Friday, 3 July 2015

நட்பின் வரைமுறைகள்



நட்பின் இலக்கணங்கள் சற்று மாறிப் போய்விட்டது இளைஞர்களிடையே..

தொலைதூர கல்வியின் செயல்முறை தேர்வு அறையொன்றில், இளைய தலைமுறை கூட்டமொன்று, பெண் பிள்ளைகளும் ஆண் பிள்ளைகளுமாய் வந்திருந்தார்கள்.

தொட்டு பேசுதல் இப்போதெல்லாம் மிக சாதாரணமாகிப் போனது. அதையும் மீறி ஒரு பையன், அவன்தான் ரொம்ப ஸ்மார்ட்டாக எல்லோரிடமும் சிரித்து அளவளாவிக் கொண்டிருந்தான், ஒரு பெண்ணின் கன்னத்தில் கன்னம் இழைத்து மேல்நாட்டவர் ஸ்டைலில் முத்தம் (எக்ஸாம்க்கு வாழ்த்து சொல்றாங்களாம்) செய்தபோது கூட தவறாக தெரியவில்லை (இதெல்லாம் தவறுன்னு நாம சொல்லவே கூடாதுங்க).

இன்னும் இரண்டு பெண்களுக்கும் இதே போலவே வாழ்த்துச் சொன்னான். அவனின் கை அப்போது அந்த பெண்களின் இடுப்பின் மீது அலைபாய்ந்ததைக் கண்ட போது, அவனின் மனதின் தன்மையும் அந்த பெண்கள் அதை சாதாரணப்படுத்துவதில் இருந்து, அதன் தேவையும் புரிந்துப் போனது.


சுதந்திரம் என்பது ஆண்களைக் கட்டிப்பிடிப்பதிலும், முத்தமிடுவதிலும், கொஞ்சுவதிலும் இல்லை என்பது இன்று பெண்களுக்கு, எல்லா வயதில் இருப்பவர்களுக்கும்தான், ஏன் புரியவில்லை என்பது தெரியவில்லை. ஆண் பெண் உறவை சகஜப்படுத்துதல் என்னும் கான்செப்ட் சரிதான். அதற்காக இப்படி செய்து நாம் நமக்கென கட்டிக் காத்து வந்திருக்கும் விஷயங்களை விட்டுக் கொடுத்துதான் செய்ய வேண்டும் என்பதில்லை. இதெல்லாம் இல்லாமலேயே நாம் சுயமானத்துடன் தலைநிமிர்ந்து வாழமுடியும் என்பதை பெண்கள் உணரவேண்டும்.  

இதனால், என்ன சிக்கல் வருகிறதென்றால், நாளை அந்த பெண்ணிற்கு திருமணம் ஆகும் சமயம், கணவனையும் மற்ற ஆண்களுடன் இந்த விசயத்தில் ஒப்பீடு செய்யும் நிலை ஏற்படுகிறது. இதுவரை, பொருளாதாரத்தில் மட்டுமே ஒப்பீடு செய்துக் கொண்டிருந்தார்கள். ‘அவங்க வீட்டில் ஏசி வாங்கிட்டாங்க, கார் வாங்கிட்டாங்க’ என்றெல்லாம் நடந்துவந்தது. அதுவரை சரிதான்.

இப்படி இப்போதே தொடுதல் என்னும் உணர்வை வளர்த்துக் கொண்டால், இதிலும் அதே போல் ஒப்பிடுகள் பெருகி, உறவுகளுக்குள் நம்பிக்கையற்று போய்விடும் நிலை வருகிறது. இதுவே, மனவேற்றுமைகளும் விவாகரத்துகளும் பெருகும் நிலைக்கு வித்திடுகிறது.  

இளவயதில் இருக்கும் இவர்களுக்கு இந்த புரிதல் வரவேண்டும். நம் நாட்டின் பாரம்பரியம் போற்றி, மற்ற நாடுகளிலிருந்து காப்பி அடிக்காமல், அந்த ஒரு உறவையாவது சற்று புனிதப்படுத்திப் பார்ப்போமே.

அன்பை, நட்பை, அறிவை பகிர்ந்துக் கொள்ளுங்கள். தோழமையுடன் அளவுக்கு மீறிய தொடுதல் இன்றி பழகுங்கள். யாருடனாவது நெருங்கிப் பழகத் தோன்றினால், அதன் ஆழம் கண்டறியுங்கள். அந்த உறவு நீடிக்குமா, அதை இருவராலும் கடைசிவரை காப்பாற்ற முடியுமா என்பதெல்லாம் யோசித்து அவனை/அவளை உங்களுக்குள், ஒரு பந்தத்துக்குள் நுழைத்து வாழ்ந்துக் காட்டுங்கள்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பது இழிவான ஒரு கருத்து அல்ல. அது உடலும் உணர்வும் ஒன்றுபட்ட ஒரு நிலையைக் குறிக்கும் வாசகம். அது யாரிடம் கைக்கூடுகிறது என்பதை ஆராய்ந்து நட்புகளைத் தொட அனுமதியுங்கள்.

