலம் கடந்தும் பெண்ணின் ஆழ்மனம் வைத்திருக்கும் வெப்பம் ஒருபோதும் உலகத்தை பொசுக்குவதை ஒளிபரப்பியே செல்கிறது என்ற மென்மையான உணர்வை நம்முள் நிகழ்த்தி பல விசாரங்களை எழுப்பிச் செல்லும் பிரதி .


Comments

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந