Tuesday, 11 December 2012

பக்கத்து வீட்டு ஆண்கள்...
தீபாவளிக்கு முந்திய நாள் நிறைய நண்பர்கள், தோழிகள் என்று வழக்கம் போல் வாழ்த்துக்கள்....குறுஞ் செய்திகள்..என்று என் மொபைல் அடுப்படியிலே என்னுடன் சமைத்துக் கொண்டிருந்தது....

அப்படிதான் புதிதாக ஒரு எண்ணில் இருந்து அழைப்பு. எடுத்து ஹலோ சொன்னால் "நான்தான்" என்று பதில். நானும் விடாமல் "நாந்தாங்க பேசுறேன்" என்க, மறுபடியும் அதே பதில். எரிச்சலாகி நான் போனை ஆப் செய்ய போகையில் "நான்தான் சந்தான ராஜ்.." என்று பெயர் சொல்ல, எனக்கு அந்த ஆணின் குரலை தெரிந்துகொள்ள முடியவில்லை.

நான் யோசிக்க தொடங்கினேன் யாராக இருக்கும் என்று. "முன்னாடி இருந்தீங்களே பல்லாவரத்தில், அங்க உங்க பிரென்ட்" என்று சொல்ல....ஞாபகம் வந்தது....

ஆறு வருடங்களுக்கு முன் அங்கு இருந்த போது இந்த மனிதர் பக்கத்து வீட்டுக்காரர். இரண்டு கல்லூரி போகும் பிள்ளைகளின் அப்பா. அந்த அம்மா ஒரு விவரமாய் பேசும் ஒரு அப்பாவி. அவர் நல்லவர் என்று நம்பி கொண்டிருந்த ஜீவன். முதலில் நானும் அப்படிதான் நினைத்திருந்தேன்.

அந்த மனிதர் டூட்டி முடிந்து வந்ததும் மாடியில் ஓய்வு எடுப்பார். நாங்கள் இருந்த வீடும் அவர்கள் வீடும் டுப்லெக்ஸ் வீடுகள். நான் துணி காய போட போகும் போது அங்கிருந்து சைட் அடித்துக்கொண்டிருந்திருக்கிறார் எனக்கு தெரியாமல். பாட்டை சத்தமாக போடுவது, நான் கல்லூரி கிளம்பும் போது லுங்கியுடன் தடதட வென்று மாடியில் இருந்து இறங்கி முன் பக்கம் வருவது, சில சமயங்களில் பஸ் ஸ்டாண்டு பக்கம் நின்று சிரிப்பது. இப்படியெல்லாம் சில நாட்களாய் காமெடி செய்து கொண்டிருந்தார்.

ஒரு நாள் காலேஜில் இருக்கும் போது போன் வந்தது அந்த அம்மாவின் நம்பரில் இருந்து. பேசினால் இவர்தான். வழிந்து கொண்டிருந்தார். எப்படி சமாளிப்பது என்று யோசித்து கொண்டிருந்தேன். யாரிடம் சொன்னாலும் பிரச்சனை பெரிதுபடுமே தவிர அது ஒரு தீர்வாகாது. முதலில் நாமே தவிர்த்து பார்ப்போம். முடியாவிட்டால் வேறுவிதமாக டீல் பண்ணிக்கலாம் என்று விட்டுவிட்டேன். அதன் பிறகு போன் எடுப்பதை தவிர்த்தேன். அந்த அம்மாவிடமும் பேசுவதை கூட குறைத்து கொண்டேன். ஒரு நட்பு எந்த முறைப்புகளும் இல்லாமல் மறைய தொடங்கியது.

இடம் காலி செய்து வேறு பக்கம் வந்த பிறகும் ஓரிரு முறை ஏதேதோ எண்ணில் இருந்து போன் பேசியிருக்கிறார். உடனே கட் பண்ணிவிடுவேன் அந்த பெண்மணியின் முகத்திற்காக மன்னித்து இருக்கிறேன். இந்த நான்கு வருடங்களாக எந்த தொந்தரவும் இல்லை. இப்போது மறுபடியுமா?. இப்போது technologyயின் புண்ணியத்தால்  நம்பரை பிளாக் செய்துவிட்டேன்.இந்த மாதிரி பக்கத்து வீடு, எதிர் வீடு என்று நிறைய தொல்லைகள் பெண்களுக்கு. அந்த விட்டம்மாவின் முகம் பார்க்க வேண்டுமே என்றும், சிநேகிதங்கள் தொலைந்துவிட கூடாதே என்றும் அமைதியாக எத்தனை பேர் வெளியே சொல்லமுடியாமல் வாழ்கிறார்கள்.

