Wednesday, 14 May 2014

புரியாமலே..



நாளொன்றுக்குமாய்
புரிதலின் விதிமுறைகள்
மாறுகின்றன

பரிமாற்றங்களில்
புளித்த பொய்கள்
கலக்கப்படுகின்றன

பார்வைகளில்
பொதிந்த மொழிகள்
பேச்சற்று நிற்கின்றன  
  
வாய்மொழிகளில்
செதுக்கிய அனுபவங்கள்
முருங்கையில் வேதாளமாய்
காய்த்து தொங்குகின்றன

மௌனத்தின் வடிகால்களில்
கண்ணீரின் சிவப்பு
வண்ணமிடப்பட்டு
கண்காட்சியாகிறது

எங்கோ
ஓர் ஆந்தையின் அலறல்  
வாழ்வின் நிலையாமையை
இருட்டில் போட்டு உடைக்கிறது

சிலந்தியொன்று
வலை பின்னத் தொடங்குகிறது  
அடுத்த வேளையின்
பசிக்காக

கிளிக்கூட்டமொன்று
நீல வானை
பச்சையாக்கிச் செல்கிறது

புரியாமலே
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
எந்த கிளியிடம் என் உயிர் 
ஒளிந்திருக்கிறதென்று..


  

2 comments:

  1. உங்களுக்குள்ளும் ஒரு அமானுஷ்ய எண்ணம். கவிதைக் கிளியாய் வந்தது.

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....