Skip to main content

பெண்களாகிய...




நாங்கள்….




நம் நாட்டில் வாழும் பெண்களில் பலர் மனதில் இருக்கும் பல விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை. ஆண் வர்க்கம் செய்யும் வக்கிரமான சில செயல்களை வெளியே பெண்களால் சொல்லமுடிவதில்லை. படிக்கும் போது கூட பெண்கள் தங்களுக்கு நடக்கும் சில அநியாயங்களை  வெளிபடையாக தோழிகளிடமும் சகோதரிகளிடமும்   பேச முடிகிறது. திருமணம் ஆகிவிட்டால் மனம் விட்டு பேசுவது நின்று போய்விடுகிறது. யாரையும் (கணவரையும் சேர்த்துதான் ) நம்பி சொல்லமுடியாது.  பெண்களின் மனது ஓர் ஆழ்கிணறு.  என்ன  துன்பத்தை அவர்கள் அனுபவித்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒருவருக்கும் தெரியாது. ஆண்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது. அந்த வர்க்கத்தில் பல பேருக்கு மென்மையான, மனதை பாதிக்ககூடிய சின்ன சின்ன சமாச்சராங்களை  புரிந்து கொள்ள முடியாது.
வீட்டைவிட்டு வெளியே காலடி எடுத்து வைத்தாலே போதும், தெருவில் நடப்பவர்கள் உரசுவதும், பேருந்தில் அல்லது ரயிலில் அவர்கள் கைகள் பெண்களில் மேல் மேய்வதும், சுரங்க பாதையில் ஒரு கண நேரத்தில் என்ன நடக்கும் என்று வெளியே சொல்லவே முடியாத சில விஷமங்களும், பெண்கள் அனுபவித்து  கொண்டுதான்  இருக்கிறார்கள். இதை எல்லாம் நாங்கள் அன்றாட நிகழ்ச்சிகளாக உதறி தள்ளி வெகு காலம் ஆகிறது. ஆனால் இப்போது இன்னும் நிலைமை  மோசமாகி கொண்டிருக்கிறது.
சமீபத்தில்  மருத்துவமனை ஒன்றுக்கு சென்றிருந்தபோது சிறிது  நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. நான் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் இருந்த இதய நோய் மருத்துவர் பரிசோதனை  அறையில் இருந்து வெளியே வந்த ஒரு பெண்மணி அந்த மருத்துவரின் கைகள் விளையாடியதை சொன்ன போது ரொம்ப கேவலமாக இருந்தது. நல்ல வேளை நாம் ஒரு பெண் மருத்துவரை பார்க்க போகிறோம் என்று நிம்மதி  பெருமூச்சு தான் என்னால்  விடமுடிந்தது.
இந்த அழகில் இந்த வருடம் மருத்துவ மேற்படிப்பிற்கான மதித்துனை (counselling) போது மகளிர் நோய் மருத்துவ இயல் (gynaecology) பிரிவில் பெண் மருத்துவர்களைவிட ஆண் மருத்துவர்கள்தான் அதிகம் எடுத்திருக்கிறார்கள். பெண்களுக்கு பிரசவ காலம் கூட இனி உண்மையிலேயே சிரமம்தான்.