கணவன்மார்களிடம் சொன்னால் ஓன்று சண்டை போட ரெடி ஆவார்கள். இல்லையென்றால் "உனக்கு பெரிய ஐஸ்வர்யா ராய்ன்னு நினைப்பு, உன் புத்தி ஏன் இப்படி கேவலமாக போகிறது" என்றெல்லாம்தான் சொல்வார்கள். பிட் போடுவதற்கு அழகியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பது இந்த ஆண்களுக்கு தெரியாது. 

சில பெண்கள் கேவலமாக கிழிறங்கி சண்டையும் போட்டிருப்பார்கள். எப்படி சமாளிக்க என்பது தெரியாமல் இப்படி செய்வார்கள். நான் குடியிருந்தது வாடகை வீடாக இருந்ததால் வீடு மாற முடிந்தது. இல்லையென்றால், நான் என்ன செய்திருப்பேன் என்று பல தடவை யோசித்திருக்கிறேன்.

அவரிடமே நேரிடையாக பேசி இருக்கலாம். இல்லை அந்த அம்மாவிடம் சொல்லி சரி பண்ண பார்த்திருக்கலாம். ஒன்றுமே முடியவில்லை என்றால் செருப்பை கழட்டி இருக்கலாம். ரொம்ப மிஞ்சும் பட்சத்தில் சத்தம் இல்லாமல் சர்ஜரி கூட செய்திருக்கலாம். அதன் பிறகு யாரிடமும் அவன் வாலாட்ட முடியாதே.....

பெண்கள் பொறுமைசாலிகள் தான். அதுவும் ஓரளவுக்குத்தான். கெஞ்சினால் மிஞ்சுவோம். மிஞ்சினால் கெஞ்சமாட்டோம். திருப்பி அடிப்போம்...இப்படிப்பட்ட ஆண்களை திருத்த பெண்கள் எடுக்கும் பல முயற்சிகள் தோல்வியைத்தான் தழுவியிருக்கின்றன. என்ன செய்ய...நாங்கள் வாங்கி வந்த வரம் அப்படி....20 comments:

 1. உண்மை தான் அகிலா. இந்த மாதிரி வீட்டில் இருக்கும் பெண்களெல்லாம் எப்படி தன் கணவனின் போக்கு புரியாதவர்களாக இருக்கின்றனர் என்பது ஆச்சர்யம்.இன்னம் ஒன்று பெண் கொஞ்சம் பேசுகிற டைப் என்றாலே வழியத் தயாராகிவிடுகிறார்கள். வாயைத் திறந்து நாலு விஷயங்களைப் பகிர்வது தப்பா?(இது முக நூல் அனுபவம் )எல்லோரையும் சொல்லவில்லை , ஆனால் இருக்கிறார்கள். அவர்களை ப்ளாக் செய்துவிடுகிறோம் அதில் சிலர் நீங்கள் சொல்வது போல் நட்பின் நட்பாக இருக்கும் பட்சத்தில் யாரிடம் சொல்வது

  ReplyDelete
  Replies
  1. ஆண் பெண் நட்பு என்றாலே அது ஒரு கட்டத்தில் கரை தாண்டதான் எத்தனிக்கிறது....ஒன்றும் சொல்வதற்கில்லை எழில் ....

   Delete
  2. ஒரு முடிவுக்கு வந்துட்டீங்க போல! "உலகம் ரொம்ப பெரியது"னு சொல்லுவாங்க. உங்க உலகம் எப்படினு எனக்குத் தெரியலை :)

   Delete
 2. என்ன சொல்வது இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்...
  இரண்டு காலேஜ் போகிற பொன்னுகள் இருந்தும்....:(

  ReplyDelete
  Replies
  1. பிள்ளைகள் என்பது இவர்களை பொறுத்தவரை ஒரு தனி டிராக்....இது தனி டிராக்...திருத்தவே முடியாது....

   Delete
  2. சரியோ, தப்போ, ஒரு வகையில் இப்படி ஒரு முடிவுக்கு வந்து திடமா இருக்கது நல்லது. "நல்லவன் எவனாவது இருந்துறமாட்டானா?" னு எண்ணி எண்ணி ஏங்குவதற்கு!

   Delete
  3. இப்படி முடிவுக்கு வந்து ரொம்ப காலம் ஆகுது வருண். எழுதுறதுக்கு காரணம் இதே மாதிரி நிறைய பேருக்கு கஷ்டம் இருக்கும். அவங்க படிக்காட்டியும் அவங்க வீட்டுக்காரங்க படிப்பாங்க இல்லையா....அட்லீஸ்ட் புரிஞ்சிக்குவாங்க, அதுக்குதான்...

