Tuesday, 7 March 2017

மகளிர் தினத்தில்...

பிள்ளைகள்..வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் வீடுகளில், வெளிவேலைகளையும் பார்த்துக்கொண்டு இணையதளங்களிலும் உலவிக்கொண்டு அவர்களின் அம்மாவாகவும் பவனி வருதல் எங்களைப் போன்ற பெண்களுக்கு மிகக்கடினம்.

‘இன்னைக்குதானே இதை பார்க்குறே..’ (குர்தா போடுவதற்கு) 


‘என்ன இது...சின்ன பசங்க மாதிரி short form லே எல்லாம் பேசிக்கிட்டு..’ 

‘உங்க வீட்டுக்காரர் (அவங்க அப்பாதான் !!) சரியில்லே..அப்படியே தண்ணி தெளிச்சு விட்டுட்டார்..’ 

‘ஏதோ கவிதை கிறுக்குனோமா, சமையல் எழுதினோமான்னு இல்லாம எதுக்கும்மா இந்த அரசியல், ஜல்லிக்கட்டுன்னு கிறுக்கிட்டு...என் வீட்டுக்காரருக்கு பிடிக்கல...’ - மகளின் பொருமல் 

‘மைக்குல பேசுறதையெல்லாம் வீட்டுல பேசிகிட்டு..’ – மகனின் அலம்பல்
‘அதுக்கு ஒன்னும் தெரியாது, ஆனாலும் எப்போ பார்த்தாலும் வாட்ஸ்அப்பிலேயே இருக்கு...’ – பாட்டியைப் பார்த்து பேரன்

இந்த பேச்சுகள் புதிதல்ல நமக்கு..

பெண்களை அம்மாவாக மட்டுமே பார்க்கும் குழந்தைகளின் கண்ணோட்டம் மாறவேண்டும். அதுவும் முக்கியமாக பெண் குழந்தைகள் கூட, அம்மாவை அவளின் வயது, அனுபவம் சார்ந்து பார்க்காமல் அவர்களின் வீட்டுக்காரரின் முன் கேவலப்படுத்துவதை பார்த்திருக்கிறேன். மனதை காயப்படுத்திப் பேசுவதும் அதனால் அவர்கள் மனவுளைச்சலுக்கு ஆளாவதும் கூட ஒரு வகையில் அவளுக்கு நடக்கும் குடும்ப வன்முறைதான்.

அந்த காலத்து அம்மாக்கள் SSLC அல்லது PU அல்லது ஒரு BA முடித்திருப்பார்கள். வீடே கதின்னும் கணவனே தெய்வம்ன்னு இருந்தாங்க, அது அப்போதைக்கு சரியாக இருந்தது. எண்பதுகளில் தொன்னூறுகளில் பட்டப்படிப்பும் புரொபஷனல் படிப்புகளும் படித்து வேலை பார்க்கும் அல்லது வீட்டிலிருக்கும் அல்லது சுயதொழிலில் ஈடுபட்டிருக்கும் தன்மானத்தில் உயர்ந்து நிற்கும் பெண்களுக்கு இந்த வளர்ந்த குழந்தைகள் பேசுவது எப்படி பொருந்தும்.

பெரிய பள்ளிகளில் படித்தும் நாகரீகமான, பெற்றவர்களையும் மற்றவர்களைக் காயப்படுத்தாத பேச்சை பேசுவதற்கு ஏன் கற்றுக்கொள்ளவில்லை என்றே யோசிக்கத் தோன்றுகிறது.

தொழில்நுட்பம் இளைஞர்களால் உருவாக்கப்படுகிறது என்பதில் மறுப்பேதுமில்லை. அந்நாள் அது, இளைஞர்களுக்கு என்று மட்டுமல்லாமல், எல்லோரிடமும் புழக்கத்தில் இருப்பது அவர்களால் பொறுத்துபோவது சற்று கடினமாக இருக்கிறது. அது காலத்தின் கட்டாயம்.