ஒரு முறை சென்னையில் கூட்டம் நிறைந்த  மின்சார ரயிலில் பயணம் செய்துக்கொண்டிருந்த போது, ஒரு கயவன் அருகில் அமர்ந்திருந்த ஐந்து அல்லது  ஆறு வயதுடைய ஒரு குழந்தையிடம் சில்மிஷம் செய்து கொண்டிருந்தான்….என்னால் தாங்க முடியவில்லை. அந்த குழந்தையை இழுத்து என் மடியில் இருத்திக்கொண்டேன். தாத்தாவுடன் வந்ததாக கூறினாள். நான் ரயிலில் இருந்து  இறங்கும்   போது அவரிடம் பத்திரமாக பார்த்து கொள்ளும்படி கூறியதற்கு ‘என்னம்மா செய்வது?’ என்று சாதாரணமாக சொல்லிவிட்டார்.  இதில் வருத்தபடவேண்டியது  அந்த கயவனை பற்றி அல்ல. நம் வீட்டில் இருப்பவர்களை பற்றித்தான். படித்த , அறிவான வீடுகளில் மட்டும்தான் பெண் குழந்தைகளுக்கு தொடுதலை பற்றிய அறிவை (‘Good Touch, Bad Touch’) சொல்லிக் கொடுக்கிறார்கள். மொத்தத்தில் பாதிக்க படுவது பெண் குழந்தைகள்தான். இப்படித்தான்  சமுதாயம் இருக்கும் போல் என்று நினைத்து விடுவார்கள்.
இந்த மாதிரி  கண்ணில்  படுவதை தட்டி கேட்கும் தைரியத்தை நாங்கள் படித்த, படிக்கிற படிப்பு எங்களுக்கு தரவில்லை. தடுக்கும் தைரியத்தை மட்டும்தான் தருகிறது. ரவுடிகளும், குடிகாரர்களும் (டாஸ்மாக்கில் குடித்தாலும் 5 ஸ்டார் ஓட்டலில் குடித்தாலும் அவன்  குடிகாரன் தானே  )  நிறைந்த இந்த சமுதாயத்தில் எங்களால் இதை எல்லாம் எதிர்த்து  ஒன்றும் செய்ய முடியவில்லை.
பெரிய கூட்டு  குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு சில உறவு முறைகளால்  மாடிபடிகளுக்கு அடியில் கிடைக்கும் முத்தங்களும் அம்மா அப்பா விளையாட்டுகளும் இல்லையென்று மறுக்க முடியாது. தனி குடித்தனங்களில் விரோதி வீட்டுக்குள் இல்லை. பக்கத்துக்கு  வீட்டில் இருப்பான்.
நான் சில சமயங்களில் என் கண்ணில் படும் அநியாயத்தை தட்டிகேட்கிறேன். என் ஒருத்தியால்  மட்டும் இந்த கேவலமான சமுகம் மாறவா போகிறது என்று பல சமயங்களில் மௌனமாகி விடுகிறேன். ரயிலில் அந்த கயவனை காவல் துறையிடம் ஒப்படைத்திருக்க முடியும். ஆனால் சலனப்பட்டு, சிதைந்துபோன அவன் மனது மீண்டும் அதே தவறைத்தான் செய்யும்.
இங்கு  நான்  குறிப்பிட்டு  இருப்பதெலாம் மத்திய  தர குடும்பங்களை பற்றித்தான். அடி மட்ட குடும்பங்களில் இந்த வன்முறைக்கு அளவே இல்லை. பணம் படைத்த குடும்பங்களில் காருக்குள்ளும் பாருக்குள்ளும் நடப்பவைகளை நான் சொல்ல தேவையில்லை.
யோசித்து பார்த்தால் உண்மை புரியும்.  இவர்கள் எல்லாம் ஒரு வகையில் மன நோயாளிகள்தான். இவர்களை தனி  தனியாகதான் திருத்த முடியும்.  பெண்கள்தான் தன் வீட்டில் இருக்கும் ஆண்களை ( அப்பா, கணவன், சகோதரன், மகன் யாராக இருந்தாலும் ) அவர்களின் மன நிலைகளை புரிந்து கொண்டு மனதில் இருக்கும் வக்கிரங்களை களைய வேண்டும். நல்ல செயல்களில் அவர்களின் மனதை திசை திருப்பவேண்டும். அப்போதுதான் சமுகத்தில் இருக்கும் மற்ற  பெண்கள் மன ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.


