Skip to main content

Posts

Showing posts from October 25, 2015

பெருமழை இன்னும் ஒய்ந்தபாடில்லை..

பெருமழை இன்னும் ஒய்ந்தபாடில்லை.. சுவரோடு சாய்ந்து சாயம் உடுத்தக்காத்திருக்கிறது தேடும் ஓர் உயிரின் அழுத்தம் உறைந்துபோன இதயம் சம்பாஷனையற்ற திண்ணையாய் வறண்டிருக்கிறது வசந்தமும் வறட்சியும், ஊகிக்க முடியாத வானவில்லும், மாட்டுக் கொட்டடி சுற்றி வண்ணம் உதிர்த்துக்கிடக்கின்றன பெருமழை இன்னும் ஓய்ந்தபாடில்லை ஆணின் , உதடு தடித்த உச்சரிப்புகளில், விழுந்தெழுவது சிரமமாகத் தெரிகிறது அவனின் மிதியடிகள் வயிற்றில் பாதம் பதித்திருந்தன பொழுது சாய்ந்தபோதில், விரசம், எப்போதும்போல் பின்கட்டு வழியாகவே படுத்தெழுந்து கொள்கிறது விறைத்து விழ்ந்தவை எல்லாம் வேகமாய் அவளுக்குள்   பெண்ணின், விடுதலை குறித்த அச்சாரம் மட்டும் மழை ஊறிய அட்டைகளாய், அவளை விட்டு, கால்கள் இழுத்து மெதுவாய் நகர்கிறது பெருமழை இன்னும் ஓய்ந்தபாடில்லை..

பன்னீர் பூக்கள்

பன்னீர் பூக்கள் (சூரியகதிர் இதழில் வெளிவந்த சிறுகதை ) தி ருப்பிப் பிடித்த மரகரண்டியால் , புட்டு குழலில் இருந்த புட்டை சுஜி அவசரமாய் தள்ளிக் கொண்டிருந்தபோது , மொபைல் சிணுசிணுக்கத் தொடங்கியது. புட்டை எடுத்து மூடி வைத்துவிட்டு வந்து போனை எடுப்பதற்குள் அது நின்றுவிட்டிருந்தது. யாரென்று எடுத்து பார்த்தால் , ராம் அம்மா. இவ்வளவு காலையில் எதுக்கு கூப்பிட்டாங்க என்று நினைத்தபடி அவங்களுக்கு கால் செய்தாள் சுஜி. போனை எடுத்தவுடன் , ' ப்ரவீன் அம்மா , நம்ம நிர்மி அப்பா இறந்துட்டாங்க. தூக்கத்திலேயே உயிர் போயிட்டாம். நான் கிளம்பிட்டேன். நீங்க எப்போ வரீங்க ?' என்று அவங்க சொல்லிகிட்டே போக , அதிர்ந்துவிட்டாள் சுஜி. சன்னலின் வழியே பார்வை சென்றபோது, முற்றத்து பன்னீர் மரம் பூக்களுடன் காற்றுக்கு ஆடிக் கொண்டிருந்தது. அதை கடந்து செல்பவர்கள், ‘மணக்கிறது..’ என்று சிலாகித்துச் சென்றார்கள். இவளுக்கு மட்டும் அதன் மணம் எப்போதாவது தான் நாசியைத் தொடுகிறது. அடுப்படிக்குள் மறுபடியும் நுழைந்த போது , மூன்று நாட்களுக்கு முன் அந்த மனிதர் இதே இடத்தில் , கைகளை ஆட்டி பேசிக் கொண்டிருந்தத

கடவுளின் அம்மா

கடவுளின் அம்மா (29-3-2015 யில் கல்கியில் வெளியான சிறுகதை) காற்றில் பறந்த எண்ணெயற்ற முடியின் சொரசொரப்பில் விரல்கள் உரசி வலித்தது நங்கைக்கு. சேலையின் தலைப்பை இழுத்து மூடி ஜன்னலோரமாய் ஒடுங்கி அமர்ந்தாள். பேருந்தின் வெளியே ஒரு பெண் ஏதோ ஒரு மொழியில், கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாள். அவளின் சிணுங்கிய சிரிப்பு இவளுக்கு பிடிக்காமல் போயிற்று. சில மாதங்களாகவே இப்படிதான் இருக்கிறது இவளுக்கு. மனிதர்களின் சிரிப்பும் கொஞ்சலும் அன்னியமாய்படுகிறது. மாதவிலக்கு சுழற்சி நிற்கும் சமயங்களில் இப்படிதான் இருக்கும்னு தேவியக்கா சொன்னாள். இவளுக்கு ஒன்றும் புரியவில்லை. மீண்டும் பேசிக் கொண்டிருந்த அந்த பெண்ணை பார்த்தாள். தன் மேலேயே வெறுப்பு வந்தது.        கூட்டம் நிரம்ப வண்டி கிளம்பியது. பீளமேடுக்கு டிக்கெட் எடுத்தாள். மதியம் இரண்டு மணி வரைதான் அந்த மருத்துவ கேம்ப் இருக்கும். இரண்டு வீடு வேலை முடித்துக் கிளம்பும் போதே மணி பன்னிரண்டைத் தொட்டிருந்தது. அங்கு இலவசமாய் ஸ்கேன் எல்லாம் பண்ணுவார்கள். போன முறையே கர்ப்பப்பை பரிசோதனை செய்தபோது சிறு கட்டி இருந்தது தெரிய வந்தது. கல்யாணமாகி இருபத்தியேழு வருட

விதவிதமாய் பொய்..

விதவிதமாய்.. சத்தியமும் நேர்மையும் நம் பாட்டன் பூட்டனிடமிருந்து, நம் தாய் தந்தையர் வழி நம்முள் பதிந்து இருக்கிறதுதான். இருந்தும், அழகியலுக்காக சொல்லப்படும் (White Lies) சிறு பொய்கள் நமக்கு ரொம்ப பிடிச்சு போகுதுங்க. 'நேத்து வந்து கதவு தட்டினேன், நீங்க வெளியே வரல..' என்ற பூக்காரியின் பொய் பிடிக்கும், நேற்று மாலை முழுவதும் வாசலில் தோழிகளிடம் பேசிக்கொண்டே நின்றது நினைவில் வந்தும்கூட. இந்த சிறு பொய், அவளுக்கு நம்ம மேல எவ்வளவு அன்பு இருக்குன்னு காட்டுதுங்க. உங்களுக்காகவே வந்து கதவு தட்டினேன், அப்படிங்கிற அவளின் வாய்ஜாலமும் அழகுதான் போங்க.  கல்யாண வீட்டுக்கு ஏதோ ஒரு சேலையை சுத்திகிட்டு போனா, அங்கே ஒரு அம்மணி 'உங்க saree சூப்பருங்க..' என்று பொய் சொல்லுவாங்க. நமக்கே தெரியும் அந்த சேலை அவ்வளவா நல்லாயில்லைன்னு. அந்த பொய் கூட பிடிச்சுப்போய் அப்படியே சிரிச்சுகிட்டு நிக்கக்கூடாதுங்க. எதுக்கு சொல்றாங்கன்னு யோசிக்கணும். திருப்பி பதிலுக்கு, உங்க சேலை இன்னும் சூப்பர்ங்கன்னு சொல்லணும். அப்போ அம்மணி முகத்தில தெரியும் பாருங்க ஒரு ஜொலிப்பு, அது எவ்வளவு காசு கொடுத்தாலும் க