கத்தி தினம்..
இன்னைக்கு கத்தி தினம்னு (National Knife Day) கேள்விபட்டேன். கத்தி என்றாலே சமையலறை பயன்பாடுதான் முதன்மைபடுத்த படுகிறது நமது நினைவில். அது மட்டும் நினைவில் வந்தால் போதும் என்கிறது அறிவும்.
முன்பெல்லாம் சமையல் கத்திகளின் மீது அத்தனை வேறுபாட்டு சிந்தனை இருந்ததில்லை எனக்கு. நாமெல்லாம் அருவாமனைதானே காய் நறுக்க, மீன் செதில் உரிக்க பயன்படுத்தினோம். அருவாமனையின் பயன்பாடு நம் வாழ்வில் இருந்து பெரும்பாலும் காணாமல் போய்விட்ட ஒரு காலகட்டத்தில், cutting board, knife, cutter போன்ற ஆங்கில சொற்கள் சமையலறைக்குள் நுழையத் தொடங்கின. நானெல்லாம், வரிவரியாய் தடம் விழுந்திருக்கும் எனக்கு மூத்த பெண்களின் விரல்களைப் பார்த்து பயந்து அருவாமனையில் காய் வெட்டுவதை நிப்பாட்டினேன். கத்தி பயன்படுத்த தொடங்கினேன்.
அதன்பிறகுதான், கத்தியில் எத்தனை வகைகள் இருக்கிறது என்பது தெரிய தொடங்கியது. நான் சைவவாதி என்பதால், கோழிக்கறி அறுக்கும் கத்திகளை (Boning knife, Carving knife) என் பையன்தான் எனக்கு அறிமுகப்படுத்தினான். Bread Knife, Mincing knife என்பதையெல்லாம் என் கிறித்துவ தோழியிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். இப்படியாக என் சமையலறையில் கத்திகள் வரத்தொடங்கின.
கத்தின்னும், அருவான்னும் இருந்தால், அவைகளுக்கு சாணை தீட்டவும் ஆள் வேண்டுமே. நம்ம தெருவுக்கு வரும் சாணை பிடிப்பவர் முன்பெல்லாம் சானை பிடிக்கும் கருவியை உருட்டிக்கொண்டும் தூக்கிகொண்டும் வருவார். இப்போதெல்லாம் மொபெட்டில் வைத்துக்கொண்டு வருவதால், அவர் 'சாணை பிடிக்கலையோ.. சாணை..' என்னும் குரல் ஒரு தெருவில் தொடங்கி அடுத்த தெருவுக்கு ஸ்பீடா போயிடுது.
அதுதான் ஆன்லைனில் விற்கும் சாணை தீட்டும் கருவியை (Knife Sharpener) தோழி ஒருத்தர் பரிந்துரைத்தார். முந்நூறு ரூபாயில் இருந்து கத்தி கூர்படுத்தும் கருவி கிடைக்கிறது. இருந்தாலும் வாங்கவில்லை. நாமளே இப்படி வாங்கி, self content ஆகிடோம்னா, சாணை பிடிக்கும் மனிதர்களைத் தொலைத்துவிடுவோமே என்ற எண்ணம் வருகிறது.
இப்படியாக, என் வீட்டு கத்திகளுக்கு இன்று கத்தி தின வாழ்த்துகள் சொல்ல கடமைபட்டிருக்கிறேன்..
~ அகிலா..
Comments
Post a Comment
உங்க கருத்தை சொல்லலாம்.....