“ஒவ்வொரு பூக்களுமே   சொல்கிறதே
வாழ்வென்றால்  போராடும் போர்களமே.
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே
இரவானால் பகலொன்று வந்திடுமே.”


Comments

  1. நீங்கள் குறிப்பிட்ட அனைத்தும் உண்மை தோழி. நம்மை சிறு வயதிலிருந்தே நீ பெண் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வளர்த்தியதாலேயே ஆழ்மனதில் பதிந்து போய் விடுகிறது. வெளியே சொல்ல பயப்படுகிறோம். 20 ஆண்டுகளுக்கு முன் என் தோழி ஒருவர் நீங்கள் கூறியதுபோல் ஒரு டாக்டர் அவளிடம் உடலை பரிசோதிக்கும் சாக்கில் தவறாக நடந்துகொள்ள முற்பட்டார். தப்பித்த அவள் அவரின் மேல் complaint செய்யலாமா என்ற போது அவளின் வாழ்க்கை குறித்து யோசித்த போது அந்த் முயற்சியை கைவிட்டோம். எத்தனை பேர் அந்த காமுகனிடம் மாட்டியிருப்பர் என இன்றும் கூட நான் யோசிப்பதுண்டு நம் தைரியமின்மையின்மை குறிதது அவமானப்படுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. நாம் நிறைய விஷயங்களில் ஒதுங்குவதால் சில ஆண்களின் பெண்ணை பற்றிய கண்ணோட்டமே தவறாகிறது.ஓரிருவராவது நடக்கும் சமயங்களில் குரல் கொடுத்தால்தான் தவறுகள் நடப்பது சற்று குறையும். அதன் பிறகு செய்வதால் எந்த பயனும் இல்லை....

      Delete
  2. தோழி நல்ல விளிபுனார்வு சிந்தனை எழுத்துக்கள் .........பெண் குழந்தை வளர்ப்பில் நம் பெற்றோர் நிச்சயம் கவனம் கொள்ள வேண்டும் அதே சமயம் ஆண் குழந்தையையும் கவனத்தில் கொண்டு நல வழியில் வளர்க்க வேண்டும் அப்போதுதான் நாளைய சமுதாயம் ஒரு சமத்துவத்தை நோக்கி பயணிக்கும் ..........நீங்கள் சொன்ன நிகழ்வுகள் பல இடங்களில் நடந்த ,நடக்கின்ற நிகழ்வுகள தான் ஆனாலும் அதை எதிர்த்து சண்டையிடவும் துணிந்து அழுக்குகளை உதறி தள்ளவும் பெண்ணுக்கு இன்னும் வலுவும் துணிவும் வேண்டும் .............எனக்கு ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது பேருந்து பயணத்தின் போது முன் இருக்கையில் அமர்ந்த ஒரு பெண்ணிடம் பின் இருக்கையில் அமர்ந்த ஆண் தன்னுடைய கைகளால் குத்தி பதம் பார்த்து கொண்டிருந்தான் .........ஆனால் அந்த பெண் எந்த வித எதிர்ப்பும் காட்டாமல் நெளிந்து கொண்டிருதார் ...அதை அவன் மேலும் சாதகமாகத்தான் எண்ணுவான் .அதை அறியாமை அந்த பெண் எப்படி அவனை இத்தனை பேர் முன்னாடி திட்டுவது தன்னுடைய மானமும் போகுமே என்று எண்ணி தயங்குகிறாள் ........ஆனால் என்னால் முடியவில்லை எல்லோரும் பார்க்கும் வகையில் அவனின் செய்கையை சுட்டி காட்டி திட்டியதில் அனைவரின் பார்வையும் அவன் பக்கம் திரும்பியதில் அவமானத்தில் எழுந்து அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிட்டான் ..........அதன் பின் அந்த பெண்ணையும் திட்டிவிட்டுதான் வந்தேன் .........ஏன் இதை சொல்லுகிறேன் என்றாள் எந்த ஒரு வினைக்கும் அதற்க்கு எதிரான பதில் வினை நிச்சயம் தரவேண்டும் அதுவும் பெண் தன் சக்தியை தகுந்த இடத்தில் பிரயோகிக்க வேண்டும் .........

