பெண்பிள்ளைகளின் சின்ன சின்ன ஆசைகள் பதின் பருவத்தில் அதிகமாய் இருக்கும். அந்த கட்டத்தில்,அதாவது, பாவாடை சட்டை போட்ட வயதில், எங்களுக்கெல்லாம் அக்காமார்கள் கட்டும் தாவணியின் மீது ஒரு கண் இருக்கும்.
தாவணி கட்டத் தொடங்கியபிறகு, அடுத்ததாய் அம்மா கட்டியிருக்கும் சேலையின் மீது மோகம் ஸ்டார்ட் ஆகிரும்.
எண்பதுகளின் காலகட்டத்தில், நமது தமிழ் சினிமா கதாநாயகிகளின் பெரிய பூக்களுடன் பார்டர் வைத்த ஷிப்பான் மற்றும் ஜார்ஜட் புடவைகளின் மீதும் ஒற்றை ரோஜாவின் மீதும் அளவுக்கதிகமான காதல் இருந்தது.
டிவியில் காட்டும் ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில், கதாநாயகியை அந்த சேலையுடன் பார்த்தால், அம்மாவிடம் அப்ளிகேஷன் போடத் தொடங்குவோம்.
அவங்களுக்கு நாம சேலை கட்டனும்ன்னு சொன்னாலே கடுப்பாகி பத்ரகாளி ஆகிருவாங்க. ' முளைச்சு மூணு இலை விடல, அதுக்குள்ளே சேலையாம்...' ன்னு விரட்டிவிட்டுருவாங்க. நாம அம்மாவான பின்னாடிதானே அவங்க கஷ்டம் நமக்கு தெரியுது.
அப்படி இப்படி போராடி ஒரு சேலை வாங்கினால், அதுக்கு இருக்கும் வாழ்வே தனி. பீரோவில், நமக்குன்னு ஒதுக்கிய அறையில் எல்லா துணிகளுக்கும் மேலே அது உட்கார்ந்திருக்கும்.
இப்படி இருக்கிற நேரத்தில, பாரின்லேயிருந்து (எந்த பாரின்லேன்னு எல்லாம் கேட்கக்கூடாது, அப்போ அப்படிதான் சொல்லுவாங்க) எங்க சொந்தகாரங்க ஒருத்தங்க, ஒரு பாரின் புடவையைக் கொடுத்துட்டு போனாங்க.
அதன் உடம்பு முழுவதும் குட்டி பூக்கள். கண்ணாடி மாதிரி இருக்கும். அதன் ஸ்பெஷாலிட்டியே அதை மடிச்சா கைக்குட்டை சைஸ்க்கு ஆகிடும். அம்மாவுக்கு அந்த வயசுல அதை கட்ட முடியாதுன்னு அது என்கிட்டே வந்தது. (நாம எந்த வயசுலேயும் எதையும் கட்டுறோம் இப்போ)
ஏதாவது வீட்டு விசேஷங்களுக்கு கூட்டிட்டுப் போகமாட்டாங்களான்னு இருக்கும், அப்போ அதை கட்டிக்க அனுமதி கொடுக்கணுமேன்னு இருக்கும், எப்போடா பள்ளிக்கூடத்தை மூட்டை கட்டிட்டு, காலேஜ் சேருவோம்ன்னு இருக்கும். அப்போதானே கலர் டிரஸ் போடமுடியும்ன்னு தோணும். அதை பார்க்கும் போதெல்லாம், நம்மளை பெரிய மனுஷி ஆகவே விடமாட்டேங்குறாங்களே இந்த அம்மான்னு எரிச்சலாக இருக்கும்.
அதன் வழுவழுப்பை, அப்பப்போ தடவிப் பார்க்கிறது, மெலிசாய் இருக்கும் அதன் ஒரு சைடுக்குள் கையை வைத்து அந்த பக்கம் இந்த பக்கம் கண்ணாடி காட்டுறது இப்படி எல்லாம் நடக்கும்.
நம்ம செய்றதை எல்லாம் பார்த்து நம்ம அம்மாவுக்கு கலவரம் ஆகிடும். வயித்துல புளியைக் கரைக்கும். அதைப் பார்த்தாலே நமக்கு, இரட்டை சடையில் ஒன்றை பின்னிக்கொண்டே பின்னாடி தூக்கி வீசிட்டு ஒரு சந்தோஷத்துடன் நடக்கச் சொல்லும். எல்லாம் சேர்ந்து, திமிரும் சந்தோஷமுமாய் அழகான ஒரு பருவம் அது.
ம்ம்...மீண்டும் வராத மகிழ்வான பருவமும் அதுதான்..
அருமை
ReplyDeleteஏனோ எனக்கு இந்த மாதிரி தோன்றியதில்லை... அடுத்த பருவ ஆடையை வெறுக்கத்தான் செய்தேன்.... ஆனால் சேலை கட்ட ஆரம்பித்த பிறகு நீங்க சொல்ற அந்த பாரின் சேலை மேல் மிகுந்த ஆசை... அந்த வழவழப்பும், நீளமும் இன்று வரை வேறு எந்த சேலைகளிலும் கிடைக்கவில்லை....
ReplyDelete