குழந்தைகளுக்குச் சொல்லித்தரும் Good touch, Bad touch  போலதான் இதுவும். நீங்கள் குழந்தைகள் அல்ல. நீங்களே புரிந்துக் கொண்டு நட்பை நட்பாய் மட்டும் இருக்க விடுங்கள். நட்பின் அழகிய இலக்கணமும் அதுதான்.

நட்பின் இலக்கணம் மதித்து, சுயமானமும் பெண்மையும் விட்டுக் கொடுக்காமல், நிமிர்ந்து உயர்ந்து வாழ்ந்து காட்டுவோம்.




10 comments:

  1. நீங்கள் கவிதை அதிகம் எழுதுவது மாதிரி இது போன்ற பல விஷயங்களை அதிகம் எழுதுங்களேன் உங்களின் இந்த மாதிரி எழுத்துகளும் சிந்தனைகளும்தான் எனக்கு அதிகம் பிடிக்கிறது. இப்படிபட்ட விஷயங்களை படிக்கும் போது மனம் தெளிவடைகிறது.

    ReplyDelete
    Replies
    1. இனி சமூக சிந்தையுள்ள விஷயங்களையும் நிறைய எழுத முயற்சிக்கிறேன். உங்களின் ஊக்கமிகு எழுத்துக்களுக்கு மிக்க நன்றி..

      Delete
  2. உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று அறியாமல் இன்னும் கட்டுப் பெட்டியாகவே இருக்கிறீரே? குழந்தை பெற்ற பிறகு கல்யாணம் பண்ணிக்கலாம் என்ற அளவிற்கு தமிழ்ப்பெண்கள் தயாராக இருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வதில் இருந்தே இந்த தலைமுறையின் மீதான பிடிப்பு தெரிகிறது. என்ன செய்வது.. நானும் எதுவும் தெரியாமல் எழுதவில்லை. சில பண்பாடுகளையாவது காப்பாற்றும் முயற்சியில்தான் இதை செய்கிறோம். தேரப்போவதில்லை என எந்த குழந்தையையும் நோய்க்கு தாரை வார்க்க நாம் முன் வருவதில்லையே. அதுபோல் தான் இதுவும்.
      சமூகத்தில் புதிதாய் புல்லுருவிகள் முளைத்தால் கொஞ்சம் பிடுங்கி பார்ப்போமே என்கிற எண்ணத்தில் எழுதப்பட்டதுதான் இது.

      Delete
  3. அருமையாக யோசித்து, அழகாகவும், நயமாகவும், நியாயமாகவும், மென்மையாகவும் சொல்லியுள்ளதோர் கட்டுரை இது.

    இதைப்படித்து ஓர் சிலராவது விழிப்புணர்வு கொண்டால் மிகவும் நல்லது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பாராட்டுக்கு நன்றி அய்யா..

      Delete
  4. நம் நாட்டின் பாரம்பரியம் நாமே காக்க வேண்டும்... நம் நாட்டின் சிறப்பே அது தான்... /// உடலும் உணர்வும் ஒன்றுபட்ட ஒரு நிலை /// இதை விட சொல்ல வார்த்தைகள் இல்லை... பாராட்டுகள் சகோதரி...

    ReplyDelete
  5. மிகச் சிறப்பாக எழுதிருக்கீங்க அகிலா. ரொம்ப நன்றி. இன்றைய காலத்தில், பேருந்து, ஷேர் ஆட்டோ, ரயில்களிலும் ஆண்களும் பெண்களும் அருகருகே அமர்வதும் எனக்கு உடன்பாடில்லை. இதைச் சொன்னால் இந்த முஸ்லிம்களே இப்படித்தான், மிகுந்த பிற்போக்குவாதிகள் என்று பெயர் சூட்டப்படுகிறேன். :-(

    ReplyDelete
    Replies
    1. இதில் இவர்கள் நினைப்பது போல் பிற்போக்குவாதம் ஏதும் இல்லைதான். இதெல்லாம் நமக்கு நாமே சில கட்டுப்பாடுகளுக்குள் வைத்துக் கொள்ள உதவும் விஷயங்கள்தான். இதற்கும் பெண் சுதந்திரத்திற்கும் சம்பந்தமே இல்லை. புரிதலுக்கு இன்னும் ஆண்டுகள் எடுக்கும் தோழி...

      மிக்க நன்றிப்பா..

      Delete
  6. சுதந்திரம் என்ற பெயரில் நட்பின் எல்லைகள் தாண்டப்ப்படும்ப்போது அதன் விளைவு பெண்களை மட்டுமே அதிக அளவில் பாதிக்கிறது. இதை பெண்களும் பெறோரும் புரிந்து கொள்ள வேண்டும் நல்ல பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....