    ReplyDelete
    Replies
    1. நீங்க செய்தது சரிதான் சரளா....எந்த நிமிடம் தவறு நடக்கிறதோ அந்த கணமே அது திருத்தப்படவேண்டும். அப்படி செய்யும் போது நாம் நம்மை மட்டும் காப்பாற்றவில்லை, நம் பெண் குழந்தைகளையும் சேர்த்து காப்பாற்றுகிறோம் என்பதுதான் உண்மை.

      Delete
  3. என் ஒருத்தியால் மட்டும் இந்த கேவலமான சமுகம் மாறவா போகிறது என்று பல சமயங்களில் மௌனமாகி விடுகிறேன்.
    இந்த சிந்தனை இருக்கும் வரை பெண்களின் நிலை இப்படியே தான் இருக்கும் சகோ. நாம் தினம் தினம் சந்திக்கும் நிகழ்வுகளில் இப்படி பல நிகழ்வுகளை காண்கிறோம் . கண்டும் காணாமல் செல்கிறோம் . வம்பு எதற்கு என்றா? இல்லை எல்லோருக்கும் நாமே கூப்பிட்டு சொல்வது பே◌ால் ஏன் பெரியது படுத்து வேண்டும் என்றா தெரியவில்லை. தெளிவு படுத்தும் பதிவு. சிந்திப்போம் .

    ReplyDelete
    Replies
    1. யாருமே செய்யாமல் நாம் மட்டும் சமுதாயத்தை மேம்படுத்த வேண்டுமா என்கிற சிந்தனை பல சமயங்களில் எழுவதுண்டு. நாம் எப்போதுமே விழிப்புடன் இருந்தாலும் பெரிதாக பெண்ணியம் பேசுகிறார்கள் என்பார்கள்.எந்த ஒரு இடத்திலும் பாதிக்கப்படும் பெண் எழுந்து நின்றால், சமுதாயம் அவளுக்கு உதவத்தான் செய்யும். நம் சமுதாயம் இன்னும் அவ்வளவு மனிதாபமற்று போகவில்லை என்பது என் கருத்து.

      Delete
  4. நல்ல பதிவு அகிலா.

    பெண்களுக்கு தற்காப்புக் கலையைச் சொல்லிக்கொடுக்கணும்.

    அங்கேயே அவனுக்கு ஒரு அறைவிட்டால் மக்கள் நம் உதவிக்கு வருவாங்க தர்ம அடி கொடுக்க.

    ஒரு முறை தோழியுடன் கூட்டத்தில் போகும்போது அவளுக்குத் தொந்திரவு கொடுத்த கையைப் பின்னால் இருந்து பார்த்த நான் இழுத்துவச்சு அறை ஒன்னு கொடுத்தேன் பாருங்க.

    கூட்டம் என்ன ஏதுன்னு தெரியாமலேயே அவனை மொத்துச்சு;-)

    ReplyDelete
    Replies
    1. உண்மையிலேயே பாராட்டபடவேண்டிய விஷயம், துளசி....என் தோழி ஒருத்தி பேருந்தில் தொந்தரவு கொடுத்து கொண்டிருந்த ஒருவனின் கையை பிடித்து இழுத்து சீட்டின் கம்பியில் வைத்து ஓங்கி அடித்ததில் அவன் வாட்ச் உடைந்து சிதறியது பார்க்க சந்தோஷமாக இருந்தது.....

      Delete
  5. வெளியே பேருந்து போன்ற பொது இடங்களில் இப்படி நட்ந்துகொள்ளும் கயவர்களைக் கண்டுபிடித்து தண்டிக்கலாம். ஆனால் மருத்துவர்களே இப்படி இருந்தால்...!!

    என் அம்மா மற்றும் தங்கைகள் பெண் மருத்துவர்கள்தான் வேண்டும் என்பதற்காக, சிகிச்சையை காலதாமதப்படுத்தும்போது ஆண் மருத்துவர்களிடம் போனால் என்ன என்று கோவிப்பதுண்டு. இதையெல்லாம் படிக்கும்போது அவர்கள் செய்வது சரிதான் என்று தோன்றுகிறது.

