Friday, 8 March 2013

என் அன்னை...



இன்றைய நாளில்...



உருண்டோடிவிட்டன வருடங்கள் உன்னை இழந்து
பால்யமும் பள்ளியும் மட்டுமே நினைவில் நிறுத்திவிட்டு
மீதி வாழ்க்கை உன் கையில்தான் என்று கொடுத்துவிட்டு
இந்த மண்ணையும் என்னையும் விட்டு வெகு தொலைவு பயணித்துவிட்டாய்....

இன்றும் உன்னை நினைக்க ஆயிரம் காரணங்கள்
மனதின் துயரங்கள் எல்லையை தாண்டினால்
உன் முகம் காட்டும் என் கண்ணாடி
அழுவதை நிறுத்தி என் அகம் பார்த்திருக்கிறேன் அதில்...

தைரியம் என்னும் வார்த்தையை
ஏட்டிலிருந்து எண்ணத்திற்கு மாற்றியவள் நீ
சமாதானம் என்னும் சொல்லை
சாசுவதமாய் மனதில் நிறுத்தியவள் நீ...

நாணிகோணி நடக்க சொல்லித் தரவில்லை
நிமிர்ந்து நடக்க சொல்லித் தந்தாய்
சண்டையிட கற்றுத் தரவில்லை
சமரசமாய் வாழ கற்றுத் தந்தாய்

உடைந்து போய் நின்றால்
அதை கடந்து போக சொல்லித் தந்தாய்
உவகை அதிகமானாலோ
அமைதியாய் உட்வாங்க சொல்லிச் சென்றாய்

என் முதல் நூலின் நகலொன்றை
எடுத்து வைத்தேன் உனக்காக  
கையொப்பம் ஏதும் இடாமல்
உன் நகல் நான்தான் என்பதால்...  
  
எத்தனையோ எண்கள் என் கைப்பேசியில்
உன்னை அழைக்க என்று ஏதுமில்லை இதில்....
  
அழைக்கிறார்கள் மகளீர் தின வாழ்த்துரைக்க
மகளாய் நான் தனித்து நிற்பதை அறியாமல்...   





13 comments:

  1. மகளிர் தினத்தில் உங்களை சிறந்த மகளா(ளிர்)க்கிய உங்கள் தாயை நினைத்து பார்த்தல் பொருத்தம்.... ஓரமாய்த் ஒளிந்திருக்கும் உங்கள் ஏக்கம் புரிகிறது அகிலா..

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்....எப்போது நினைத்தாலும் தீராத பாசம் அது....இன்று அவர்களின் நினைவு நாள்....

      Delete
  2. வலி நிறைந்து இருக்கிறது

    ReplyDelete
  3. எத்தனையோ எண்கள் என் கைப்பேசியில்
    உன்னை அழைக்க என்று ஏதுமில்லை இதில்....
    நடப்பின் நினைவு.

    ReplyDelete
    Replies
    1. அம்மாவின் நினைவு நாளான இன்று தான் என்றில்லை...எப்போதுமே தோன்றும் நினைவு இது....

      Delete
  4. அம்மாவின் வியர்வையில் வெந்த இட்லிக்கு
    எம்மாம் பெரிய ஆவலுடன் எதிர்பார்த்தோம்
    அவளின் முந்தானை வியர்வை வாசம்
    எவரிடமும் இல்லாத நேசம்!

    அம்மாவைப் பற்றி எழுதுவதற்கு
    அடக்கம் அவளிடம் அடைக்கலம் கேட்கும்
    பண்பு அவளிடம் பணிவிடை செய்யத் துடிக்கும்
    நல்லொழுக்கம் அவள் முன்னே நாணி நிற்கும்

    கடல்நீரை மையாக்கி
    கருவில் வைத்தவளை கருவாக்கி
    பாடல்கள் எத்தனை எழுதினாலும்
    பற்றாக்குறை என்பது உண்மை!

    ReplyDelete
    Replies
    1. அழகான உங்களின் கவிதை அம்மாவின் அன்பை காட்டுகிறது...நன்றி...

      Delete
  5. அருமை அகிலா .உண்மையில் பெற்றவளை விட்டுவிட்டு பிறிதொன்றை வாழ்த்த முடியுமா? இயலுமா?

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்....ஆனாலும் வாழ்கிறோம்....வாழ்த்துகிறோம்...

      Delete
  6. அன்னைக்கு என் பாத நமஷ்காரங்கள்

    ReplyDelete
  7. அன்னையை விட சிறப்பெது...?

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....