ஆண்கள் தினம்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக்காலத்து ஆண் என்பவன், ஆணாக, தலைவனாக, அகம் பெரிது உடையவனாக, பெண்ணைத் தனக்குள் ஒளித்து வைத்து பாதுகாப்பவனாக இருந்தான். குழந்தைகளை விட்டு பெரிதும் தள்ளி நிற்பவனாக, வீடு குழந்தைகள் என்பதெல்லாம் பெண்ணின் துறைகள் என்ற நினைப்பு உடையவனாக இருந்தான். இங்கு பெண் ஒரு பேசாமடந்தையாகவே இருந்தாள்.
அறுபதுகளில் எழுபதுகளில் பிறந்த ஆண், பெண் மீதான ஆதிக்கப் பார்வையைச் சற்று தளர்த்தியவனாக இருந்தான். இருந்தும் பெண்ணைக் கவனப்படுத்திக் கொண்டே இருந்தான். குடும்பத்திற்காகத் தன்னை இழைத்துக்கொள்ளும் தியாகத் திருவுருவாக நின்றான். பெண் உழைத்து வந்தாலும் குடும்பம் அவனின் பார்வைக்குள்ளே தான் உழன்று வந்தது. பெண்ணும் அவனுள் பல நேரங்களில் பொருந்தியும் சில நேரங்களில் எதிர்த்தும் நின்று போராடினாள்.
எண்பது, தொண்ணூறுகளில் பிறந்த ஆண், பெண் என்னும் பார்வையை முற்றிலும் மாற்ற முயற்சிப்பவனாக, சக உயிராய் அவளை நேசிக்கக் கற்றுக்கொள்பவனாக, வீட்டுவேலைகளைப் பகிர்ந்துக் கொள்பவனாக, குழந்தைகளைக் கவனித்துக் கொள்பவனாக, பெண் என்பவளும் குடும்பப் பொருளாதாரத்திற்காகத் தன் பங்கை ஆற்றவேண்டுமென்ற உணர்வை அவளுக்குக் கொடுப்பவனாகவும் தன்னைக் கட்டமைத்துக் கொண்டு வருகிறான்.
இருபத்தியொன்றாம் நூற்றாண்டின் ஆண், முந்திய ஆணை விட எவ்வாறான வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்கிறான் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
முப்பது வயதில் இருக்கும் திருமணமான இளைஞன், முன்பு பெண்ணிடம் இருந்த குழந்தை வளர்ப்பு, சமையல், மற்ற வீட்டு வேலைகள் போன்றவற்றை தனக்குள் கொண்டுவருகிறான். வலுக்கட்டாயமாக தன்னை அதற்குள் நுழைக்கிறான். பெண்ணும் அதில் சிறிது ஆசுவாசப்படுகிறாள். அவளால் அலுவலக வேலைகளில் கவனம் கொள்ள முடிகிறது. இதை சற்று ஏற்க மறுக்கும் முந்தைய தலைமுறை பெண்கள் (கவனிக்கவும் ஆண்கள் இல்லை) கவலை கொள்வதைத் தவிர்க்கலாம்.
தலைமுறைகளாய், ஆண் என்பவனே குடும்பத்தின் பழு சுமப்பவனாய் இருத்தப்பட்டு, அங்கே பெண் உழைப்பு இருந்தாலும் 'தகப்பன் மட்டுமே கிரேட்' என்று சொல்லப்பட்டு வந்த கோட்பாட்டு நிலை இன்று உடைக்கப்பட்டு வருவதை மறுப்பதற்கில்லை. இதை முன்னெடுக்கும் இன்றைய இளைய சமுதாயத்து ஒவ்வொரு ஆண்மகனுக்கும் நான் தலை வணங்குகிறேன்.
Happy Men's Day..
~ அகிலா..
Comments
Post a Comment
உங்க கருத்தை சொல்லலாம்.....