    அடிமட்ட குடும்பங்களில் நீங்கள் சொன்ன மாதிரி விழிப்புணர்வும் இருப்பதில்லை; இதுமாதிரி ஏதேனும் நடந்தாலும் ஒன்றும் செய்யமுடியாமல் மௌனமாக இருந்துவிடுகிறார்கள்.

    //யாரையும் (கணவரையும் சேர்த்துதான் ) நம்பி சொல்லமுடியாது. பெண்களின் மனது ஓர் ஆழ்கிணறு. //

    உண்மைதான் அகிலா. மனம் என்னும் கிணற்றிற்குள் அவர்களின் எண்ணங்கள், ஆதங்கங்கள், வருத்தங்கள், கோபங்கள், சந்தோஷங்கள் எல்லாவற்றையும் போட்டு புதைத்து விடுகிறார்கள் - குடும்ப நலன் கருதி. இது புரியாமல் பெண்மனசைப் புரிந்துகொள்ளவே முடிவதில்லை என்று சில ஆண்கள் நக்கல் அடிப்பார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆண்களால் நம் மனதின் மென்மையான எண்ணங்களை புரிந்து கொள்வது கடினம். அவர்கள் இதை சாதாரணமாக எடுத்து கொள்வார்கள். எனக்கு தெரிந்த ஒரு அம்மாவின் கணவர் அடிக்கடி சொல்லும் ஒரு வசனம் என்ன தெரியுமா - கடைக்கு தானே நீயே போயிட்டு வா, உன்னை எவன் தூக்கிகிட்டு போக போறான...என்று நக்கல் விடுவார்.என்ன செய்ய....பெண்களின் நிலை பரிதாபமானது...

      Delete
  6. நிறைய பாதிக்க படுவது குழந்தைகள்தாம்.. அவசியமான பதிவு..

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் போராடுவதே அடுத்த தலைமுறை பாதிக்கப்படக்கூடாது என்று தான்.நன்றி....

      Delete
  7. இந்த அவலங்கள் அதிகமாகிக் கொண்டு போவது எதனால்,? பெண் குழந்தைகளை வளர்க்கவே பயமாக இருக்கிறது.!..

    ReplyDelete
  8. சிறு குழந்தைகளுக்கு,ஆணோ அல்லது பெண்ணோ சொல்லி கொடுத்துதான் இந்த சமூகத்தில் நடமாடவிடமுடிகிறது.நன்றி சரவணன்....

    ReplyDelete
  9. வணக்கம் சொந்தமே.தங்கள் தளத்தில் முதல் கருத்திடுவது மிகவே மகிழ்ச்சி.
    சிறு வயதிலிருந்து சமூக அமைப்புகளையும் கலாச்சார பின்னணியையும் கற்று அதற்கொப்ப வாழவேண்டுமென பழக்கப்பட்டவர்கள் பெண்கள்.இங்கு அந்த அடக்கத்திறகு அநீதிகள் இழைக்கப்படும் போதும் வாய்திறக்க முடியவில்லை.அதுவே பல சமயங்களில பலருக்க வாண்பாகிப்போகிறது.தவறிற்கு துணை போ என்று என்த கலாச்சாரமும் கூறவில்லை.அமைதி காப்பதும் சில வேளைகளில் அங்கிகரிப்பு ஆகிறது...வாழ்த்துக்கள் சொந்தமே இப்பதிவிற்காய்.தொடர்ந்து பேசுங்கள்.சந்திப்போம் சொந்தமே..!

    அன்புடன் அதிசயா

    ஐம்பதுகளில் தோன்றும் மற்றொரு நேசம். ..!!!!

