Wednesday, 18 January 2012

35வது சென்னை புத்தக கண்காட்சி

                         








         சென்னை புத்தக கண்காட்சி போயிருந்தேன்... நிறைய பதிப்பகங்கள், புத்தகங்கள், மூச்சு முட்டிவிட்டது புத்தகங்களின் வாசனையில். எவ்வளவு நேரம் அங்கு இருந்திருப்பேன் என்று தெரியாது. இரவு கதவை இழுத்து மூடுவதற்கு முன்தான் வெளி வந்தேன்....

        எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை நிறைய படித்திருப்போம்.அதில் அவர்களுடைய புகைப்படங்களை பார்த்திருப்போம் . பத்திரிகை பேட்டிகளை படித்து அவர்களை பற்றிய ஒரு எண்ண ஓட்டத்தையும் பதிவு செய்திருப்போம் நம் மனதில்.

             அன்று நான் அங்கு சென்ற பொழுது  நிறைய எழுத்தாளர்கள் அவர்களின் புத்தகம் விற்பனைக்கு வைக்கபட்டிருக்கும் பதிப்பகத்தாரின் கடைகளில் அமர்ந்திருந்தனர்.அங்கு ஒரு கடையில் பாலகுமாரன் அவர்களின்  நாவல்களும் இருக்க கண்டேன். பெரும்பாலும் நான் படித்தவைகளாக இருந்ததால் எடுக்கவில்லை. வேறு சிலவற்றை எடுத்து பில் போடும் போதுதான் அருகில் ஒரு கணவனும் மனைவியும் 'அவர்கூட ஒரு போட்டோ எடுக்கலாங்க' என்று பேசிக்கொண்டிருந்ததை கேட்டேன். திரும்பி பார்த்தால் அங்கு  பாலகுமாரன் அமர்ந்திருக்கிறார்.  என்னுடைய பார்வையில் அவர் ஒரு மதிப்பு மிக்க எழுத்தாளர். அவருடைய எழுத்து நடை எனக்கு பிடிக்கும். எனக்கும் உள்ளே ஒரு ஆசை வந்தது.

                          ஆனால் அவரை பற்றிய, என்னுள் பதிந்துபோன ஒரு சுய கருத்து தலைதூக்கியது. அது என்னவென்றால், நான் கல்லூரியில்  படித்து கொண்டிருக்கும் போது ஒரு பத்திரிகையில் அவருடைய பேட்டி வந்திருந்தது. அதில் அவர் தன் இரு மனைவிகளை பற்றியும் தான் இருவரையும் சமாளிக்கும் விதம் பற்றியும் மிக விளக்கமாக கூறியிருந்தார். எனக்கு இந்த பல மண விவாகத்தை  ஒத்துகொள்ள முடியாது. அதில் தனி மனித ஒழுக்கம் என்பது கேவலமாக்கப்படுகிறது.

                             அதுவும் ஒரே வீட்டில் இருவரையும் அவர் தேதி வைத்து முறை வைத்து சமாளிக்கும் விதம் எனக்கு மிக கேவலமாக இருந்தது. பெண்கள் அவ்வளவு ஈன பிறவிகளா?... என்றெல்லாம் என் மனதில் தோன்றியது அன்று....அந்த எண்ணம்  இன்று தோன்றி மனதை ஏதோ செய்தது...புத்தகத்தை வாங்கி கொண்டு அவரை கடக்கும் பொழுது ஒரு வணக்கத்தை மட்டும் வைத்துவிட்டு நகர்ந்து விட்டேன்.

          வீட்டுக்கு வந்து யோசித்த போது, வருடங்கள் கழிந்தும், நம்முள் நிறைய மாற்றங்கள் வந்தும் சில விஷயங்கள் நம்முள் மாற்றம் அடையாமல் இருப்பது தான் அதிசயமே.     widow/widower/divorcee இவர்கள் மறுமணம் செய்வதை ஏற்றுகொள்ளும் மனது ஒருவர் உயிருடன் இருக்கும் போதே இன்னொருவரை மணம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. மனதின் இந்த மாதிரி எண்ணங்களை ஒதுக்கிவிட்டு அவருடைய ஒரு புத்தகத்தை வாங்கி அவரிடம் அதில் கையொப்பம் வாங்கி இருக்கலாமோ என்று தோன்றுகிறது இப்போது.....சில விஷயங்கள் நம் மனதின் ஆழத்தில் பதிந்து நாம் பக்குவம் அடைந்திருந்தாலும் நம்மை சிறு பிள்ளைத்தனமாக நடக்க வைத்துவிடுகிறது.இன்னமும் நாம் அதற்கு இன்னும் அதிகமாக பக்குவப்பட வேண்டுமோ...தெரியவில்லை...

                        வாழ்க்கை நமக்கு தினம் தினம் ஏதாவது ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்து   கொண்டுதான் இருக்கிறது.....






9 comments:

  1. பெண்களை இழிவாய் பார்க்கும் ஆண்கள் சமூகத்தில் அதிகம் இருப்பது வேதனைதான்..

    கற்றல்தானே வாழ்க்கை.

    ReplyDelete
  2. தவறில்லாத மனிதர்கள் இல்லையென்று நினைக்கிறேன்.
    நல்லதை மட்டும் நாம் தேர்ந்த்தெடுப்போம்.

    நன்று.

    ReplyDelete
  3. //எனக்கும் உள்ளே ஒரு ஆசை வந்தது.

    ஆனால் அவரை பற்றிய, என்னுள் பதிந்துபோன ஒரு சுய கருத்து தலைதூக்கியது.//

    // வணக்கத்தை மட்டும் வைத்துவிட்டு//

    :-)
    முரண்பட்ட நடவடிக்கை அகிலா :-)

    ReplyDelete
  4. //மனதின் இந்த மாதிரி எண்ணங்களை ஒதுக்கிவிட்டு அவருடைய ஒரு புத்தகத்தை வாங்கி அவரிடம் அதில் கையொப்பம் வாங்கி இருக்கலாமோ என்று தோன்றுகிறது இப்போது.....//
    அப்படி தோன்றியதால் தானே இதை எழுதி இருக்கிறேன் நண்பரே....

    ReplyDelete
  5. மன ஓட்டத்தை எவ்வித பாசாங்கோ
    ஒப்பனைகளோ இன்றி
    சொல்லிப் போன விதம் என்னை மிகக் கவர்ந்தது
    கால ஓட்டத்தில் இன்று பாலகுமாரன் அன்று
    அப்படி எழுதியதை
    இன்று ஜீரணிக்க முடியாமல் கூட இருக்கலாம்
    இடம் காலம் தூரம் வளர்ச்சி முதிர்ச்சி இவைகளில்
    மாற்றம் வர வரநம்முள் மாற்றம் நேர்தலையும்
    நிச்ச்யம் தவிர்க்க இயலாது
    ஒரு மிகப் பெரிிய விஷயத்தை புத்தகக் கண்காட்சி
    விஷயத்துடன்இணைத்து மிகச் சாதாரணமாக
    சொல்லிப் போனது ஆச்சரியமளிக்கிறது
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. என் மனதில் பட்டதை தொடர்ந்து எழுத உங்கள் பகிர்வு உதவும், நண்பரே....என் நன்றிகள்...

    ReplyDelete
  7. பாலகுமாரன் என்பதற்காக இல்லை எவ்வுளவு உயரத்தில் இருந்தாலும் தனி மனித ஒழுக்கம் என்பது நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் ..உங்கள் கருத்துகளுக்கு என் ஆதரவு மிகவும் சரியே ...

    ReplyDelete

உங்க கருத்தை சொல்லலாம்.....