முன்பு தலைமுறை தலைமுறையாக ஒரே இடத்தில் இருந்தோம். பேச்சு பரிமாற்றம் எளிதாக இருந்தது. இப்போது அப்படியில்லை. தூரம் அதிகமாகும் போது, பெற்றோர் தன் பிள்ளைகளை பேரப்பிள்ளைகளை அருகாமையில் பார்த்துக்கொள்ள இந்த தொழிநுட்பம் தானே உதவியாக இருக்கின்றது.

மனித மனம் உறவாடிக் கொண்டிருக்கவே விரும்பும். பற்றற்ற வாழ்க்கை வாழ்வதாக சொல்லும் பாதிரியார்களின் சாமியார்களின் விரல் நுனிகளும் கூட சமூக வலைதளங்களில் உலவுவதை காணமுடிகிறது.

பரிவர்த்தனைகளுக்கு வயது குறிக்கவேண்டாமென வளர்ந்த பிள்ளைகளிடம் கேட்டுக்கொள்கிறேன். உங்களின் தாயும் ஒர் உயிர்தான். நீங்கள் வளர்ந்து வரும்வரை வேறு உலகம் காணாமல் கூட இருந்திருப்பாள். இனியாவது, இந்த உலகில் இருக்கும் சின்னசின்ன விஷயங்களை ரசிக்கும் கருத்துரைக்கும் வாழ்க்கையை அவளுக்கு கொடுங்க என்னும் விஷயத்தை வைக்கிறேன். அவளை அம்மாவாக மட்டுமல்லாமல், பெண்ணாகப் பார்க்க கற்றுக்கொள்ளுங்க. 
~ அகிலா..

5 comments:

 1. ஒரு அம்மா சிந்தித்து பேசும் போது அல்லது எழுதும் போது அந்த சிந்தனைமேல் பொறாமை ஏற்படுவதால்தான் அம்மா, மனைவி,மாமியார் மருமகள் ஸ்தானத்தில் இருக்கும் பெண் மீது பலருக்கும் எரிச்சல் ஏற்படுகிறது அதனால்தான் இதெல்லாம் உங்களுக்கு எதற்கு என்று நம்மீது அக்கறை கொள்வது போல நம்மை அமுக்க முயற்சிக்கிறார்கள்

  ReplyDelete

 2. /////ஏதோ கவிதை கிறுக்குனோமா, சமையல் எழுதினோமான்னு இல்லாம எதுக்கும்மா இந்த அரசியல், ஜல்லிக்கட்டுன்னு கிறுக்கிட்டு...என் வீட்டுக்காரருக்கு பிடிக்கல...’ - மகளின் பொருமல் ///


  வீட்டுக்காரருக்கு பிடிக்கவில்லையென்றால் அவரை இது போன்ற எழுத்துகளை படிக்க சொல்லவேண்டாம் என்று அட்வைஸ் பண்ணுவதைவிட்டுவிட்டு எழுதுபவர்களுக்கு அட்வைஸ் சொல்லுவது நல்லது அல்ல அது சொந்த மகளாக இருந்தாலும் சரி

  ReplyDelete
 3. தாயின் உன்னதத்தை புரிந்து கொள்ளாமல் வாழ்வது வீண்...

  ReplyDelete
 4. ஒவ்வொரு பெண்ணும் சுயத்தை இழக்காமல் சுயமரியாதையை இழக்காமல் வாழ்ந்தா இப்படி வீண் பொறுமல்களை தவிர்க்கலாம் ..
  கணவன் பிள்ளைகள் முன்பு சிறு வயது முதல் மனைவியை ரெஸ்பெக்ட் கொடுத்து நடத்தினா அதை பார்த்து வளரும் பிள்ளைகள் எந்த வயதிலும் தாயை போற்றுவார்கள் ..நிறைய விஷயங்களில் பெண்கள் தான் தனது சொந்த பெண்ணினத்துக்கு எதிரி என்பது மறுக்க முடியாத உண்மை :( .

  ReplyDelete
 5. //பரிவர்த்தனைகளுக்கு வயது குறிக்கவேண்டாமென வளர்ந்த பிள்ளைகளிடம் கேட்டுக்கொள்கிறேன்//

  தாய் மகள் உறவு என்பது நட்பை போலிருக்கணும் ப்ரண்டா பழகினா இந்த சலசலப்புக்கு இடமில்லை

  ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....