    ReplyDelete
    Replies
    1. மௌனம் காப்பதும் சில சமயங்களில் அங்கீகரிப்பு ஆகிறது. எதிர்த்து கொடுக்கும் ஒரு குரல் கூட நம் நிலையை உயர்த்தும்....நன்றி தோழியே....

      Delete
  10. மிக நல்ல விடயம் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. வாழ்த்து சகோதரி. பெரு மூச்சுத் தான் வருகிறது.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  11. நன்றி வேதா....ஆண்கள் நம்மை இன்னும் கேளிக்கை பொருளாகத்தான் பார்க்கிறார்கள்....

    ReplyDelete
  12. இன்னும் இது போன்ற நிகழ்வுகள் அதிமாகத் தொடர்வது தான் வேதனைக்குரிய விஷயம். அன்பு உள்ளங்கள் தெரிவித்துள்ள அனைத்துக் கருத்துக்களுமே மிக மிக அற்புதம். ஆனால் இவைகள் எல்லாம் எல்லா சூழலிலும், எல்லா நிலைகளிலும்,எல்லா இடங்களிலும் சாத்தியமா என்பது தான் கேள்வியே? இது போன்ற காரணிகளால் தான் இந்த மாதிரியான அசாதாரண சம்பங்கள் நிகழுகின்றது. அப்போ இவற்றிற்கெல்லாம் தீர்வே இல்லையா? என்றால் நிச்சயம் இருக்கின்றது.. தீர்வை நோக்கி உங்களது பார்வையின் திசையை மாற்றுங்கள்..
    வழி வந்து சேரும்..
    இது ஒன்றும் விளையாட்டல்ல நிதர்சனமான ஒன்று...

    நல்லதொரு பார்வை..
    நலம் விளைய பகிர்ந்தமைக்கு நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துகளை வரவேற்கிறேன். நம் வீடுகளில் நம் பிள்ளைகளை நன்முறையில் வளர்த்தாலே சமூகம் பெண்களை பகடை காய்களாக பயன்படுத்தாது .
      நன்றி பாலா...

      Delete
  13. i like your all writting good words.. good thoughts...keep it up.. god bless u

    ReplyDelete

Post a Comment

உங்க கருத்தை சொல்லலாம்.....

Popular posts from this blog

முதியோர் இல்லங்கள்...

ஒரு வரப்பிரசாதம்  முதியோருக்காக தனியாக வீடுகள் கட்டி கொடுப்பதைப் பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன். பணம் பார்க்கும் வேலைதான் என்றாலும் முதியோர் இல்லங்கள் சமுதாயத்திற்கு தேவைதான். அவசியமும் கூடத்தான். வயதான காலத்தில் குழந்தைகள் இல்லாத, இருந்தும் இல்லாத, துணையை இழந்து தனித்து விடப்பட்டவர்கள் எங்குதான் போவார்கள் என்பதை நாம் யோசித்து பார்க்கவேண்டும்.நகை திருடர்களும் கொலையாளிகளுமாக தனியே இருக்கும் வயதானவர்களை குறி வைக்கும் காலகட்டத்தில் முதியோர் இல்லம் என்பது ஒரு தவறான விஷயமே இல்லை. நாம் நம் மனநிலையை சற்று அதற்கு தயார்ப்படுத்திக் கொள்வதில் தவறில்லை என்பது என் கருத்து. இல்லம் பற்றிய கண்ணோட்டம் எனக்கு தெரிந்த நான் அடிக்கடி செல்லும் இல்லத்தில் வயதில் முதிர்ந்தவர்கள் காலையில் மெதுவாக எழுந்து காப்பி குடித்து குளித்து உணவு அருந்தி பேப்பர் படித்து வாக்கிங் போய் நிதானமான வாழ்க்கை வாழ்வதை பார்க்கும் போது தினசரி திட்டுகளில் இருந்து தப்பித்து மனதுக்குள் துன்பங்கள் இருந்தாலும் நிறைவுடன் இருப்பதாகவே எனக்கு தோணும். வெளியே இருந்து பார்க்கும் நம்மை விட  முதியோர் இல்லம் பற்றி