   Delete
 3. என்னது இரண்டு கல்லூரிக்கு போகும் பிள்ளைகள் இருக்கும் ஒரு ஆள் இப்படி செய்தாரா??? அப்ப சும்மா விட்டுவிட்டு இங்க வந்து புலம்புரிங்களே? உங்களை என்ன செய்ய.... ஒரு இளைஞன் என்றால்கூட வயசு கோளாறு என்று சொல்லலாம்.
  ம்ம்ம் சரி சரி இப்போது விடுங்க....... காலம் கடந்துவிட்டது... உங்களுடைய அனுபவங்களை எங்களிடம் சொல்லி மனப்பாரத்தை குறைத்துக் கொண்டது சூப்பர்.

  ReplyDelete
  Replies
  1. என்றுமே நிதானத்தை இழக்காமல் சமாளித்து பழகவேண்டும்....முடியாத பட்சத்தில் தான் ஆயுதம் எடுக்க வேண்டும்....இப்படியே பழகிட்டோம் ஆகாஷ்....

   Delete
  2. வயசாக ஆக கூறுகெட்டு, வெட்கங்கெட்டு போயிடுவாங்களோ, இந்த ஆண்கள்? "பெரிய மனுஷன்"னு எவனையும் வயதுக்கு மரியாதை கொடுக்கும் நம் கலாச்சாரம் முட்டாள்த்தனமானது சொல்லலாமா? ஏன் கூடாதுனு சொல்லுங்க? :)

   Delete
  3. எல்லா வயசிலேயும் மனிதனுக்கு சபலம் உண்டு. அதிலென்ன பெரிய மனுஷன், சிறிய மனுஷன்....சாதாரணமா மனுஷனா பார்த்தாத்தான் அவன் என்ன சில்மிஷம் செயறான்னு தெரியும்.வயசை காட்டி மன்னித்துவிடுதல் என்பது ஒத்துக்கொள்ளவே முடியாது. சின்ன பையன்னா சிட்டி பஸ்ஸில் விளையாடலாமா?....
   மரியாதையை அவங்க செய்ற செயலுக்கு கொடுத்தா போதும்....

   Delete
 4. என்னவோ போங்க!

  ****பிட் போடுவதற்கு அழகியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பது இந்த ஆண்களுக்கு தெரியாது.****

  எல்லா ஆண்களுக்குமா?!!!

  என்னங்க ஆண்களை இப்படி கொறச்சி எடை போடுறீங்க???!!

  எவனோ ஒருத்தன் உங்ககிட்ட அநாகரிகமா நடந்ததுக்கு எனக்கும் சேர்த்து அறைவிழுது பாருங்க! வாங்கிக்க வேண்டியதுதான், ஆணா பொறந்தாச்சே!:-)

  உங்க கதையை படிச்சி நாலு பேரு திருந்தினால் நல்லதுதான். திருந்திருவானுகளா என்ன? ஆண்களாச்சே? நம்மள மாரி நெறையாப்பேரு அலையிறானுகனு நெனச்சாலும் நெனப்பானுக, இந்த ஆண் என்னும் அசிங்கமான மிருகங்கள்! என்ன பார்க்குறீங்க? ஏன் நீங்க மட்டும்தான் ஆணை திட்டனுமா? எங்களை கேவலப்படுத்தும் ஆண்களை நாங்களும் திட்டலாம். அந்த உரிமையை பறிக்க நீங்க யாருங்க, அகிலா?! :)
  ReplyDelete
  Replies
  1. நான் இவங்களை திட்டுறதுக்கும் திருத்துறதுக்கும் பிறக்கல. மனசுல கொஞ்சம் வக்கிரங்களை குறைத்து கொண்டாலே போதும் எங்களுக்கு.
   நீங்க நல்லவங்களாவே இருங்க சாமி... நீங்களே சரி பண்ணுங்க. நாங்க சந்தோஷமா இருப்போம்.....:)

   Delete
 5. உங்க தமிழ்மண பதிவுப்பட்டையை எங்கே காணோம்? ஒரு பாஸிட்டிவ் ஓட்டுப் போடலாம்னு பார்த்தால்.. :(

  ReplyDelete
  Replies
  1. போட்டுட்டா போச்சு...

   Delete
  2. மார்க்கும் போட்டாச்சுங்க. :-) உங்க உண்மையான மனக்குமுறல் புரியுதுங்க.

   Delete
 6. Indruvarai ankaluku pen natpu yenbathu puriyatha visiyamagavey pogirathu pennin nerukam ipppadi patavarluku thavarana purithalagavey thodarkirarthu pennai natpudun pazhaga therintha yentha oru anum pennai kanniyathoduthan anuguvan ivarkal yellam aan inathin avaamana sinangal

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் சொல்வது சரிதான்...

   Delete
 7. என்னத்த சொல்ல... இந்த மாதிரி ஒரு சிலரால் எல்லாருக்கும் தலை குனிவு

  ReplyDelete
  Replies
  1. அது என்னமோ நிஜம்தான் கார்த்தி....

   Delete

உங்க கருத்தை சொல்லலாம்.....