Wednesday, 19 September 2012

பிள்ளையாரின் பிறந்தநாள்.....





தெருக்கோடியில் என் நண்பன் 
தொந்தியும் தொப்பையுமாக 
சாப்பிட்டது போதாதென்று 
எப்போதும் கையில் ஒரு கொழுக்கட்டையுடன்
உட்கார்ந்திருப்பான்...

நான் கும்பிடுகிற ஜாதியில்லை 
என்று அவனுக்கு தெரியும் 
ஆனாலும் அவனை தாண்டும்போது 
தும்பிக்கையை ஆட்டி 
தொந்தி குலுங்க சிரிப்பான் 
நானும் அவனருகில் சென்று 
எனக்கும் அவனுக்குமான 
சங்கேத பாஷையில் 
பேசிவிட்டு நகருவேன்...

இன்று அவனின் பிறந்தநாள் 
இன்று அவனின் சிரிப்பும் சற்று அதிகம்தான் 
அவனை கடக்கும் போது
எட்டிப் பார்த்தேன் 
கூட்டம் அதிகம்....
வாழ்த்து சொல்ல வந்தவர்கள்...

என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி
மற்றவர்களின் உபசரிப்பில் லயித்திருந்தான் 
மாலையும் மோதகமும் 
கொழுக்கட்டையுமாக
நிறைய தின்று 
தொப்பை பெருத்து 
சந்தோஷமாக இருந்தான் 

‘என்ன அதிகமான சிரிப்பு...
பலகாரங்கள் நிறையவோ’ என்றேன்

‘இல்லை...இல்லை...
தினமும் என்னை தெருவில் 
மழையிலும், வெயிலிலும் 
காய வைத்துவிட்டு 
எல்லோரும் வீட்டுக்குள்ளே 
போய் பூட்டிக்குவாங்க...
இன்று மட்டும்தான் 
எனக்கு குடை எல்லாம் கொடுத்து 
வெயில்படாம வச்சிருக்காங்க...
அந்த மகிழ்ச்சிதான்‘ என்றான்....

ம்ம்ம்....
குடைக்குள் என் நண்பன்....
சந்தோஷமாய்....
நானும் அவனை 
வாழ்த்தி சந்தோஷமாய்.....

4 comments:

  1. நன்றாக இருக்கிறது கவிதை அருமை

    ReplyDelete
  2. நன்றி உங்களுக்கு...

    ReplyDelete
  3. அழகு !,கவிதை, முதல் நாள் வாங்கும் பிள்ளையார் சிலைகளை அடுத்த நாள் கடலிலோ,ஆற்றிலோ வீசி விடுகிறார்களே ! :)

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....