சுந்தர ராமசாமியின் படைப்புலகம்

கோவை இலக்கிய சந்திப்பும் சுந்தர ராமசாமியும்.. கோவை இலக்கிய வட்டம்  கோவை இலக்கிய வட்டம் என்பது கோவை மாவட்டத்தின் மிகச் சிறந்த கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது. மிகச் சாதாரண கவிஞனையும் படைப்பாளியாய் அவனுடைய நூலை உலகுக்கு அறிமுகம் செய்து பிரபலப்படுத்தும் சாதனை கொண்டது. நூல் அறிமுகங்கள், படைப்பாளிகள் அறிமுகம், அறிமுக உரைகள், கருத்தரங்குகள் என்று பல்வேறு தளத்தில் இயங்கி வருகிறது.  70களிலும் 80களிலும் புதுக்கவிதைகள் கொண்டு தொழிற்புரட்சி செய்த வானம்பாடி கவிஞர்களான கோவை ஞானி, அக்னிபுத்திரன், நித்திலன், அறிவன், ரவீந்திரன் போன்ற இன்னும் பல மூத்த கவிஞர்களையும் நாஞ்சில் நாடன்,  இளஞ்சேரல், க வை பழனிசாமி, சு வேணுகோபால், சி ஆர் ரவீந்திரன் போன்ற  எழுத்தாளர்களையும் உள்ளடக்கியது.  பல வருடங்களாக கோவை இலக்கிய வட்டத்தின் சந்திப்புகள் கோவை டவுன்ஹாலில் மரக்கடையில் உள்ள நரசிம்மலு நாயுடு பள்ளியிலும் சிபி IAS அகாடமியிலும் சில தாமஸ் கிளப்லேயும் நடைபெற்று வந்துள்ளன. தற்சமயம் ஆர் எஸ் புரத்தில் உள்ள சப்னா புக் ஹவுஸில் வைத்து நடைபெறுகிறது.  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை கோவை இ

சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் | கட்டுரை

Feminist Ideologies in Short Story Literature (நவம்பர் 8, 2023 அன்று அரசு கலைக்கல்லூரி, சித்தூர், கேரளாவில்  நடைபெற்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரை) அண்மை தமிழிலக்கியம்: படைப்பும் வாசிப்பும் சமகால சிறுகதை இலக்கியத்தில் பெண் கருத்தியல்கள் ஆய்வுரை: து அகிலா  எழுத்தாளர், மனநல ஆலோசகர் கோயம்புத்தூர் சிறுகதை இலக்கியமும் பெண்ணியக் கோட்பாடும் காலம்காலமாய் சொல்லப்பட்டு வரும் கதை இலக்கியம், புனைவுலகை நம் முன் கொண்டுவரும் ஒன்று. கதை சொல்பவர்களால் நெடுங்கதைகளாகதான் அவை சொல்லப்பட்டு வந்தன. பெருங்காதைகள் எல்லாம் செய்யுள்களாக சங்க இலக்கியத்தில் மலர்ந்துள்ளன. படிநிலை வளர்ச்சியாக கதை மரபானது, நாட்டாரியல் வாய்மொழி கதைகளையும், பஞ்சதந்திரக் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும், ஈசாப் நீதிக்கதைகளையும் நம்முன் வைத்தபடியே வளர்ந்து வந்தது எனலாம். சிறுகதை இலக்கியம் வாய்மொழி இலக்கியத்திலிருந்து எழுத்துமொழிக்கும் அச்சுமொழிக்கும் வந்த பிறகுதான் அவற்றின் வாசிப்புத்தளம் அதிகப்பட்டுப் போனது.   சிறுகதை இலக்கியத்தில் கருத்தியல் நிலைப்பாடுகள் மானுடவியல், தத்துவம், சமூகவியல், அரசியல், பெண்ணியம், நவீனத்துவம், விளிம்புந