சகுனியாய் சில ஆண்கள்..
பெண்களின் பலமும் பலவீனமும் குடும்பம் சார்ந்தே அமைந்துவிடுகிறது. பெண்கள் குடும்பத்தின் மீது வைத்திருக்கும் அதீத அன்பும் அக்கறையும் தான் இதற்கு காரணம். நிறைய குடும்பங்களில் ஆண்கள் இதை சரியாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
நேற்று என் தோழி ஒருவர் போன் பேசியிருந்தார். மன உளைச்சலுடன் பேசினார். படித்தவர். மிகவும் யோசித்து எந்த செயலையும் செய்பவர். என்ன விஷயம் என்று வினவியபோது, சொல்லத் தொடங்கினார். எப்போதும் யோசித்து செயல்படும் அவரை, அவர் கணவர் குடும்பத்தில் சகுனி நீதான் என்று தன்னைச் சொல்லிவிட்டதற்காக நிறைய குறைப்பட்டுக் கொண்டார்.
சகுனி என்னும் ஒரு சொல் அவரை மிகவும் வேதனைபடுத்திவிட்டது.
அதுக்காக ஏன் வருத்தபடனும்னு அவங்ககிட்டே கேட்டேன்.
சகுனி யோசித்து செயல்படும் திறன் வாய்ந்தவனாக புராணத்தில் காட்டப்பட்டவன். தனக்கான தர்மத்தை தானே வென்றவன்.
தன் தகப்பனின் எலும்பிலிருந்து உண்டாக்கப்பட்ட தாயம் உருட்டி, மகாபாரத போருக்கு வித்திட்டு, தருமத்தை ஜெயிக்க வைத்தவன். பாண்டவர்களின் பலம் அறிந்தவன். தன் குடும்பத்தை அழித்த கௌரவர்களைத் தன்னால் அழிக்கமுடியாது என்பதறிந்து பாண்டவர்களைக் கொண்டு பழிதீர்த்துக் கொண்டவன். அவன் அறிவானவந்தான். ஆனால், தன் அறிவின் செயல்களை அழிவு நோக்கி செயல்படுத்திவிட்டான். அவ்வளவே.
அறிவாய் யோசிப்பவன் சகுனி என்றால், நாம் யோசித்து அறிவாக, குடும்பத்துக்காக, நல்ல சகுனியாக செயல்படறோம்னு பெருமைப்படு என்றேன்.
அப்போ, அந்த மகாபாரத சகுனி, அதாவது கெட்டதை தலைமுறையாக நன்கு திட்டமிட்டு செயல்படுத்தி வருவது, யாருன்னு பார்த்தால், தோழியின் கணவரைப்போல் இன்றும் இப்படி பேசி வரும் ஆண்கள்தான்.
பெரும்பாலான ஆண்கள் பேசும்போது சொல்வாங்க, எங்க வீட்டுல அவ்வளவு அறிவு கிடையாதுங்க என்று. உங்களுக்காக சமைக்கவும், உங்க குழந்தைகள், பேரப்பிள்ளைகள் எல்லோரையும் கவனித்துக்கொள்ளவும் கோவிலுக்கு போய் விளக்கு போடவும் உங்களுக்காகவே வேண்டிக்கொள்ளவும் வீட்டில் ஒரு யோசிப்பு திறன் இல்லாத ஒரு மக்கு பெண் இருந்தால்தானே உங்களால் நிம்மதியாக வெளி உலகில் இயங்கமுடியும்.
வீட்டிலும் தன்னைப்போலவே இன்னொருத்தியும் யோசித்தால் சிக்கல், தினமும் வீட்டிலும் போராட வேண்டிவருமே என்பதால், ஆண்கள் முடிந்தவரை பெண்ணை இப்படியே இருக்கச் செய்துவிடுகிறார்கள்.
கடவுள் நம்பிக்கை இல்லாத ஆண்கள் கூட கோவிலுக்கு போய்விட்டுவந்து, அவளுக்காக போனேன் என்பார்கள். இப்படிப்பட்ட பொய் வேஷமும் ஒருவகையில் பெண் அடிமைத்தனமே.
ஒன்று, அவள் சாமி கும்பிட்டு நல்லது நடந்தால், அது தன்னையும் சேருமே என்ற போக்கு. இதிலிருந்து அந்த ஆணுக்கு தன் கொள்கை கடவுள் மறுத்தலில் சரியான நம்பிக்கை இல்லை என்றுதானே அர்த்தம். நாலு பேருக்கு நடுவில் தன்னை அறிவானவனாக காட்டிக்கொள்ள அவனுக்கு கடவுள் மறுப்பு தேவைப்படுகிறது. மற்றபடி ஒன்றுமில்லை.
இரண்டாவது, இவன் உண்மையிலேயே மகா நல்லவனாக இருந்தால், தான் யோசிப்பது போல அவளையும் யோசிக்க வைத்திருக்க வேண்டும். அவளை அறிவாளி ஆக்கினால் ஒரே உறைக்குள் எப்படி இரண்டு கத்தி இருக்கமுடியும் என்று யோசித்து இங்கு சகுனியாய் பெண்ணுக்கு அழிவை விதைப்பவனாய் ஆணே இருக்கிறான்.
இப்போது புரிந்திருக்கும் ஆண் எவ்வளவு அறிவானவன் என்பதும் மகாபாரத சகுனியின் குணங்கள் யாரிடம் அதிகம் உள்ளது என்பதும்.
அறிவான பெண்மையை பொறுத்துக்கொள்ள முடியாமல் பொறாமையால் வரும் வார்த்தைகள் இவை. மனதைக் காயப்படுத்தி வீட்டு பெண்ணை அழவைத்து பார்க்கும் ஆணின் இந்த குணம் கூட ஒரு வகையில் குடும்ப வன்முறைதான் (Domestic Violence).
இருவரும் அறிவாய் இருந்து, குடும்பம் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான், அதை அழகிய இல்லறம் என்பேன். பெண்ணை அறிவற்றவளாக வைத்து, என் குடும்பம் உலகத்திலேயே நல்ல குடும்பம் என்று பெருமை பேசுபவர்களின் இல்லறம் நல்ல இல்லறம் அல்ல.
பெண்ணை தனக்கு ஈடாய் யோசிக்க வைத்து அதனால் தன் இல்லறம் செழிக்க வகை செய்பவர்களை நல்லவர்களாக போற்றுவோம். அறிவாய், தனக்கு ஈடாய் அல்லது தன்னைவிட அதிகமாய் யோசிக்கும் பெண்ணை மதித்து இருவரும் நல்லறமாய் ஓர் இல்லறம் நடத்தினால் அதுவே சிறந்த இல்லறம். பாரதியின் கனவும் அதுதான்.
பாரதி,
அட....! இதெல்லாம் சில இடங்களில் உண்மைங்க...
ReplyDeleteசிறப்பாக முடித்தீர்கள்...